-->

புதன், 17 ஜூலை, 2019

இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள்




பொழுதுபோக்கைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக வார இறுதியிலும், விடுமுறை நாட்களிலும் இங்கே என்ன செய்வார்கள், எங்கே செல்வார்கள் என்பதைப் பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

நேரடியாக இந்த அத்தியாயத்தில் நுழைவதற்கு முன், "வேலை முடிஞ்சா கிளம்பு" என்ற அத்தியாயத்தில் அமெரிக்காவில் வேலை பார்க்குமிடம், அங்கே இருக்கும் வழக்கம் பற்றி விரிவான தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அத்தியாயத்தை படித்துவிட்டு இதை தொடர்ந்து படிக்கவும்.

நம் நாட்டில் ஆண்டுக்கு இருபத்து இரண்டு முதல் இருபத்து ஐந்து பண்டிகைகளும், அதில் மாநிலத்திற்கு ஏற்ப சில வேறுபாடுகளுடன் பொது விடுமுறை கொடுக்கப்படும். அமெரிக்காவில் நம் அளவுக்கு பண்டிகைகளெல்லாம் கிடையாது என்பதை "அமெரிக்கப் பண்டிகைகள்" என்ற அத்தியாயத்தில் விரிவாக பார்த்தோம். அப்படி ஒவ்வொரு விடுமுறைக்கு முதல் நாள், "Early dismissal" என்று ஒரு வழக்கம் உண்டு, விடுமுறை தினத்துக்கு முந்தைய தினம், மதியம் ஒருமணிக்கே வீட்டுக்கு செல்லலாம், இது எதற்காக என்றால், விடுமுறையை ஒட்டி வெளியே செல்பவர்களுக்கு சௌகரியமாக இருப்பதற்காக கொண்டு வந்த வழக்கம். சில அலுவலகங்களில் இந்த பழக்கம் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

வார இறுதியில் மற்றும் மூன்று அல்லது நான்கு நாட்கள் என்று தொடர்ந்து விடுமுறை (Long weekend) வந்தால் கோடைக் காலத்தில் பெரும்பான்மை மக்கள் மற்ற மாநிலங்கள் மற்றும் தத்தம் மாநிலத்திலேயே இருக்கும் தேசிய மற்றும் மாநில பூங்காக்கள் மற்றும் வனப்பகுதிக்கு சென்றுவிடுவார்கள். இங்கே விடுமுறையை கழிக்க மக்கள் தொலைக்காட்சி முன்பு உட்காருவதில்லை என்பது வெளியே சென்றுபார்த்தால் தெரியும். பெரும்பாலும் அந்த தொடர் விடுமுறைக்கு முதல் நாள் சாலைகள் அலைகடலென வாகனங்களைக் கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கும், எவ்வளவு நெரிசல் இருந்தாலும் வாகனங்களில் ஒருவர் பின்னர் ஒருவராகத்தான் செல்வர். 

இப்படி செல்லும் வாகனங்களில் முதல் முறை நான் வெளியே சென்ற போது ஒவ்வொரு வாகனங்களின் பின்னர் "trailer" என்று அழைக்கப்படும் வண்டியுடனான இணைப்பில், சைக்கிள், moterbike, Dirt Bike மற்றும் AVT (சேற்றில் ஓடிக்கொண்டு போகும் வண்டிகள்), படகு, Kayak, குதிரைகள் - குதிரையை பத்திரமாக கொண்டு செல்ல பேருந்து போல தங்கள் காரின் பின்பு ஒரு இணைப்பு இருக்கும், குதிரையை மலைப்பகுதிக்கு கொண்டு சென்று ஓட்டி மகிழ்வர். இப்படி பல தரப்பட்ட மக்களும் தங்களுக்கு விருப்பம் போல பொழுதைக்கழிக்க அதற்கு ஏற்ற இடங்களுக்கு செல்வர். 

