-->

செவ்வாய், 29 அக்டோபர், 2013

பழகலாம் வாங்க - பாகம் மூன்று

அன்று பள்ளியிலிருந்து வீட்டுக்கு சீக்கிரமாகவே வந்துவிட்டான் அப்பு. பொதுவாக பள்ளி முடிந்து வழியிலிருக்கும் சிறிய காலி இடத்தில் தன் பள்ளிப் பையை வைத்து விட்டு சிறிது நேரம் விளையாடிவிட்டு தான் வீட்டுக்கு வருவான்.

வீட்டைப் பூட்டிக்கொண்டு எதிர் வீட்டில் வசித்த ராசு வீட்டில் சாவியை கொடுத்து விட்டு, ரேஷன் கடைக்கு சென்றிருந்தார் அப்புவின் அம்மா. விளையாடிவிட்டு பசியோடு வீட்டுக்கு வந்து, கதவு சாதி இருப்பதை பார்த்து மீண்டும் பையை கழட்டி கதவருகே வைத்துவிட்டு எதிர் வீட்டுக்கு சென்றான்.

தன் குழந்தையோடு அவனுக்கும் நொறுக்கு தீனி கொடுத்து, 'மைலோ'வும் குடுத்தார் ராசுவின் அம்மா. தன் அம்மா வந்தவுடன் வீட்டுக்கு துள்ளி குதித்து சென்றான் அப்பு.

மறுநாள் இரண்டாம் சனிக்கிழமை, பள்ளி விடுமுறை என்பதால் தெருவே கலகலத்திருந்தது. முதலத்தையிடம் ( முதல் + அத்தை. முதல் வீட்டில் வசித்து வந்த ஒரு பெண்மணி, எல்லா குழந்தைகளும் அவரை அத்தை என்று தான் அழைப்பர்.) கதை சொல்லும்படி அவரை சூழ்ந்து கொண்டு அமர்ந்தனர். தம் ஊர் கதைகளை சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கும்பலில் ஒருவன் 'பேய்' கதை சொல்லுங்க அத்தை என்று கேட்டதும், இப்போது 'வடிவேலு சொல்லும் வசனமான' ஏண்டா... நல்ல தான போயிட்டிருந்துச்சு... என்ற தோணியில்.. பேய் கதை எல்லாம் வேணாம் நீங்க இதையே சொல்லுங்க என்று மெதுவாக அவர் காதில் சொன்னான்.

மணி எட்டு ஆனதும் ஒவ்வொருவராக வீட்டுக்கு கிளம்பவும், சரி நாளைக்கு மிச்ச கதைய சொல்லறேன் என்று அத்தையும் வீட்டுக்கு கிளம்பினார். இரவு உணவு உண்ட பின்னர் வீட்டிலேயே தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தான் ராசு. சிறிது நேரம் செஸ், அப்பாவுடன் சிறிது நேரம் முந்தைய ஞாயிற்றுக் கிழமை புதிதாக வாங்கியிருந்த சதுரங்கம் விளையாடிவிட்டு தூங்கினான்.

ஞாயிற்றுக் கிழமை, ஞாயிறு உதயமானது தான் தாமதம், மடமடவென குளியலை முடித்துக் கொண்டு, நண்பர்களை அழைத்துக்கொண்டு வாடகை சைக்கிள் கடை நோக்கி படை எடுத்தனர். கடையை நெருங்கியவுடன் ஒவ்வொருவரும் நல்ல, பளபளப்பான சைக்கிளை 'இது எனக்கு, அது எனக்கு' என்று போட்டி போட்டு எடுத்துக் கொண்டு, ரிஜிஸ்டர் நோட்டில் அவரவர் பெயரை சொல்லிவிட்டு 'எவ்ளோ மணிக்கு பாய் வரணும்?' என்று கேட்டுக்கொண்டு சிட்டென பறந்தனர்!

நேரமானதும் சைக்கிளை விட்டுவிட்டு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு நல்ல தூக்கம் தூங்கி எழுந்து, நான்கு மணிக்கு 'இலங்கை' வானொலியில்  பாடல்கள் கேட்க தயாராக உட்கார்ந்தான். ஒரு மணிநேரம் பாடல்கள் கேட்டுவிட்டு மீண்டும் விளையாட கிளம்ப தயாரானதும், நாளைக்கு ஸ்கூல்க்கு போகணும், கொஞ்ச நேரம் படிச்சுட்டு விளையாடப் போ என்று அம்மா சொல்லவும், இதோ வந்துடறேன் அம்மா என்று கத்திக் கொண்டே வாசலுக்கு ஓடிவிட்டான்.

