-->

வியாழன், 6 செப்டம்பர், 2018

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 13 | பொழுதுபோக்கு

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...


டிவி, சினிமா பற்றி மட்டுமே சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதையே இன்னும் விரிவாக எழுதியிருக்க வேண்டும், ஆனால் அது அரைத்த மாவாகிவிடும் என்று முற்றுப்புள்ளியிட்டேன்.

ஆனால் அதுமட்டுமே இங்கு பொழுதுபோக்கு அல்ல, அதைத் தாண்டி ஒரு உலகமுள்ளது!

எனது சிறு வயதில் எங்கள் ஓசூரில் ஆண்டாண்டுகளாக தேர் திருவிழாவையொட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கும் பொருட்காட்சியில் ஒரு முறை S.Ve.சேகரின் மேடை நாடகம் நடந்தது, அப்போது அந்த நாடகத்தை கண்டு ரசித்திருக்கிறேன். அதன் பின் நாகைப்பட்டினத்தில் எனது மாமாவின் இல்லத்திற்கு சென்றிருந்த சமயத்தில் சிவன் தெற்கு வீதியில் T.K.S.நடராஜனின்

என்னடி முனியம்மா ஒன் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்

மாடு ரெண்டும் மதுர வெள்ளமணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
மாடு ரெண்டும் மதுர வெள்ளமணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணம்மா - அது
கூடுதடி சாலபாதை பொன்னம்மா

என்னடி முனியம்மா ஒன் கண்ணுல மையி

என்ற நாட்டுப்புற பாடலைக் கேட்டு ரசித்து அதையே பல ஆண்டுகளாக பாடி முணுமுணுத்திருக்கிறேன்... அதற்கும் முன் குழந்தையாக இருந்த சமயத்தில் நான் பிறந்த ராஜ மன்னார்குடியில் தெருக்கூத்து பார்த்த நினைவு. இந்தியாவிலேயே மிக பிரமாண்டமாகவும், அற்புதமாகவும் கொண்டாடப்படும் எங்கள் ஓசூர் விநாயகர் சதுர்த்தி சமயத்திலும், உகாதிப் பண்டிகையையொட்டி தெருவில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சியை நினைவு தெரிந்தது முதல் ரசித்திருக்கிறேன்.

இதன் பின்னர் மயிலாப்பூரில் படித்த சமயத்தில் தவறாமல் பாரதி வித்யா பவனில் நடந்த இசைக் கச்சேரிக்கு, பாரதநாட்டியத்திற்கும் - அப்படியே இதையும் சேர்த்துக்கொள்கிறேன் - கருணாநிதியின் தலைமையில் 2005இல் அவர் வெளியிட்ட புத்தக வெளியீட்டிற்கும், "Yes, you can" என்ற ஒபாமாவின் புத்தகத்தை அவர் முதல் முறை அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்குமுன் வைகோ அவர்கள் ஒபாமாவை சந்தித்து அந்தப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து "ஆம், நம்மால் முடியும்" என்று வெளியிட்ட விழாவிலும், ராமகிருஷ்ணா விஜயம் புத்தகத்தின் எண்பத்து  ஐந்தாவது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் அனைவருக்கும் பிடித்த தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் பேச்சுரையையும், தினமணியில் கேலிச்சித்திரம் வரையும் மதியின் புத்தக வெளியீட்டு விழாவில் அப்துல் கலாம் அவர்கள் வெளியிட எங்கள் கல்லூரி செயலாளர் ஆத்மகனானந்தாஜி  அவர்கள் பெற்ற விழாவில் அவருடனேயே காரின் மயிலாப்பூர் மியூசிக் அகாடெமிக்கு சென்று பத்தாவது வரிசையில் உட்கார்ந்து அப்துல் கலாமின் சுறுசுறுப்பையும் அவர்களின் குழந்தை போன்ற மென்மையான குரலின் பேச்சையும் பார்த்து ரசித்திருக்கிறேன்.

