-->

வியாழன், 22 நவம்பர், 2012

பழகலாம் வாங்க - பாகம் இரண்டு

அன்றாடம் நம்மிடம் இருக்கும் பழகுமுறை பற்றிய சில கருத்துக்களை பழகலாம் வாங்க பதிவில் படித்திருப்பீர்கள், இந்த பதிவு அதன் தொடர்ச்சியாக கருதவும்!


நம்முடைய எண்ணங்கள் எப்போது புதிய விடயங்களை சிந்திக்கும்? நாம் பிறருடன் கலந்துரையாடும்போது தான். 

இன்று பலர் நேரம் செலவழித்து பிறரிடம் பேசுவதில்லை. வீட்டில் இருக்கும்போது கணினி, கைப்பேசியுடன் மட்டுமே பேசுகிறோம். நம்மில் எத்தனை பேர் நம் வீட்டினருடன் மனம் விட்டு பேசுகிறோம் இன்று? கணினி, கைபேசி இல்லா காலத்தில் மகிழ்ச்சி பொங்க மாலை ஆனால் நண்பர்களுடன் விளையாட்டு, நம் வீட்டினர் அக்கம் பக்கத்து வீட்டாருடன் உரையாடுவதுமாக ஒரு அற்புதமான காலம் அது. மாலை ஆனால் வீதியெங்கும் மக்கள் நடமாட்டம், பேச்சு சத்தம், சிரிப்பு சத்தம், குழந்தைகளின் விளையாட்டு சத்தம் என்று அமர்க்களப்படும்.

காலை வீட்டை விட்டு வெளியே சென்றால், சோர்ந்து வியர்வை வடிய உணவு உண்ணும்போதும், உறங்கும்போதும் மட்டுமே வீடிற்கு வந்து,
விளையாடப் போனால் வீட்டிற்கே வருவதில்லை என்று அம்மாவிடம் வசவு வாங்கிய காலம் சென்று, இன்று பலர் வீட்டை விட்டு வெளியிலேயே செல்வதில்லை (சினிமாவிற்கு செல்வதை தவிர்த்து)..! சுதந்திரமாக வெளியே சுற்றியகாலம் சென்று, இன்று இணையம், தொலைக்காட்சி  முன்னர் அடிமையாகயுள்ளது உலகம்.

படிக்கும் காலத்தில் அதிகமாக பழகாதவர்களுக்கு இன்று சமூக வலைதளத்தில் நூற்றுக்கணக்கில் நண்பர்கள் என்று பார்க்கும் உடன் படித்தோருக்கு ஆச்சர்யமாக தெரியும்!  நிஜ நண்பர்களுடன் பழகாமல் நிழல் நண்பர்களுடன் பழகும் மட்டத்திலேயே இன்று உலகம் சுழன்றுக்கொண்டிருக்கிறது. அவ்வபோது அடிபடும் செய்தி, சமூக வலைதளத்தில் முன்பின் தெரியாதவரிடம் பழகி எமர்ந்ததால் பெண் தற்கொலை! மேலும் இது போன்ற செய்திகள்... முன்பின் தெரியாதவரிடம் ஏமார்ந்து இறப்பதற்காகவா இந்த உயிர் கொடுக்கப்பட்டுள்ளது?

பல நாள் கழித்து நண்பர்கள் ஒன்று கூடும் சமயம், கேளிக்கைக்காக சினிமா செல்வதை தவிர்த்து விளையாடிப்பாருங்கள், இரண்டு மணிநேரம் பேசிப்பாருங்கள், சினிமா சென்று யாரோ ஒருவர் நடிப்பதை பார்த்து ரசித்து பொழுதை போக்குவதைவிட நம் நண்பர்களுடன் பேசி கழிக்கும் சமயத்தில் தான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும்! புதிய எண்ணங்கள் பிறக்கும். அந்த புதிய எண்ணம் ஒரு புதிய படைப்பை கூட உருவாக்கலாம், புது திறமையை வெளிக்கொண்டுவரலாம், புது உத்வேகத்தை கொடுக்கலாம்!

