-->

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

மூன்று பேர், மூன்று எதிர்பார்ப்புகள்...

சில மாதங்களுக்கு முன், பெங்களூர் விமான நிலையத்தில், நள்ளிரவு இரண்டு மணி வாக்கில் என் பைகளை Check-in செய்துவிட்டு, தானியங்கி படிகளில் ஏறி நடந்துக் கொண்டிருந்தேன். எனது Boarding pass இல் இருந்த வாயில் எண்ணைத் தேடி நடந்துக் கொண்டிருக்கும்போது எனக்கு முன் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் நடந்துக்கொண்டிருந்தார். அவர் அருகில் நான் சென்றபோது ஒரு விமான நிலைய ஊழியரிடம் பேசிவிட்டு நடக்க தொடங்கியிருந்தார். அவரைப் பார்த்து ஒரு புன்முறுவல் புரிந்தேன், நீங்களும் தமிழா? என்று கேட்டு அவரிடம் பேசத் தொடங்கினேன், ஆம் என்று கூறிய அவர், அந்த ஊழியர் அவரிடம், battery car உதவிக்கு வேண்டுமா என்று விசாரித்ததாக சொனார்.

அவரும் அமெரிக்காதான் செல்லவிருப்பதாக சொன்னார்,  நான் நியூயார்க் செல்லவேண்டும் என்று சொல்ல, தான் சான் பிரான்சிஸ்கோ செல்லவிருப்பதாக சொன்னார். இருவருக்கும் ஒரே விமானம் தான். ஒரே வாயிலுக்கு செல்லவேண்டும் என்பதால், அவருடன் பேசிக்கொண்டே நடந்து சென்றேன். பெரிய விமான நிலையம் என்பதால், ஒரு ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து நடக்க வேண்டியிருந்தது. விமானம் புறப்பட மேலும் இரண்டரை மணிநேரம் இருந்ததால் மெதுவாக நடந்துசென்றோம்.

சில நிமிடங்கள் கழித்து நாங்கள் செல்லவேண்டிய வாயில் வந்தவுடன் 
அங்கிருந்த பயணிகள் காத்திருப்பு இடத்தில் அமர்ந்தோம். துபாய் வழியாக செல்லவேண்டியிருந்ததால், பலதரப்பட்ட மக்களும் இருந்தனர். மேலும் நள்ளிரவு நேரம் என்பதால், பெருமளவு சத்தம் இல்லாமல் குழந்தைகளின் விளையாட்டு சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. உட்கார்ந்தவுடன் கைபேசியில் என் அப்பாவுக்கு call செய்து தானும், தங்கையும் ஓசூர் சென்றடைந்து விட்டனரா என்று விசாரித்துவிட்டு, அவரிடம் மீண்டும் பேசத் தொடங்கினேன்.

"நீ வெளிநாட்டுலதான பா இருக்க, இங்க வரச்சே எந்த போன் use பண்ணற? call charge எல்லாம் அதிகமா ஆகுமே?" என கேட்டார்.

"Lifetime recharge போட்டிருக்கேன் மாமி, அங்க போனவுடனே இந்த number உபயோகிக்கமாட்டேன். இதுபாட்டுக்கும் சும்மா தான் கிடக்கும், இங்கே வரும்போதும், வந்தவுடனே airportடிலிருந்து அப்பாவுக்கு call செய்ய, அப்புறம் இங்க இருக்கும்போது use பண்ணறதுக்கு இந்த போன தான் உபயோகிப்பேன்" - என்றேன்.

"ஒ! அப்படியா பா! எனக்கு அதெல்லாம் என் பையன் சொல்லிக் குடுக்கல, ஒவ்வொரு தடவ நான் அமேரிக்கா போறச்சே, இங்க BSNL போன்ஐ surrender செஞ்சிட்டு, ஆறு மாசம் கழிச்சு திரும்ப வந்து surrender பண்ண போன்ஐ திரும்ப வாங்கறதுக்கு நான் ஒண்டியா ரொம்ப கஷ்ட படவேண்டியிருக்கு. 
இங்க வந்தா airportலேர்ந்து கூட்டிண்டு போகறதுக்கு, அங்கேர்ந்து கிளம்பறதுக்கு முன்னாடியே போன் செஞ்சு சொல்லிடுவேன், ரொம்ப un-time இல்லை அப்படினா என் அண்ணாவே வந்து கூட்டிண்டு போவார், இல்லன்னா அந்த நேரத்துக்கு ஏற்றார் மாதிரி என் அண்ணா ஒரு taxiஐ அனுப்புவார், பாவம் அவருக்கும் வயசு ஆச்சு தானே?" - என்றார்.

