-->

திங்கள், 15 பிப்ரவரி, 2016

உங்கள் பொன்னான வாக்குகளை!!!

அரசியல் - மன்னராட்சி முதல் மக்களாட்சி வரை என்றும் எப்போதும் மக்களை ஆட்சியாளர்களை பற்றிய சிந்தனையில் வைத்திருக்கும் ஒன்று. நல்லாட்சி, தீயாட்சி, கொடுங்கோலாட்சி என்று ஏதாவது ஒரு வகையில், மக்களை தினமும் அரசியல் பேசவைத்துக்கொண்டே இருக்கும் ஒன்று.

ஒரு நாளில் எத்தனை முறை நாம் அரசியல் பேசுகிறோம்? அரசியல் பற்றிய செய்திகளை படிக்கின்றோம்? அது அன்றாட பொழுதுபோக்குகளில் ஒன்றாகிவிட்டது. லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை, கடை திறப்பு, திருமணவிழாவில் பங்கேற்ப்பு, சிறையிலிருந்து விடுவிப்பு, வாய்தா, நீதிமன்றம் செல்வதிலிருந்து விலக்கு, வெளிநாடு பிரயாணம், தலைவர்களுடனான சந்திப்பு என்று ஏதாவது ஒரு வகையில் செய்தி நம்மை வலம் வந்துகொண்டே இருக்கும்.

நமக்கு தெரிந்த பரிட்சயமான செய்திதான் மீண்டும் மீண்டும் வந்துக்கொண்டிருக்கும், எடுத்துக்காட்டாக சுமார் பதினெட்டு ஆண்டுகளாக ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கை பற்றிய செய்தி தமிழகம் முழுதும் அனைத்து பத்திரிக்கை செய்திகளிலும் வெளி வந்துக்கொண்டே இருந்தன, இன்னும் வந்துக்கொண்டிருக்கிறது, நாளையும் வரும்... இப்படியாக,

தி.மு.க ஊழல் கட்சி என்ற செய்தி கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகவும், கட்சி பூசல், வேஷ்டி கிழிப்பு என்றால் காங்கிரஸ் என்பதும், திறமை வாய்ந்த தலைவர்கள் என்றாலும் ஒருவருக்கு ஒருவர் போட்டி என்று தேசிய ப.ஜ.க மற்றும் இருக்கும் ஐந்தாறு தலைவர்கள் கொண்ட தமிழக ப.ஜ.க பற்றியும், திறமை, நேர்மை, தைரியம் கொண்ட நேதாஜி, லால் பகதூர் சாத்திரி போன்ற தலைவர்களின் மறைவு பற்றிய மர்மம் நிரம்பிய செய்தி, ஈழம் பற்றிய தி.மு.கவின் இரட்டை நாடகம் (மத்திய அரசிடம் ஒரு நிலைப்பாடு மற்றும் தமிழக மக்களிடம் ஒரு நிலைப்பாடு), இங்கிருந்த படியே ஈழம் பற்றியே  பேசி பேசி ஒன்றுக்கும் உதவாத தலைவர்களான பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் பற்றியும், வலுவான மதுவிலக்கு கொள்கைகள் கொண்டிருந்தாலும் அதை நிறைவேற்ற கூட்டணியில் இருந்தபோது பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் எப்போதும் அதை பற்றியே பேசிக்கொண்டிருக்கும் பா.ம.க பற்றியும், அப்பாவிமக்களின் குடிசைகளை அவ்வபோது எரித்து வேடிக்கை பார்க்கும் விடுதலை சிறுத்தை மற்றும் பா.ம.க பற்றியும் எத்தனை எத்தனை ஆண்டுகளாக செய்திகள் வந்துக்கொண்டிருகின்றன!!!

