-->

வியாழன், 19 ஜூலை, 2018

கிளிங் கிளிங்.., சார் Post...

காலைக் கண் விழித்தது முதல், இரவு உறங்கும் வரை, சிலசமயம் நடுராத்திரியிலும் கூட "டிங்ங்..." "டொய்ங்ங்..." "பீப்...பீப்.." என்று விதவிதமாக கைபேசியில் குறுஞ்செய்திக்கான சத்தம் வந்தவண்ணம் இருக்கும் இந்த காலத்தில், கேட்காமலேயே போனது ஒரு சத்தம்; அது மதியம் பதினோரு மணிமுதல் இரண்டு மணிவரை வாசலில் கேட்ட "கிளிங்... கிளிங்..." என்ற தபால்காரரின் சைக்கிள் சத்தம்.

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, சமையல் வேலைகளை முடித்துவிட்டு, துணி துவைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் வாசலில் "க்ளிங்... கிளிங்..." என்று சத்தம் கேட்டாலே அது தபால்காரர் தான் என்று அனைவருக்கும் தெரியும்.

மாடி வீட்டில் நாங்கள் இருந்த சமயத்தில், அம்மா துணி துவைத்துக் கொண்டிருக்கும்  நேரத்தில் சைக்கிள் சத்தம் கேட்ட உடனே, ராஜு... போய் நமக்கு லெட்டர் வந்துருக்கா பாரு என்று அம்மா சொல்வார், குடுகுடு என்று வாசலுக்கு ஓடி நின்றால், சைக்கிளை நிறுத்திவிட்டு பக்கத்துக்கு காம்பௌண்டுக்குள் சென்றிருப்பார் தபால்காரர். அவர் வரும்வரை காத்திருந்து, அங்கிள் எங்களுக்கு லெட்டர் வந்துருக்கா என்று கேட்டு, அவர் கொடுக்கும் லெட்டரை வாங்கிக்கொண்டு ஓடிவந்து அம்மாவிடம் கொடுப்பேன். யார் கிட்டேர்ந்து வந்துருக்கு அம்மா என்று கேட்டு, மாமாவிடமிருந்து வந்திருக்கு என்று சொல்லி லெட்டரை முழுதும் படித்துவிட்டு எனக்கு படித்து காண்பிப்பார் அம்மா.

அன்று மதியமே வந்த கடிதத்துக்கு பதில் கடிதம் எழுதுவார் அம்மா. பல சமயம் கண்கலங்கியபடியே எழுதுவார். எங்கள் வசிப்பிடம் ஓசூர், மாமாக்கள், பெரியம்மா, பாட்டி இருந்ததோ ராஜ மன்னார்குடி, மயிலாடுதுறை, நாகைப்பட்டினம், குடந்தை என்று தஞ்சை ஜில்லா முழுக்க எங்கள் ஊர் தான். (ஆஹா... சொல்லும்போதே அந்த இயற்கை எழில் கண்முன் நிற்கிறது!) பாட்டி, அத்தை என்று சென்னைக்கு அப்பா லெட்டர் எழுதுவார்.

அப்படி அன்று மதியமே எழுதிய கடிதத்தை, தபால் நிலையம் எங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவு என்பதால்; நான் நான்கு, ஐந்தாம் வகுப்பு படிக்க ஆரமிக்கும் முன்னர் வரை (அதற்கு பிறகும்கூட) 2nd shift செல்ல பேருந்து நிலையம் செல்லும் வழியில் இருக்கும் தலைமை தபால் நிலையத்தில்  அப்பா தான் போஸ்ட் செய்துவிட்டு செல்வார். அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு நானும் உடன் சென்று எப்படி போஸ்ட் செய்வது என்று முதல் முதலில் கற்றுக்கொண்ட நினைவு என் கண்முன்னே அழகாக மலர்கிறது. கம்பெனிக்கு கிளம்பும் முன் அம்மாவிடம், போஸ்ட் செய்ய லெட்டர் இருக்கிறதா என்று கேட்டுவிட்டு தான் செல்வார். அப்பாவுக்கு நேரம் ஆகிவிட்டது அல்லது அம்மா சில சமயம் லெட்டர் கொடுக்க மறந்துவிட்டால் நான் சென்று போஸ்ட் செய்துவிட்டு வருவேன்.
படம்: corbisimages 
எனது சிறுவயதிலேயே அப்போது பல இடங்களில் வைக்கப்பட்ட தபால் பெட்டிகளை சில இடங்களிலிருந்து நீக்கிவிட்டனர், அப்போதுதான் தொலைபேசி வர ஆரமித்த காலக்கட்டம். தலைமை தபால் நிலையத்திலேயே தான் எப்பொழுதும் சென்று போஸ்ட் செய்துவருவேன். மூன்று நிறத்தில் தபால் பெட்டிகள் இருக்கும். சிகப்பு, நீலம் மற்றும் பச்சை. ஒன்று எங்கள் மாவட்டத்துக்குளேயே அனுப்ப, மற்றொன்று வெளி ஊர்களுக்கு அனுப்ப, மற்றொன்று வேறு மாநிலத்துக்கு அனுப்ப என்று நினைக்கிறன்.