"என்னப்பா வேண்டிகிடக்கு இந்த வயசுல எனக்கு வெளிநாடு எல்லாம்? என் கணவர் இறந்து சில வருடங்கள் ஆகிறது, தனியாக இந்த அர்த ராத்திரில, flight விட்டு flight மாறி, என்ன வேண்டிகிடக்கு இதெல்லாம்"

"இதோ... படிப்பு முடிஞ்ச கையோட வந்துடுவேம்மான்னு சொல்லிட்டு போனான் என் பையன், ஒன்பது வருஷம் ஆச்சு, என் ரெண்டாவது பேத்திய பாத்துக்க போறேன் இப்போ."

"இங்க வீடா..... வாங்கின்றுக்கான், யார் பாத்துக்கறது?? அங்கேயே இருக்க போறவனுக்கு இங்க வீடு எதுக்கு? இங்கயாவது வாடான்னா, அதுவும் மாட்டேன்கிறான். இந்த வயசுல நான் அலையவா முடியும்? இந்த வயசான காலத்துல ஒரு இடத்துல உட்கார்ந்திருந்து, கோவில் குலத்துக்கு சுத்தாம இப்படி தனியா அலைக்கழிக்க வெச்சுட்டான் என் பையன். ஒரு பெண் இருக்கா, அவளுக்கு கல்யாணம் ஆனபோது மாப்பிள்ளை இங்கே தான் இருந்தார், ஆனா அவளும் இப்போ அமெரிக்காலேதான் இருக்கா" - என்றார்.


அவர் என்னிடம் இதை சொல்லிக் கொண்டிருந்தபோது, அவர் கண்களில் 
ஒரு தனிமை தெரிந்தது. மகன் மீது இருக்கும் பாசத்தில் யாரோ ஒருவனான என்னிடம் அவர் தன மகன் மீது உள்ள அத்ருப்தியை தெரிவித்தபோது அதில் கோபம் தெரியவில்லை, ஒரு ஆதங்கம் இருந்தது.

இங்கு வந்து ஓர் ஆண்டு இன்னும் எனக்கு முழுமை ஆகாத இந்த நிலையில், ஒருவேளை நான் மேலும் இங்கே இருக்க நேரிட்டால், என் பெற்றோரின் நிலையும் நாளை இப்படித்தான் இருக்கும் என்ற எதார்த்தம் எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது, என் அம்மா என்னிடம் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது என் நினைவுக்கு வந்தது.

இரண்டு மற்றும் ஐந்து வயது உடைய பெண் குழந்தைகள் இருவரையும்  முப்பது வயது மதிக்கத்தக்க அந்த குழந்தைகளின் தாய், கையில் ஒரு பையையும் சுமந்துக் கொண்டு எங்களை கடந்து சென்றுக் கொண்டிருக்க, நாங்கள் செல்ல வேண்டிய விமானம் தயாராக இருப்பதாக அறிவிப்பு வந்தது. பையை கொஞ்சம் பாத்துக்கோப்பா என்று அவர் சொல்லிவிட்டு செல்ல, அவர் வந்த பின், "என்னோட பை இங்க இருக்கட்டும், இதோ வந்துடறேன்" என்று கூறிவிட்டு சிறுநீர் கழிக்க சென்றேன்.

திரும்ப வந்தவுடன் வினமானத்தில் நிழைய ஒரு வரிசை அமைந்திருந்தது, நாமும் சென்று நிற்கலாமா என்று கேட்டேன் அவரிடம், "உன் seat number என்ன?" என்று கேட்டு, அதைப் பார்த்த அவர் "நம்ம seatலாம் முன்னாடியே இருக்கு, முதலில் பின் இருக்கையிலிருந்து நிரப்பிவிட்டு பின்னர் தான் நம்மை அனுப்புவார்கள், இது emirates flight ஆச்சே, பெரிய்ய flight.., கொஞ்ச நேரம் ஆகும்" என்று சொல்லிவிட்டு மற்ற flightகள் பற்றிய விஷயங்களை புட்டுபுட்டு வைத்தார். பலதடவை விமானத்தில் சென்றிருந்த அனுபவம் மற்றும் அவருக்கு இருந்த தைரியம் அதிலிருந்து நன்றாகவே தெரிந்தது.