வியர்த்து விருவிருக்க ஓடி பிடித்து விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு தான் காலில் குத்தியிருந்த முள் வலிக்க ஆரமித்து ரத்தம் கட்டி இருந்தது கண்டு  மெய் சிலிர்த்து, 'ஆஅஆ' என்று கத்திக் கொண்டு உட்கார்ந்தான். கல்லுப்பை (கல்+உப்பு) சிறிய துணியில் வைத்து நெருப்பில் காட்டி இரத்தம்  கட்டிய இடத்தில் அப்பா ஒத்தடம் கொடுத்தார்.

இரண்டு நாட்கள் விளையாடியதை நினைத்துக் கொண்டே ஒவ்வொரு வீட்டிலும் தம் நண்பர்கள் உறங்க கண் அயர்ந்தனர்.

இன்று... உறங்க நேரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மடிக்கணினி முன் சமூக வலை தளத்தில் இருந்து வெளி வராமலும், பத்து தெரு தள்ளி இருந்த நண்பனின் வீட்டுக்கு துள்ளி குதித்து ஓடிய கால்கள், வண்டி இருந்தாலும் பக்கத்து தெருவுக்கு செல்ல சோம்பல் வயப் பட்டிருக்கிறது. தத்தம் வேலைகளை வழக்கமான அட்டவணையிலேயே தினமும் ஓடிக்கொண்டிருக்கும் நாம் அவ்வபோது நண்பர்கள் கூட்டத்தோடு சேர்ந்து சில நேரம் இப்போதிருக்கும் மழலைகள் என்ன விளையாடுகிறார்கள் என்றும் கவனிப்போம்!

Blogger Widget

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

இலங்கைத் தமிழர்கள் என்ன நினைக்கின்றனர்?

பல வருடங்களாகவே இங்குள்ள அரசியல்வாதிகள் தம்மை; 'தமிழையும், தமிழ் மொழியையும், தமிழர்களையும்' பாதுகாக்க வந்த கடவுளாக நினைத்துக் கொண்டுள்ளனர். வேறு எவரேனும் அதில் பங்குக் கொள்ள நினைத்தால்  அவரை தமிழ் துரோகி என்று பட்டம் கட்டி ஓரம் கட்டிவிட்டு தம்மை தாமே முன் நிறுத்திக்கொள்வர்.

இங்கிருந்தவாறே இலங்கையைப் பற்றியும், இலங்கைத் தமிழரைப் பற்றியும் , இங்கு இவர்கள் கொடுக்கும் பேட்டிகள் இருக்கின்றனவே! அப்பப்பா! ஏதோ இவர்கள் இருப்பதனால் தான் இலங்கை தமிழரெல்லாம் வாழ்வதுபோலவும், இவர்களை அங்குள்ள தமிழர்கள் கடவுளாக பார்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு இங்கு இவர்கள் அடிக்கும் லூட்டிகள் கொஞ்ச நஜமல்ல!

உண்மையிலேயே இங்குள்ள அரசியல் 'தலைவர்கள்'(?!) பற்றியும், இங்கு இத்தனை ஆண்டு காலமாக இவர்கள் செய்யும் அரசியல் பற்றியும், இலங்கை தமிழர்களுக்காக இங்கு நடக்கும் போராட்டம் பற்றியும், தனி ஈழ கோரிக்கைகாக நடக்கும் தற்கொலைகள் பற்றியும் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள்? அங்குள்ள தமிழ் பத்திரிகைகள் என்ன நினைகின்றன?

கொழும்பு, யாழ்பாணம், கிளிநொச்சி, புதுக் குடியிருப்பு, முள்ளி வாய்க்கால், முல்லைத் தீவு, வவுனியா, மட்டக்களப்பு, கண்டி ஆகிய நகரங்களில் ஆறுநாள் தங்கியிருந்து, அங்குள்ள தமிழ் மக்களை, தமிழ்த் தலைவர்களை சந்தித்து, அத்துடன் இலங்கை அரசு துணையோடு ராணுவ அதிகாரிகள், இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ள தமிழ்ப் பெண்கள், மறுவாழ்வு இல்லத்தில் இருக்கும் முன்னாள் புலிகள் ஆகியோரை சந்தித்து பேசி, எல்லோருடனான உரையாடலையும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை துக்ளக் நிருபர்கள் கொண்டு வந்துள்ளனர்.

சுருக்கமான விவரம் கீழ் வருமாறு...

நேரமின்மைக் காரணமாக Proof Reading செய்யவில்லை, எழுத்துப்பிழை இருப்பின் மனிக்கவும்.

