-->

செவ்வாய், 23 ஜனவரி, 2018

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 8 | America - Made in China

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...


இங்குள்ள நம் கடைகளையும், அமெரிக்காவில் வசிக்கும் நம்மவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கும் கடைகளை பற்றியும், இந்த ஊரில் உள்ள சில கடைகளை பற்றியும் சென்ற அத்தியாயத்தில் படித்திருப்பீர்கள். இந்திய பொருட்கள் கிடைக்கும் கடைகளை தவிர இங்குள்ள கடைகளை பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

நம் நாட்டில் இருக்கும் போது, இங்கிருந்து யார் இந்தியாவுக்கு வந்தாலும் அவர்கள் வாங்கிக்கொண்டு வரும் பொருட்களில் முக்கியமாக chocolate இருக்கும். பின் deodrant. இதுதவிர ஒவ்வொருவரும் அவர்களின் சேமிப்புக்கு ஏற்ப அவர்களின் சக்திக்கு உட்பட்ட Electronic பொருட்களை வாங்கி வருவதை பார்த்திருப்பீர்கள். ஆம், பல விதமான chocolate உண்டு. ஒவ்வொன்றையும் பார்த்தாலே அள்ளிக்கொண்டு வாங்க தோணும். எதை பார்த்தாலும் வங்கத்தோணும். chocolate வாங்கும் கடைகளில் பெரும்பான்மையான கடை Costco, Walmart, Trader Joe's என்று பல கடைகள் உண்டு. ஒவ்வொரு கடைகளுக்கும் சிறப்பம்சம் உண்டு. குறிப்பாக சொல்லப் போனால், Costcoவில் பெரிய பெரிய அளவில் தான் எல்லா பொருட்கள் கிடைக்கும். இது நாம் ஊருக்கு செல்லும்போது அக்கம் பக்கத்து வீட்டினர், உறவினர்களுக்கு என்று அதிக நபர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது Costcoவில் Chocolate வாங்கினால் மற்ற கடைகளில் வாங்குவதை விட விலை "சற்று" குறைவாக இருக்கும். இதுவே Walmartஇல் சிறிய, நடுப்பட்ட, பெரிய என்று எல்லா அளவிலும் அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

அதனால் இங்கிருந்து யாராவது வந்து சில சாக்லேட்கள் மட்டும் கொடுத்தால் கோபித்துக்கொளாதீர்கள், அதை வாங்க சில கடைகள் சென்று, சில பாக்கெட்டுகள் வாங்கினாலே நூறு டாலரை தொட்டுவிடும் அதன் விலை, சராசரி இல்லத்தில் நூறு டாலர் என்பது மாத சேமிப்பில் பெரிய தொகை. யாராவது வம்பு பேச்சில் - அமெரிக்காவுல சாக்குலேட்டெல்லாம் சீப்பாம் அப்டின்னு சொன்னா அவங்கள மன்னிச்சிடுங்க. பாவம் தெரியாம பேசிருப்பாங்க. உங்களுக்கு சாக்லேட் கொடுக்க அவர்கள் ஊருக்கு கொண்டு வர அனுமதிக்கப்பட்ட 23 கிலோ கொண்ட இரண்டே பையில் ஒருமாதத்துக்கு வேண்டிய துணிகளுடன் இந்த சாக்லேட் பைகளை அடுக்கி, அனுமதிக்கப் பட்ட இடையை தாண்டிவிட்டதா என்றெல்லாம் சரிபார்த்து மிக சிரம பட்டு கொண்டு வருவார்கள். முடிந்தால் அவர்களுக்கு நீங்கள் ஒரு சாக்லேட் கொடுங்கள்!

சரி விஷயத்துக்கு வருவோம்... இங்கே ஒவ்வொரு கடைக்கும் ஒரு தனித்தன்மை உண்டு அதனால் தான் எல்லா கடைகளிலும் எப்போதுமே மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும். காய்கறிகள் வாங்க Farmers Market (நம் ஊர் உழவர் சந்தைப்போலவே தான்!), எண்ணெய், கறிவகைகள், குடி தண்ணீர் கேன்கள், மற்ற வீட்டு சாமான்கள் வாங்க Walmart, Shoprite, ACME, Foodtown என்று ஒவ்வொரு மாநிலங்களிலும் வேறு சில பெயர்களில் இந்தக் கடைகள் இருக்கும். இது தவிர மரச்சாமான்கள் வாங்க IKEA (சென்ற அத்தியாயத்தில் படித்திருப்பீர்கள்), வீடு கட்ட, அல்லது வீட்டுக்கு தேவையான வேலைகள் செய்ய தேவைப்படும் ஆணி, Fevicol, என்று எந்த துரும்பானாலும் Home Depot என்ற கடையில் கிடைக்கும். மேலும் Electronic பொருட்கள் வாங்க Best Buy. அடிக்கடி வெளியே பயணம் மேற்கொள்பவருக்கு என்னென்ன வேண்டுமோ - Camping செய்பவருக்கு Tent, Sleeping bag, Torch (இதென்ன பிரமாதம் என்கிறீர்களா - குறைந்தது ஒரு இருபது வகையான டார்ச் பார்த்துள்ளேன் இதுவரை! அம்மாடியோவ்!) மீன் பிடிக்க பயணிப்பவருக்கு என்று அதற்கு தேவையானவை, Trekking, Hiking, பாறையில் ஏறுதல், Scuba diving, Swimming, Running, jogging, River Rafting, பனி சறுக்கு என்று என்னென்ன நமக்கு தெரியுமோ, தோணுமோ அந்த அனைத்து விஷயங்களுக்கும் வேண்டிய ஒவ்வொரு சின்ன சின்ன பொருட்கள் கூட Walmart, Sierra என்ற கடைகளில் கிடைக்கும்.