ஒவ்வொரு தடவையும் போஸ்ட் செய்ய செல்லும் முன்னர் அம்மா சொல்லி அனுப்புவார், சரியான பெட்டியில் போஸ்ட் செய்துவிட்டுவா என்று. பொதுவாகவே அனுப்பிய தபால் சென்று சேர நான்கு நாட்கள் வரை ஆகும், மழைக்காலம், புயல் என்றால் மேலும் தாமதம் ஆகும். ஒரு தடவை கடிதம் அனுப்பிவிட்டு, அடுத்தவாரம் பதில் வரவில்லை என்றால் அடடா, ஏன் எட்டு நாட்கள் ஆகியும் இன்னும் பதில் வரவில்லை என்றிருக்கும், அந்த காத்திருப்பு மற்றும் எதிர்பார்ப்பில் ஒவ்வொரு நபரின் அன்பும் ஏக்கமும் வெளிப்படும்.

ஹ்ம்ம்... இன்று பள்ளி, கல்லூரி படிக்கும் பொடிசுகள் whatsappஇல் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு ஒரு டிக் தான் வந்திருக்கிறது, ரெண்டாவது டிக் வரவில்லையே... என்ன ரெண்டு டிக் தான் வந்திருக்கு படிச்சதுக்கு blue டிக் வரவில்லையே என்றெல்லாம் ஒரு நிமிடத்துக்கே அங்கலாய்த்துக்கொண்டிருக்கும் காலத்தில், ஒரு கடிதத்துக்கு எட்டு நாட்கள் வரை ஒரு காலத்தில் காத்திருந்த அருமையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உடுத்திய அரைக்கால் டிராயரில் பொத்தான் இல்லை என்றால், ஏ.. postbox, postbox என்று சொல்லி பள்ளியில் கிண்டல் செய்ததும், postbox போன்ற வடிவில் திருவிழாக்களில் உண்டியல்கள் விற்றதும், postman பாத்திரத்தை மையமாக வைத்து வெளிவந்த எத்தனையோ திரைப்படங்களும், நகைச்சுவைகளும்  இன்று அனைவரும் மறைந்த ஒன்றாகிவிட்டது.

இரண்டாவது, மூன்றாவது படிக்கும்போதே உடன் உட்கார வைத்துக்கொண்டு மாமாவுக்கும், பெரியம்மாவுக்கு, பாட்டிக்கும் கடிதத்தில் சில இடம் எனக்கு ஒதுக்கி என்னையும் கடிதம் எழுதவைப்பார் அம்மா. இன்று ஒரு வயது நிரம்பிய என் தங்கையின் குழந்தை என்னை Whatsappஇல் வீடியோ வழியே  பேசும்போது மாமா என்று கூப்பிடும் பொது ஏற்படும் மகிழ்ச்சி, பள்ளி முடிந்து, புழுதி பறக்க தெருவில் விளையாடி முடித்துவிட்டு அம்மாவுடன் உட்கார்ந்து "அன்புள்ள மாமாவுக்கு" என்று இருபது மூன்று மூன்று வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய கடிதத்தின் கையெழுத்தில் எனது மாமாக்களும், பெரியம்மாவும் மகிழ்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

பொங்கல், தீபாவளி, புது வருடம் என்றால் அம்மா, அப்பாவுடன் Greeting Card வாங்க கடைக்கு சென்று அண்ணாவுக்கு எந்த ஹீரோ பிடிக்கும், அக்காவுக்கு எந்த ஹீரோ பிடிக்கும், அத்தைக்கு எந்த கார்டு அனுப்புவது, அத்தைப் பையனுக்கு எந்த ஹீரோ பிடிக்கும், மாமாவுக்கு, பெரியம்மாவுக்கு தெய்வங்கள் படம் போட்ட வாழ்த்து அட்டை என்று எனக்கு தெரிந்த, நினைவில் பசுமையாக நிற்கும் "shopping" என்றால் அது இந்த shopping தான்.