வீ.தனபாலசிங்கம் (ஆசிரியர், 'தினக்குரல்' நாளிதழ்) யாழ்பாணத் தமிழர்:

தமிழக அரசியல்வாதிகளின் போராட்டங்களை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வது கிடையாது - இலங்கை விவகாரங்களில் பல நிலைபாடுகளை எடுப்பார்கள் - ஆனால் மாணவர்கள் போராட்டம் உணர்வு பூர்வமானது - அதை நாங்கள் பெரிதும் மத்திக்கிறோம். ஆனால் அப்படிப் போராடும் முன்பாக எங்களின் தேவை என்ன என்பதை அறிந்து போராட வேண்டும். எங்கள் கோரிக்கை ஒன்றாகவும், அவர்கள் கோரிக்கை ஒன்றாகவும் இருந்தால் அது அனைவருக்கும் தோல்வியாக இருந்துவிடும்.

தனி ஈழம் என்ற கோரிக்கையை நாங்கள் கைவிட்டு விட்டோம். இவ்வளவு அனுபவங்களுக்கு பின்னர் அதை மீண்டும் கையில் எடுத்தால் அது எஞ்சி உள்ள தமிழரின் எதிர்காலத்தை பாழடித்துவிடும்.

எப்படி இலங்கை அரசாங்கம் எங்களுக்கு உடன்பாடிலாத விஷயங்களை எங்கள் மீது திணிக்கக் கூடாது என்று நினைக்கிறோமோ, அப்படித் தான் தமிழக தமிழர்களும் எங்கள் ஆலோசனை இல்லாமல் எங்கள் மீது எதனையும் திணிக்கக் கூடாது என்று நினைக்கொறோம், உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறோம், ஆனால் அது எங்களுக்கு அனுகூலமாக இருக்க வேண்டும்.

வீ.ஆனந்த சங்கரி (செயலாளர், தமிழர் விடுதலை கூட்டணி):




தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை நாங்கள் துவங்கும் முன்பே துவங்கியவர்கள் இந்தியத் தமிழர்கள்தான். அந்த கோரிக்கையை நீங்களே கைவிட்டு விட்டீர்கள்.
அதிகாரம் பொருந்திய மாநில அரசு என்ற நிலைக்கு நீங்கள் பழகி கொண்டீர்கள். தற்போது அதில் திருப்தி அடைந்து நிம்மதியாக வாழ்கிறீர்கள். இதையே தான் இங்குள்ள தமிழர்களும் விரும்புகிறோம். அதை பெற்றுத் தரக்கூடிய வகையில் உங்கள் போராட்டம் அமையுமானால் அது பாராட்டுக்குரியது.
பெரும்பாலான சிங்கள மக்கள் நல்லவர்கள். அவர்களை தமிழகத்தில் வைத்து தாக்குவது முகவும் தவறானது. அது எங்களை மேலும் பாதிக்கும்.

யோகேஸ்வரி (மேயர், யாழ்பாணம்):

சுமார் எட்டுக் கோடித் தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டைத் தனி நாடாக்க முடியவில்லை.
மொத்த ஜனத் தொகை  இரண்டு கோடி கொண்ட இலங்கையில் முஸ்லிம் தமிழர்களைத் தவிர்த்து, மலையகத் தமிழர்களைத் தவிர்த்து, இந்திய வம்சாவழித் தமிழர்களைத் தவிர்த்து, வெறும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுத்தித் தமிழர்கள் சில லட்சம் பேருக்கு மட்டும் ஒரு தனி நாடு கேட்பது எந்த வித்தத்தில் சாத்தியப்படும் என்பதை இந்திய தமிழர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் தவிர, மற்ற எல்லோருமே தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு பல காலம் ஆகிவிட்டது.
தமிழகத்தில் நிலவும் வதந்திகளை நம்பாதீர்கள். இங்கு வாழ்வது நாங்கள். இங்கு வந்து பாருங்கள்.
தற்போதைய உங்கள் போராட்ட வடிவம், எங்களுக்கு நன்மை தராமல் பாதிப்பு ஏற்படுத்துவதற்கே  வாய்ப்பு அதிகம் என்பதனை தயவு செய்து புரிந்துக்கொள்ளுங்கள்.


கங்கா (பஸ் ஆபரேட்டர், யாழ்பாணம்):

இருத்துப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகப் போகிறது, இங்கு தனி ஈழம் தான் தீர்வு என்று நாங்கள் நினைத்திருந்தால், இந்த நான்கு ஆண்டுகளில் இங்கு ஒருவராவது உண்ணாவிரதம் இருந்திருக்க மாட்டோமா? ஒருவராவது தீக்குளித்திருக்க மாட்டோமா? பிறகு ஏன் அங்குள்ள இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் என்று புரியவில்லை. கடந்த 30 வருடங்களாக போர் என்ற பெயரில் நரக வாழ்க்கை வாழ்ந்து வந்த நாங்கள் தற்போதுதான் நிம்மதியாக வாழத் துவங்கியுள்ளோம். எங்களின் அரசியல் தீர்வுக்கு உதவுங்கள், அதுதான் நீங்கள் எங்களுக்கு செய்யும் உதவியாக இருக்கும்.