குழந்தைக்கு தேவையான பொருட்கள் விற்க மட்டுமே Toys R us, Babys R us என்ற கடைகள் - குழந்தைக்கு தேவையான நமக்கு சற்றும் தோணவும் தோணாத சின்ன சின்ன பொருட்கள் கூட இந்த கடைகளில் கிடைக்கும். உதாரணத்துக்கு plug சொருகும் ஓட்டையில் குழந்தையின் விறல் பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்த ஓட்டையை மூடிவைக்கும் சின்ன பொருள் ஒன்று விற்பார்கள், இப்படியாக தொட்டில், பால்புட்டி, என்னென்ன தேவைப்படுமே அனைத்தும் அந்த கடையில் இருக்கும். படுக்கை சம்மந்தமான போட்டுக்களுக்கு மட்டுமே Bob's Furniture, Mattress King போன்ற கடைகள். துணிகளுக்கு சொல்லவே வேண்டாம், அவ்வளவு கடைகள் உண்டு - GAP, Macys, Target, H&M, JC Penny என்று நூற்றுக் கணக்கில் கடைகள் உண்டு. இது தவிர திருமணத்துக்கான ஆடைகள் விற்கும் கடைகள் மட்டுமே பல உண்டு.

விஷயம் புரிகிறதல்லவா? home depot என்றால் வீட்டுக்கு தேவையான அனைத்துப் பொருட்கள்,  குழந்தைகள் கடைகள் என்றால் குழந்தைக்கு வேண்டிய அனைத்து பொருட்கள் என்று ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு தனித்துவம். இவ்வளவு ஏன்? PETCO என்று ஒரு கடை உள்ளது, அதாவது நாம் வளர்க்கும் நம் செல்லப் பிராணிகளுக்கு தேவையான அனைத்து அம்சமும் அங்கு விற்பார்கள். பறவை, நாய், பூனை, மீன் என்று அதற்கு உணவு பண்டங்கள், விளையாட்டு பொருட்கள் (ஆம், பந்து, எலும்பு துண்டு போன்ற விளையாட்டுப் பொருள், எழுதி மாளாத அளவு பொருட்கள்!), நாய் வளர்ப்பவர்கள் அந்த நாய்க்குட்டிக்கு மெத்தை (அதற்கான அளவில்!) என்று என்னென்ன வேண்டுமோ அனைத்தும் இருக்கும் அந்தக் கடையில்.


நம் நாட்டில் எப்படி  எப்படி மளிகை கடைகளில் மாதம் முதல் தேதியில் அல்லது சம்பளம் வந்த முதல் வார இறுதியில் பொருட்கள் வாங்குவோமோ, இங்கேயும் அப்படிதான். ஆனால் என்ன ஒரு வித்தியாசம் என்றால் இங்கே மாத வருமானம் கிடையாது. என்னது... மாத வருமானால் கிடையாதா என்று shock ஆகிவிட்டிர்களா? சரி, உடனே சொல்லிவிடுகிறேன்... அதாவது... நம் நாட்டில் மாத வருமானால் வாங்குவோம் அல்லவா, ஆனால் இங்கே மாதம் இருமுறையாக சம்பளத்தை பிரித்து கொடுப்பார்கள். மாத இரண்டாவது வார இறுதியில் ஒரு சம்பளம் (First fortnight என்பார்கள்), மாத இறுதியில் மீதி சம்பளம் (Second fortnight என்பார்கள்). சம்பளத்தை பற்றி பின்னர் வரும் அத்தியாயத்தில் விரிவாக பார்ப்போம். ஆக, இப்படி சம்பளம் வரும் வார இறுதியில் இந்த கடைகளில் கூட்டம் வெகுவாக இருக்கும். ஒவ்வொரு கடைகளிலும் கடை அளவுக்கு மிக பிரம்மாண்டமான car parking இருக்கும். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் கடுப்பாகாமல், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வீடு வந்து சேரலாம்.