நிழலிலிருந்து வெளிவந்து நிஜத்துடன் பழகுவோம்!
Blogger Widget

வியாழன், 8 நவம்பர், 2012

தொ மு. தொ பி.
தொலைகாட்சி பிறப்பிற்கு முன்:

அது 1990 ஆம் ஆண்டு, புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை தான் பிறந்து வளர்ந்த ஊரான ஓசூர் அருகில் உள்ள 'சின்ன திருப்பதிக்கு' சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்துவிட்டு, பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது, ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த ராசு, பட்டாசு கடைகள் வழி நிரம்பி இருப்பதை பார்த்து பூரிப்படைகிறான்! உடனே வலப்பக்கம் திரும்பி 'அப்பா, நம்ம ஊருக்கு போனதும் எனக்கு ஒரு துப்பாக்கியும், ரோல் கேப்பும் வாங்கிக்குடுப்பா' என முகத்தை பவ்யமாக வைத்துக்கொண்டு கேட்கிறான், சரி என சம்மதம் சொன்னதும், முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த அம்மாவிடம் 'அப்பா எனக்கு துப்பாக்கி வாங்கி தரேன்னு சொனாரே' என மகிழ்ச்சி பொங்க சொல்லி, அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தன் தங்கையிடம் 'உனக்கும் மத்தாப்பு வாங்கி தருவாரு, ரெண்டு பேரும் சேர்ந்து பட்டாசு வெடிக்கலாம்' என சொல்லி முடிக்கவும், ஓசூர் பேருந்து நிலையம் வரவும் சரியாக இருந்தது.

வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் இருந்த பட்டாசு கடையில் ஒரு துப்பாக்கியும், தங்கைக்கு மத்தாப்பும் வாங்கிக்கொண்டு வீடு சென்று, மாலை ஏழு மணி ஆனவுடன் வீட்டில் இருந்த சில எறும்புகளுக்கு பக்கத்தில் துப்பாக்கியை வைத்து சுட ஆரமிக்கிறான், 'ராசு, அது வாயில்லா ஜீவன், அதை ஒன்னும் பண்ணாம வாசலுக்கு போயி விளையாடு என்று அம்மா சொன்னவுடன், வெளியே வந்து டப் டப் என சுட்டு விளையாட ஆரமிக்கிறான், சில நொடிகளில் தன் நண்பர்கள் அப்பு, அருண், ராம், சிரஞ்சீவி, விக்னேஷ், ராகவேந்திரா, சுதர்சன் என ஒரு பட்டாளமே ஒன்று கூட, வாங்கிவந்த பத்து சுருள்களில் இரண்டு அப்போதே தீர்ந்திருந்தது! சிலநேரங்களில் மற்ற நண்பர்கள் ஊசி வெடி வெடிக்க ஆரமித்தவுடன் மேலும் சில நண்பர்கள் ஒன்று கூடி வெடித்து மகிழ்ந்தனர். எட்டரை மணி ஆனதும் சிட்டென அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.
சாப்பிடும்போது அம்மாவிடம் 'அம்மா, தீபாவளி என்னிக்குமா வரும்?' என கேட்க, இன்னும் பதினைந்து நாள் தான், என்று சொல்லக்கேட்டதும், குஷியாகிவிட்டான். மறுநாள் முதல் பள்ளிக்கு போகும் வழியெல்லாம் இன்னும் பதினைந்து நாள் என்று சொல்லிக்கொண்டே போவான்,  இப்படியாக தினமும் வீடு திரும்பியதும் பட்டாசு வெடிப்பதும் பட்டாசு தீர்ந்தவுடன் சுப்பண்ணா கடைக்கு நண்பர்களை அழைத்து சென்று 'ஐந்து ரூபாய்க்கு' மீண்டும் சில வெடிகள் வாங்குவதுமாக தீபாவளி தினம் வரை சென்றது. தீபாவளிக்கு இரு தினம் முன், பள்ளி விடுமுறை விட்டதும் தீபாவளிக்கு  சென்னையில் உள்ள தன் தாத்தா வீட்டிற்கு சென்று, அங்கு தன் அத்தை மகன்களுடனும், அவர்களுடைய நண்பர்களுடனும் சேர்ந்து அட்டகாசமாக வெடி வெடித்து கொண்டாடி, தீபாவளி அன்று பொழுது விடிவதற்கு முன்னரே (என்றைக்குமே வராத விடியற்காலை மிழிப்பு அன்றுதான் வரும்!) எண்ணை தேய்த்து குளித்து பெற்றோரை சேவித்து புதுத்துணி பெற்றுக்கொண்டு, சில வெடிகள் வெடித்து, பின்னர் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி, வீடு திரும்பியதும் பட்டாசு வெடிக்க ஆரம்பித்தால், காலை உணவுக்கு வீடு காலை பதினோரு மணிக்கு தான் திரும்புவான் ராசு. பலகாரங்களுடன் உண்டு, பின்னர் வெளியில் நண்பர்களுடன் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து, ஒரு குட்டி தூக்கம் போட்டெழுந்து, மாலை மத்தாப்பு, பொதவானம், தரை சக்கரம் , மத்தாப்பு என்று தங்கையுடன் விளையாடி, அம்மாவுடன் பொறி மத்தாப்பு கொளுத்தி, அப்பா உதவியுடன் பத்து வயது ராசுவுக்கு பெரிய வெடிகளான ராக்கெட், அணுகுண்டு, சரவெடிகளை வெடித்து இரவு உணவுக்கு திரும்பி, அன்று கழிந்த பொழுதை நினைத்துக் கொண்டே படுக்கைக்கு சென்றால் வெளியில் எங்கோ வெடிக்கும் சரங்களும், ராக்கெட்டுகளும் புன்முறுவலுடன் தூங்க வைக்கும்! 