பெயர் சொல்ல விரும்பாத தமிழ் பத்திரிக்கையாளர்:

தமிழக மாணவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான். தங்கள் தனி நாடு கோரிக்கை இந்தியாவில் எடுபடாது என்பதை உறுத்தி செய்துக் கொண்ட பின்னர், அந்த ஆசையை கைவிட முடியாத அங்குள்ள சில அரசியல்வாதிகள், அவர்கள் ஆசையை உங்கள் மீதும், எங்கள் மீதும் திணிக்கப் பார்க்கின்றனர்.
ஒரு அரசியல் கூட்டணிக்குப் போனால், இரண்டு டிஜிட் சீட்க்கூட வாங்கமுடியாத சில சின்னச் சின்ன அரசியல் தலைவர்கள், அவர்களின் அரசியல் ஸ்திரத் தன்மைக்காக உங்கள் வாழ்க்கையை பாழாக்குகின்றனர்.
இந்த மண்ணில் எங்கள் இளைஞர்கள் வாழ்க்கையை தொலைத்தது போதும், அங்குள்ள இளைஞர்களான நீங்களும் உங்கள் வாழ்க்கையை துளைத்து விடாதீர்கள்.
இங்கு தனிநாடு என்பது சாத்தியமே இல்லை, எங்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் அரசியல் தீர்வு, தமிழருக்குச் சம உரிமை என்பதான கோரிக்கைகளுக்காகப் போராடுங்கள்.
அதுதான் யதார்த்த நிலைமை. நாங்கள் வாழும் நாட்டை எதிரி நாடு என்று அறிவிக்கச் செய்வதில் என்ன லாபம் அடைவீர்கள்? இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால், இன்டுள்ள மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய்,சோப்பு, துநிமநிகளுக்கு எங்கே போவோம்? அவை வேறு நாடு வழியாக எங்களுக்கு வந்து சேரும். விளையும் மிக அதிகமாகும். வழியில் யார், யாரோ கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள். இதைய நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்?

மேலும், கிளிநொச்சி வி.சகதேவன் (போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர்)  , ஆர். யோகராஜன் (ஐக்கிய தேசியக் கட்சி, பிரதான எதிர்க் கட்சி எம்.பி.), என். நடேசன் (இலங்கையில் வெளியாகும் 'தினமுரசு' தமிழ் நாளிதழில் பிரபாகரனைப் பற்றி எழுதிய கட்டுரையின் சுருக்கம்), மனோ கணேசன் (தலைவர், ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கையில் வெளியாகும் 'தினக்குரல்' நாளிதழுக்கு 31.3.13 அன்று அளித்த பேட்டி) போன்றவை சென்ற வார துக்ளக் (கீழ் கண்ட அட்டைப் படம் கொண்ட 17-4-2013 இதழ்) இதழில் இடம் பெற்றுள்ளன.


உண்மை நிலவரம் அறிய விரும்புவோர் அதனை முழுமையாகப் படிக்கவும்.


Blogger Widget

திங்கள், 4 மார்ச், 2013

நீயா? நானா? - திரைக்குப் பின்னால்.

தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சி நீயா? நானா? கடந்த 2006 முதல் நடந்துகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட தலைப்புகளில் விவாதம் நடந்திருக்கிறது.


இந்த நீயா? நானா? நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு கடந்த வாரம் வாய்ப்பு கிடைத்தது (28-02-2013, வியாழக்கிழமை). சென்னை வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் படப்பிடிப்புக்கு வரும்படி சொல்லியிருந்தார்கள். பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன, படப்பிடிப்பு தளம் எப்படி இருக்கும் யாரெல்லாம் வருவார்கள், வேறு ஏதாவது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்குமா? என்றெல்லாம் பல கற்பனைகள்.

வியாழன் மதியம் இரண்டிலிருந்து மூன்று மணிக்குள் வரும்படி சொல்லியிருந்தார்கள். நான் ஒன்றரை மணிகெல்லாம் சென்றடைந்தேன். பிரசாத் ஸ்டுடியோ சென்றடைந்தவுடன் ஒரு கல்லூரியில் நுழைந்ததை போல உணர்ந்தேன். அங்கிருந்த காவலாளி ஒருவரிடம் 'அண்ணா, நீயா? நானா? படப்பிடிப்பு எங்கே நடக்கிறது என்று கேட்டேன்', கையை நீட்டி, அந்த கடைசியில் வண்டிகள் நிருத்தப்பட்டிருக்கிறதே, அங்கே இடது பக்கம் இருக்கிறது, என்றார்.