இது தவிர RV எனப்படும் Recreation Vehicle என்று ஒரு வண்டி உண்டு, அத்த வண்டியிலேயே படுக்கை, சமையல் என்று எல்லா வசதியும் உண்டு. கழுகு என்ற 1981ஆம் ஆண்டு  வெளிவந்த ரஜினி படத்தில் தான் இதை முதல் முறை பார்த்தேன், அவ்வளவு ஆச்சர்யமாக இருந்தது அதை பார்த்தபோது. இங்கே அந்த வண்டி நூற்றில் ஐந்து பேரிடம் இருக்கும் (ஒரு கணக்கு தான்!), சிறிய பெரிய என்று பல வடிவில் இருக்கும் அந்த வண்டியின் முக்கியத்துவம் என்னவென்றால், அது வைத்திருப்பவர்கள் வெளியில் தங்க தேவை இல்லை, RV parking station என்றே தனி இடம் உண்டு, அவர்கள் அங்கே நாள் கணக்கில் வண்டியை நிறுத்தி விட்டு (தினக் கட்டணம் $10 முதல் $30 வரை இருக்கும்), அந்த வண்டியின் பின்னர் அவர்களின் வாகனத்தை trailerஆக கொண்டு வந்திருப்பார்கள், அருகில் இருக்கும் இடங்களை அதில் சுற்றி பார்த்துவிட்டு அடுத்த மாநிலத்துக்கு செல்ல மீண்டும் பெரிய வாகனத்தை கிளப்பிக்கொண்டு செல்வார்கள். இப்படி இந்த வண்டியில் தொடர்ந்து மாதக் கணக்கில் சுற்றுவோர். பனி ஓய்வு பெற்றவர்கள், சில ஆண்டுகள் வேலை செய்து சேமித்து வைத்துவிட்டு மூன்று அல்லது நான்கு மாதங்கள் வெளியே சுற்றி பார்ப்பவர்கள் என்று இதற்கு ஒரு தனி மக்கள் தொகையே உண்டு!

முதல் முதலில் ஒரு மாநில பூங்காவிற்கு செல்வதற்கு முன், "அட.. என்னடா இது சின்ன பசங்க மாதிரி பார்க்குக்குலாம் போயிகிட்டு" என்று நினைத்தேன். எனக்கு தெரிந்த பூங்காவெல்லாம் எங்கள் ஓசூரில் கோட்டை மாரியம்மன் கோவில் பக்கத்தில் இருக்கும் பூங்காவும், சென்னையில் சிறு வயதில் அப்பா அம்மா அழைத்து சென்றபோது பார்த்த பாம்புப் பண்ணையும், VGPயும், மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வராவ் பூங்காவும், தஞ்சை பெரியகோவில் எதிரில் இருந்த பூங்காவும் மட்டும் தான். இப்படி இரண்டு ஊஞ்சல், ஒரு சறுக்குமரம், காலாற நடக்க கொஞ்சம் இடம் இருக்கும் என்று தப்புக்கணக்கு போட்டிருந்தது அங்கு சென்ற பின்னர் தான் புரிந்தது!

அமெரிக்காவில் இருக்கும் தேசிய பூங்காக்களின் மொத்த பரப்பளவு மட்டும் மூன்று இங்கிலாந்தை கொள்ளும்!!! அவ்வளவு விசாலமான இடங்களாக தான் ஒவ்வொரு பூங்காக்களும் இருக்கும். இது வெறும் தேசிய பூங்காக்கள் இடம் மட்டும், இதை தவிர மாநிலப் பூங்காக்கள், உள்ளூர் பூங்காக்கள் என வகைவகையான இயற்கை எழிலூட்டும் பூங்காக்கள் உள்ளன. முதல் அத்தியாயத்திலே சொன்னதுபோல இங்கே ஐம்பது மாநிலங்கள் உள்ளன, ஒரு கோடியிலிருந்து இன்னுரு கோடிக்கு 3,500 மைல்கள் (5,650 கிலோமீட்டர்), இது வடகிழக்கிலிருந்து மேற்கு திசைக்கு செல்ல மட்டுமே! இப்படி மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடு என்பதால், ஒவ்வொரு திசையிலிருக்கும் பூங்காவுக்கு சில சிறப்பம்சங்கள் உண்டு. அதுவும், குளிர்காலத்தில் பனிக்கட்டிகளால் மூடப்பட்ட மலைகளைக் கொண்ட பூங்காவைப் கோடைகாலத்தில் பார்த்தால் அப்படியே மாறுபட்டு தோன்றும், அதையே இலையுதிர் காலத்தில் பார்த்தால் சொர்கத்துக்கு செல்லும் பாதையை ஒருமுறை எட்டிப்பார்த்துவிட்டு வந்தது போல வண்ணமயமாக இருக்கும், பனிக்காலம் ஆரமிப்பதற்கு முன்னர் சென்று பார்த்தல் மொட்டை மரங்களாக காட்சியளிக்கும்.



