-->

செவ்வாய், 3 ஜூலை, 2018

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 11 | மக்கள்


எச்சரிக்கை: வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியிட்டுள்ளேன், முக்கிய பிழைகள் இருப்பின், கருத்தில் தெரிவிக்கவும், திருத்திக்கொள்கிறேன். நன்றி.

படம் - Dummy's Photography
நம் நாட்டில் அமெரிக்கர்களை பற்றிய ஒரு எண்ணம் உண்டு, அதாவது அமெரிக்கர்கள் பணக்காரர்கள், எல்லா வீடுகளிலும் கார் உண்டு, அதுவும் ஆளுக்கு ஒரு கார் உண்டு, எல்லோரும் iPhone வைத்திருப்பார்கள், அங்கெல்லாம் பைக்கே கிடையாதாம், இருந்தாலே Harley Davidson போன்ற பைக்குத்தானாம், யாரு வேணும்னாலும் யாருக்கு வேணாலும் முத்தம் குடுத்துப்பாங்களாம் அப்படி இப்படி என்று இன்னும் பலப்பல தவறான அனுமானங்கள் உண்டு. 

நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம், நிலப்பரப்பு குறைவு. இங்கோ நிலப்பரப்பு அதிகம், மக்கள் தொகை குறைவு.

வீட்டை விட்டு ஒரு தடவை வெளியே செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், சரி நீங்கள் ஓசூர்காரர் என்றால் காபிப்பொடி வாங்க பக்கத்தில் இருக்கும் வாசன் காபிப்பொடி கடைக்கோ அல்லது வேற ஊர்க்காரர் என்றால் உங்கள் ஊரில் பல ஆண்டுகளாக நீங்கள் வழக்கமாக காபிப்பொடி வாங்கும் கடைக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அரை மணிநேரத்தில் குறைந்தது... "குறைந்தபட்சம்" முன்னூறு பேர் நம் கண்ணில் தென்படுவார்கள், இதில் மூன்று அல்லது நான்கு பேர் நமக்கு தெரிந்தவர்கள் எதிர்ப்படுவார்கள் ஒரு வணக்கம் சொல்லிவிட்டு, எப்படி இருக்கீங்க என்ன என்று பேசிவிட்டு நடையை கட்டுவோம், சில சமயம் ஒரு புன்முறுவல் மட்டும் தான்.

இங்கே அதே அரை மணி நேரம் ஒரு பெரிய கடைக்கு சென்றால், "அதிகபட்சம்" ஒரு நூறு பேரை காணலாம், நம் பொருட்கள் வாங்கும் இந்திய கடைகளுக்கு சென்றால் மிஞ்சிப்போனால் ஒரு இருபதுபேர் இருப்பார்கள். அவ்வளவு தான். இந்த குத்துமதிப்பு கணக்கும் பெரிய ஊர்களில் மட்டும் தான்.

இங்கே வந்த முதல் வாரத்திலேயே அமெரிக்கர்களைப் பற்றி புரிந்துக்கொண்ட ஒன்று, இவர்கள் அனைவரையும் மதிப்பவர்கள். வெளியே காலாற நடக்க சென்றால் எதிரில் தென்படுபவர்கள் சற்றே முன்பு பார்த்திராதவர்களாக இருந்தாலும் hello... how are you doing என்று ஒரு புன்முறுவலுடன் கேட்டுவிட்டுதான் செல்வார்கள். வந்த புதிதில் இது பழக்கம் இல்லாததால் எதிரில் வருபவர்களை நம் மக்கள் பார்க்கக் கூட மாட்டார்கள், எனக்கும் இது பழகும் வரை அப்படிதான்.

நாம் வேறு நாட்டவர் என்பதால் நம்மை ஏதோ சொல்லிவிடுவார்களோ என்ற எண்ணம் நம் மக்களிடம் இருக்கும், ஆனால் அப்படி அல்லாமல் யார் எதிரே வந்தாலும் புன்முறுவல் செய்து செல்வார்கள். எந்த இடமாக இருந்தாலும் சரி. நாம் தயங்கினாலும் சகஜமாக பேச்சுக்கொடுப்பார்கள். நம் நாட்டில் பேசுவது போலத்தான் இங்கும் பேச்சுக்கள் தொடங்கும், அட இன்னிக்கு என்ன இப்படி வெயில் அடிக்குது, அடுத்த வாரமும் பயங்கர பனிக்குளிர்  அடிக்கப்போகுதாம் என்று நம்மை முதல் முறை பார்ப்பவராக இருந்தாலும் நம்மிடம் பேச தயங்க மாட்டார்கள்.

ஒரு சமயம் பேருந்திலிருந்து பெரியவர் ஒருவர் தம் நிறுத்தத்தில் இறங்க ஆரமிக்க, பேருந்து ஓட்டுனரே அவர் பையை தன் கையில் வாங்கிக்கொண்டு, அவரின் கையைப் பிடித்துக்கொண்டு பேருந்திலிருந்து அவருடன் இறங்கி, அவரை இறக்கி விட்டார். பேருந்தில் இருந்த யாரும் உச் கொட்டவில்லை.

ஒருமுறை பேருந்தில் கண்ணாடியை தவற விட்டுவிட்டேன், இறங்கியவுடன் நினைவுக்கு வந்தது, உடனே பேருந்தில் ஏறி ஓட்டுனரிடம்; ஒரு நிமிடம் கண்ணாடியை விட்டுவிட்டேன் தேடிக்கொள்கிறேன் என்று நான் உட்கார்ந்த இருக்கையில் தேடிவிட்டு, கிடைக்கவில்லை என்று சொன்னேன், அதற்கு அவர் நிச்சயம் அங்கயே தான் இருக்கும், யாரும் எடுத்திருக்க மாட்டார்கள் என்று அவ்வளவு நம்பிக்கையாக சொன்னார். பின்னர் தான் என் பையிலேயே waterbottle வைக்கும் இடத்திலேயே இருந்ததை உணர்ந்தேன். சட்டென்று யாரோ எடுத்திருப்பார்கள் என்று சொல்லாமல், யாரும் எடுத்திருக்க மாட்டார்கள் என்று அடுத்தவர்கள்மேல் நம்பிக்கை வைத்து கூறிய விதம் என்னை ஆச்சர்யப்பட வைத்து.