திரும்பும் முன் வலப்பக்கம் 'விஜய் டிவி' என்று எழுதப்பட்டிருந்தது, அங்கே சென்றேன், இது 'சூப்பர் சிங்கர்ஸ்' படப்பிடிப்பு தளம், தற்சமயம் செட் தயார் செய்யும் வேலை நடந்துக் கொண்டிருக்கிறது என்றார். சரி என்று இடப்பக்கம் சென்றேன்.

ஆண், பெண்  கலந்து சுமார் பத்து பேர் நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அதிலிருந்து ஒருவர் எழுந்து வந்து 'உங்கள் பெயர்?' என்றார். 'பார்கவ் கேசவன்' என்றேன். கையில் இருந்த பட்டியலில் பெயர் உள்ளதா என்று பார்த்தார், அது முதல் பெயராக இருந்தது.

பட்டியலை பார்த்துவிட்டு என் பெயர் மேல் ஒரு 'டிக்' செய்தார். என்னை பார்த்து, உள்ளே ஒரு வேறு எபிசொடுக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது, நீங்கள் விரும்பினால் உள்ளே சென்று பார்க்கலாம், இல்லை என்றால் இங்கேயே காத்திருக்கலாம், உள்ளே சென்றால் எபோது வேண்டுமானாலும் வெளியே வரலாம், என்று பணிவாக, நிதானமாக சொனார்.
உள்ளே செல்லும் முன் கைப்பேசியை அணைத்துவிடுங்கள் என்றார், ராம் குமார்.

உள்ளே செல்ல முற்படும்போது வேறொருவர், 'கொஞ்ச நேரத்துல மதிய உணவு தயார் ஆகிடும் சார், நீங்க இங்கேயே சாப்பிடலாம் என்றார்'. சரிங்க, என்று சொல்லி ஒரு கதவை திறந்தேன், ஒரு காவலாளி இருந்தார், அந்த கதவை சாத்திவிட்டு மற்றொரு கதவை திறந்தேன், ஏற்கனவே நடந்துக்கொண்டிருந்த விவாத சத்தம் கேட்டது. 'ஆஹா! ஒரு வழியாக படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிட்டோம்' என்றொரு மகிழ்ச்சி.

ஏற்கனவே படப்பிடிப்பை பார்துக்கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்தோம். அந்த தளம் எனக்கு ஒரு ஆச்சர்யத்தை கொடுத்தது.

தொலைகாட்சியில் பார்த்த போதெல்லாம் அந்த படப்பிடிப்பு தளம் பிரமாண்டமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஒரு பெரிய கூடம், உயரமான மேற்கூரை, அரை முழுதும் காற்று குளிர்விப்பியால் குளிர்ந்திருந்தது.

திரை மறைவில் இருக்கும் நீயா? நானா? படப்பிடிப்பு தளம். 
இயக்குனர் அந்தோணி கோபிநாத்தை ஒரு தனி ஒலிபெருக்கி வழியே இயக்கொக்கொண்டிருக்க; 'மைக்கை அவர்கிட்ட குடுங்க', 'வேற வேற வேற', 'இதுக்கு நீயா? நானா? நிகழ்ச்சி இடம் கொடுக்காது', 'இதை தான் இவர்கள் அறிவுறுத்துகிறார்' என்று இயக்குனர் வழிநடத்த அதை கோர்வையாக கோபிநாத் பேசிக்கொண்டிருந்தார்.

திரை மறைவில், இயக்குனர் அந்தோணி.
வேறு இடத்தில் சென்று உட்கார்ந்தேன், எனக்கு தெரிந்து ஆறு காமெராக்கள், ஒவ்வொரு காமேரமனுக்கும் ஒரு உதவியாளர், கமேராமேன் நாற்காலியில் உட்கார்ந்தவாறே, படம் பிடிக்க , ட்ராலியில் இருந்த கமேரமேனை உதவியாளர் இடது, வலது புறமாக மெதுவாக தள்ளிக்கொண்டிருந்தார். ஒரு கமேராமேன் கொஞ்சம் முக சுளிவுடன் என்னிடம் மணி என்ன ஆச்சு என்று ஜாடையாக கேட்டார், இரண்டரை என்றேன். காலை பதினோரு  மணியிலிருந்து அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.  குனிந்த நிலையிலேயே ட்ராலியில் நாற்காலியை தள்ளி கொண்டிருந்த உதவியாளர்கள் அனைவரும் இடுப்பை பிடித்துக்கொண்டே தள்ளிக் கொண்டிருந்தனர்.