இப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரு பூங்காவைப் பார்க்கலாம், ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புது அனுபவத்தைக் கொடுக்க காத்துக்கொண்டிருக்கும். நூற்றுக்கணக்கான மையில்கள் ஓடும் கணக்கில்லா ஆறுகளும், கோடிக்கணக்கான ஏக்கரில் பராமரிக்கப்பட்டு வரும் வனங்களும், அதில் இலட்சக்கணக்கில் காலத்துக்கு ஏற்ப இனப்பெருக்கத்துக்கு வந்து முட்டையிட்டு குஞ்சுபொரிக்கும் பறவைகளும், விலங்குகளும் என்று அனைத்தும் மிக சிரத்தையுடன் பராமரிக்கின்றனர். தேசிய பூங்காவிற்கென்று தனியே வரவு செலவு திட்டம் தீட்டப்பட்டு அதற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. மாநில அரசுகள் மாநிலப் பூங்காவுக்கு நிதி ஒதுக்கி பாதுகாத்து வருகிறது. 

ஒரு மாநில பூங்காவில் ஒரு நாள் முழுதும் செலவழிக்கும் அளவுக்கு பல விஷயங்கள் உண்டு. முன்பே சொன்னதுபோல ஒவ்வொரு பூங்காவுக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. பெரும்பாலான பூங்காக்களில் எழில்மிகு ஏரிகள் இருக்கும் - அதில் தண்ணீரும் இருக்கும்! ஆம் தண்ணீருடன் ஏரியையோ, குளத்தையோ நம் தாய்த் தமிழ்நாட்டில் பார்த்து பல வருடங்கள் ஆகின்றன. ஆனால், இங்கே எங்கு சென்றாலும் தண்ணீர், குளம், ஆறு, ஏறி, நீர் வீழ்ச்சி என்று எண்ணற்ற நீர்நிலைகள். ஒவ்வொன்றையும் பூங்கா ஊழியர்களும், அதைக் கண்டும், விளையாடியும், படகோட்டியும், நீந்தியும், எண்ணற்ற நீர் விளையாட்டுகளை விளையாடியும் மகிழும் பலதரப்பட்ட மக்களும் அவ்வளவு பொறுப்புடன் உபயோகப்படுத்தி குப்பையாகாமல் பார்த்துக்கொள்கின்றனர். எவ்வளவு பெரிய பூங்காவாக இருந்தாலும் சாப்பிடுவதற்கு என்று எண்ணற்ற மர மேஜைகளும், Barbeque (திறந்த வெளியில் உணவு சமைக்க உதவும் கருவி - அதற்கு கரி மற்றும் எரிபொருள் நாம் கொண்டு செல்லவேண்டும்), குடி நீர் குழாய், கழிப்பிட வசதி என்று ஒவ்வொன்றும் அணைத்து பூங்காக்களிலும் இருக்கும்.



பெரும்பாலான பூங்காக்களுக்கு தங்கள் வளர்ப்பு நாய்குட்டிகளையும் அழைத்துக்கொண்டு தான் செல்வார்கள். அப்படி அழைத்து வரும் செல்லப் பிராணிகள் மலம் கழித்தாலும், அதை கொண்டு வந்தவர்களே அப்புறப்படுத்திவிடுவார்கள். அதற்காகவும் ஒரு கறுப்புப் கவர் ஒன்று பெரும்பாலான இடத்தில் வைத்திருப்பார்கள். யாரும் சொல்ல வேண்டியதெல்லாம் இல்லை, அவர்களே சுத்தம் செய்திவிடுவார்கள்.




மாநில பூங்காக்களில் $5 முதல் $10 வரையும், தேசிய பூங்காக்களில் $15 முதல் $35 வரை நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும், இது மட்டும் தான் செலவு. வண்டியை நிறுத்துவதற்கும் வேறு எதற்கும் கட்டணம் கிடையாது. குறிப்பாக இங்கே எங்கும் கழிப்பிடத்துக்கு பணம் வசூலிப்பது கிடையாது, ஆனால் அவ்வளவு சுத்தமாக இருக்கும். ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஓகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தபோது ஐந்து ரூபாய் கட்டணம் கொடுத்து சிறுநீர் கழிக்க உள்ளே நுழைந்து, அடுத்த நொடியே மூக்கை பொத்திக்கொண்டு வெளியே ஓடி வந்துவிட்டேன், கேவலம்! சுற்றுலா செல்லும் இடத்தை எப்படி வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு, அது மட்டுமா? நம் நாடு முழுவதும் கூடாததற்கு தான் எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றது! சரி, இங்கே வருவோம்.