நம்மை போலவே அவர்களும் இறை நம்பிக்கை கொண்டவர்கள் தான், நம்பிக்கை இல்லா சிலர் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்வர். சில விஷயங்களில் நாம் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தால் நம்மை சுற்றி இருப்பவர்கள், அட இதை எல்லாம் போயி நம்பிகிட்டு... அ..வ..வ..ன் விஞ்ஞானத்துல வளந்து எங்கேயோ போயிட்டிருக்கான், இன்னும் என்னடான்னா என்ற கேலிக்களை நாம் நிச்சயம் கேட்டிருப்போம், நாமே அடுத்தவரை கிண்டல் செய்திருப்போம்... இங்கே வந்த முதல் நாளில் தெரிந்துக்கொண்ட முதல் விஷயமே - அமெரிக்கர்கள் நம்மைவிட இதுபோன்ற நம்பிக்கைகள் கொண்டவர்கள். இங்கே 13 என்ற எண் ராசியற்ற எண் என்று நம்புகிறார்கள், பல அடுக்குமாடி கட்டிடங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் 13 என்ற எண் கிடையாது. பன்னிரண்டாவது தளத்துக்கு பின் பதினான்காவது தளம் தான். அதே போல சில ஹோட்டல்களிலும், மருத்துவமனையிலும் 13 என்ற அறையோ, எண்ணோ உபயோகிப்பதில்லை.


ஆனால் நாம் பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் நம்பிக்கைகளை, பகுத்தறிவு போர்வையில் இருந்த, இருக்கும் நச்சுக்கிருமிகளின் கேலியாலும், கிண்டலாலும் தன் அடையாளத்தை வெளியே சொல்லவே தாங்கிக்கொண்டிருக்கின்றனர் பலர். கோவிலுக்கு போ என்றோ, நெற்றியில் விபூதி வெச்சுக்கோ என்றோ பள்ளி, கல்லூரி செல்லும் சிறுவர்களிடம் சொன்னால் பள்ளிக்கூடத்தில் அதை எல்லாம் வெச்சுக்கவே கூடாது, பெண்குழந்தைகள் பூ வைத்துக்கொள்ளக் கூடாது என்று எழுதப்படாத சட்டமே இருக்கிறது!

அமெரிக்காவின் தேசிய பறவை, கழுகு. கோழி வந்ததா, இல்லை முட்டை வந்ததா என்பதை போல, இந்நாட்டின் வழக்கத்தினாலோ, அல்லது தேசிய பறவை கழுகு என்பதாலோ தெரியவில்லை அடுத்த நாட்டு விஷயத்தில் கழுகுக்கு மூக்கில் வேர்ப்பது போல அடுத்த நாட்டு விஷயங்களில் தலையிட்டு தன்னை பல காலங்களாக உலக நாடுகளுக்கு பெரியண்ணனாக காட்டிக்கொண்டிருக்கிறது. நம் நாட்டை போலத்தான் இங்கேயும், அரசின் சில முடிவுகளில் இருவித கருத்து கொண்டிருப்பர். இது பற்றி விரிவாக அரசியல் பற்றிய அத்தியாயத்தில் பார்க்கலாம்.  

நியூயார்க் தெருக்களிலும், மற்ற மாநில முக்கிய தெருக்களிலும் பல பிச்சைக்காரர்களை காண முடியும். இல்லமற்றவர், கர்ப்பிணியாக கைவிடப்பட்டவர், குடிக்கும், போதைக்கும் அடிமையாகி தெருவில் அலைபவர்கள் என்று நம் நாட்டை விட இங்கே இளம்வயது பிச்சைக்காரர்கள் அதிகம். நம் நாட்டில் 20-30 வயது பிச்சைக்காரர்களை கடைசியாக எப்போது பார்த்த நியாபகம்  உங்களுக்கு? எனக்கில்லை. ஆனால் இங்கே அப்படிப்பட்ட பிச்சைக்காரர்கள் தான் அதிகம்.



என்ன ஒரே ஒரு வித்தியாசம் - அடுத்தவர் பின்னால் சென்று கையேந்த மாட்டார்கள். கையில் ஒரு அட்டையில் தனக்கு என்ன வேண்டுமோ அதை எழுதி வைத்து முன்னே ஒரு டப்பா வைத்திருப்பார்கள். பெரும்பாலான பிச்சைக்காரர்கள் நியூயோர்க்கில் நான் பார்த்தவரையில் ஒரு அட்டையில் homeless, need money for food, anything will help, pregnant please help என்று ஏதாவது ஒன்று எழுதி முன் ஒரு டப்பா வைத்துவிட்டு தான்பாட்டுக்கு ஏதாவது புத்தகம் படித்துக்கொண்டிருப்பர். அல்லது ஏதாவது violin, guitar என்று வாசித்து அதை வீடியோ எடுத்துக்கொள் ஆனால் $1 கொடுத்தால் நன்றாயிருக்கும் என்று மிக வெளிப்படையாகவும், மரியாதையாகவும் எழுதி வைத்திருப்பார்கள். இல்லமற்றவர்கள் படுக்க ஆங்காங்கே சில shelterகள் இருப்பதை பார்த்திருக்கிறேன், பல தொண்டு நிறுவனங்கள் இயன்றவரை இவர்களுக்கான உதவியை செய்துவருகிறார்கள்.


நம் நாட்டில் நடப்பதுபோன்ற திருட்டு, பெண்களுக்கெதிரான வன்கொடுமை இங்கேயும் நிறைய அரங்கேறும் செய்திகள் அவ்வப்போது வரும், மேலும் அடிக்கடி பள்ளிகளில், பொது இடங்களில் துப்பாக்கி சூடு நடந்து மக்களை உறைய வைக்கும். இங்கே யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வாங்கலாம், வைத்துக்கொள்ளலாம் என்ற சட்டம் தான் இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு முக்கிய காரணம். நூறு டாலர் முதல் துப்பாக்கி கிடைக்கும், ஒருபது டாலருக்கு ஐம்பது தோட்டாக்கள் கிடைக்கும். விறுவிறுப்பான action திரைப்படமும், கண்டதையெல்லாம் சுட்டு விளையாடும் computer விளையாட்டுக்களையும் தொடர்ந்து பார்க்கும் நபரிடம் ஒரு துப்பாக்கி கிடைத்தால் என்ன செய்யத்தோணும் என்று நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள்.

