-->

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

கிடைத்துவிட்ட காணாமல் போன கதை சொல்லிகள்

காணாமல் போகும் கதை சொல்லிகள் என்று பத்து வருடங்களுக்கு முன்பு இந்த வலைதளத்தில் ஒரு பதிவு வெளியானது சிலருக்கு நினைவிருக்கலாம். பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த இணையத்தள   உபயோகமும், இன்று இருக்கும் உபயோகத்துக்கும் முடிச்சு போடவே முடியாத அளவுக்கு இமாலய வளர்ச்சி கண்டுள்ளது இணையத்தள உபயோகம். நினைத்தும் பார்த்திராத வகையில் இன்று மிக இயல்பாக அனைத்து விஷயங்களிலும் நம்முடன் பின்னிப்பிணைந்து இருக்கிறது இணையத்தளம். 

அதுவும், கடந்த ஆண்டு கொரோனா உயிர்கொல்லி நோயால் உலகமே தலைக்கீழ் ஆனபோது; பொதுவாக மென்பொருள் பொறியாளர்கள் மட்டும் Computer, Laptop வைத்துக்கொண்டு வீட்டில் இருந்து அவ்வப்போது வேலைபார்த்த வழக்கம் சென்று பொட்டு, பொடுசுகள் முதற்கொண்டு பள்ளிகளும், கல்லூரிகளும் என்று மொத்த உலகமும் இணையதளத்தின் வழியே இயங்க முடியும் என்பது இந்த சமயத்தில் புலனானது.

இப்படி இருக்கும் இந்த சமயத்தில், உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நம் வீட்டுடனும், குடும்பத்துடனும், நண்பர்களுடனும் நம்மை நொடிப்பொழுதில் இணைத்திடும் Video Call, Whatsapp Audio call என்பதை தாண்டி; பெரியவர்களும், குழந்தைகளும் YouTube, Netflix என்று தாம் நினைத்தும் பார்த்திராத வகையில் அசத்தலாக இவை அனைத்தையும் கற்றுக்கொண்டு உபயோகித்து வருகின்றனர். 

முன்பு இருந்ததைப்போல வழக்கமான Sun TV, Vijay TV என்று மட்டும் இல்லாமல் தனி நபர்களின் திறமையை பிறருடன் பகிர்ந்துக்கொள்ளும் வகையில் உள்ள YouTube சேல்களும், Prime Video, Hotstar போன்ற OTT தளங்களில் அழுகை, குடும்பத்தை கெடுக்கும் மாமியார் மருமகள் கதைகள் என்று தொலைக்காட்சி தொடங்கியது முதல் நானும் நாடகம் எடுக்கிறேன் என்ற பெயரில் கொலையாய் கொன்றது போன்ற கேவலமான கதைகள் இல்லாமல் பல அற்புதமான கதைகளும், நம் நாட்டு தொடர்கள் மட்டும் இன்றி உலகின் பல பகுதிகளை சேர்ந்த திரைப்படங்களையும் இணைய தொடர்களையும் எப்போது வேண்டுமானாலும் தமது நேரத்துக்கேற்ப பார்க்கும் வகையில் மக்களுக்கு பொழுதுபோக்குக்கு குறைவே இல்லை என்னும் வகையில் வளர்ந்திருக்கிறது இணையத்தளம்.

அப்படி இருக்க, காணாமல் போன கதை சொல்லிகளும் இந்த இணையத்தின் வழியே கிடைக்க ஆரமித்திருக்கின்றனர்! 

எனது குழந்தை பருவத்தில் நானும் என் தங்கையும் அப்பாவையும், அம்மாவையும் தினமும் கதை சொல்லச் சொல்லிக் கேட்டு, அவர்களும் விடாமல் சொல்லும் கதைகளை கேட்டுக்கொண்டே எப்போது தூங்குவோம் என்றே தெரியாமல் தூங்குவதும், ராட்ஷச இயந்திரங்களில் நாள் முழுதும் வேலை பார்த்துவிட்டு வந்த களைப்பிலும் விடாமல் கதை சொல்லும் சில நாட்களில் கதை சொல்லும்போதே களைப்பில் எனக்கு முன்பு அப்பா தூங்கிவிடுவதும் மலரும் நினைவுகள்.