நெவாடா என்னும் மாநிலத்தில் ஒரு பூங்காவிற்கு சென்றிருந்தேன், அங்கே நுழைவு கட்டணம் பெற்றுக்கொள்வதற்கு ஆள் கிடையாது, பூங்காவிற்குள் நுழையுமிடத்தில் ஒரு அஞ்சல் பெட்டி ஒன்று இருக்கும், அதனருகில் ஒரு படிவம் இருக்கும், அதில் நம் வண்டியின் எண், நமது பெயர் மற்றும் இதர விபரங்களை பூர்த்தி செய்துவிட்டு, $10 பணத்தை அந்த படிவத்தில் வைத்து ஒரு அஞ்சல் உரையில் வைத்து (எல்லாம் அங்கேயே வைத்திருப்பார்கள்!) அந்த அஞ்சல் பெட்டியில் போடவேண்டும், நமக்கு ரசீது போல ஒரு சிறு பகுதி அந்த படிவத்திலிருந்து கிழித்து நம் வண்டியில் கண்ணாடியின் அருகில் வைத்துவிட வேண்டும், பூங்காவினுள் வண்டியை நிறுத்திவிட்டு சுற்றிப்பார்க்க செல்லும்போது ஒரு வேளை காவலரோ அல்லது பூங்கா ஊழியரோ வண்டியருகே வந்தால் நாம் நுழைவு கட்டணம் செலுத்தியதற்கு இது அத்தாட்சியாக இருக்கும். அனைவரும் இதை கடைபிடித்து தான் செல்வார்கள், மக்களின் மேலும் அப்படி ஒரு நம்பிக்கை!!

Death Valley National Park என்ற பூங்காவிற்கு சென்ற ஆண்டு சென்ற பொது, வேற்று கிரஹத்தில் இருந்ததை போலவும், வேற்று கிரஹத்தில் வண்டி ஓட்டிக்கொண்டு இருப்பதுபோலவும் பல முறை தோன்றியது! அப்படி ஒரு நிசப்தமான இடம், அந்த பூங்காவின் பரப்பளவு மட்டும் ஐந்து கோவா மாநிலத்தை கொள்ளும்!! கேரளாவின் மொத்தப் பரப்பளவில் பாதி பகுதி இந்த ஒரு பூங்காவின் பரப்பளவு மட்டும்! இதனுள் உப்புத்தரையும் உண்டு, மணல் மேடுகளைக் கொண்ட பாலைவனமும் உண்டு, கனிம வளங்களை கொண்ட மொட்டை மலைகளும், பாறைகளும் உண்டு, காற்று தள்ளிக்கொண்டு போகும் பாறாங்கல்லும் உண்டு! இப்படி மாநிலத்துக்கு குறைந்தது ஐந்து பெரிய்ய பூங்காக்களாவது நிச்சயம் இருக்கும். தேசிய பூங்காக்களின் எண்ணிக்கை மட்டும் 112. இதன் பரப்பளவுதான் மூன்று இங்கிலாந்தைக் கொள்ளும்!



தேசிய பூங்காவுக்கு, மாநில பூங்காவுக்கு ஆண்டு சந்தா கூட செலுத்தி "pass" பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஆண்டு மட்டும் தேசிய பூங்காவின் நுழைவு கட்டணத்தை மூலம் வசூலிக்கப்பட்ட தொகை மட்டும் $310 மில்லியன் அதாவது கிட்டத்தட்ட 21,291,208,791 கோடி ரூபாய்!!! இது முழுக்க முழுக்க மக்கள் விரும்பி அவர்களின் விடுமுறை நாட்களை கழிக்க குடும்பத்துடன் சென்று எந்த தொந்தரவும் இன்றி மகிழ்ச்சியாக செலவழித்துவிட்டு வந்த தொகை! மக்கள் கொடுத்த இந்த நுழைவு கட்டணத்தை எப்படி செலவழிக்கிறார்கள் என்று தேசிய பூங்காவின் வலைத்தளத்திலே மிக தெளிவாக ஒவ்வொரு பூங்காவிலும் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிப்பறையின் விபரண்களைக் கூட "உங்கள் கட்டணப் பணத்தில் நடக்கும் வேலைகள்" என்று வெளியிட்டிருக்கிறார்கள் விபரங்கள் இங்கே