முக்கிய மாநிலங்கள் எதுவானாலும் அதில் இந்தியர்கள், சீன மக்கள், ஜப்பான், ரஷ்யா, பாகிஸ்தான், வியட்நாம், ஜெர்மனி என்று பல நாடுகளை சேர்ந்த மக்கள் தான் இங்கே குடிபெயர்ந்த மக்களாக இருப்பர். தத்தம் நாட்டுக்கு கலாச்சாரத்தை பின்பற்றியும், இந்நாட்டு கலாச்சாரத்தை ஒன்றிணைத்துக்கொண்டும் அவரவர்களின் துறையில் ஒவ்வொருவரும் சிறந்து விளங்க இடம் கொடுப்பதாலேயே அமெரிக்காவை பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

நம் நாட்டில் இடஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மக்களின் திறமைக்கு மதிப்பளிக்காமல், ஜாதி, மதம் என்று பார்த்து... ஒரு குழந்தையை Pre KG அல்லது இப்போது புதிதாக முளைத்த பெயர் Junior KG (Kindergarden) சேர்க்கவே பெரிய இடத்து சிபாரிசு எதிர்பார்க்கும் பள்ளிக்கூடங்களும், எவ்வளவு நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் இடஒதுக்கீட்டின் தலையீட்டால் தான் படிக்க விரும்பும் துறையை தேர்ந்தெடுக்க முடியாத சூழலுக்கு தள்ளப்படும் மாணவர்களும்,  சொல்வதுக்கெல்லாம் ஆமாம் சாமி போடவேண்டும் என்று பணியிடத்தில் எதிர்பார்க்கும் துறை அதிகாரிகளும், பதவி உயர்வுக்கும், பணியிட மாற்றத்திற்கும் லஞ்சம் எதிர்பார்க்கும் மேலாளர்களும், தன் கடமையை செய்ய தலையை சொரிந்து மக்களிடம் பிச்சை கேட்கும் எச்சை அதிகாரிகளும் இருப்பதாலேயே ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் போன்ற தலை சிறந்த நூல்களையெல்லாம் உலகுக்கு தந்த புகழ் பெற்ற நாம் இன்று மூணாவது கூட படிக்காத படிப்பறிவில்லாத நபர்களை எல்லாம் நம்மை வழி நடத்தும் தலைவர்களாக, மாநிலத்தின் முதல்வராக, தேசத்தின் பிரதமராக என்று தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். 

சுருக்கமாக சொல்லப்போனால் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதுதான் இந்த நாட்டின் முக்கிய தாரக மந்திரம். பல நாட்டவர் சேர்ந்து சிறந்த வழித்தடத்தில் சென்றதாலேயே இன்று இந்நாடு உலக நாடுகளுக்கு பெரியண்ணனாக விளங்குகிறது அமெரிக்கா.


அடுத்த அத்தியாயம் விரைவில்...
Blogger Widget

திங்கள், 18 ஜூன், 2018

இதுதாங்க அமெரிக்கா - பாகம் 2 முகப்பு

எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவுடன் இந்தியாவை ஒப்பிட்டு பலர் பேசி கேட்டிருக்கிறோம், அங்கல்லாம் அப்படி தெரியுமா, இப்படி தெரியுமா என்றெல்லாம்!

அப்படி என்ன தான் அமெரிக்காவில் இருக்கிறது

முதல் பாகம் படித்தவர்களுக்கு இந்த தொடர் கட்டுரையை பற்றிய அறிமுகம் இருக்கும், நீங்க புதியவராக இருந்தால், முதல் பாகத்தின் விபரத்தை சுருக்கமாக கீழ்கண்ட இந்த இணைப்பில் படிக்கவும் 


இந்த கட்டுரைக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் தொடர்ந்து படிக்கவும்...

இதுதாங்க அமெரிக்கா தொடரின் பாகம் இரண்டிற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது தாங்கள் அறிந்ததே. அதை தொடர்ந்து இந்த வாரத்திலிருந்து  வெள்ளிக்கிழமை தோறும் புதிய அத்தியாயங்கள்தொடர்ந்து வெளிவரும்.


உலக அரசியலில் தவிர்க்க முடியாத சில நாடுகளில் எப்போதும் இருப்பது அமெரிக்கா, அப்படிப்பட்ட நாட்டின்

மக்கள்,
அரசியல்,
கல்வி,
வேலைவாய்ப்பு,
பொருளாதாரம்,
மருத்துவம்,
இயற்கை வளம்,
போக்குவரத்து விதிகள்,
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் வல்லரசாக உருவான வரலாறு,
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் நிலை போன்ற தலைப்புகளில் புதிய அத்தியாயங்கள் அமைந்திருக்கும்.

புதிய பதிவுகளின் விபரங்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள தங்கள் கைபேசிக்கான எமது செயலியை (Android mobile application) கீழ் கண்ட இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொண்டு பயன் பெறும்படி கேட்டுக்கொள்கிறேன். இயலாத பட்சத்தில் மின்னஞ்சல் "நீங்களும் பின்தொடரலாமே" என்ற வலது பக்கத்தில் இருக்கும் Widgetஇல் Follow பொத்தானை சொடுக்கி பின்தொடரவும். மேலும் முகநூலில் கருத்துக்களம் பக்கத்தை பின்தொடரவும்.
முகநூல் பக்கத்தின் இணைப்பு - https://facebook.com/karutthukkalam


கைபேசி செயலியின் இணைப்பு -  
 Download Karutthukkalam Android Application


பாகம் இரண்டின் முதல் அத்தியாயம் (அத்தியாயம் 11) வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும்...

--> Blogger Widget

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

இதுதாங்க அமெரிக்கா - SEASON 2: விரைவில்

இதுதாங்க அமெரிக்கா கட்டுரைத் தொடர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, முதல் அத்தியாயம் செப்டம்பர் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதுவரை பத்து அத்தியாயங்களும், மூன்றாவது அத்தியாயத்தின் தொடர்ச்சியாக 3.0 என்ற துணை அத்தியாயமும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நடுவில் கடந்த ஆண்டின் சிறந்த தமிழ்  வலைத்தளமாக கருத்துக்களம், வலை எழுத்தாளர்களின் தொகுப்பாளரான, நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வலைப்பூக்களை (அனைத்து மொழி வலைப்பூக்களும் அடக்கம்) கொண்ட IndiBlogger என்ற அமைப்பால் வல்லுநர்களை கொண்ட குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டது என்ற செய்தியையும் உங்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்துக்கொண்டேன்.
முகப்பு கட்டுரையை தவிர்த்து, இதுவரை வெளிவந்த மொத்த அத்தியாயங்களையும் ஏழாயிரத்தி நூற்று எழுபத்தியாறு (7176) வாசகர்கள் படித்துள்ளார். வலைதளத்தில் எழுபத்தியாறு பேர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தும், ஒவ்வொரு அத்தியாயத்துக்கு பின்னரும் எனது Whatsapp, Facebook பக்கங்களில் அவ்வப்போது சிலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.