என் தம்பியும், நானும். உப்பிலியப்பன் கோவில் தபால் நிலையத்தில் சில வருடங்களுக்கு முன்பு எடுத்த படம்.
என்னதான் இன்று whatsappஇல் விதவிதமாக குட் மார்னிங், குட் நைட் என்று அனைத்துக்கும் ஒரு படம் வந்தாலும்,  அன்று ஊரில் நமக்காக, நமக்கு பிடித்த நடிகர்கள், வாசகங்கள் கொண்ட வாழ்த்து அட்டைகளை நமக்கு அனுப்பிவைத்து அது வந்த பின்னர் அதை பிரித்து படித்து மகிழ்ந்த அந்த காலம் இன்று மறைந்த ஒன்றாகிவிட்டது. எனக்காக என் அக்காக்கள் அனுப்பிய விஜயகாந்த் படம் போட்ட வாழ்த்துப் படங்களும், ஜெயலலிதா படம் போட்ட வாழ்த்துப்படங்களும் ஏராளம், எங்கள் வீடு முழுக்க விஜயகாந்தும், ஜெயலலிதா படமும் அத்தனை ஒட்டிவைத்து அந்த வாழ்த்து அட்டைகளை பாதுகாத்தது ஒரு காலம்.

இருபது, சிலநேரங்களில் அதற்கும் மேற்பட்ட கூட்டமாக மக்கள் நின்ற நீண்ட வரிசையில் நானும் நின்று, ஏங்க... பத்து ரூபாய்க்கு போஸ்ட் கார்டு, அஞ்சு ரூபாய்க்கு inland லெட்டர், அஞ்சு  ரூபாய்க்கு stamp குடுங்க என்று அதை வாங்க வரிசையில் நின்ற நாட்கள் எத்தனை, எத்தனை!!! போஸ்ட் கார்டு, இன்லேண்ட் லெட்டர், நாலணா ஸ்டாம்பு, ஐம்பதுக்காசு ஸ்டாம்பு, ஒரு ரூபாய் ஸ்டாம்பு, Money Order, Telegram, Postoffice Savings என்று எத்தனையோ விஷயங்களுக்காக எத்தனையோ நாட்கள் தபால் நிலையத்துக்கு சென்ற நமக்கு அங்கே வேலை செய்பவர்களில் பாதிபேர் நண்பர்களாகவே இருந்தனர்.

வாசலில் தபால் கொடுக்க வருபவரோ, வருவது சில நொடிகளானாலும் அவர் கொண்டு வரும் தபால் எத்தனையோ பேரின் மன பாரத்தையும், அன்பையும், எதிர்பார்ப்பையும் கொண்டதாக அமைந்தது. மே மாதம் என்றால் பள்ளி மாணவர்களுக்கு கிளிங் கிளிங் சத்தம் என்றாலே கிளி பறக்கும்!!! முழு ஆண்டு பரீட்சையின் முடிவு வரும் சமயம் ஆச்சே!!! அந்த இன்லேண்ட் லெட்டர் வந்து அதை திறந்து "promoted" என்ற செய்தியை கண்ட உடன் கையில் பிடிக்கமுடியாமல் சுற்றிய காலம் அது! இப்போதெல்லாம் பத்து, பன்னிரண்டு வகுப்பு தவிர மற்ற வகுப்புக்கு எப்படி முடிவு வருகிறது என்று எனக்கு தெரியவில்லை, உங்களுக்கு தெரிந்தால் கீழே கருத்துப் பகுதியில் தெரிவியுங்கள். அந்த பத்து, பன்னிரண்டாம் வகுப்புக்கும் நாளிதழ்களில் தான் அப்போது தேர்வு முடிவு வரும்.