இதுதவிர 2005 முதல் 2013 வரை தொடர்ந்து துக்ளக் ஆண்டுவிழா அன்று எப்படியும் அரங்கினுள் சென்று ஆசிரியர் சோ அவர்களின் பேச்சை கேட்க வேண்டும் என்று மாலை ஆறு மணி விழாவுக்கு மதியம் இரண்டு மணிமுதலே துக்ளக் வாசகர்கள் சாரைசாரையாக வரத் தொடங்கிவிடுவார்கள். நானும் ஆரம்பத்தில் தனியாகவும், பின் வந்த ஆண்டுகளில் எனது மாமா மற்றும் அண்ணாவுடன் மதியமே காமராஜர் அரங்கம் சென்றும்,  சில வருடங்கள் அரங்கிற்கு வெளியேயும் உட்கார்ந்தும் பல முறை அந்த நிகழ்ச்சியை கண்டு ரசித்திருக்கிறேன். பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிலைப்படுத்தவேண்டும் என்று பாஜகவை அறிவிக்க அதவானியிடம் மோடியை வைத்துக்கொண்டே வாசகர்கள் முன் உரையிட்ட சோ அவர்களின் பேச்சை அரங்கமே கைதட்ட கேட் நேரங்களில் நானும் பங்கு பெற்றுக்கிறேன் என்பதில் எனக்கு பெருமையே! (துக்ளக் ஆண்டு விழா எப்படி நடக்கும் என்று அறியாதவர்களுக்கு அதைப் பற்றி ஒரு கட்டுரை விரைவில் எழுத உள்ளேன், அவசியம் படிக்கவும்!)


ஒரு முறை எனது இதயம் முழுதும் நிறைந்திருக்கும் இசைக்கு அதிபதியான இசைஞானியையும், யுவனையும் Yuvan – Live in Concert என்று   2011இல் விஜய் டிவி நடத்திய நிகழ்ச்சியை நந்தனம் YMCA மைதானத்தில் என் அக்கா என்னை அழைத்து சென்ற சமயத்தில் கைதட்டி ரசித்து மகிழ்ந்திருக்கிறேன்.

இதுதவிர பொழுதுபோக்கு என்றால் புத்தகங்கள், செய்தித்தாள்கள். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த சமயங்களில் ஒரு நாளில் ஏழு நாளிதழ்களும் (தினமலர், தினமணி, தினகரன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து, தமிழ் முரசு, Deccan Chronicle), வார இறுதியில் இன்று 118 ஆண்டுகள் பழைமை வாய்ந்த - "கோபால கிருஷ்ண கோகலே" அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு மஹாதேவ் கோவிந்த் இரானடே அவர்களின் பெயரால் வழங்கப்பெறும் "தென்னிந்திய தேசிய சங்கம் - இரானடே நூலகம்" சுருக்கமாக இரானடே  நூலகத்தில் வார இறுதி மாலை நேரங்களில் பக்கங்கள் திருப்பும் சத்தம் மட்டுமே கேட்கும் வேளையில்நீண்ட செவ்வக மர மேஜையில் அங்கே இருக்கும் வயதில் மூத்தவர்களுடன் துக்ளக் பத்திரிகை படிப்பதும் எனது வழக்கமாக இருந்தது. அந்த சமயங்களில் அரசு நூலகத்தில் துக்ளக் வைக்க மாட்டார்கள் (கருணாநிதி ஆட்சி அது!ஹாஹா!).


இப்படியாக நேரடி நிகழ்ச்சிகள் தவிர மாதா மாதம் ரேஷன் கடைக்கு அரிசி வாங்க செல்லும்போது, அப்பா அம்மாவும் எனக்கும் என் தங்கைக்கும் பிடித்த இரண்டு படத்தை தேர்ந்தெடுத்து அந்தப் படத்தின் காசெட்டை பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கிவந்து பாடல் கேட்போம். கல்லூரி சமயத்தில் 2005இல் அப்போதுதான் FM famous ஆக தொடங்கியது. இரவு நேரம் ஆனாலே கொண்டாட்டம் தான், எந்த FM stationனை திருப்பினாலும் இரவு முழுக்க இளையராஜாவின் பாடல்கள் தான்!