நீங்கள் கருத்துக்களத்தின் புதிய வாசகராக இருந்தால், அமெரிக்காவைப் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால், கீழ் கண்ட அத்தியாயங்களை Season 2 வெளிவருவதற்கு முன் படியுங்கள்.


பத்தாவது அத்தியாயத்துக்குப் பின்னர் எனது YouTube சேனலில் சற்று கவனம் செலுத்தியமையால் கடந்த ஒரு மாதமாக புதிய அத்தியாயம் வெளியிடுவதில் தாமதமாகிவிட்டது.

இப்போது மீண்டும் இதுதாங்க அமெரிக்கா கட்டுரைத் தொடரை புதுப்பொலிவுடன் SEASON 2  (நாமும் சொல்லிக்கொள்ளலாமே!) என்று வெளியிடவுள்ளேன். தொடர்ந்து இணைந்திருந்து படித்து புதிய விஷங்களை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த கட்டுரையில் எழுதப்படும் அனைத்து விஷயங்களும் நான் நேரடியாக காணும் எனது அனுபவம், செய்திதாள்களை போலோ, வாரப் பத்திரிகையை போலோ நான் எங்கும் சென்று ஆராய்ந்து முழு விபரங்களை வெளியிடுவதில்லை, அதனால் சில புள்ளி விபரங்கள் தவறாக இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

பகிர்ந்துக்கொள்ளும் விஷயத்தில் ஏதும் தவறு இருப்பின் தாராளமாக அதை comments பகுதியில் தெரிவியுங்கள் (சில வாசகர்கள் ஏற்கனவே தவறை திருத்தியுள்ளனர்). மிக விரைவில் புதிய அத்தியாயம் வெளியிட முனைத்துக்கொண்டிருக்கிறேன். நன்றி!! நன்றி!!!

Blogger Widget

புதன், 14 மார்ச், 2018

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 10 | அமெரிக்காவில் கோவில்கள்


உணவு விலைகளை பற்றி அறிந்தீர்கள் அல்லவா, இந்த உணவு நம் கோவில்களிலும், கோவில் கேன்டீனிலும் கிடைக்கும். அங்கே விலை குறைவாக வைத்து விற்பார்கள். நியூயார்க்கின் Pomona (ஊர் பெயர்) ரங்கநாதர் கோவில், பெனிசில்வேனியாவில் சிருங்கேரி மடத்தின் சாரதாம்பாள் கோவில்களில் மட்டும் இலவச அன்னதானம் வழங்கப்படும். அதுவும் ரங்கநாதர் கோவிலில் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை மடப்பள்ளியில் சுடச்சுட செய்த வெண்பொங்கல், கதம்ப சாதம், தயிர் சாதம் இருக்கும். அபப்டியே மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கொடுக்கும் பிரசாதம் போலவே இருக்கும்.



உலகிலேயே மக்கள் பெருமளவில் செல்வது கிறித்துவர்களின் தேவாலயம் இருக்கும்  வாடிகன் நகரம், மற்றொன்று இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்கா. இதுபோல உலகிலேயே அதிக மக்கள் சென்று வழிபடும் ஹிந்துக் கோவில் திருப்பதி திருமலை தேவஸ்தானம். நல்லவேளையாக திருப்பதி தமிழகத்துடன் அல்லாமல் ஆந்திராவுடன் இணைந்தது. தமிழகத்தில் இருந்திருந்தால் வெங்கடாசலபதியைவிட அரசியல்வாதிகள்தான் பணக்காரர்களாக இருந்திருப்பார்கள். இப்பமட்டும் என்னவாம் என்றுதானே கேட்கிறீர்கள்? அதுவும் சரிதான்...

சரி இந்தக் கோவில்கள், ஆலய வழிபாடுகள் இங்கே எப்படி இருக்கிறது என்று காண்போம்.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்று அந்த காலத்தில் சொல்வது உண்டு. அது நம் நாட்டில் மட்டுமல்ல, நம் மக்கள் இங்கேயும் அதை மிக நல்ல முறையில் கடைபிடிக்கிறார்கள். இந்தியர்கள் வசிக்கும் ஊர்களில் நிச்சயம் கோவில்கள் இருக்கும். குறிப்பாக இங்கே நியூ ஜெர்சி, நியூயார்க், பென்சில்வேனியா, விர்ஜினியா, டெக்சாஸ் போன்ற மாநிலங்களை எடுத்துக்கொண்டால் நம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் வகையில் பிரபலமாக இருக்கும் இந்தக் கோவில்கள். எப்படி நம் நாட்டில் ஒரு மாநிலத்தில் இருக்கும் கோவில் மற்ற மாநிலத்தவர்க்கும் தெரிந்திருக்குமோ, இங்கேயும் அதுபோல வேறு மாநிலத்தில் இருக்கும் கோவில் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும்.

இந்துக்கோவில்கள், குருத்வாரா, அக்ஷர்த்தம் கோவில், இஸ்கான் கிருஷ்ணர் கோவில், புத்தர் கோவில், கிறித்துவ தேவாலயம், மசூதிகள் என்று அனைத்து மத மக்களின் கோவில்களும் பெருமளவில் உண்டு. இந்தியாவிலிருந்து வேதம் படித்து இங்கே கோவில்களுக்கு வேலைக்கு வரவேண்டுமானால் அதற்கு தனி Visa உண்டு. Religious Visa என்று பெயர். ஆறு மாதங்களிலிருந்து இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் இந்த விசா. கோவில்கள் கேட்டுக்கொண்டால் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு விசா நீட்டிகிக்கப்படும்.



ஹிந்து கோவில்களுக்கு அனைத்து மொழி பேசும் மக்களும் வந்து செல்வதால் கோவில்களில் பெரும்பாலும் அர்ச்சகர்கள் பல மொழி பேசுபவர்களாக இருப்பர். அதிக எண்ணிக்கையில் அர்ச்சகர்கள் இருக்கும் சில கோவில்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று அந்தந்த மொழி பேசும் மாநிலத்திலிருந்தே வந்திருப்பார். அனைத்து கோவில்களிலுமே எல்லா அர்ச்சகர்களும் ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்க முடியும். அதை கேட்கும் போது பெருமையாகவும் இருக்கும். இன்னாருக்கு இப்போதுதான் ஒரு மொழி தேவை என்று எப்போதுமே ஏதும் கிடையாது. தமிழ் மட்டும் பேசினால் போதும் என்று அரசியல் செய்யும் மக்களுக்கு இதெல்லாம் எங்கே தெரிய, புரியப் போகிறது. நம் மாநிலத்தை/நாட்டை விட்டு வெளியே செல்லும்போது தான் மற்ற மொழி ஒன்றிரண்டு தெரிந்து வைத்திருப்பதன் அருமை புரியும்.