இது மட்டும் இன்றி, எங்கள் வீதியில் இருக்கும் சிறுவர்கள் அனைவரும் ஒன்றாக விளையாடிவிட்டு, வீட்டுக்கு போகும் முன்பு, கடைசி வீட்டில் இருந்த திண்ணை முன்பு சாலையில் ஒரு ஏழு மணிவாக்கில் உட்கார்ந்துக்கொள்வோம், எங்கள் தெருவில் வசித்து வந்த "முதல் அத்தையிடம்" கதை கேட்போம் (எங்கள் தெருவின் தொடக்கத்தில் உள்ள முதல் வீட்டில் அவர் வசித்து வந்ததால் அவரை நாங்கள் அனைவரும் முதல் அத்தை என்று கூப்பிடுவோம்). அவர் தம் கிராமத்து கதைகளை எங்களுக்கு சொல்வார், சில நாட்கள் சட்டென்று சில நண்பர்கள் பேய்க் கதை சொல்லச் சொல்லி கேட்டு முதல் அத்தையும் பேய் கதை சொல்வார்கள், நாங்கள் அனைவரும் பயம் ஏற்படாமல் இருக்க மேலும் நெருக்கமாக உட்கார்ந்துக்கொண்டு கதை முடிந்ததும் தடதடவென்று வீட்டுக்கு ஓடிவிடுவோம்! மேலும்  எங்கள் ஓசூரிலேயே பலரிடம் கதை கேட்ட அனுபவமும் இருக்கிறது.

இப்படியாக அப்போதெல்லாம் நம் வீதியில் வசித்த யாரிடம் வேண்டுமானாலும் கதை கேட்கலாம், அவர்களும் பிரியத்துடன் கதை சொல்வார்கள். இதன்பின் அதை எல்லாம் கெடுத்துவிட்ட தொலைக்காட்சி பெட்டியும், காணாமல் போன திண்ணைகளும், காணாமல் போன கதை சொல்லிகளும் என்று நம் கருத்துக்களத்திலேயே சில பதிவுகளை முன்பு படித்திருப்பீர்கள். 

ஆனால் இன்று மீண்டும் இந்த கதை சொல்லிகளுக்கு இந்த இணையதளம் உயிர் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது, நம் வீட்டில் நமது குழந்தைகளுக்கு மட்டுமே கதை சொல்லமுடியும் என்ற நிலை சென்று இன்று நாம் இருந்த இடத்திலிருந்தே உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு கதை சொல்லி, அவர்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் அருமையான வாய்ப்பை பயன் படுத்தி சிலர் இன்று கதை சொல்ல ஆரமித்துள்ளனர். அதில் நானும் ஒருவனாக இருந்து என் தங்கைகளின் குழந்தைகளுக்கு, அக்கா குழந்தைகளுக்கு, அண்ணாவின் குழந்தைகளுக்கு என்று ஆரமித்து பின்னர் எனது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆரமித்து கதை கேட்கும் ஆர்வம் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் என்று இணையத்தில் பகிர்ந்துகொண்டுள்ளேன். இப்போதெல்லாம் இரவு பத்து மணிக்குள் நான் கதை சொல்லி இணைப்பை அனுப்பவில்லை என்றால் என் தங்கை குழந்தை அவனாகவே Whatsappஇல் Voice Message அனுப்பிவிடுகிறான்!

இந்த கதைகள் சொல்லும்போதெல்லாம் நான் சிறுவனாக இருந்த சமயத்தில் ஆர்வமாக கடைக்கு சென்று முல்லா நஸ்ருதின், தெனாலிராமன் கதைப் புத்தகங்கள் வாங்கி குதூகலத்துடன் படித்ததும், சிறுவர்மலர், வார மலர் (திண்ணை பகுதி), விகடன் (செழியனின் உலக சினிமா), குமுதம் என்று ஒரு புத்தகம் விடாமலும்; கல்லூரிச் சமயத்தில் அரசாங்க நூலகமும், Luz கார்னரில் உள்ள "ஸ்ரீ கோபால கிருஷ்ண கோகலே" அவர்களால் திறந்து வைக்கப்பட்ட Ranade நூலகத்திலும் என்று நல்ல கதைகளை தேடித்தேடிப் படித்ததும் தான் நினைவுக்கு வருகிறது.

இதுதான் எனது கதை நேரத்தின் இணைப்பு - https://bit.ly/KadhaiNeram-BhargavKesavan 

நான் சொல்லும் கதை மட்டும் இன்றி மேலும் பலர் ஆர்வமாக கதைகள் சொல்லி வருகிறார்கள், Spotify என்ற இலவச செயலியை தங்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்துகொண்டு இப்போதே கேட்க ஆரமிக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் இன்றி நீங்களும் உங்களுக்கு விருப்பமான கதைகளை கேட்டுக்கொண்டே உங்கள் மழலைப் பருவத்து நினைவலைகளுக்கு சென்றுவாருங்கள்.





 
 
 
 


தங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவிடுங்கள். அடுத்தப் பதிவில் விரைவில் சந்திப்போம், நன்றி.
Blogger Widget

2 கருத்துகள்:

  1. இன்றுதான் உங்கள் தளத்திற்கு வருகிறேன்... புதிய முயற்சி!... வாழ்த்துக்கள்!!...
    https://www.scientificjudgment.com

    பதிலளிநீக்கு