அதன் பின் கடந்த பதிமூன்று ஆண்டுகளாக எனக்குப் பிடித்த விஷயங்களில் சினிமாவைப் பின்தள்ளிவிட்டு இடம் பிடித்தது நாடகம். மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் எனது நண்பன் பிரவீன் கண்ணன் மற்றும் வேதாத்ரி ஆகியோரால் தான் நான் நாடகம் ஒலிவடிவில் "கேட்க" நேரிட்டது. அன்று முதல் என்று வரை Crazy மோகன், S.Ve.சேகர், காத்தாடி ராமமூர்த்தி, சோ போன்றவர்களின் நாடகங்கள் கேட்டுவிட்டு தான் தூங்க செல்வேன்.

மேலே குறிப்பிட்ட நம்மூர் பொழுதுபோக்குகளுக்கு அமெரிக்காவில் சற்றும் குறைவில்லை. இங்கே ஒவ்வொரு மாநிலங்களிலும் சில மாவட்டங்களிலுமே கூட (County என்பார்கள்) தமிழ் சங்கங்கள் உண்டு. நியூ ஜெர்சி தமிழ் சங்கம், நியூயார்க் தமிழ் சங்கம், அட்லாண்டா தமிழ் சங்கம் என்று ஒவ்வொரு தமிழ் சங்கங்களிலும் பல ஆண்டுகளாக இங்கேயே குடிமக்களாக இருக்கும் நம் மக்கள் செவ்வன செயல்பட்டு வருகிறார்கள்.

பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு என்று ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தமிழ் பட்டிமன்றம், நடனம், கர்நாடக சங்கீதம், நாட்டுப்புறப் பாடல்கள் என்று அனைத்துமே நடைபெறும். அது தவிர நம் நாட்டு இசைக் கலைஞர்களும், நகைச்சுவைக் கலைஞர்களும் அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டே இருப்பர். இதற்கான விளம்பரங்கள் இங்கே வெளிவரும் தமிழ் மாத புத்தகங்களான தென்றல், 8K தமிழ் எக்ஸ்பிரஸ் புத்தகங்களிலும், இது தவிர Little India, Indian Express (நம் நாட்டில் வெளிவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் அல்ல) போன்ற பல நம்மூர் வார ஆங்கில இதழ்களிலும் இதற்கான விளம்பரங்கள் வெளிவரும்.

இங்கே இருக்கும் நூலகங்களில் குஜராத்தி புத்தகங்களும், மாத இதழ்களும் இருக்கும். தமிழ் புத்தகங்கள் வேறு ஊர்களில் உள்ள நூலகங்களில் உள்ளனவா என்று எனக்கு தெரியவில்லை. (தெரிந்தவர்கள் கருத்து பகுதியில் தெரிவிக்கவும்!)

இது தவிர அவ்வப்போது பாஜகவோ காங்கிரஸோ யார் ஆட்சியில் இருந்தாலும் இங்கே அடிக்கடி யாராவது அவர்களை அழைத்து பேச வரவழைத்து ஒரு சின்ன கூட்டம் ஒன்று நடத்தி விடுவார்கள், கையில் அன்பளிப்பாக ஒரு தொகையை நிச்சயம் குடுத்து அனுப்புவார்கள் என்று நினைக்கிறன்! (இல்லை என்றால் அவர்கள் ஏன் இங்கே வர போகிறார்கள்!)