தொலைகாட்சி பிறந்த பின்:

தீபாவளி வருகிறது, இன்னும் ஐந்து நாட்கள் இருக்கின்றன. இன்னும் எந்த வெடிகளும் வாங்கவில்லை, தெருவில் இருபது வருடங்கள் முன்பிருந்த கூட்டங்களையும், சத்தங்களையும் காண, கேட்க முடியவில்லை... தொலைக்காட்சியில் மட்டுமே வெடி சத்தம் கேட்கிறது, அரட்டை அடிக்கும் நண்பர்கள், தீபாவளி பண்டிகையை பற்றி பேசுவதை விடுத்து, தீபாவளிக்கு வெளியாகும் படங்களைப் பற்றியும், முதல் நாளே திரைப்படத்தை பார்க்க தயாராகவும், எந்த திரைப்படம் வெற்றி பெரும் என்றும், எந்த தொலைக்காட்சியில் என்ன படம் என்றும், அதில் தான் எந்த படத்தை பார்க்கப்போகிறார் என்றும் விவாதம் நடந்துக்கொண்டிருக்கின்றன. மறுபுறம், கோடானு கோடி ஆண்டுகளாக இருந்து வரும் இந்த பூமியை மக்கள் ஒரு நாள் வெடித்து கொண்டாடி மகிழும் இந்த பட்டாசுகள் சீர் குலைத்து விடுவது போல 'பசுமை பூமி' ஆக்குங்கள் என்று பரப்பி கொண்டு திரிகிறார்கள்.... அப்படி சொல்பவர்கள், சாலை அமைப்பதற்காக மரங்களை வெட்டுபவர்களையும், புகைவிட்டு செல்லும் வண்டிகளையும், புகை பிடிப்பவர்களையும், மற்ற ஏனைய புகை விடும் விஷயங்களை பற்றி பேசுவதே இல்லை!நாம் பட்டாசு வெடித்தாலும் , வெடிக்காவிட்டாலும் பூமிக்கு ஒன்றும் ஆகிவிடாது! நான் நாளை இல்லாவிட்டாலும், இந்த பூமி தொடர்ந்து இருக்கத்தான் செய்யும்... வெளியில் சென்று பட்டாசு வெடியுங்கள், நண்பர்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள், தொலைக்காட்சியுடனோ, திரை அரங்குகளுடனோ அல்ல.. தொலைக்காட்சியும், திரை அரங்கமும் எப்போதும் இருக்கும், பண்டிகை தினங்கள் அந்தந்த ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும்!

நிகழ்வுகளைக் கொண்டாடுங்கள்; நிகழ்சிகளை அல்ல!
Blogger Widget

புதன், 10 அக்டோபர், 2012

காணாமற்போகும் கதைச் சொல்லிகள்...
ஒரு ஊர்ல..
ஒரு ராஜா இருந்தாராம்...
அந்த ராஜாவுக்கு...
எனத்தொடங்கி கேட்பவர் மனதுக்குள் கற்பனைக் குதிரைகளை கட்டவிழ்த்துவிடும் கதைச் சொல்லிகளின் நிலை இப்போது கேள்விக்குறியாகிவிட்டது...

கதை என்று சொல்லும்போதே உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, துள்ளலை அதை அனுபவித்தோர் மட்டுமே உணர
முடியும்..

