-->

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

கனவில் ஓர் கோடை விடுமுறை...


ராசுவுக்கு முழு ஆண்டு பரீட்சை ஆரமித்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன...
அம்மா... என்னிக்கு மா கடைசி பரீட்சை? என்றான்... இன்னும் நான்கு பாடம் ஆன பிறகு என்றாள் அவன் அம்மா.

பரீட்சை முடிஞ்ச அன்னிக்கே நம்ம ஊருக்கு கிளம்பிடுவோம் தானே?
என்றான் ஆர்வமாக.. அதை பத்தி இப்போ என்ன...
இன்னும் நாலு நாள் இருக்கு அதுக்கு... 
நாளைய பரீட்சைக்கு இப்போ ஒழுங்கா படி என்றாள் சின்ன அதட்டலாக...

அழுக்கு தாடி.. அழுக்கு தாடி...
தொண்டு செய்து பழுத்த பழம்,
அழுக்கு தாடி மார்பில் விழும் என்று கத்த...

தப்பு தப்பா படிக்காத, ஒழுங்கா படி என்றாள் அவன் அம்மா.

அப்படின்னா சொல்லுங்க மா... பரிட்சை முடிஞ்ச அன்னிக்கே ஊருக்கு போவோம் தானே என கேட்டான் மீண்டும்... 

ஆமா.. இதோட பல தடவ கேட்டுட்டே இன்னிக்கு மட்டுமே...
பாடத்தில் கவனம் செலுத்தி படி, இன்னும் நாலு நாள்ல ஊருக்கு போகபோறோம் என்றாள்  அம்மா..

உற்சாகமான ராசு, வேகமாக படித்தான் 

தொண்டு செய்து பழுத்தபழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தைஎழும் .. குர்ர்ர்.. குர்ர்ர்.... (உற்சாகத்தில் சிறுத்தை ஆனான்)
அவர்தாம் பெரியார்
பார் அவர்தாம் பெரியார்.

இப்படியாக அடுத்த நான்கு நாளும் ஊருக்கு போவதை பற்றிய நினைப்புக்கு நடுவிலேயே பரிட்சைகளை முடித்தான்... 

கடைசி பரீட்சை முடிந்து வீட்டுக்கு வந்த உடன், அம்மா... போலாமா... எப்போ கிளம்ப போறோம்.. எப்போ கிளம்ப போறோம் என்று நச்ச்சரித்துக்கொண்டிருந்தான் ராசு... அப்பா வேலையிலிருந்து வந்தவுடன் கிளம்பவேண்டியதுதான் என்றாள் அவன் அம்மா... 

அப்படின்னா... அப்பா எத்தனை மணிக்கு வருவார் என்றான் மீண்டும்...
இதோ பாரு.. வெளிய போய்  உன் நண்பர்களோடு விளையாடு நானே கூப்படறேன் என்றாள் அம்மா...

'பீனெபீனிக்' 'பீனெமீனிக்' என்று  வண்டி ஹோரன் அடிப்பதுபோல சமிக்ஞை மூலம் தனது நண்பர்களை அழைத்தான். மூன்று, நான்கு வீடுகளிலிருந்து பதிலுக்கு 'பீனெபீனிக்' 'பீனெமீனிக்' என்று சத்தம் வந்தது... அனைவரும் வெளியே வர... சைக்கிள் டயர்,  குச்சி  எடுத்துக்கொண்டு  விளையாட கிளம்பினார்கள் .

மாலை ஏழு மணிக்கு ஓசூரிலிருந்து மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றனர். தங்கையுடன் ஜன்னல் இருக்கைக்கு சண்டை போட்டு, தங்கை விட்டுக் கொடுத்ததால் குஷியாகி நீயும் வேடிக்கை பாரு... என்று ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே தூங்கினான்.

காலை கண் முழித்தபோது பேருந்து தஞ்சை பேருந்து நிலையத்தில் இருந்தது... அப்பா... இன்னும் எவ்ளோ நேரம்.. என்று தூங்கிக்கொண்டிருந்த அப்பாவை எழுப்பினான்... சொல்லுப்பா.. இன்னும் எவ்ளோ நேரம்.... 
இன்னும் ஒரு மணிநேரம் என்றார் அவன் அப்பா... 
ஐ... இன்னும் ஒரு மணிநேரம் தானா .. ஜாலி... என்று குதுகலித்து திரும்ப தூங்கிவிட்டான்...