நான் வசிக்கும் நியூஜெர்சியில் BridgeWater என்ற ஊரில் இருக்கும் வெங்கடேஸ்வரப் பெருமாள் கோவில், Morganvilleலில் இருக்கும் குருவாயூரப்பன் கோவில்,  நியூயார்க்கின் Pomona வில் உள்ள அருள்மிகு ரங்கநாதர் கோவில், Flushing இல் இருக்கும் பிள்ளையார் கோவில், ராகவேந்திரா தியானக் கூடம், சாய்பாபா கோவில், பென்சில்வேனியாவில் உள்ள சிருங்கேரி மடம், அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் கோவில், கனெக்டிகட்டில் (பக்கத்துக்கு மாநிலம்) சில கோவில்கள் என்று நினைத்தால் சென்று வரும் தூரத்தில் இருக்கும் கோவில்கள். பெரும்பாலான இந்தியர்கள் வசிக்கும் இடத்திலிருந்து ஒன்றரை மணி நேரத்துக்குள் செல்ல முடியும். 30-70 மைல்கள் இருக்கும். இது தவிர சற்று தொலைவில் பயணம் மேற்கொண்டு செல்லும் கோவில்களும் உள்ளன.

அமெரிக்காவிலேயே பெரிய கோவில் என்றழைக்கப்படும் அக்ஷர்தம் எனப்படும் ஸ்வாமி நாராயண் மந்திர் என்ற கோவில் நியூ ஜெர்சியில் உள்ளது. இதே கோவில் டெக்சாஸ் மற்றும் வேறு இரண்டு மாநிலங்களிலும் உண்டு. இது குஜராத்தை மக்கள் கட்டி பராமரித்து வரும் கோவில். அதே போல பல மாநிலங்களில் ISKCON கிருஷ்ணர் கோவில்கள் உண்டு.

Flushing பிள்ளையார் கோவில் - நியூயார்க்

ஸ்ரீ சாரதாம்பாள் கோவில் - பென்சில்வேனியா

Pomona ரங்கநாதர் கோவில் - நியூயார்க்
குருவாயூரப்பன் கோவில் - நியூ ஜெர்சி
வெங்கடேச பெருமாள் கோவில் - நியூ ஜெர்சி
புத்தர் கோவில் நுழைவு வாயில் - நியூயார்க்
பெரும்பாலான கோவில்கள் அமைந்திருக்கும் இடமே எழில் மிகுந்திருக்கும். கோவில்கள் கம்பீர தோற்றத்துடன் நம் நாட்டில் உள்ள கோவில்கள் போலவே இருக்கும். ஆனால் என்ன, கோவில் கதவு மட்டும் நம்மூர் போல திறந்திருக்காது. கோவிலுக்குள் AC அல்லது Heater என்று பருவக்காலத்துக்கு எட்டாற்போல அமைந்திருப்பதால் நாம் தான் கதவை திறந்து மூடிக்கொள்ளவேண்டும். கோவிலுக்குள் நுழைந்தவுடன் காலணிகள் அடுக்கி வைக்க மர ரேக்குகள் இருக்கும். கால் அலம்பிக்கொள்ள குளிர் நீர், வெந்நீர் வரும் குழாய்கள் (Showerஇல் வரும் நீர் போல, கால் அருகில்) இருக்கும். Coatகளை மாட்டிவைக்க hanger உடன் கூடிய கொடி இருக்கும்.

பெரும்பாலான கோவில்களில் எல்லா கடவுள்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பர். வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் பெருமாள், தாயார் மட்டும் அன்றி சிவலிங்கம், பிள்ளையார், ஹனுமார், ராமர், கிருஷ்ணர், ஐயப்பன், முருகன், சத்யநாராயணா, நவகிரகம், அபிஷேக காசி லிங்கம் என்று அனைத்து கடவுள்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பர். சபரி மலைக்கு மாலை போடுவதுபோல இங்கேயும் மாலை போட்டுக்கொண்டு சற்று தொலைவில் இருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு என் நண்பர்கள் செல்வார்கள். Flushing பிள்ளையார் கோவிலுக்கு செல்ல அந்த வீதிக்கு சென்றாலே மயிலை கபாலி கோவில் சன்னிதி தெருவுக்கு சென்றார் போல இருக்கும். சில வீடுகள் சிகப்பு வெள்ளை என்று நம் ஊரில் கோவில் மதில் சுவரிலிருக்கும் வண்ணம் போல இருக்கும். அங்கே தேங்காய் உடைக்கும் இடமும் உண்டு.

எல்லா கோவில்களிலும் கலாச்சாரக் கூடம் இருக்கும். மாலை நேரங்களில் சிறுவர், சிறுமிகளுக்கு சஹஸ்ரநாமம், திவ்விய பிரபந்தம் என்று கலாச்சார வகுப்புகள் நடக்கும். சிறப்பு தினங்களில், பண்டிகை நிகழ்ச்சிகள் அன்று இந்த கலாச்சாரக் கூடங்களில் மேடை நாடகம், பரதநாட்டியம், கர்னாடக சங்கீத நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடக்கும். திருமண நிகழ்ச்சிகளும் நடக்கும்.

உத்சவகாலங்களில் பெருமாள் புறப்பாடு, தேர், வாகனம் என்று நம் ஊரில் கடைப் பிடிப்பது போலவே இங்கேயும் மிக அழகாகவும், சிறப்பாகவும் கடைபிடிக்கிறார்கள்.