இது மட்டுமா? ஊழலை ஒழிக்கிறேன் என்று கட்சி ஆரமித்து, மாவோயிஸ்டுகளும், நக்சல்களும், சர்வதேச தீவிரவாதியான தாவூத் இப்ராஹிம் போன்ற ஆட்களையும் தன் கட்சியில் சேர அழைப்பு விடுத்தும், அழைக்க விருப்பமும் தெரிவித்து, தேச விரோத எண்ணங்களை தூண்டியும்  விட்டுக் கொண்டிருக்கின்ற ஆம் அத்மி கட்சி பற்றியும், பொது கூட்டங்களில் பத்திரிக்கையாளர்களை நாய் என்றும், அடித்துவிடுவேன் என்றும், துப்புவதுமாக இருக்கும் 'தமிழக முதல்வராக விரும்பும்' விஜயகாந்த் பற்றிய செய்திகளும் அண்மைய காலங்களில் வந்துக்கொண்டு தான் இருக்கின்றன.

தேர்தல் சமயங்களில் எந்தக் கட்சி யாருடன் கூட்டணி வைக்கும், வைக்கலாம் என்று அரைத்த மாவையே அரைத்துக்கொண்டும், இவையே செய்தி என்றாகிவிட்டன!


ஒரு ஆட்டத்தில் தனக்கு பிடித்த அணி வெற்றி பெறாவிட்டால் வழக்கமாக கிரிக்கெட் பார்க்கும் ஒருவருக்கு படு கவலையாக இருக்கும், ஆனால் கிரிக்கெட்டே பார்காத ஒருவருக்கு அதனை பற்றிய எந்த ஒரு கவலையும் இருக்காது. இதுபோல் தான், தொடர்ந்து இப்படியான செய்திகளையே படிப்பதனால் நம்மை அறியாமல் நமக்குள்ளேயே தேவை இல்லாத கவலை உண்டாவதை பலரும் உணர்வதில்லை.

இந்த செய்திகளைப் படிப்பதனால் நமக்கு ஏதேனும் உபயோகம் உள்ளதா என்றால், பெரும்பாலும் கிடையாது! ஆனால் தினமும் படித்த செய்தியையே வெவ்வேறு வடிவங்களில் படித்துக்கொண்டே இருக்கிறோம்.

இப்படி ஒவ்வொரு கட்சியை பற்றியும் பல த்வேஷங்கள் இருந்தாலும், தேர்தல் என்று வந்தால் அவர்களுக்கு ஓட்டு போடுவது என்பது கட்டாயமாகிறது.

நம்மிடம் ஒரு பழக்கம் உள்ளது, அது என்னவென்றால், என்னதான் இந்த செய்திகளை எல்லாம் காலாகாலமாக படித்திருந்தாலும், தேர்தல் என்று வரும்போது யாருக்கு ஓட்டு போடுவது என்பதை சுயமாக முடிவெடுக்காமல், பரிட்சையில் காப்பி அடிக்கும் சிறுவர்கள் போல, தனக்கு பிடித்த நடிகர் பிரச்சாரம் செய்யும் கட்சிக்கும், முகத்தில் சிரிப்பையும் மனதில் "ஆஹா எப்போடா பதவிக்கு வருவோம், எப்போடா கமிஷனை கையில் பார்ப்போம்" என்ற சிந்தனையிலும் ஒரு சிரிப்பையும், கும்பிடையும் போட்டுக்கொண்டு வாய்க்கு வந்ததை பேசி நடிகனாகவே மாறும் வேட்பாளரின் நடிப்புக்கும், வீட்டில் இருப்பவர்கள் சொல்லும் கட்சியின் சின்னத்துக்கும் என்று வாக்களிப்பதே பெரும்பாலோரின் வழக்கமாகிவிட்டது!

நாம் யாருக்கு வாக்களிக்கின்றோம் என்று பார்த்து வாக்களிக்க இன்னும் நாம் பழகவில்லை. யாருக்கு ஓட்டு என்றால், பெரும்பாலோர் சொல்வது சின்னத்தின் பெயர், அல்லது கட்சி தலைவரின் பெயர். தம் தொகுதி வேட்பாளர் யார் என்று தெரிந்து வாக்களிக்காமல், சின்னத்துக்குதான் நாம் வாக்களித்துக் கொண்டிருக்கின்றோம்.