இப்படி ஒரு திசைக்கு சென்றால் எழில் சொட்டும் பணிமலைகளும், மலையை ஒட்டி அடிவாரத்தில் ஆனந்தமாக படகோட்டி செல்ல  ஏரிகளும், பனிப்பாறைகளும், பச்சை பசேலென்று ஐநூறு மைல்கள் செல்லக்கூடிய பூங்காவும் (ஒரு பூங்காவின் நீளம் மட்டும் 800 கிமி), பல வெள்ளை நிற பாலைவனகளும், வெயில் சுட்டெரிக்கும் ஆண்ட வெளிகளும், அங்கே வழங்கி வரும் பல நூறு கணக்கான பறவை இனங்களும், விலங்குகளும், காலத்துக்கு ஏற்ப பச்சையாகவும், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிகப்பு நிறங்களில் மரங்களும் அதன் இலைகளின் நிறங்களும் மாறி சொர்கம் என்றால் ஒருவேளை இப்படி இருக்குமோ என்று தோன வைக்கும் வியப்புகளும் என்று அமெரிக்கா முழுவதும் எழில் கொழிக்கும் பூங்காக்கள் எண்ணற்று இருக்க இங்கே தான் இம்மக்கள் தங்கள் வார இறுதியை கழிப்பார்கள். பலர், விடுமுறை எடுத்துக்கொண்டு, சில மாதங்களுக்கு முன்னரே திட்டம் தீட்டி, விமான முன்பதிவு, தங்குமிடம் முன்பதிவு என்று அனைத்தையும் செய்துக்கொண்டு தங்கள் விடுமுறையை திட்டமிடுவார்கள்.



இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒருவர், ஒவ்வொரு ஆண்டு ஒரு மாநிலத்தில் ஒரு முக்கிய தேசிய பூங்காவிற்கு செல்ல திட்டமிடலும் கூட, ஐம்பது பூங்காக்களை பார்க்கவே, ஐம்பது ஆண்டுகள் ஆகும்!!! இது தவிர இதர அழகு முகும் இடங்கள் வேறு!! இப்படி இருக்கும் ஒரு நாட்டில் ஒவ்வொரு  வார இறுதியும் வெளியே சென்று சுற்றி பார்த்தாலும் அலுக்காது!



அத்தியாயம் 18 அடுத்த வாரம் வெளியாகும். மேலும் மூன்று அத்தியாயங்களுடன் இந்த கட்டுரைத் தொடர் முற்று பெரும்.

Blogger Widget

12 கருத்துகள்:

  1. உங்களின் பார்வையில் அமெரிக்காவை பற்றி தெளிவான நடையில் எழுதி இருக்கிறீர்கள் பாராட்டுகள்... இங்குள்ள அமெரிக்கர்கள் பலரும் விடுமுறைக்கு அவர்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள பகுதிகளுக்கோ அல்லது அருகில் உள்ள மாநிலங்களுக்கு மட்டும் செல்லுவார்கள் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு சென்று பார்ப்பவர்கள் மிக குறைவுதான் நம்மை போல வெளிநாட்டுகளில் இருந்து வசிக்கும் பல நாட்டினர்தான் அநேக இடங்களுக்கு சென்று பார்த்து ரசித்து அனுபவிக்கின்றனர்

    பதிலளிநீக்கு
  2. மிக சரியாக சொன்னீர்கள், ஆம் இந்நாட்டவரைவிட பெரும்பாலும் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்கள் தான் நாடு முழுதும் சென்று சுற்றிப்பார்க்கின்றனர்.

    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. God Bless America.....and American citizens!, it’s in their blood to keep their country as no 1.

    We Indians have a looooooong way to come some what close to it. Our uncontrolled population is a BIG problem.
    Enjoy the blessed life .

    Rajan

    பதிலளிநீக்கு
  4. How is the job situation now.? Write about H1B visa etc., I read rules are getting relaxed by de limiting the country quota.
    L like your writing style. It’s llike a conversation,,, - Rajan

    பதிலளிநீக்கு
  5. ஒருநாள் நம் நாடும் சுபிக்ஷம் பெரும் என்று நம்புவோம். தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி, ராஜன் சார்.

    பனி நிலைமை அப்படியே தான் இருக்கு, சில சட்ட திருத்தங்கள் கொண்டுவர முதல் கட்ட ஒப்புதல்தான் கிடைத்திருக்கிறது, இன்னும் சட்டம் அமலுக்கு வரவில்லை.

    எழுத்து நடை பற்றிய தங்களின் கனிவான கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அமெரிக்க தேசிய,மாநில பூங்காக்களை, விடுமுறை மனப்பாங்கை பூரணமாக எழுதியுள்ளீர்கள் பார்கவ்..மனமார்ந்த நன்றி.

    வாழ்க வையகம்: வாழ்க வளமுடன் நண்பா

    பதிலளிநீக்கு
  7. அமெரிக்கப் பூங்காக்கள் அனைத்தின் அழகையும்
    அமர்ந்த இடத்திலேயே அனுபவிக்கும் வகையில்,
    அருமையான நடையில் இங்கு அளித்துள்ளீர்கள்!
    இணைத்திருக்கும் புகைப்படங்களும் அற்புதம்! வாழ்த்துக்கள்!

    இமயவரம்பன்
    https://solvelvi.blogspot.com

    பதிலளிநீக்கு