சரி கடவுள் சேவித்தாகிவிட்டது, அடுத்து என்ன? பிரசாதம் தானே. ஆம், அதே தான். என்ன ஒரு புன்னகை உங்கள் முகத்தில்? கோவில் பிரசாதம் என்றாலே எல்லோருக்கும் ஒரு தனி பிரியம் தான். கோவில் ப்ரசாதத்தில் இருக்கும் சுவை என்னதான் முயற்சி செய்தாலும் நம்மால் கொண்டு வருவது சற்று கடினம் தான். இங்கேயும் அப்படிதான். Pomona வில் இருக்கும் ரங்கநாதர் கோவிலில் காலை முதல் இரவு வரை கோவிலே உள்ள மடப்பள்ளியில் சமைத்த பிரசாதம் பெரிய அண்டாவில் வைத்திருப்பார்கள். பக்கத்திலேயே Use & Throw தட்டுகள், Spoon, Tissue Paperகள் இருக்கும்.கோவிலில் இருக்கும் தன்னார்வலர்கள் பிரசாதம் பரிமாறுவார்கள், எவ்வளவு வேண்டுமானாலும் வீணாக்காமல் சாப்பிடலாம். ரங்கநாதர் கோவிலில் மட்டும் ப்ரசாதத்திற்கு கட்டணம் கிடையாது, "விருப்பப்பட்டால்" நமக்கு விருப்பப்பட்ட தொகையை உணவுக்கு கூடத்தில் இருக்கும் உண்டியலில் செலுத்தலாம். அதேபோல ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலுக்கு சென்றால், முதலில் அன்னதானக் கூடத்திற்கு சென்று சாப்பிட்டு வர சொல்லி பின்னர் அர்ச்சனை செய்ய சொல்வார்கள். ஏனைய கோவில்களில் இருக்கும் உணவகத்தில் வெளி உணவாக விலையை விட குறைவான விலையில் உணவு பண்டங்களை விற்பார்கள். Flushing பிள்ளையார் கோவில் உணவகத்தின் சுவைக்கு சரவணா பவனும், ஆனந்த பவனும் வரிசையில் நிற்கவேண்டும். அப்படி இருக்கும் அங்கே சுதை! (ஆஹா... எச்சில் ஊறுகிறது!!! கூடிய விரைவில் செல்ல வேண்டியதுதான்!)

நானும் என் மனைவியும்.
சொர்கவாசல் நுழைய சென்ற நாள்.
இங்கே, கோவில்களில் நம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து வைத்திருந்தால் தவறாமல் ஒவ்வொரு பண்டிகை, கிரஹணம், சிறப்பு தினங்கள் என்று அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் நாள், நேரம் என்று விரிவாக அனைத்து அம்சங்களையும் அனுப்பிவிடுவர். நம் நாட்டை விட்டு இங்கே வந்தாலும் அங்கே கடைபிடித்து வந்த ஒவ்வொரு விஷயமும் வானிலை இடம் கொடுக்காவிட்டாலும் இங்கிருக்கும் அர்ச்சகர்களும், கோவில் நிர்வாகிகளும், தர்மகர்தாக்களும், கோவில் கட்ட நன்கொடையை அள்ளிக்கொடுப்பவர்களும், பக்தர்களும் சிறிதளவும் குறையாமல் இங்கே கடைபிடித்து வருகிறார்கள் என்பது மிக மிக பாராட்ட வேண்டிய விஷயம்.


அடுத்த அத்தியாயம் விரைவில்...

கருத்துக்களத்தின் பதிவுகளை குரலொலியில் பதிவு செய்யும் முயற்சியாக, எனது YouTube பக்கத்தில் ஒரு முந்தைய பதிவுவை ஒலிவடிவில் பதிவேற்றம் செய்துள்ளேன். அதை கேட்டு தங்கள் கருத்தை தெரிவிக்கவும். வரவிருக்கும் பதிவுகளை மறவாமல் கேட்க https://youtube.com/bhargavkesavan என்ற எனது YouTube சேனலுக்கு Subscribe செய்யவும். நன்றி.

Blogger Widget

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...



பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து சாப்பிடுவோம், மற்ற நாட்களில் வேளைக்கு ஓரிடம் என வகை வகையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். காலை silkboard service ரோட்டில் இருக்கும் அண்ணன் கடை (அவர் பெயர் ராஜேஷ் என்று நினைக்கிறன்) நீங்கள் பெங்களூரில் இருப்பவராக இருந்தால், அவசியம் அங்கே சாப்பிடுங்கள்... காலை சிற்றுண்டி அவ்வளவு ருசியாக இருக்கும்... இட்லி, தோசை, மெதுவடை, வாங்கிபாத் இவை மட்டும் தான், இதனுடன் ஒரு கார சட்னி கொடுப்பார் பாருங்க!!! அச்சோ... அவ்வளவு ருசியாக இருக்கும்! இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே என் நாக்கில் எச்சில் ஊறுகிறது! (அங்கே சென்றால் என் படத்தை காண்பித்து அவரை விசாரித்ததாக சொல்லவும்!), மதியம் சேட்டா கடையில் கேரளா அரிசியுடன் முழு சாப்பாடு, இரவு பெரும்பாலும் அலுவலகத்தில் இருக்கும் கேன்டீனில் சாப்பாடு அல்லது, அலுவலகத்துக்கு எதிர் ரோட்டில் இருக்கும் ஆந்திரா மெஸ்ஸில் தோசை அல்லது ஊத்தப்பம்! ஆஹா... என்ன ஒரு சாப்பாடு!!! நான் தங்கியிருந்த வெங்கடாபுரத்தில் உள்ள கிருஷ்ணா உபஹாரில் இட்லி, வடை, சாம்பார் தான் பெரும்பாலான நாட்களில் காலை சிற்றுண்டி. சாம்பாரில் பெரிய அளவில் இருக்கும் மெது வடை ஊறிக்கொண்டிருக்க, "சாம்பார் இன்னா சொல்பா பேக்கு" என்று கேட்டு வாங்கி ருசித்து சாப்பிட்டு வருவேன்.

இங்கே வரும்போது சாம்பார்பொடி, ரசப்பொடி, இட்லி மிளகாய்ப்பொடி என்று எனக்கு பிடித்ததெல்லாம் சில மாதங்களுக்கு வருமளவு என் அம்மா எனக்கு அரைத்து கொடுத்து அனுப்பினார். இங்கே வரும் வழியில் சாப்பிடவும் அமிர்தம் போல கேசரி கொடுத்து அனுப்பினார். இங்கே வரும் வழியிலேயே அபு தாபியில் அமெரிக்க homeland security அலுவலர்கள் நான் கொண்டு வந்த பையை திறந்துப் பார்த்து கேள்விகேட்டுக் கொண்டிருந்தனர். நானும் ஜீன்ஸ் படத்தில் வரும் லட்சுமி போல டேய் இது கேசரி டா... sweet... சாப்பிடறது என்று கையை வாயில் போடுவது போல சைகை காமித்தும் ஆங்கிலத்தில் சொல்லியும் அதை அவன் என் கையில் கொடுத்தால் போதும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஹோ.. சேரி என்று அவன் கொடுத்ததும் ஆளை விட்டால் போதும்டா சாமி என்று அங்கிருந்து கிளம்பினேன்.

