-->

திங்கள், 6 பிப்ரவரி, 2017

இந்தியாவுக்கு இரண்டு பிரதமர் தேவை!

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்துக்கு பல சோதனைகள் மேலும் மேலும் தொடர்கின்றன!

பல ஆண்டுகளாக காவிரி நீரை தமிழகத்துக்கு வேண்டியபோது மன்றாடி கேட்டும், நீதிமன்றம் வழியாக கேட்டும் கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசு, மழைக்காலங்களில் நம்மிடம் தேவையான அளவு நீர் இருக்கும்போதும், அவர்கள் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நமக்கு அபாயம் ஏற்படும் அளவு தண்ணீரை திறந்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது!

இதுபோதாது என்று மேகதாதுவில் புதிதாக ஒரு அணையை கட்ட துடித்துக்கொண்டிருக்கிறது!

வழக்கு தொடர்ந்துவிட்டு இந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தால் கேரளா, முல்லை பெரியாறு அணையின் உயரத்தை குறைக்கவும், அதனருகில் மற்றோர் அணையைக் கட்டவும் வேலையை தொடங்க துடித்துக் கொண்டிருக்கிறது! இது போதாது என்று பவானி சாகர் அணையின் குறுக்கே ஆணை கட்ட முனைதுக் கொண்டிருக்கிறது!

இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் அணையை எழுப்ப முயற்சிக்கும் இவர்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்துக் கொண்டிருப்பது தமிழக அரசின் ஒரு வேலையாகிவிட்டது!

நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையாவது இந்த அரசுகள் மதிக்கிறதா என்றால் அதுவும் இல்லை! மேல் முறையீடு, இழுத்தடிப்பு என்று மேலும் பல மாதங்கள், ஆண்டுகள் இந்த வழக்குகள் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது! (அப்படி இழுத்தடிக்கும் அளவுக்கு இடம் கொடுக்கும் அளவு சட்டத்தில் இடமிருப்பது மற்றோர் அவல நிலை!)

அம்மாநிலங்கள் அவர்கள் முன்னேற்றத்துக்கு அணையை கட்டலாம், ஆனால் அந்த இயற்கை வளமான நீரை நம்பி மற்ற ஒரு மாநிலம் இருக்கிறது என்பதை ஏன் அவர்கள் உணர்வதில்லை? அந்த அணைகள் அண்டை மாநிலமான சக மனிதர்கள் வாழும் பூமி வறண்டுவிடுமே என்ற எண்ணம் துளிக்கூட இல்லாமல் வெறி பிடிக்கும் அளவுக்கு என்ன அரசியல் வேண்டி இருக்கிறது?
நான் சிறு வயதில் இரண்டு மிட்டாய் வைத்திருந்து இரண்டையும் நானே சாப்பிட நினைத்தால் "தங்கையோடு பகிர்ந்து சாப்பிடு' என அம்மா அதட்டுவார். சில முறைகளுக்கு பிறகு எனக்கு அந்த பாடம் புரிந்தது அது பழக்கமாகவும் மாறியது!
இது இந்த நாட்டுக்கும் பொருந்தும் தானே! ஒரு மாநிலத்தில் போதிய அளவு தண்ணீர் இருந்து, அந்த நீர்வளத்தையே பல நூறு ஆண்டுகளாக ஆதாரமாக நம்பியிருக்கும் பக்கத்து மாநிலத்துக்கு தேவையான நேரத்தில் நீரை பகிர்ந்துக்க கொடுக்க நினைக்காதது மட்டும் இல்லாமல், அதை நிரந்தரமாக தடுக்க மேலும் மேலும் அணை கட்ட நினைக்கும் அரசாங்கங்களை என்ன செய்வது!