Costco, Walmart பெரும்பாலும் dynamic கடைகள். (ஆஹா... இந்தக் கடைகளுக்கு இந்த வார்த்தையை எனக்கு தெரிந்து நான்தான் முதலில் உபயோகிக்கிறேன்!) ஏன் என்றால் இந்த கடைகளில் மட்டும்தான் பருவ காலத்துக்கு ஏற்ற பொருட்களை விற்பார்கள். குளிர்காலம் தொடங்கும் ஒரு மாதம் முன்பு sweater, jacket, jerkin, குடை, கம்புளி, heater fan போன்ற குளிருக்கு சம்மந்தமான பொருட்கள். கோடை காலம் வரும் முன் அதற்கான கண்ணாடி, மெல்லிய ஆடைகள், நீச்சல் உடை என்று பருவ காலத்துக்கு ஏற்ப மற்றும் Halloween, Thanks Giving, ஈஸ்டர், காதலர் தினம்,  கிறிஸ்துமஸ் போன்று பண்டிகை, விஷேஷ நாட்கள் சம்மந்தமான பொருட்களும் விற்பார்கள்.

சரி இதென்னப்பா என்னமோ அடுக்கிகிட்டே போய்ட்டிருக்க? அத்தியாயத்தோட தலைப்புக்கும் சொல்லிட்டிருக்க கதைக்கும் சம்மந்தமே எல்லை என்கிறீர்களா? இதோ வருகிறேன்.... இப்படி நூற்றுக்கணக்கில் கடைகள் இருக்கிறதல்லவா? இதில் இருக்கும் பல கடைகளும் உலகில் வெவேறு நாடுகளிலும் நூற்றுக்கணக்கில் கிளைகள் கொண்டவை. சில கடைகள் இந்தியாவுக்கு வர துடிக்கின்றன (Walmart - சென்ற மத்திய ஆட்சியின் FDI நினைவுக்கு வருகிறதா?), சில வர இருக்கின்றன (IKEA - இந்த செய்தியை சென்ற அத்தியாயத்தின் கருத்துப் பகுதியில் பகிர்ந்துகொண்ட நண்பர் மதனுக்கு நன்றி!), சில வந்திருக்கின்றன(H&M). இந்த ஒவ்வொரு கடைகளிலும் கோடிக்கணக்கில் பொருட்கள் விற்கப் படுகின்றன. இதை எல்லாம் நாம் அமெரிக்க பொருள் என்று விரும்பி வாங்குகிறோம், ஆனால் இதெல்லாம் அமெரிக்காவிலா தயாரிக்கப் படுகின்றன?!!! "ஒரு பெரிய ஊஹூம்..." இந்தக் கடைகளில் விற்கும் தொன்னூறு சதவிகித பொருட்கள் சீனாவில் தயாரிக்கபட்டது, துணிகள் பல வியட்நாம், வங்காளத்தில் தயாரிக்கப்பட்டது. பழங்கள், காய்கள் மெக்ஸிக்கோவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. நம் நாட்டிலிருந்து தயாரிக்கப்பட்டதாக நான் பார்த்ததில் ரோட்டில் இரும்பில் சாக்கடை குழியை மூடும் மூடி (நம் நாட்டை இழிவு படுத்தும் தொனியில் சொல்லவில்லை. உண்மையில் நான் பார்த்ததில் நம் நாட்டில் தயாரிக்கபட்ட பொருள் அதுதான்!), சில கடைகளில் விற்கும் அலங்கார பொருட்கள். IKEA வில் விற்கும் அனைத்து பொருட்களும் ஸ்வீடன் நாட்டில் தயாரிக்கப் பட்டவை - அந்தக் கடையே ஸ்வீடன் கடை தான். அமெரிக்காவில் அமெரிக்கரால் அல்லாத முதல் பெரிய கடை IKEA, நாம் எப்படி நம் நாட்டில் இந்த வெளிநாட்டுக்கு கடைகள் வர எதிர்க்கிறமோ இங்கேயும் இந்த IKEA கடை வர முதலில் அப்படி எதிர்ப்பு இருந்திருக்கிறது.