எங்கள் இருக்கை இருந்த பகுதிப் பயணிகளை வரிசையில் வரும்படி சொல்ல, "பரவாயில்லை" என்று அவர் சொன்ன போதும், "குடுங்க உங்க பையை, உள்ளே நுழையும் வரை நான் எடுத்துண்டு வரேன்" என்று சொல்லி, அவர் பையையும் நானே தூக்கிக்கொண்டு வரிசையில் நடக்க, என்னுடனே என் அம்மா போல நடந்து வந்தார்.

flightடினுள் நுழைந்தவுடன் அவர் இருக்கை வலப்புறமும், என்னிருக்கை வேறுபக்கமும் இருந்ததனால் அவரிடம் பையை கொடுத்துவிட்டு, "அப்புறம் பார்க்கலாம் மாமி" என்று சொல்லி விடை பெற்றேன்.

இரண்டு மணிநேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்த அந்த நேரம் எல்லாம், தன் மகனுடன் இருக்கபோகும் அந்த மகிழ்ச்சியும், எப்போது தன் மகனின் வீடு சென்றடைவோம் என்ற அந்த எதிர்பார்ப்பும் தான் அவரிடம் இருந்தது.

நன்றி (படம்): newneervely.com
ஒரு மூன்றே முக்கால் மணி நேரம் கழித்து விமானம் துபாய் சென்றடைந்தது. இறங்கும்போது மீண்டும் அவரை பார்க்க முடியவில்லை. துபையில் பாதுகாப்புச் சோதனை முடிந்த பின், பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டு, அங்கு நியூயார்க் செல்லவேண்டிய வாயில் எண்ணைத் தேடிக்கொண்டு தனியாக நடந்துக் கொண்டிருந்தேன்.

ஒரு ஏழு மணி நேரம் முன்னர் அதே போல, பெங்களூர் விமான நிலையத்தில், மக்கள் மிகக் குறைவாக இருந்த சமயத்தில் நடந்து சென்ற பொது இருந்த முழுமை இங்கு பல நாடுகளை சேர்ந்த மக்கள் மத்தியில் நடந்து சென்றபோது என் மனதில் இல்லை. இது அந்நிய மண். ஹ்ம்ம்... மீண்டும் தாய்நாடு செல்லும் வரை அந்த முழுமை மனதில் இருக்காது என்ற உண்மையை என் உள் மனது என்னிடம் சொல்லிகொண்டிருக்க, அங்கிருந்த பணியாளரிடம் என் பயணசீட்டை கண்பித்து, அங்கு மீண்டும் ஒரு முக்கால் மணிநேரம் பயணிகள் காத்திருப்பில் உட்கார்ந்திருந்தேன்.

அங்கு அப்போது சுமார் காலை பத்து மணி இருக்கும், அபு தாபியில் இருந்த என் பெரியம்மா மற்றும் மண்ணியோடு போன் பேசிவிட்டு, பின்னர் முகம் அலம்பிவிட்டு, காத்திருப்பு இருக்கையில் அமர்ந்தேன்.

ஒரு இரண்டு வயது பெண் குழந்தை என் பக்கத்து இருக்கைக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து பையை தள்ளிக் கொண்டும், தன அக்காவுடன் விளையாடிக்கொண்டும் இருக்க அக்குழந்தைகளின் தாய் கைபேசியில் தன் கணவரிடம் தாம் துபாய் வந்துவிட்டதையும் நியூயார்க் செல்லவேண்டிய விமானத்திற்கு காத்திருப்பதையும் சொல்லிக்கொண்டே, பையை தள்ளிக் கொண்டிருந்த தன் குழந்தைகளை கண்காணித்துக் கொண்டிருந்தார். என்னை நோக்கி பையை தள்ளிக் கொண்டிருந்த குழந்தையை பார்த்து புன்முறுவல் செய்துக் கொண்டிருந்தேன்.