அதிலும் கிராமத்துக்கதைகள் என்றால் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை..

குழந்தைகளுக்குச் கதை சொல்லித்தருவது சிறப்பு வடிவம்...

சுமார் கால் நூற்றாண்டுகளுக்கு முன்புவரை ஓரளவுக்கு பாதிப்பில்லாமல் நிகழ்ந்து வந்த கதை சொல்லும் பழக்கம் மெல்லமெல்ல நலிந்து, இப்போது அதன் தடம் மறைந்துவருகிறது..

புதிய சிந்தனைக்கான கருவாகக் கருதப்படும் கதைகள் நீதி போதனைகளை உணர்த்தவும், வெற்றிக்கான கனவு,
தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, திறமைகளை மேம்படுத்தவும் வகைசெய்யும் வலிமையுடையது..

அந்தவகையில், நல்ல கருத்துகளை விதைக்கும் கதைகளை இன்றைய இளைய தலைமுறையினருக்க சொல்வது அரிதாகி வருகிறது..

மாறாக, கல்வி பெறுவதில் ஆங்கில மோகமும், எப்படியாவது கூடுதல் மதிப்பெண்களை எடுக்கவேண்டும்
என்ற வேகமும் மேலோங்கி வருகிறதே தவிர, பிற திறன் வெளிப்பாட்டுக்கான முயற்சிகள் குறைவே..

சுருங்கச்சொன்னால்,மாணவ சமுதாயம் எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக உருவாக்கப்படுகின்றனர்..

இதனால் மன அழுத்தம், உளைச்சலுக்கு அவர்கள் ஆளாக்கப்படுவதோடு, சில நேரங்களில் தவறிழைக்கவும்
நேரிடுகிறது..

வகுப்பு ஆசிரியரையே கொன்ற மாணவன், வகுப்புத்தோழியை பலாத்காரம் செய்த மாணவர்கள் என, அவர்களைத் தொடர்புபடுத்தி ஒழுக்கநெறி மீறல் செய்திகள் தொடர்வது கவலையளிக்கிறது..

இதுபோன்ற சம்பவங்களுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் நூல்களைப் படிப்பது, விளையாடுவது,
பயிற்சிபெறுவது என பல நிகழ்வுகளோடு, நீதி போதனைகளை உணர்த்தும் கதைகளைச் சொல்லித்தருவதில் காட்டும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதன் விளைவும் பெரிய காரணம் என்பதை மறுக்க முடியாது..

பல ஆண்டுகளுக்கு முன்வரை பள்ளிகளில் நீதி போதனைக்கென நேரம் ஒதுக்கப்பட்டு தனி வகுப்புகள் நடத்தப்பட்டன..

அங்கு சொல்லப்பட்ட
மரம் வெட்டியின் கதை,
வடை சுட்ட பாட்டி,
அப்பம் பிரித்த குரங்கு,
ஆமையும் முயலும், வலையுடன் பறந்த புறா என பல கதைகள்...

நேர்மை, பேராசை, தியாகம், ஒற்றுமை, உழைப்பு, விட்டுக்கொடுக்கும் தன்மை என பல வாழ்வியியல் போதனைகளை உணர்த்துவதாக இருந்தது..

இன்றைக்கோ, பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு என்றால் என்ன என கேட்கும் நிலை உள்ளது..

பள்ளிகளில்தான் இந்நிலை என்றால் பெரும்பாலான வீடுகளிலும் கதைகளுக்குத் தட்டுப்பாடாகத்தான் உள்ளது..

இந்த நிலைக்கு கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட சீரழிவும் முக்கிய காரணம்..

இன்றைக்கு கதை என்ற பெயரில் டி.வி. மாயாஜாலங்களைக் காண்பதின் விளைவு தெரியாமல் மாணவர்கள், இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர்...

பொதுவாக சமூகத்தில் நேரிடும் அனைத்துச் சீரழிவுகளுக்கும் சினிமா, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற சில காரணிகளைக்கூறி தப்பித்துவிடுகிறோம்..

கடமையை மறந்துவிடுகிறோம்..

சமுதாயத்தின் எதிர்காலமாகக் கருதப்படும் மாணவர்களுக்கு கதைகளைக் கூறி, நீதி போதனைகளைக்
கற்பிப்பது அவசியம்..