சரி, இப்படி இங்கே பிரபலமான அனைத்து கடைகளில் விற்கும் அனைத்துப் பொருட்களும் வேறு நாட்டில் தயார் செய்யப்படுபவை. இந்த ஒரு மிக முக்கிய காரணத்தால் தான் இந்த நாடு இயற்கை வளத்தில் அழகு பொங்க இருக்கிறது. இந்த பொருட்களெல்லாம் தயார் செய்யும் நாடுகளை பார்த்தாலே ஏன் அந்தந்த நாடுகள் எல்லா இயற்கை வளங்களையும் இழந்து மாசுபட்டு இருக்கிறது என நமக்கு விஷயம் புரிந்துவிடும். வேறு நாடுகளில் பொருட்கள் தயாரிப்பதால் அந்த தயாரிப்பு கழிவுகள் தயாரிக்கும் நாட்டிலேயே தான் இருக்கும், அது நீர்வளம், நில வளம், காற்று மாசுபடுதல் என அனைத்து இயற்கை வளங்களையும் இழக்க வைக்கிறது. ஆனால் ஒன்று, இந்த பெரிய நிறுவனங்கள் இந்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு சுத்திகரிப்புகளுக்காகவும், பல saftey measurements களுக்காக பல கோடிகளை செலவிடுகின்றன. ஆனால் அந்த பணம் அனைத்தும் இந்திய, சீன, முதலாளிகளுக்கு தான் செல்கின்றன. தயாரிப்பு நிறுவன சுத்திகரிப்பில் பணம் செலவழிப்பது இல்லை, அதை நம் அரசாங்கமும் கண்டுக்கொள்ளாது, கண்டுக்கொள்ளும் ஒரு சில அதிகாரிகளை கொல்லவும் தயங்கமாட்டார்கள் இந்த கீழ்த்தர அரசியல் தரகர்கள்.

அமெரிக்கா மட்டும் அல்ல, உலகில் எங்கு chocolate விற்றாலும் அதற்க்கு தேவையான கோகோ (COCOA) ஏழமையிலும் ஏழ்மையான - ஆனால் கொள்ளளவு இயற்கை வளம் படைத்த ஆப்ரிக்காவில் மட்டும் தான் கிடைக்கின்றன. அங்கிருக்கும் லட்ச கணக்கான நிலங்களில் கோகோ வை வளர்த்து பாதுகாத்து இங்கிருக்கும் சாக்லேட் நிறுவனங்கள் பெற்றுக்கொள்கின்றன. ஹ்ம்ம்... அந்த ஆப்ரிக்க நாடுகள் நினைத்தால் இந்த அமெரிக்காவை விட பணக்கார நாடாக இருக்க முடியும்... MAKE IN AFRICA என்று அங்கே அடுத்த ஆட்சியாளர் நினைத்தால் நடத்திக் காட்டலாம், ஆனால் அங்கோ நம் நாட்டை விடவும் ஊழல் தலை விரித்தாடுகிறது.

அண்மையில் Hershey என்ற சாக்லேட் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சென்ற பொது எடுத்த படம்.
அமெரிக்கா என்றாலே என்னமோ தேசிய சின்னம் போல கருதப்படும் iphone கூட முழுக்க முழுக்க சீனாவில் தான் தயாரிக்கப் படுகிறது.

ஆக, அடுத்தமுறை அமெரிக்காவிலிருந்து யாராவது எந்தப் பொருள் வாங்கி வந்தாலும் - அருணாச்சலம் படத்தில் ரஜினி (அட இந்தாளு அரசியலுக்கெல்லாம் நான் விளம்பரம் கொடுக்கல... அதுல நடிச்சதால சொல்றேன்!) "அண்ணே ... மாப்பிள்ளை இவருதான்... ஆனா அவரு போட்டிருக்க T-shirt எண்ணுதில்ல" அப்படிம்பாரே.... அதா போல தான்...

உங்களுக்கு வாங்கிட்டு வந்த பொருள் அமெரிக்காவுலேர்ந்து தான்... ஆனா அதை தயாரிச்சது அமெரிக்காவுல இல்லை... ஏன்னா அது AMERICA - MADE IN CHINA.

அடுத்த அத்தியாயம் விரைவில்...

கருத்துக்களத்தை அடுத்த படிக்கு கொண்டு செல்லும் முயற்சியாக, கருத்துக்களத்தின் ஒரு பதிவை ஒலியாக பதிவு செய்துள்ளேன். இதை கேட்டு தங்கள் கருத்தை பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன். கருத்துக்களத்தில் உள்ள அனைத்துப் பதிவுகளையும் ஒலிவாயிலாக பதிவேற்றும் முயற்சிக்கு தங்கள் கருத்துக்கள் உதவும். 



தாங்கள் SoundCloud உபயோகித்திருந்தால் பின்வரும் இணைப்பை சொடுக்கி, அதில் எனது பக்கத்தை பின்தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். 

SoundCloudஇல் கருத்துக்களம் - https://soundcloud.com/bhargavkesavan/sets/karutthukkalam 

வாரத்தின் எந்த நாளில் புதிய அத்தியாயங்களை வெளியிடலாம் என நினைக்கிறீர்கள்? உங்கள் பதிலை கீழே பதிவிடுங்கள்.

இந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி!
Blogger Widget