தமிழ் நாடகங்கள் இங்கே முக்கிய சமயங்களில் நடைபெறுகின்றன, தமிழ் வருடப்பிறப்பு மற்றும் சில உள்ளூர் விடுமுறை நாட்களில் இது நடை பெறுகிறது. எனக்கு தெரிந்து Stage Friends என்ற நாடக அமைப்பு கடந்த இருபத்தி ஆறு ஆண்டுகளாக இங்கே நாடகங்கள் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் கலந்து பேச ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, இரமணி அவர்களின் இல்லத்திற்கு இந்த ஆண்டு ஜனவரியில் சென்றேன். இவர்கள் நடத்தும் ஒவ்வொரு நாடகமும் இந்தியாவில் சீர்காழியில் இருக்கும் கணவகம் மற்றும் காரைக்குடியில் இருக்கும் ஒரு ஆசிரமத்துக்கு இங்கே வரும் டிக்கெட் பணம் முழுவதையும் அனுப்பி வைக்கின்றனர். நாடகம் நடத்த உள்ளூர் பள்ளி அரங்கத்தில் முன்பே முன்பதிவு செய்வதிலிருந்து, நாடகத்திற்கு இசை அமைப்பது, இயக்குவது என்று அனைத்தும் ஒரு குடும்பமாக செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ரூபாய்க்கும் என்ன செலவு என்பதை வனமாலி (பொருளாளர் பொறுப்பில் இருப்பவர்) அன்று அனைவருக்கும் விளக்கினார்.  சில காரணங்களால் Stage Friends உடன் என்னால் தொடர்ந்து இணைந்திருக்க முடியவில்லை. அவர்களுடன் இருந்த ஒரு நாளிலேயே என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவனாக நடத்தி அவ்வளவு அன்பாக பழகினர். இந்தக் குடும்பத்தில் மூத்தவர் பேராசிரியர் ந.வே.சு எங்கள் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் என்று அங்கே சென்ற போதுதான் தெரிந்தது.



நம்மூர் போல இங்கே தமிழ் ரேடியோவும் உண்டு. 8K ரேடியோ என்று தமிழ் வானிலை (இணையம் மூலம் செயல் படும்) கைபேசியில் ஒரு செயலிகாக உள்ளது. இதுதவிர வானொலியில் ஒரு ஸ்டேஷன் இந்தி மொழியிலும் வரும்.

முக்கியப் பண்டிகை நாட்களில் கோவில்களில் இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் என்று எப்போதும் கலைக்கட்டியிருக்கும். இது தவிர ஹோலி, உகாதி, தீபாவளி, பொங்கல் என்று அனைத்து பண்டிகைகளும், நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெறும். இந்திய சுதந்திர தின நிகழ்ச்சிகள் அந்தந்த ஊர்களில் வெகு சிறப்பாக நடக்கும். நியூயார்க்கு நகரத்தில் நம் நாட்டு அணிவகுப்பும், நிகழ்ச்சிகளும் மிக பிரபலம்.

ஒவ்வொரு ஊர்களிலும் கர்னாடக சங்கீதம், பரதநாட்டியம் என்று நம் மக்கள் கற்றுக் கொடுத்து வருகின்றனர்.





கடந்த வாரம் நியூ ஜெர்சியில் உள்ள பார்சிபணியில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியில் இடம்பெற்ற பரதநாட்டியம்.

இப்படி பொழுதுபோக்கிற்கு குறைவின்றி அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறுகிறது இங்கே! அது சேரி,  நீங்கள் கடைசியாக கலந்துக்கொண்ட பொது நிகழ்ச்சி என்ன என்று இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்களேன்!

அடுத்த அத்தியாயம் அடுத்த வாரம்!

இந்த பதிவுகள் அனைத்தையும் நானே காணொளியில் பேசி பகிர இருக்கிறேன், அதை தவறாமல் பார்க்க கருத்துக்களம் youtube சேனலுக்கு subscribe செய்யவும்.

கீழே உள்ள இந்த இணைப்பை சொடுக்கி அங்கே subscribe என்றிருக்கும் பொத்தானை அழுத்தவும். நன்றி.

https://bit.ly/karutthukkalam
Blogger Widget