இன்றோ, நாளிதழ், டிவி போட்டியில் பங்குகொள்ள தபால் நிலையம் சென்று அஞ்சல் அட்டை கேட்டால், தலைமை தபால் நிலையத்திலேயே அஞ்சல் அட்டை இல்லை என்கின்றனர். பாவம், அவர்கள் என்ன செய்வார்கள், அரசாங்கம் தான் அஞ்சல் துறையை மறந்து விட்டதே. ஹ்ம்ம்.. BSNLஐ முடுக்கி விட்டால் தங்கள் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு திருட்டு தனமாக connection கொடுத்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கலாம், அஞ்சல் அட்டையை வைத்து என்ன லாபம் பார்க்க முடியும் இவர்களால்? ஹ்ம்ம்..
நன்றி: இந்தியா போஸ்ட் 
வெறும் சிவப்பு நிறபெட்டியாக மட்டும் அன்றி எத்தனையோ மக்களின் இன்ப, துன்ப, மனபாரத்தையும், அன்பையும், பிரிவையும் வார்த்தைகளால் சுமந்த பெட்டியாகவே இருந்தது. இப்படி ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரின் வாழ்வில் முக்கிய பங்கு வகித்து ஆங்காங்கே கடைத்தெருவில், ஊரின் மற்ற பகுதியிலும் அழகாக சிவப்பு நிறத்தில் தொங்கிக்கொண்டிருந்த தபால் பெட்டியும், தபால் பெட்டியும், தபால் நிலையமும், கிளிங் கிளிங் சைக்கிள் ஓசையும், சார் போஸ்ட் என்ற குரலும், ஸ்டாம்ப் ஒட்டும் பழக்கமும், பொடி நடையாக சென்று கடிதத்தை போஸ்ட்டு செய்துவிட்டு வந்த சமயமும், எட்டு, பத்து நாட்கள் கடிதத்துக்காக காத்திருந்த அனுபவமும் இன்று காணாமலேயே போனது.

இந்த பதிவை ஒரு தபால்காரர் போல உங்களுக்கு கொடுக்கிறேன்

கிளிங்... கிளிங்... சார் போஸ்ட்...
Blogger Widget

செவ்வாய், 3 ஜூலை, 2018

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 11 | மக்கள்


எச்சரிக்கை: வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியிட்டுள்ளேன், முக்கிய பிழைகள் இருப்பின், கருத்தில் தெரிவிக்கவும், திருத்திக்கொள்கிறேன். நன்றி.

படம் - Dummy's Photography
நம் நாட்டில் அமெரிக்கர்களை பற்றிய ஒரு எண்ணம் உண்டு, அதாவது அமெரிக்கர்கள் பணக்காரர்கள், எல்லா வீடுகளிலும் கார் உண்டு, அதுவும் ஆளுக்கு ஒரு கார் உண்டு, எல்லோரும் iPhone வைத்திருப்பார்கள், அங்கெல்லாம் பைக்கே கிடையாதாம், இருந்தாலே Harley Davidson போன்ற பைக்குத்தானாம், யாரு வேணும்னாலும் யாருக்கு வேணாலும் முத்தம் குடுத்துப்பாங்களாம் அப்படி இப்படி என்று இன்னும் பலப்பல தவறான அனுமானங்கள் உண்டு. 

நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம், நிலப்பரப்பு குறைவு. இங்கோ நிலப்பரப்பு அதிகம், மக்கள் தொகை குறைவு.

வீட்டை விட்டு ஒரு தடவை வெளியே செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், சரி நீங்கள் ஓசூர்காரர் என்றால் காபிப்பொடி வாங்க பக்கத்தில் இருக்கும் வாசன் காபிப்பொடி கடைக்கோ அல்லது வேற ஊர்க்காரர் என்றால் உங்கள் ஊரில் பல ஆண்டுகளாக நீங்கள் வழக்கமாக காபிப்பொடி வாங்கும் கடைக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அரை மணிநேரத்தில் குறைந்தது... "குறைந்தபட்சம்" முன்னூறு பேர் நம் கண்ணில் தென்படுவார்கள், இதில் மூன்று அல்லது நான்கு பேர் நமக்கு தெரிந்தவர்கள் எதிர்ப்படுவார்கள் ஒரு வணக்கம் சொல்லிவிட்டு, எப்படி இருக்கீங்க என்ன என்று பேசிவிட்டு நடையை கட்டுவோம், சில சமயம் ஒரு புன்முறுவல் மட்டும் தான்.