கல்விக்காக பல திட்டங்களை உருவாக்கும் அரசுகள், நீதி போதனைகளைக் கற்பிக்க தனி வகுப்புகளை ஏற்படுத்த வழிவகுக்கலாம்..

குழந்தைகளுக்கு கதை பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்..

அதை அவர்களுக்குச் சொல்லித்தரும் பழக்கம் நம்மிடையே இப்போது குறைந்து போகலாம்..

ஆனால், எதிர்காலத்தில் அவர்கள் தங்களது வாரிசுகளுக்குச் சொல்வதற்கு ஒரு கதை இப்போதே தயாராகி வருகிறது..

அதை இப்படித் தொடங்குவார்கள்..

"ஒரு காலத்தில்
வீட்டுக்கு வீடு இரண்டொரு கதை சொல்லிகள்
இருப்பார்களாம்..
அவர்கள் நிறைய கதைகளைச் சொல்லித்
தருவார்களாம்..
அவர்கள் வேற்றுக் கிரகவாசிகள்
இல்லையாம்..
நமது தாத்தா, பாட்டிகளாம்..
ஏதோ காரணங்களால் அவர்கள் படிப்படியாக முதியோர்
இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்களாம்..
என்று அந்தக்கதை தொடரும்..
அல்லது மேற்கொண்டு சொல்ல
கற்பனை வளம் இல்லாமல் முடியும்...

நன்றி : தன்னம்பிக்கை
Blogger Widget

சனி, 29 செப்டம்பர், 2012

கோசாலை - வாழ்க பல்லாண்டு

அண்மையில் மயிலாடுதுறை சென்றிருந்தேன். மயிலாடுதுறையிலிருந்து திருநாகேஸ்வரம் வழியில் கோவிந்தராஜபுரம் உள்ளது. கோவிந்தராஜபுரத்தில் உள்ள 'கோசாலை'க்கு   சென்றிருந்தேன்.

  
கோசாலையில் நூற்றுக்கணக்கான மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மாடுகளை வளர்க்க முடியாமல் இருப்பவர்கள், வயதான மாடுகளை அடிமாடிற்கு விடாமல் இயற்கையாக வழியனுப்ப நினைப்பவர்கள் இங்கு வந்து விடுகின்றனர். இங்கு வளரும் மாடுகள் நல்ல சுற்றுப்புறத்தில், தாராளமான இடத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன. வைக்கோல், புல் போன்று தீனிகள் நல்ல முறையில் கொடுக்கப்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கான பசுக்கள், கிடேரிக்கள் மற்றும் காளைகள் இங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன.
புற்கள் வெட்டும் இயந்திரம், வெட்டப்பட்ட புற்களை அன்னக்கூடையில் எடுத்து சென்று ஒவ்வொரு மாடுகளுக்கும் இட்டு வர பணியாட்களை நியமித்த்ருக்கிரார்கள்.

 

தம்மை பெற்றெடுத்து ஆளாக்கிய பெற்றோரையே தம் வயதான காலத்தில் உடன் வைத்து சேவை செய்ய மறக்கும் மக்கள் மத்தியில் வயதான பசுக்களை, காளைகளை பரிவோடு அரவணைத்து வரும் கோசாலையை காணவரும் மக்கள் இவர்களை பாராட்ட மறப்பதில்லை!


நாமும் பாராட்டுவோம்...

Blogger Widget

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

விநாயகர் சதுர்த்தி - 2012

சிறப்பு மிக்க விநாயகர் சதுர்த்தி விழா, இந்தியாவிலேயே ஓசூரில் மிக சிறப்பாக கொண்டாடும் வழக்கம் பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.


இந்த ஆண்டும், பிரம்மாண்டத்திற்கு சிறிதும் குறை இல்லாமல் விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணி தலைமையில் நடந்து முடிந்த  இவ்விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து வழி பட்டு சென்றனர்.

இவ்வாண்டு  நடை பெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே, உங்களுக்காக!Blogger Widget

வியாழன், 13 செப்டம்பர், 2012

வகை வகையா சிரிப்பு!

சிரிப்பு என்பது என்ன? அது எப்படி வரும்? எப்பொழுது வரும்?