 காமெராமேன்கள்

காமெராமேன்கள் 
உதவியாளர், விவாதத்தில் ஈடுபட்டவர்கள் பேசிக்கொண்டிருந்த பங்கேற்பாளர்களின் முக்கியக் கருத்துக்களை கவனித்து, அவர்களிடம் சில கேள்விகளை கேட்கும்படி கோபிநாத்திடம் சொல்லிக்கொண்டிருந்தார். பாரம்பரிய உணவு பற்றிய விவாதம் வெகு சூடாக நடந்துக் கொண்டிருக்க, மணி நான்கானது, கோபமாக சிறப்பு விருந்தினரை பார்த்து பேசிக்கொண்டிருந்த ஒரு பங்கேற்பாளரை சமாதானப் படுத்தி, 'பசிக்குதுங்க, காலைலேர்ந்து இன்னும் சாப்பிடவே இல்லை' என்று கோபிநாத் சொல்லி சற்று நேரத்தில் அந்த விவாதம் நிறைவடைந்தது.

அடுத்ததாக படப்பிடிப்புக்காக காத்திருந்த எங்கள் பெயர்களை அழைத்தார்கள், வெளியே உட்கார்ந்திருந்த அந்த பத்து பேர் குழு ஒவ்வொருவரை ஒவ்வொரு இடத்தில் உட்கார சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கு முதல் வரிசையில் உட்கார சொனார்கள்.

முதல் வரிசையில் இரண்டாவதாக நான் (வலமிருந்து இடம்)
கோபிநாத் வரும் முன் வெள்ளை தரையில் அழுக்கு தெரியாதவாறு அந்த தளத்தை இரண்டு மூன்று பேர் துடைத்தார்கள். காபி, பஜ்ஜி, போண்டா போன்ற நொறுக்கு தீனி கொடுத்த பின்னர், இயக்குனர் இருபக்கமும் வந்து தலைப்பை சிரித்த முகத்துடன் விளக்கினர். பின்னர் ஒரு அறையில் கோபிநாத்துக்கும் விளக்கிக்கொண்டிருந்தார்.

ஆறரை மணிக்கு தான் படப்பிடிப்பு ஆரமித்தது, விவாதம் ஆரமித்த சற்று நேரத்திலெல்லாம் மைகுக்காக சலசலப்பு ஏற்பட, படப்பிடிப்பு முடிவதற்குள் குறைந்தபட்சம் பதினைந்து முறையாவது சிரித்த முகத்துடனேயே கடிந்து கொண்டார் கோபிநாத், 'TVல பார்க்கும்போது அசிங்கமா தெரியும்க, ஏன் இப்படி மைகுக்குகாக அடிசுகறீங்க' , காலை ஒன்பது மணியிலிருந்து நின்றுக்கொண்டே இருக்கிறேன், நான் கோபப் பட்டேன் என்றால், விவாதம் செய்யும் மனநிலை போய்விடும், புரிஞ்சுகோங்க' என்று பல முறை சலிப்படைந்தார்'.

பங்கேற்ற பங்கேற்பாளர்களும் எங்கெங்கிருந்தோ வந்து பல மணி நேரம் காத்திருந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

கோபிநாத்துடன்
மொத்தம் நான்கு மணி நேரம் நடந்த படப்பிடிப்பு இரவு பத்தரை மணிக்கு முடிந்ததும் விறுவிறுப்பாக கைகொடுத்து விட்டு சென்றார் கோபிநாத், அடுத்த படப்பிடிப்புக்காக தயார் ஆகா சென்றார். அடுத்தது இரவு பதினோரு மணி முதல் விடியற்காலை மூன்று மணி வரை நடைபெறுமாம்.

இரண்டரை மாதத்திற்கு மூன்று நாள், நாள் ஒன்றுக்கு மூன்று தலைப்புகளைப் பற்றிய விவாதம் படப்பிடிப்பு செய்யப்படுகிறது.

ஆக, நாம் தொலைகாட்சியில் பளிச்சென, சிரித்த முகத்துடன் பார்க்கும் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா? நானா?வுக்கு பினால் பல இடுப்பு வலிகள், பல மணிநேரங்கள் நின்றுகொண்டிருக்கும் கடுகடுத்த கால்கள் பல பசித்த வயிர்கள், தூக்கத்தை எதிர்நோக்கி இருக்கும் பல கண்கள் இருந்துக் கொண்டே இருக்கின்றன.