இங்கே அதே அரை மணி நேரம் ஒரு பெரிய கடைக்கு சென்றால், "அதிகபட்சம்" ஒரு நூறு பேரை காணலாம், நம் பொருட்கள் வாங்கும் இந்திய கடைகளுக்கு சென்றால் மிஞ்சிப்போனால் ஒரு இருபதுபேர் இருப்பார்கள். அவ்வளவு தான். இந்த குத்துமதிப்பு கணக்கும் பெரிய ஊர்களில் மட்டும் தான்.

இங்கே வந்த முதல் வாரத்திலேயே அமெரிக்கர்களைப் பற்றி புரிந்துக்கொண்ட ஒன்று, இவர்கள் அனைவரையும் மதிப்பவர்கள். வெளியே காலாற நடக்க சென்றால் எதிரில் தென்படுபவர்கள் சற்றே முன்பு பார்த்திராதவர்களாக இருந்தாலும் hello... how are you doing என்று ஒரு புன்முறுவலுடன் கேட்டுவிட்டுதான் செல்வார்கள். வந்த புதிதில் இது பழக்கம் இல்லாததால் எதிரில் வருபவர்களை நம் மக்கள் பார்க்கக் கூட மாட்டார்கள், எனக்கும் இது பழகும் வரை அப்படிதான்.

நாம் வேறு நாட்டவர் என்பதால் நம்மை ஏதோ சொல்லிவிடுவார்களோ என்ற எண்ணம் நம் மக்களிடம் இருக்கும், ஆனால் அப்படி அல்லாமல் யார் எதிரே வந்தாலும் புன்முறுவல் செய்து செல்வார்கள். எந்த இடமாக இருந்தாலும் சரி. நாம் தயங்கினாலும் சகஜமாக பேச்சுக்கொடுப்பார்கள். நம் நாட்டில் பேசுவது போலத்தான் இங்கும் பேச்சுக்கள் தொடங்கும், அட இன்னிக்கு என்ன இப்படி வெயில் அடிக்குது, அடுத்த வாரமும் பயங்கர பனிக்குளிர்  அடிக்கப்போகுதாம் என்று நம்மை முதல் முறை பார்ப்பவராக இருந்தாலும் நம்மிடம் பேச தயங்க மாட்டார்கள்.

ஒரு சமயம் பேருந்திலிருந்து பெரியவர் ஒருவர் தம் நிறுத்தத்தில் இறங்க ஆரமிக்க, பேருந்து ஓட்டுனரே அவர் பையை தன் கையில் வாங்கிக்கொண்டு, அவரின் கையைப் பிடித்துக்கொண்டு பேருந்திலிருந்து அவருடன் இறங்கி, அவரை இறக்கி விட்டார். பேருந்தில் இருந்த யாரும் உச் கொட்டவில்லை.

ஒருமுறை பேருந்தில் கண்ணாடியை தவற விட்டுவிட்டேன், இறங்கியவுடன் நினைவுக்கு வந்தது, உடனே பேருந்தில் ஏறி ஓட்டுனரிடம்; ஒரு நிமிடம் கண்ணாடியை விட்டுவிட்டேன் தேடிக்கொள்கிறேன் என்று நான் உட்கார்ந்த இருக்கையில் தேடிவிட்டு, கிடைக்கவில்லை என்று சொன்னேன், அதற்கு அவர் நிச்சயம் அங்கயே தான் இருக்கும், யாரும் எடுத்திருக்க மாட்டார்கள் என்று அவ்வளவு நம்பிக்கையாக சொன்னார். பின்னர் தான் என் பையிலேயே waterbottle வைக்கும் இடத்திலேயே இருந்ததை உணர்ந்தேன். சட்டென்று யாரோ எடுத்திருப்பார்கள் என்று சொல்லாமல், யாரும் எடுத்திருக்க மாட்டார்கள் என்று அடுத்தவர்கள்மேல் நம்பிக்கை வைத்து கூறிய விதம் என்னை ஆச்சர்யப்பட வைத்து.

