பறந்து விரிந்த இவ்வுலகில் எத்தனை எத்தனை நிலப்பரப்புகள்,எத்தனை எத்தனை இனங்கள், எத்தனை எத்தனை மொழிகள், எத்தனை எத்தனை கடவுள்கள், எத்தனை எத்தனை ஆச்சர்யங்கள்!
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு உயிரினமும்; பிற உயிரினமிடிருந்து தப்பித்து தான் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது, மனிதர்கள் உட்பட. தான் தான் வாழ்க்கையில் துயரப்பட்டுக் கொண்டிக்கிறோம் என்று நினைக்கும் ஒருவர் உலகின் பிற நிகழ்வுகளை ஒரு கணம் யோசித்துப் பார்த்தால், தாம் எவ்வளவு சுதந்திரமாகவும், இன்பமாகவும் வாழ்கிறோம் என்பது தெரியும்.
படித்தவர்கள் அதிகம் இல்லாத தம் கிராமத்தில், எப்படியாவது மிகவும் காத்திருந்து பெற்ற தம் குழந்தையை பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும் என்று, தம் குழந்தை பிறந்த நாள் முதல், வழக்கமாக செய்யும் பத்து மணிநேர வேலையையும் தாண்டி, பன்னிரண்டு மணிநேரம் வேலை செய்து; மீண்டும் இரவில் பகுதி நேர வேலைக்கு சென்று காசு சேர்த்து வைத்துவந்தனர் அந்த பெற்றோர். இப்படியாக மூன்று ஆண்டுகள் தமக்காக ஒரு பொருளும் வாங்கிக் கொள்ளாமல், கிழிந்த ஆடையை மீண்டும் மீண்டும் தைத்து உடுத்துதிக் கொண்டிருந்த அந்த மனைவி, அவ்வபோது மிதிவண்டியில் break சரியாக பிடிப்பதில்லை என்று கூறிய கணவனை, அதை சரி செய்து கொள்ளும்படி கூறினாள். அதெல்லாம் தேவை இல்லை, கவலை பட வேண்டாம் என்று தன மனைவியிடம் புன்முறுவலோடு கூறினான் அவள் கணவன்.
ஒரு வழியாக காலம் சுழன்று ஓட, தம் குழந்தையை பள்ளியில் சேர்க்கும் நாள் வந்தது, மிகவும் மகிழ்ச்சியாகவும், சற்று பயத்துடனும் முதல் நாள் தம் குழந்தையை பள்ளியில் சேர்க்க சென்றனர்... சேர்த்தும் விட்டனர். பள்ளி தொடங்கும் மணி சத்தம் கேட்ட பின்னும் அந்த சிறிய கட்டிடத்தையே புன்னகையுடனும், தம் குழந்தையின் எதிர் கால கனவுடனும் கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டே இருந்தனர், தம் குழந்தையை பள்ளியில் சேர்க்கும் அந்த நாளுக்காக தன் கணவன் பட்ட கஷ்டத்தை அவள் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில் தன் மனைவி குழந்தையை கணம் தவறாது பார்துக் கொண்டதை அவன் நினைத்துப்பார்த்தான்.
தம் குழந்தை நல்லபடியாக படித்து முடிக்கும் வரை கடினமாக உழைக்க வேண்டும் என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டும், தானும் முடிந்த வரை தன் கணவனுக்கு உதவ வேண்டும் என்று அவளும் மனதில் நினைத்துக்கொண்டே வீடு திரும்பினர். வீடு சென்றடைந்து ஒரு மணி நேரம் ஆனது. முதல் நாள் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதால் அரை நாள் விடுப்பில் இருந்த அவன், குழந்தையை பள்ளியில் சேர்த்த நிம்மதியில் சற்று நேரம் படுத்தான், அப்போதுதான் பல நாட்கள் கழித்து தன் வீட்டில் மாட்டியிருந்த குரான் படத்தை கவனித்தான், ஒரு புன்முறுவலுடன் இறைவனை வணங்கி, சற்று கண் மூடினான்.
ஒரு பத்து நிமிடம் தான் இருக்கும், பயங்கர கோஷங்களை எழுப்பிக்கொண்டு சர், சர் என ஏதோ வண்டி சத்தம் கேட்க, வீதியில் மக்கள் கூச்சலிட, என்ன நடக்கிறது என்று புரியாமல் கண் திறந்தான். அப்போதுதான் நிம்மதியாக தூங்க கண் மூடிய கணவனை எழுப்புவதா வேண்டாமா என்று தவித்துக் கொண்டிருந்த மனைவியை பதற்றத்துடன் எழுந்துப் பார்த்து, வீதிக்கு விரைந்தனர் இருவரும், தெருவெங்கும் மண் புழுதி, பள்ளியை நோக்கி அனைவரும் ஓடிக்கொண்டிருந்தனர், break பிடிக்காத மிதிவண்டியை வேகமாக மிதித்துக் கொண்டு இவனும் சென்றான். பள்ளிக்கு சென்றவர்களுக்கு பேரிடி விழுந்தது போலிருந்தது.
Mom... I want a new cycle... என் friends எல்லாம் first dayவே புது cycleல வந்திருக்காங்க என்று இரவு உணவு உண்ட பின் மகன் சொல்ல, சரி இந்த Sunday அப்பா கிட்ட சொல்லி வாங்கித் தரேன் என்றாள் அம்மா. மகிழ்ச்சியில் மகன் உறங்க சென்றவுடன், Pogo channelஇல் இருந்து செய்தி channelலுக்கு மாற்றினாள் அவள். நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் பள்ளிக் குழந்தைகளை கடத்தி சென்றனர் என்ற செய்தி ஓடிக்கொண்டிருந்தது. துப்பாக்கி முனையில் அவர்கள் குழந்தைகளை மிரட்டும் காட்சிகளை தீவிரவாதிகள் வெளியிட்ட காட்சியையும், குழந்தைகளை இழந்த பெற்றோர்களையும் மீண்டும் மீண்டும் காண்பித்துக் கொண்டிருந்தனர். தாய்க்கே உரிய பாசத்தில் அந்த மழலையர்களையும், குழந்தைகளையும் கண்டு கண்ணீர் வடித்துக்கொண்டே சட்டென சானலை அனைத்துவிட்டு தன் மகனை வழக்கத்தை விட இறுகக் கட்டிக் கொண்டு தூங்கினாள்,