சிரிப்பானது ஒரு குணம்! சிலருக்கு இயல்பாக வந்துவிடும், சிலருக்கு எவ்வளவோ முயன்றாலும் வராது! அப்படியும் வந்தால் அது இயல்பாக சிரிப்பவரின் சிரிப்பை நிறுத்திவிடும்! (சிரிக்க வேண்டுமே என்று தெருவுக்கே கேட்கும் அளவுக்கு சிரிப்பார்கள் சிலர்!)


படம்: Sparkcrews பிரேம்குமார்

சிரிப்பு எப்பொழுதுதான் வரும்? நாம் காண நினைக்கும் ஒருவரை நீண்ட நாட்களுக்கு பிறகோ, நீண்ட இடைவேளைக்கு பிறகு காணும்போது வரும்!

தனியாக சாலையில் நடந்து செல்லும்பொழுது, எப்பொழுதோ நண்பர்களுடன் நடந்த ஒரு நகைச்சுவை நிகழ்வு நினைவுக்கு வந்து, சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டு சிரிப்பது ஒரு வகை!

தொலைக்காட்சியில் வரும் அசட்டு தனமான நகைச்சுவைக்கும் வரலாம், அரசியல்வாதியின் சொத்து மதிப்பு வெளியிடும்போதும் வரலாம், ஊழல் புகாரில் சிக்கியவுடன் 'நான் நிரபராதி என்று நிரூபிப்பேன்' என்று சொல்லவதை கேட்கும்போதும் பார்க்கும்போதும் வரலாம்!

நடக்காத ஒன்று நடக்கும்போது வருவது ஆச்சர்ய சிரிப்பு!

பேருந்து நிறுத்தத்தில் சரியாக பேருந்தை நிறுத்தும்போது பயனியருக்கும், வயதான ஒருவர் நம்மருகே நிற்கும்போது எழுந்து நின்று அவருக்கு இருக்கை கொடுக்கும் போது... பதில் தெரியாத சிரிப்பு மூத்தவருக்கு, இன்று ஒரு நல்ல காரியம் செய்தோம் என்ற திருப்திகரமான புன்னகை இடம் கொடுத்தவருக்கு, ஒரு பயணி முழு சில்லறை கொடுத்து சீட்டு வாங்கும்போது நடத்துனருக்கு வருவது உளமார்ந்த சிரிப்பு!

எப்பொழுது சிந்திப்போம் என்று வெவ்வேறு இடங்களில் இருந்து நினைத்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் இயல்பாக தொலைபேசி அழைப்பு விடும்போதும், பரீட்சை முடித்து எதிர்பாராமல் ஒரே நேரத்தில் வெளியில் வரும்போதும் வருவது எதிர்பாராத இயல்பான சிரிப்பு!

குறைந்த மதிப்பெண் எடுத்து, நடுங்கிக்கொண்டு அப்பாவிடம் கை எழுத்து வாங்க நிற்கும்போது, 'சரி... அடுத்த தடவை நல்ல மதிப்பெண் எடு' என ஒரு வரி மட்டும் சொல்லி அடிக்காமல் விடும் போது நம்மை அறியாமல் 'ஐ' என வருவது ஆச்சர்ய சிரிப்பு!

இப்படி ஒவ்வொரு நாளும் நாம் ஒரு விதத்தில் சிரித்து கொண்டு தான் இருக்கிறோம்!

இந்த தொகுப்பை படித்து முடித்த பின்னர், 'அட ஏதோ சொல்ல வரைன்னு படிச்சா... இது தான் விஷயமா என சலித்துக்கொல்பவருக்கு அலட்டல் சிரிப்பு!

நீங்கள் ரசித்த ஒரு சிரிப்பை இங்கு தங்கள் கருத்துக்களாக பதியவும்!
Blogger Widget

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

நற்கனா

நமது வலைதளத்தில் இப்பக்கங்கள் வெளியிடப்படும் என்று முன்பே தெரிந்திருந்தால் , எழுத்துப்பிழை இன்றி இன்னும் அழகாகவே எழுத்துரு கொடுத்திருப்பேன்!

ஒரு புது முயற்சி! எழுதிய பக்கங்களை படங்களாக, இங்கு உங்களுக்காக!

மறவாமல் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்!

விடுபட்ட வரிகள் படத்தின் கீழே உள்ளன...
வெள்ளை உடை அணிந்த இருவர் அவனைத் தூக்கி, தூக்குப்படுக்கையில் இட்டது, "வழி விடுங்கப்பா"  என ஒரு பெரியவர் சத்தம் என பின் நோக்கி அவன்


Blogger Widget