நம்மை போலவே அவர்களும் இறை நம்பிக்கை கொண்டவர்கள் தான், நம்பிக்கை இல்லா சிலர் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்வர். சில விஷயங்களில் நாம் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தால் நம்மை சுற்றி இருப்பவர்கள், அட இதை எல்லாம் போயி நம்பிகிட்டு... அ..வ..வ..ன் விஞ்ஞானத்துல வளந்து எங்கேயோ போயிட்டிருக்கான், இன்னும் என்னடான்னா என்ற கேலிக்களை நாம் நிச்சயம் கேட்டிருப்போம், நாமே அடுத்தவரை கிண்டல் செய்திருப்போம்... இங்கே வந்த முதல் நாளில் தெரிந்துக்கொண்ட முதல் விஷயமே - அமெரிக்கர்கள் நம்மைவிட இதுபோன்ற நம்பிக்கைகள் கொண்டவர்கள். இங்கே 13 என்ற எண் ராசியற்ற எண் என்று நம்புகிறார்கள், பல அடுக்குமாடி கட்டிடங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் 13 என்ற எண் கிடையாது. பன்னிரண்டாவது தளத்துக்கு பின் பதினான்காவது தளம் தான். அதே போல சில ஹோட்டல்களிலும், மருத்துவமனையிலும் 13 என்ற அறையோ, எண்ணோ உபயோகிப்பதில்லை.


ஆனால் நாம் பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் நம்பிக்கைகளை, பகுத்தறிவு போர்வையில் இருந்த, இருக்கும் நச்சுக்கிருமிகளின் கேலியாலும், கிண்டலாலும் தன் அடையாளத்தை வெளியே சொல்லவே தாங்கிக்கொண்டிருக்கின்றனர் பலர். கோவிலுக்கு போ என்றோ, நெற்றியில் விபூதி வெச்சுக்கோ என்றோ பள்ளி, கல்லூரி செல்லும் சிறுவர்களிடம் சொன்னால் பள்ளிக்கூடத்தில் அதை எல்லாம் வெச்சுக்கவே கூடாது, பெண்குழந்தைகள் பூ வைத்துக்கொள்ளக் கூடாது என்று எழுதப்படாத சட்டமே இருக்கிறது!

அமெரிக்காவின் தேசிய பறவை, கழுகு. கோழி வந்ததா, இல்லை முட்டை வந்ததா என்பதை போல, இந்நாட்டின் வழக்கத்தினாலோ, அல்லது தேசிய பறவை கழுகு என்பதாலோ தெரியவில்லை அடுத்த நாட்டு விஷயத்தில் கழுகுக்கு மூக்கில் வேர்ப்பது போல அடுத்த நாட்டு விஷயங்களில் தலையிட்டு தன்னை பல காலங்களாக உலக நாடுகளுக்கு பெரியண்ணனாக காட்டிக்கொண்டிருக்கிறது. நம் நாட்டை போலத்தான் இங்கேயும், அரசின் சில முடிவுகளில் இருவித கருத்து கொண்டிருப்பர். இது பற்றி விரிவாக அரசியல் பற்றிய அத்தியாயத்தில் பார்க்கலாம்.  

நியூயார்க் தெருக்களிலும், மற்ற மாநில முக்கிய தெருக்களிலும் பல பிச்சைக்காரர்களை காண முடியும். இல்லமற்றவர், கர்ப்பிணியாக கைவிடப்பட்டவர், குடிக்கும், போதைக்கும் அடிமையாகி தெருவில் அலைபவர்கள் என்று நம் நாட்டை விட இங்கே இளம்வயது பிச்சைக்காரர்கள் அதிகம். நம் நாட்டில் 20-30 வயது பிச்சைக்காரர்களை கடைசியாக எப்போது பார்த்த நியாபகம்  உங்களுக்கு? எனக்கில்லை. ஆனால் இங்கே அப்படிப்பட்ட பிச்சைக்காரர்கள் தான் அதிகம்.



என்ன ஒரே ஒரு வித்தியாசம் - அடுத்தவர் பின்னால் சென்று கையேந்த மாட்டார்கள். கையில் ஒரு அட்டையில் தனக்கு என்ன வேண்டுமோ அதை எழுதி வைத்து முன்னே ஒரு டப்பா வைத்திருப்பார்கள். பெரும்பாலான பிச்சைக்காரர்கள் நியூயோர்க்கில் நான் பார்த்தவரையில் ஒரு அட்டையில் homeless, need money for food, anything will help, pregnant please help என்று ஏதாவது ஒன்று எழுதி முன் ஒரு டப்பா வைத்துவிட்டு தான்பாட்டுக்கு ஏதாவது புத்தகம் படித்துக்கொண்டிருப்பர். அல்லது ஏதாவது violin, guitar என்று வாசித்து அதை வீடியோ எடுத்துக்கொள் ஆனால் $1 கொடுத்தால் நன்றாயிருக்கும் என்று மிக வெளிப்படையாகவும், மரியாதையாகவும் எழுதி வைத்திருப்பார்கள். இல்லமற்றவர்கள் படுக்க ஆங்காங்கே சில shelterகள் இருப்பதை பார்த்திருக்கிறேன், பல தொண்டு நிறுவனங்கள் இயன்றவரை இவர்களுக்கான உதவியை செய்துவருகிறார்கள்.