நவீன சாதனங்கள் நம் வாழ்க்கையை இலகுவாக்குகிறதா? இல்லை அடிமையாக்குகிறதா? என்று இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. 19:00 மற்றும் 39:20 ஆவது நிமிடங்களில் பேசுகிறேன்.

நன்றி.



Blogger Widget

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

கனவில் ஓர் கோடை விடுமுறை...


ராசுவுக்கு முழு ஆண்டு பரீட்சை ஆரமித்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன...
அம்மா... என்னிக்கு மா கடைசி பரீட்சை? என்றான்... இன்னும் நான்கு பாடம் ஆன பிறகு என்றாள் அவன் அம்மா.

பரீட்சை முடிஞ்ச அன்னிக்கே நம்ம ஊருக்கு கிளம்பிடுவோம் தானே?
என்றான் ஆர்வமாக.. அதை பத்தி இப்போ என்ன...
இன்னும் நாலு நாள் இருக்கு அதுக்கு... 
நாளைய பரீட்சைக்கு இப்போ ஒழுங்கா படி என்றாள் சின்ன அதட்டலாக...

அழுக்கு தாடி.. அழுக்கு தாடி...
தொண்டு செய்து பழுத்த பழம்,
அழுக்கு தாடி மார்பில் விழும் என்று கத்த...

தப்பு தப்பா படிக்காத, ஒழுங்கா படி என்றாள் அவன் அம்மா.

அப்படின்னா சொல்லுங்க மா... பரிட்சை முடிஞ்ச அன்னிக்கே ஊருக்கு போவோம் தானே என கேட்டான் மீண்டும்... 

ஆமா.. இதோட பல தடவ கேட்டுட்டே இன்னிக்கு மட்டுமே...
பாடத்தில் கவனம் செலுத்தி படி, இன்னும் நாலு நாள்ல ஊருக்கு போகபோறோம் என்றாள்  அம்மா..

உற்சாகமான ராசு, வேகமாக படித்தான் 

தொண்டு செய்து பழுத்தபழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தைஎழும் .. குர்ர்ர்.. குர்ர்ர்.... (உற்சாகத்தில் சிறுத்தை ஆனான்)
அவர்தாம் பெரியார்
பார் அவர்தாம் பெரியார்.

இப்படியாக அடுத்த நான்கு நாளும் ஊருக்கு போவதை பற்றிய நினைப்புக்கு நடுவிலேயே பரிட்சைகளை முடித்தான்... 

கடைசி பரீட்சை முடிந்து வீட்டுக்கு வந்த உடன், அம்மா... போலாமா... எப்போ கிளம்ப போறோம்.. எப்போ கிளம்ப போறோம் என்று நச்ச்சரித்துக்கொண்டிருந்தான் ராசு... அப்பா வேலையிலிருந்து வந்தவுடன் கிளம்பவேண்டியதுதான் என்றாள் அவன் அம்மா... 

அப்படின்னா... அப்பா எத்தனை மணிக்கு வருவார் என்றான் மீண்டும்...
இதோ பாரு.. வெளிய போய்  உன் நண்பர்களோடு விளையாடு நானே கூப்படறேன் என்றாள் அம்மா...

'பீனெபீனிக்' 'பீனெமீனிக்' என்று  வண்டி ஹோரன் அடிப்பதுபோல சமிக்ஞை மூலம் தனது நண்பர்களை அழைத்தான். மூன்று, நான்கு வீடுகளிலிருந்து பதிலுக்கு 'பீனெபீனிக்' 'பீனெமீனிக்' என்று சத்தம் வந்தது... அனைவரும் வெளியே வர... சைக்கிள் டயர்,  குச்சி  எடுத்துக்கொண்டு  விளையாட கிளம்பினார்கள் .

மாலை ஏழு மணிக்கு ஓசூரிலிருந்து மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றனர். தங்கையுடன் ஜன்னல் இருக்கைக்கு சண்டை போட்டு, தங்கை விட்டுக் கொடுத்ததால் குஷியாகி நீயும் வேடிக்கை பாரு... என்று ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே தூங்கினான்.

காலை கண் முழித்தபோது பேருந்து தஞ்சை பேருந்து நிலையத்தில் இருந்தது... அப்பா... இன்னும் எவ்ளோ நேரம்.. என்று தூங்கிக்கொண்டிருந்த அப்பாவை எழுப்பினான்... சொல்லுப்பா.. இன்னும் எவ்ளோ நேரம்.... 
இன்னும் ஒரு மணிநேரம் என்றார் அவன் அப்பா... 
ஐ... இன்னும் ஒரு மணிநேரம் தானா .. ஜாலி... என்று குதுகலித்து திரும்ப தூங்கிவிட்டான்...