ருக்மணி குளம் தாண்டியது தான் தாமதம்... மன்னை வந்தாச்சு என்று குதூகலித்து ஆர்ப்பாட்டம் செய்துக்கொண்டே மாமா இல்லம் அடைந்தனர்... நாகைப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூரிலிருந்து மற்ற மாமா, பெரியம்மா அவர்களின் பசங்களெல்லாம் முழு ஆண்டு விடுமுறைக்காக அங்கு வந்திருந்தனர்... அடுத்த ஒரு மாதம் அவிழ்த்து விட்ட கழுதைதான் என்று ராசுவின் அம்மா அவனைப் பார்த்து சொல்ல... அவன்  ஏற்கனவே கொளுத்தும் வெயிலிலும் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தான்...

வீதியே அமர்க்களப் படும்படியாக அக்கம் பக்கத்து வீட்டு சிறுவர்கள் உட்பட ஒரு கூட்டமே சேர்ந்து ஐஸ் பாய்(கண்ணாமூச்சி), ஓட்டப்பந்தயம், பாண்டி, அந்தாக்ஷரி, திருடன் போலீஸ் மற்றும் அவரவர் ஊர்களில் தாம் விளையாடும் விளையாட்டுக்களை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்து புதிது  புதிதாக விளையாடி அன்பை பரிமாறிக்கொண்டு கோடை விடுமுறையை குதூகலமாக கழித்துக்கொண்டிருந்தனர்...

ஒரு மாதம் போனதே தெரியாமல் முடிந்துவிட்டது, இரண்டு நாட்களில் புது வகுப்பு தொடங்கவுள்ளது... அன்று மாலை மீண்டும் ஊருக்கு செல்ல வேண்டும்... நாளைக்கு போகலாம்.. நாளைக்கு போகலாம் என்று  அழுதுக்கொண்டே ஊருக்கு கிளம்பினான். ஊருக்கு வரும்போது நான் ஜன்னல் இருக்கைல உட்கார்ந்தேன் தானே இப்போ நீ உட்காரு என்று தங்கைக்கு இருக்கையை குடுத்துவிட்டு தூங்கிவிட்டான்.

'தூங்காதே தம்பி தூங்காதே, நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே.. தூங்கா...' என்று தனது கைப்பேசியில் Missed call வர... அரை தூக்கத்திலிருந்து 
எழுந்தவனுக்கு  ஒரு  கணம் ஒன்னும் புரியவில்லை... மீண்டும் 'தூங்' என்று ஆரமிப்பதர்க்கு முன்பே அழைப்பு Cut ஆக, எந்த நாதாரிடா அது... தூங்கும்போது Missed call குடுக்கறது என்று திட்டிக்கொண்டே இவன் அந்த எண்ணிற்கு அழைத்தான், 

Hello யாருங்க பேசறது? என்று கடுப்பாக...

'நான் தாம்பா... சந்தீப்... உன் மேனேஜர்.. இது என் புது number.. சரி... சனி, ஞாயிறு 
சேர்த்து மூணு நாள் Leaveல போயிருந்தியே..இனிக்கு வேலைக்கு வரத்தானே, என்று கேட்கத்தான் phone பண்ணேன்' என்றார்.  

Phone நான் பண்ணேன் சார்... நீங்க Missed call தான் குடுத்தீங்க... எல்லாம்  நேரத்துக்கு  வருவேன்.. இப்போ Bus ல இருக்கேன்.. நான் அப்றோம் 
கூப்புடறேன் என்று அழைப்பை துண்டித்தான்.

ச்சே.. காலங்கார்த்தால இவனுங்க வேற என்று அங்கலாயித்துக்கொண்டு...
அவ்வளவு நேரம் தான், தனது நான்காம் வகுப்பு முழு ஆண்டு லீவு பற்றி கனவு கண்டுகொண்டிருந்ததை உணர்ந்து... சோம்பல் முறித்துக் கொண்டே முன் இருக்கையில் கை வைத்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தான்.. பேருந்து கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது...

முன் இருக்கையில் ஒரு சிறுவன்..

அப்பா ஓசூர் எப்போ பா வரும்.. சொல்லுங்கப்பா..  ஓசூர்  எப்போ பா வரும் என்று தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்ப... இன்னும் ஒரு மணி நேரம் என்று சொன்னதை கேட்டு .. ஐ .. இன்னும் ஒரு மணி நேரம் தானா ஜாலி... என்று குஷியானத்தை கண்டு புன்முறுவல் செய்தான், ராஜு.

படம்: Sparkcrews.com
Blogger Widget