இங்கே வந்திறங்கிய முதல் நாள். என் நண்பன் வீட்டில் தங்கியிருந்தேன், அன்று என்ன சாப்பிட்டேன் என்று கூட நினைவில்லை (இன்றல்ல... அன்றே நினைவில் இல்லை)... பத்தரை மணிநேரம் பின்னோக்கி இங்கே வந்திறங்கினேன் அல்லவா, அதனால் jetlagஇல் இருந்தேன். நேரம் மாறி ஒரு இடத்துக்கு வரும்போது, நம் உடல் அந்த நாட்டில் உள்ள நேரத்துக்கு ஏற்ப அமையும் வரை நாம் மந்தமாகவே இருப்போம். அப்போது எல்லோரும் உறங்கும் நேரத்தில் நாம் அவ்வளவு தெளிவாக இருப்போம், எல்லோரும் விழித்திருக்கும் நேரத்தில் நமக்கு அப்படி ஒரு தூக்கம் வரும். நம் உடல் அந்த நேரத்துக்கு ஏற்ப அமைய பெரும்பாலும் ஒரு வாரம் ஆகும்.

ஆக, முதல் நாள் இரவு நண்பன் சமைத்ததை சாப்பிட்டு உறங்கி, மறுநாள் காலை எனக்கு சமைத்துக்கொண்டு எனது lunchboxஇல் போட்டுக்கொண்டு அலுவலகம் கிளம்பினேன். நல்லவேளை. அங்கே சென்றால் அலுவலகத்தில் நம்மூர் கான்டீன் போல வகை வகையான உணவெல்லாம் கிடையாது. வகைவகையான மாமிசம் தான்!! எருமை, பன்றி என பெரிய பட்டியலே உண்டு. இதோ... இதுதான் என் அலுவலக கான்டீன் மெனு... ச்சி கருமம் என்கிறீர்களா! ஹ்ம்ம்.. அப்படிதான் எனக்கும் இருந்தது!


இந்த கான்டீன் கூட இல்லாத பல அலுவலகங்கள் உண்டு. பெரிய நகரில் உள்ள அலுவலகம் என்றால் பெரும்பாலானோர் வெளியே சாப்பிடுவார்கள் சிறிய நகரம் என்றால் வெளியே அவ்வளவு கடைகள் இருக்காது. அனால் எந்த நகரானாலும் நம்நாட்டு மக்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவுதான் பெரும்பாலும் சாப்பிடுவார்கள். அதுதான் நமக்கு த்ரிப்திகரமாக அமையும்!

நம்மை போலவே உணவு உண்ணக்கூடிய பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று பல நாட்டினர் இங்கே நியூயார்க் நகரில் கடைகள் வைத்திருப்பார்கள். மதிய உணவு நேரத்தில் தெருக்கடைகளில் கூட்டம் அலை மோதும். அனைத்து விதமான உணவும் கிடைக்கும் இங்கே இருக்கும் தெருக்கடைகளில். எனது திருமணத்திற்கு முன், வாரத்தில் ஒரு நாள் வெளியே சாப்பிடுவேன். Dhal ரொட்டி, சாப்பாடு, vegetable பிரியாணி என்று சைவ உணவு விற்கும் கடைகள் நிறையவே உண்டு.

இந்த ரோட்டோர கடைகள் ஏனோ தானோ என்று இருக்காது. அனைத்து கடைகளும் முறையாக உரிமம் பெற்று நடக்கும் கடைகள், அதனால் ஒவ்வொரு கடைக்கும் அவர்கள் உபயோகப் படுத்த plugpoint தரையுடன் சேர்ந்தாற்போல இருக்கும். ஓசியில் சாப்பிட எந்த காவலரும் வந்து தொல்லை செய்வதோ, தொப்பியை நீட்டி மாமூல் வசூலிப்பதோ கிடையாது. அனைத்து ரோட்டோர கடைகளிலும் கடையின் உரிமத்தின் நகல் போட்டோ பிரேமில் மாட்டப்பட்டிருக்கும். இவை அனைத்தும் தள்ளு வண்டிபோல, நிரந்தர கடைகள் அல்ல. அவரவரின் வண்டியின் பின்புறம் கொக்கியில் மாட்டி கொண்டு வந்து கொண்டு செல்வர்.

நியூயார்க் நகரில் நமக்கு தெரிந்த, தெரியாத அனைத்து நாட்டவரின் கடைகளும் இருக்கும். ரோட்டோர கடைகளில் Falafal என்பது மிகவும் பிரபலமானது. அது கிட்டத்தட்ட நம் மசால் வடை போலவே இருக்கும். இது மத்திய கிழக்கு நாடுகளின் உணவு. இந்த ரோட்டோர கடைகள்  பெரும்பாலும் பாகிஸ்தான், வங்காளம், வளைகுடா நாடுகளை சேர்ந்தவர்களின் கடைகளாக தான் இருக்கும். ஆனாலும் இத்தாலி, தாய்லாந்து ஏன் நம்மவர் ஒருவரின் தோசைக் கடை கூட இங்கு  மிக பிரபலம். (அது Brooklyn நகரில் இருப்பதால் அங்கே இன்னும் செல்ல இயலவில்லை, சென்றால் மேலும் விபரங்களை தெரிவிக்கிறேன்.)



இவர் என் நண்பர், முகமது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். 17 ஆண்டுகளாக இங்கே கடை வைத்துள்ளார். இவருக்கு முன்னிருந்து இவரின் பெற்றோர் 25 ஆண்டுகளாக இங்கே உணவுக்கு கடை வைத்துள்ளனர்.
இது தவிர chain food restaurants பல உண்டு. Subway, Chipotle, Taco Bell, McDonald's, Pizza Hut, Domino's Pizza, Burger King என்று பல கடைகள் உண்டு. இவை அனைத்தும் அமெரிக்காவில் எந்த மூலைக்கு சென்றாலும் இருக்கும். ஏன்? இவற்றில் பாதி இப்போது நம் நாட்டிலேயே உள்ளதே! இவற்றுள் chipotle என்ற மெக்ஸிகோ நாட்டின் கடை நமது மக்கள் மத்தியில் பிரபலம். இந்த கடையில் தான் அரிசி உணவு இருக்கும், மற்ற கடைகளில் வெறும் பர்கர், pizza மட்டும் தான் கிடைக்கும் அது நமக்கு ஒரு முறைக்கு மேல் ஒத்துவராது.

இந்த அமெரிக்க உணவகங்களை தவிர இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பல இந்திய உணவகங்கள் இருக்கும். நம் ஊரில் பிரபலமான ஹோட்டல் சரவணா பவன், அடையாறு ஆனந்த பவன், அஞ்சப்பர் என்று பல பிரபல உணவகங்களும், வேறு சிறிய உணவகங்களும் உண்டு. இதில் ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், ஹிந்திக்கார ஹோட்டல்கள் என பல உண்டு. தமிழக ஹோட்டலுக்கு சென்றால் இங்கே இருக்கும் தமிழ் மாத இதழ்கள் கிடைக்கும். தென்றல், 8K Express என்று இரண்டு தமிழ் மாத இதழ் அமெரிக்காவில் வெளிவருகின்றன.