ருக்மணி குளம் தாண்டியது தான் தாமதம்... மன்னை வந்தாச்சு என்று குதூகலித்து ஆர்ப்பாட்டம் செய்துக்கொண்டே மாமா இல்லம் அடைந்தனர்... நாகைப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூரிலிருந்து மற்ற மாமா, பெரியம்மா அவர்களின் பசங்களெல்லாம் முழு ஆண்டு விடுமுறைக்காக அங்கு வந்திருந்தனர்... அடுத்த ஒரு மாதம் அவிழ்த்து விட்ட கழுதைதான் என்று ராசுவின் அம்மா அவனைப் பார்த்து சொல்ல... அவன்  ஏற்கனவே கொளுத்தும் வெயிலிலும் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தான்...

வீதியே அமர்க்களப் படும்படியாக அக்கம் பக்கத்து வீட்டு சிறுவர்கள் உட்பட ஒரு கூட்டமே சேர்ந்து ஐஸ் பாய்(கண்ணாமூச்சி), ஓட்டப்பந்தயம், பாண்டி, அந்தாக்ஷரி, திருடன் போலீஸ் மற்றும் அவரவர் ஊர்களில் தாம் விளையாடும் விளையாட்டுக்களை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்து புதிது  புதிதாக விளையாடி அன்பை பரிமாறிக்கொண்டு கோடை விடுமுறையை குதூகலமாக கழித்துக்கொண்டிருந்தனர்...

ஒரு மாதம் போனதே தெரியாமல் முடிந்துவிட்டது, இரண்டு நாட்களில் புது வகுப்பு தொடங்கவுள்ளது... அன்று மாலை மீண்டும் ஊருக்கு செல்ல வேண்டும்... நாளைக்கு போகலாம்.. நாளைக்கு போகலாம் என்று  அழுதுக்கொண்டே ஊருக்கு கிளம்பினான். ஊருக்கு வரும்போது நான் ஜன்னல் இருக்கைல உட்கார்ந்தேன் தானே இப்போ நீ உட்காரு என்று தங்கைக்கு இருக்கையை குடுத்துவிட்டு தூங்கிவிட்டான்.

'தூங்காதே தம்பி தூங்காதே, நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே.. தூங்கா...' என்று தனது கைப்பேசியில் Missed call வர... அரை தூக்கத்திலிருந்து 
எழுந்தவனுக்கு  ஒரு  கணம் ஒன்னும் புரியவில்லை... மீண்டும் 'தூங்' என்று ஆரமிப்பதர்க்கு முன்பே அழைப்பு Cut ஆக, எந்த நாதாரிடா அது... தூங்கும்போது Missed call குடுக்கறது என்று திட்டிக்கொண்டே இவன் அந்த எண்ணிற்கு அழைத்தான், 

Hello யாருங்க பேசறது? என்று கடுப்பாக...

'நான் தாம்பா... சந்தீப்... உன் மேனேஜர்.. இது என் புது number.. சரி... சனி, ஞாயிறு 
சேர்த்து மூணு நாள் Leaveல போயிருந்தியே..இனிக்கு வேலைக்கு வரத்தானே, என்று கேட்கத்தான் phone பண்ணேன்' என்றார்.  

Phone நான் பண்ணேன் சார்... நீங்க Missed call தான் குடுத்தீங்க... எல்லாம்  நேரத்துக்கு  வருவேன்.. இப்போ Bus ல இருக்கேன்.. நான் அப்றோம் 
கூப்புடறேன் என்று அழைப்பை துண்டித்தான்.

ச்சே.. காலங்கார்த்தால இவனுங்க வேற என்று அங்கலாயித்துக்கொண்டு...
அவ்வளவு நேரம் தான், தனது நான்காம் வகுப்பு முழு ஆண்டு லீவு பற்றி கனவு கண்டுகொண்டிருந்ததை உணர்ந்து... சோம்பல் முறித்துக் கொண்டே முன் இருக்கையில் கை வைத்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தான்.. பேருந்து கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது...

முன் இருக்கையில் ஒரு சிறுவன்..

அப்பா ஓசூர் எப்போ பா வரும்.. சொல்லுங்கப்பா..  ஓசூர்  எப்போ பா வரும் என்று தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்ப... இன்னும் ஒரு மணி நேரம் என்று சொன்னதை கேட்டு .. ஐ .. இன்னும் ஒரு மணி நேரம் தானா ஜாலி... என்று குஷியானத்தை கண்டு புன்முறுவல் செய்தான், ராஜு.

படம்: Sparkcrews.com
Blogger Widget