அவரை பெங்களூர் விமான நிலையத்தில் பார்த்ததை சொல்லி, நியூயார்க் இல் தம் கணவர் எங்கு வேலை செய்கிறார் என்று கேட்டேன், அவர் நியூ யார்க்கிலிருந்து மேலும் ஒரு விமானம் பிடித்து சார்லட் (Charlotte) செல்லவேண்டும் என்று சொனார். பொதுவாகவே நியூயார்க் இல் இருந்து வேறு விமானம் பிடிப்பது சற்று கடினம், சிலநேரம் விமானத்தை தவற விட நேரிடும், ஆனால், அதை சொல்லி மேலும் அவரை அச்சப் பட வைக்க விரும்பவில்லை. அங்கு இறங்கிய ஒரு மணிநேரத்திற்குள் அடுத்த விமானம் இருப்பதால் ஏற்கனவே சற்று பதற்றத்துடன் காணப்பட்டார்.

விமானம் புறப்பட தயாராக இருந்ததால் வரிசையில் வரசொல்லி அறிவிப்பு வரவும், "நியூயார்க்கில் இறங்கியதும் சற்று வேகமாக செல்லுங்கள்" என்று கூறி அவரிடமிருந்து விடை பெற்று, என் முன்னே நின்று கொண்டிருந்த ஒரு புதுமண தம்பதியை கடந்து சென்றேன்.

நியூயார்க் நேரப்படி மதியம் மூன்று மணிக்கு இறங்கி, அங்கு மறுபடியும் ஒரு பெரிய வரிசையில் நின்று immigration check /port of entryயை முடித்துக்கொண்டு பைகளைப் பெற்றுக்கொள்ள நின்றுக்கொண்டிகும் போது அந்த பெண்மணியை, அவர் சற்று தொலைவில் இருக்கும்போது மீண்டும் பார்த்தேன். மிகவும் பதற்றத்துடன், விமானத்தில் செல்ல ஒருவருக்கு இரண்டு பைகள் அனுமதி என்பதால் தம் குழந்தைகளின் பைகள் கணக்குகளையும் சேர்த்து மொத்தம் ஆறு trolly பைகள், ஒரு பெரிய தள்ளுவண்டியில் வைக்க, ஒரு விமான நிலைய ஊழியரிடம் விவரித்துக்கொண்டு, தம் குழந்தைகளையும் அடக்கிக்கொண்டு சென்றுக் கொண்டிருந்தார்.

அந்த விமானத்தை தரவிட்டிருக்க மாட்டார் என்று தான் நினைக்கிறன்.
தனி ஒரு பெண்ணாக, குழந்தைகளைப் பார்த்துக்கொண்டும், பைகளை சுமந்துக்கொண்டும் தன் கணவரைக் காணச் செல்லும் ஆவலுடனும், அண்புடனும், எதிர்ப்பார்ப்புடனும் பல மணிநேரங்கள், பல விமானங்கள் மாறி இன்னும் பல பலர், பல இடங்களில் சென்று கொண்டுதான் இருக்கின்றனர்.
நன்றி (படம்):brahminsnet.com
பைகளை எடுத்துக்கொண்டு, நண்பர் பாலாஜி சொல்லியிருந்த taxi ஓட்டுனர் தயாராக வெளியில் காத்திருக்க, சிறு வயதில் தீபாவளி பண்டிகைக்கு பாட்டி வீடுக்கு சென்றுவிட்டு, ஓசூருக்கு திரும்பியதும் "அம்மா... பொங்கல் பண்டிகை எப்போ மா வரும்? திரும்ப எப்போம்மா மெட்ராசுக்கு போவோம்?" என்று அம்மாவிடம் கேட்டது போல, மீண்டும் ஊருக்கு எப்போது செல்வோம் என்ற எதிர்பாப்புடன் வெளியே வந்த என்னை, அடையாளம் கண்டு கை அசைத்த taxi driverஐ நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
  
ஒவ்வொரு பயணத்திலும், தத்தம் உறவுகள் எவ்வளவோ உளைச்சல்களையும், பரபரப்புகளையும், இன்னல்களையும் கடந்து தான் தம் சொந்தங்களைத் தேடி பயணிக்கின்றனர். நாம் கேட்கும் 'பயணம் சவுகர்யமா இருந்ததா' என்றதற்கு 'ஆம்' இருந்தது, என்ற ஒவ்வொரு பதிலுக்குப் பின்னாலும் பல மணிநேர அனுபவங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. 

அந்த அனைத்து பயணங்களுக்குப் பின்னாலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்துக் கொண்டு தான் இருக்கிறது.
Blogger Widget