ஏதாவது பண்டிகை நாள் என்றால் இங்கே இருக்கும் தமிழக ஹோட்டல்களில் வாழை இலையில் சாப்பாடு பரிமாறுவார்கள். குறிப்பாக இங்கே இருக்கும் ரஜினி என்ற ஹோட்டலில் பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு நாட்களில் வாழையிலையில் சாப்பாடு போடுவார்கள். நம் வீட்டில் பண்டிகை நாட்களில் அம்மா ஆசையாக சமைத்து உணவு பரிமாறும்போது, அட போதும்மா ஏன் இவ்ளோ சாப்பாடு போடுற என்று கோபித்துக் கொண்டவரெல்லாம், இங்கே ஓட்டலில் இரு முறை கொடுக்கும் சாப்பாடு பத்தாமல் extra சாப்பாட்டுக்கு மேலும் காசு கொடுத்து வாங்கும்போது தான் அம்மாவின் அருமையும், பண்டிகைக்கு நம் வீட்டிலும், ஊரிலும் இல்லாத வருத்தமும் தெரியும்.

ஒரு முழு சாப்பாடு பொதுவாக $12 - $15 டாலர் இருக்கும். பண்டிகை நாள் சாப்பாடு என்றால் பெரும்பாலும் $20 - $25 இருக்கும். இங்கேயே குடியுரிமை பெற்ற மக்களுக்கு அது பெரும் தொகையாக இருக்காது, ஆனால் இது ஒரு பெரும் தொகையே. வடை, சமோசா போன்றவையெல்லாம் $5 முதல் $7குள் இருக்கும். இந்த உணவகங்கள் தவிர நான் தங்கியிருக்கும் பகுதியில் நம்மூரில் இருப்பது போலவே bakery ஒன்று உள்ளது. முதன் முதலில் அங்கே சென்ற போது எங்கள் ஓசூரில் பிரபலமான கண்ணையா பேக்கரியின் சின்ன கிளை போலவே இருந்தது. இங்கே பப்ஸ், பாணி பூரி, வடா பாவ், கேக், butter biscuit, ரஸ்க், bread என்று அப்படியே நம்மூரில் இருப்பது போலவே ருசியுடன் இருக்கும். இந்த நாட்டில் நம்மூர் போல bakery எல்லாம் அவ்வளவு கிடையாது, இங்கே Doughnut என்பது தான் மிக பிரபலம். ஒரு Bun அளவில் இருக்கும், உளுந்து வடையில் இருப்பது போல நடுவில் ஓட்டை இருக்கும், அதனுள் cream, jelly, தேங்காய் என்று பல வித flavorகளில் கிடைக்கும். Dunkin Donut, Wawa போன்ற கடைகளில் இந்த Doughnut கிடைக்கும். Dunkin Doughnut என்பது நம் ஊரிலும் கூட இப்போது இருப்பதாக கேள்விப்பட்டேன். இங்கே dunkin donut, Starbucks என்பது நமூரில் தெருவுக்கு ஒன்று என்றிருக்கும்  தேநீர் கடையை போல நூற்றுக் கணக்கில் இருக்கும். ஆனால் இங்கே இந்த கடைகள் பிரபலம் என்ற ஒரே காரணத்தினால் நமூரில் ஒரு காபியை 120 ரூபாய் கொடுத்து வாங்குவதும், ஒரு Bunஐ அறுபது ரூபாய் கொடுத்து வாங்குவதும் காலக் கொடுமை!

இதையெல்லாம் சொல்லி முடிக்கும்போது வெற்றிக்கொடி கட்டு வடிவேலுவின் ஒட்டகப் பால் நியாபகம் தான் நினைவுக்கு வருகிறது. என்ன, இங்கே ஒட்டகப் பால் கிடையாது, ஆனால் பலவகைப் பால்கள்  உண்டு. Whole Milk (இது தான் நம் ஊரில் கிடைப்பது போல இருக்கும்), 2% fat free, 1% low fat, Almond Milk என்று பல வகையில் இருக்கும். நம்மூர் போல காலையில் தினமும் வாங்கிக்கொண்டு வரும் பழக்கமோ வழக்கமோ இல்லை இங்கே. ஒரு முறை வாங்கினால் அது பதினைந்து நாள் வரை கெடாமல் இருக்கும். ஹ்ம்ம்... என்னத்த கலக்குறாங்களோ.. ஆனால் அப்படி மட்டும் தான் கிடைக்கும்.

இந்த உணவு விலைகளை பற்றி மேலே படித்தீர்கள் அல்லவா, இந்த உணவு நம் கோவில்களிலும் கோவில் கேன்டீனில் கிடைக்கும். அங்கே விலை கம்மியாக வைத்து விற்பார்கள். நியூயார்க்கின் Pomona (ஊர் பெயர்) ரங்கநாதர் கோவில், பெனிசில்வேனியாவில் சிருங்கேரி மடத்தின் சாரதாம்பாள் கோவில்களில் மட்டும் இலவச அன்னதானம் வழங்கப்படும். அதுவும் ரங்கநாதர் கோவிலில் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை மடப்பள்ளியில் சுடச்சுட செய்த வெண்பொங்கல், கதம்ப சாதம், தயிர் சாதம் இருக்கும். அபப்டியே மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கொடுக்கும் பிரசாதம் போலவே இருக்கும்.

கோவிலைப் பற்றி சொன்னதாலேயே அடுத்த அத்தியாயம் எதை பற்றி என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அடுத்த அத்தியாயம் விரைவில்...

வாரத்தின் எந்த நாளில் புதிய அத்தியாயங்களை வெளியிடலாம் என நினைக்கிறீர்கள்? உங்கள் பதிலை கீழே பதிவிடுங்கள்.

இந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி!

------------

விஜய் மல்லையா போல நிரவ் மோடி 11,400 கோடி மோசடி செய்ததை பற்றிய கேலி வீடியோ ஒன்று தமிழில் டப்பிங் செய்துள்ளேன். இங்கே அந்த விடியோவை காண்க.


https://youtube.com/bhargavkesavan என்ற எனது youtube பக்கத்திற்கு subscribe என்ற பொத்தானை அழுத்தி மேலும் பல காணொளிகளை காண subscribe செய்யவும்.

நன்றி.




Blogger Widget