எங்கள் தொகுதியான ஓசூரில், காங்கிரஸ் கட்சி வேட்பாளரான இந்த MLA நன்றாக தமிழ் தெரிந்திருந்தும் தமிழக சட்டசபையில் தெலுங்கில் பேசிக்கொண்டிருக்கிறார்! தனக்கு தமிழ் தெரியாது என்று சொல்லி கிட்டத்தட்ட அழுததை போல வேறொரு காணொளியை பார்த்த நினைவு!

ஒரு நகைச்சுவையில் வடிவேலு நீதிபதியை பார்த்து 'தங்களுக்கு தெரியாத சட்டங்கள் ஒன்றும் இல்லை, அதில் எந்த சட்டம் நல்ல சட்டமோ அதன் படி' என்று வரும். அதுபோல, என்ன கேட்க வேண்டும் என்றே தெரியாமல் தெலுங்கு மொழியை தமிழ்நாட்டில் காப்பாற்ற (இப்போ அந்த மொழிக்கு என்ன ஆகிவிட்டது இங்கு?) ஏதாவது நீங்களே செய்யுங்கள் என்று சொல்லும் இந்த காணொளியை பாருங்கள்!

மூன்றாவது முறையாக இவரெல்லாம் எப்படி MLA ஆக முடிந்தது என்றால், அதற்கு காரணம் நேரடி சின்னம் அல்லது கூட்டணியின் சின்னம். சின்னத்துக்கு வாகளித்தே பழகிய நமக்கு நாம் யாருக்கு வாகளிக்கிறோம் என்பதை தெரிந்துக் கொள்வது முக்கியம் என்பதை இந்தத் தலைமுறை வாக்காளர்கள் தெரிந்துக்கொள்வது அவசியம்.


இது தான் எனக்கு கடைசி தேர்தல் அடுத்த தேர்தலுக்கு நான் இருக்கமாட்டேன் என்று பல தேர்தல்களாக தன் வயதை எல்லாம் ஒரு காரணமாக காட்டி ஓட்டு கேட்கும் கருணாநிதி போன்றவர்களுக்கோ, என்ன கொள்கை என்றே தெரியாமல், எதற்காக கூட்டணி வைக்கிறோம் என்றே தெரியாமல் கட்சி நடத்திக் கொண்டிருக்கும் கொசுருகளில் எந்தக் கொசுருடன் கூட்டணி வைக்கலாம் என்பதிலேயே திண்டாடும் கட்சிகளுக்காகவோ, கவர்ச்சியான இலவச வாக்குறுதிகளுக்காகவோ, மலிவான விமர்சனங்களுகாகவோ, சாத்தியமே இல்லாத வாக்குறுதி என்று நன்றாகவே நமக்கு தெரியும் பேச்சுகளுக்காகவோ, என்ன தான் போட்டியிடும் எந்தக் கட்சியுமே பிடிக்கவில்லை என்று 49ஓ இருந்தாலும் நடைமுறையில் அர்த்தமே இல்லாத அந்த முறைக்கும் வாக்களிக்காமல்... ஹ்ம்ம்... இப்படியே அடுக்கிக் கொண்டிருந்தால் ஒருவருக்கும் ஓட்டு போடமுடியாது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது, என்ன செய்வது, எரியும் கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்த்து தான் வாக்களிக்க வேண்டியுள்ளது!!!

ஆகவே எதிர் வரும் தேர்தலில் உங்கள் மனம் போல், ஒரு நல்ல கொள்ளிக்கு உங்கள் பொன்னான வாக்குகளை பதிவியுங்கள் என்று கருத்துக்களம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்!

நன்றி!
Blogger Widget