ஏன் மத்திய அரசு இயற்கை வளங்களையும், விவசாயத்தையும் காக்க முன் வருவதில்லை? ஓ! அது அமைச்சர்களுக்கு வெளி நாடுகளுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்தாது என்பதாலா? அப்படி இல்லை என்றாலும், எத்தைனையோ நாடுகளுக்கு சென்று வந்த அமைச்சர்கள் அந்தந்த நாடுகள் தங்கள் விவசாயத்துக்கு எத்தனை முயற்சிகளை எடுக்கின்றன என்பதை கற்று அதை ஏன் நம் நாட்டில் நடைமுறைப் படுத்த முனையக்கூடாது?

இன்று பாலைவன பூமியான அரபுநாடுகளில் விவசாயம் செய்ய முயற்ச்சி நடந்துக்க கொண்டிருக்கிறது. சில வருஷங்களில் நிச்சயமாக விவசாயம் பாலை வனத்தில் சாத்தியம் என்பதை சாதித்துக் காட்டுவோம் என்கிறது கத்தார்.

நாம் என்ன செய்துக்க கொண்டிருக்கிறோம்? நீதி மன்றத்தில் வழக்குதான் தொடர்ந்துக் கொண்டிருக்கிறோம். ஏன் நதிகளை இணைக்க ஒரு கிள்ளுக்கீரையை கூட மத்திய அரசு கிள்ளவில்லை? ஏன் தெண் மாநிலங்களை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை? தமிழத்தில் சப்பாத்திக்கு தேவையான கோதுமை விளையாமல் நம் மக்களுக்கு வேண்டிய அரிசி விளைவதாலா?
மத்திய அரசு தென்னகத்தை கண்டுகொள்ளாது என்றால், தென்னகத்துக்கு மற்றோர் பிரதமர் வேண்டும்.
மத்திய அரசு தென்னகத்தை கண்டுகொள்ளாது என்றால், தென்னகத்துக்கு மற்றோர் பிரதமர் வேண்டும். இந்திய பிளவுபடவேண்டும் என்ற அர்த்தத்தில் இதை சொல்லவில்லை. அதை என்றும் சாமானிய மக்கள் விரும்ப மாட்டார்கள். ஆட்சியாளர்களை விட நாட்டுப்பற்று அதிகம் இருப்பது மக்களுக்கு தான். ஆனால் தென்மாநிலங்களை கண்டுகொள்ளாத வகையில் தான் மத்திய அரசு நடந்துக்கொள்ளும் என்றால், ஏன் தென்னகத்தை கண்டு கொள்ளும் அளவுக்கு மற்றோர் பதவியை நம் நாடு ஏற்படுத்தக்கூடாது?

இவர்களின் கேவலமான வாக்கு அரசியலில் பலிகடா ஆவது பொதுமக்களும், இயற்கையும் தான்!


உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்தனர். இயற்கையே தெய்வம் என்பதை குறிக்கும் விதமாக தான் நமது பண்டிகைகளும் அமைந்திருக்கிறது. ஆனால் இனி வரும் காலங்களில் நாம் இயற்கையை பழைய புகைப்படங்களிலும், கட்டுரைகளிலே மட்டும் தான் காண்போமோ என அஞ்சும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

உதவாக்கரை அரசாங்கமும், படிப்பறிவில்லாத அமைச்சர்களையும் தேர்ந்தெடுத்து ஆட்சிமாடத்துக்கு அனுப்பிவிட்டு அவர்களிடத்தில் ஆக்கபூர்வமான திட்டங்களை எதிர்பார்ப்பது நமது தவறு! அரசாங்கம் கையாலாகாத நிலையில் இருந்தாலும், நம் ஒவ்வொருவருக்கும் நம் சுற்றம் சார்ந்த பொறுப்பிருக்கிறது. நம்மால் முடிந்த அளவு நம் சுற்றத்தில் செடிகொடிகளை வளர்ப்பதும், மரங்களை நாடுவதும் நம் ஒவ்வொருவரின் கடமை.

தமிழகத்தின் அடையாளம் பசுமை, விவசாயம், இயற்கை. அதை மீட்டெடுக்க எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் ஆகலாம், ஆனால் அதற்கு ஆரம்பம் இப்பொழுதாக இருக்க வேண்டும்!

நன்றி!
Blogger Widget