நம் நாட்டில் நடப்பதுபோன்ற திருட்டு, பெண்களுக்கெதிரான வன்கொடுமை இங்கேயும் நிறைய அரங்கேறும் செய்திகள் அவ்வப்போது வரும், மேலும் அடிக்கடி பள்ளிகளில், பொது இடங்களில் துப்பாக்கி சூடு நடந்து மக்களை உறைய வைக்கும். இங்கே யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வாங்கலாம், வைத்துக்கொள்ளலாம் என்ற சட்டம் தான் இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு முக்கிய காரணம். நூறு டாலர் முதல் துப்பாக்கி கிடைக்கும், ஒருபது டாலருக்கு ஐம்பது தோட்டாக்கள் கிடைக்கும். விறுவிறுப்பான action திரைப்படமும், கண்டதையெல்லாம் சுட்டு விளையாடும் computer விளையாட்டுக்களையும் தொடர்ந்து பார்க்கும் நபரிடம் ஒரு துப்பாக்கி கிடைத்தால் என்ன செய்யத்தோணும் என்று நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள்.

முக்கிய மாநிலங்கள் எதுவானாலும் அதில் இந்தியர்கள், சீன மக்கள், ஜப்பான், ரஷ்யா, பாகிஸ்தான், வியட்நாம், ஜெர்மனி என்று பல நாடுகளை சேர்ந்த மக்கள் தான் இங்கே குடிபெயர்ந்த மக்களாக இருப்பர். தத்தம் நாட்டுக்கு கலாச்சாரத்தை பின்பற்றியும், இந்நாட்டு கலாச்சாரத்தை ஒன்றிணைத்துக்கொண்டும் அவரவர்களின் துறையில் ஒவ்வொருவரும் சிறந்து விளங்க இடம் கொடுப்பதாலேயே அமெரிக்காவை பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

நம் நாட்டில் இடஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மக்களின் திறமைக்கு மதிப்பளிக்காமல், ஜாதி, மதம் என்று பார்த்து... ஒரு குழந்தையை Pre KG அல்லது இப்போது புதிதாக முளைத்த பெயர் Junior KG (Kindergarden) சேர்க்கவே பெரிய இடத்து சிபாரிசு எதிர்பார்க்கும் பள்ளிக்கூடங்களும், எவ்வளவு நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் இடஒதுக்கீட்டின் தலையீட்டால் தான் படிக்க விரும்பும் துறையை தேர்ந்தெடுக்க முடியாத சூழலுக்கு தள்ளப்படும் மாணவர்களும்,  சொல்வதுக்கெல்லாம் ஆமாம் சாமி போடவேண்டும் என்று பணியிடத்தில் எதிர்பார்க்கும் துறை அதிகாரிகளும், பதவி உயர்வுக்கும், பணியிட மாற்றத்திற்கும் லஞ்சம் எதிர்பார்க்கும் மேலாளர்களும், தன் கடமையை செய்ய தலையை சொரிந்து மக்களிடம் பிச்சை கேட்கும் எச்சை அதிகாரிகளும் இருப்பதாலேயே ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் போன்ற தலை சிறந்த நூல்களையெல்லாம் உலகுக்கு தந்த புகழ் பெற்ற நாம் இன்று மூணாவது கூட படிக்காத படிப்பறிவில்லாத நபர்களை எல்லாம் நம்மை வழி நடத்தும் தலைவர்களாக, மாநிலத்தின் முதல்வராக, தேசத்தின் பிரதமராக என்று தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். 

சுருக்கமாக சொல்லப்போனால் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதுதான் இந்த நாட்டின் முக்கிய தாரக மந்திரம். பல நாட்டவர் சேர்ந்து சிறந்த வழித்தடத்தில் சென்றதாலேயே இன்று இந்நாடு உலக நாடுகளுக்கு பெரியண்ணனாக விளங்குகிறது அமெரிக்கா.


அடுத்த அத்தியாயம் விரைவில்...
Blogger Widget