-->

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

அமெரிக்க தமிழ் மாத இதழில் வெளியான எனது கட்டுரை

அமெரிக்காவில் கடந்த 23 ஆண்டுகளாக தென்றல் மாத இதழ் வெளியாகி வருகிறது.

குழந்தைகளுக்கான இரவுநேர கதைகளை சொல்லிவரும் எமது கதைநேரம் podcast பற்றிய கட்டுரையொன்றை கடந்த மாதம் எழுதி அனுப்பியிருந்தேன், இம்மாத (டிசம்பர் 2022) தென்றல் இதழில் அட்டைப்படத்துடன் அந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது. (பக்கம் 53)

புத்தக வடிவில் கட்டுரையைப் படிக்க (பக்கம் 53) -  https://bit.ly/ThendralMagazineDec2022

தென்றல் இதழின் இணையத்திலும் இக்கட்டுரையைப் படிக்கலாம், ஒளிவடிவிலும் கேட்கலாம் - https://bit.ly/KadhaiNeram-ThendralMagazine

சமயம் கிடைக்கும்போது படிக்கவும். மிக்க நன்றி.

Blogger Widget

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

கிடைத்துவிட்ட காணாமல் போன கதை சொல்லிகள்

காணாமல் போகும் கதை சொல்லிகள் என்று பத்து வருடங்களுக்கு முன்பு இந்த வலைதளத்தில் ஒரு பதிவு வெளியானது சிலருக்கு நினைவிருக்கலாம். பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த இணையத்தள   உபயோகமும், இன்று இருக்கும் உபயோகத்துக்கும் முடிச்சு போடவே முடியாத அளவுக்கு இமாலய வளர்ச்சி கண்டுள்ளது இணையத்தள உபயோகம். நினைத்தும் பார்த்திராத வகையில் இன்று மிக இயல்பாக அனைத்து விஷயங்களிலும் நம்முடன் பின்னிப்பிணைந்து இருக்கிறது இணையத்தளம். 

அதுவும், கடந்த ஆண்டு கொரோனா உயிர்கொல்லி நோயால் உலகமே தலைக்கீழ் ஆனபோது; பொதுவாக மென்பொருள் பொறியாளர்கள் மட்டும் Computer, Laptop வைத்துக்கொண்டு வீட்டில் இருந்து அவ்வப்போது வேலைபார்த்த வழக்கம் சென்று பொட்டு, பொடுசுகள் முதற்கொண்டு பள்ளிகளும், கல்லூரிகளும் என்று மொத்த உலகமும் இணையதளத்தின் வழியே இயங்க முடியும் என்பது இந்த சமயத்தில் புலனானது.

இப்படி இருக்கும் இந்த சமயத்தில், உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நம் வீட்டுடனும், குடும்பத்துடனும், நண்பர்களுடனும் நம்மை நொடிப்பொழுதில் இணைத்திடும் Video Call, Whatsapp Audio call என்பதை தாண்டி; பெரியவர்களும், குழந்தைகளும் YouTube, Netflix என்று தாம் நினைத்தும் பார்த்திராத வகையில் அசத்தலாக இவை அனைத்தையும் கற்றுக்கொண்டு உபயோகித்து வருகின்றனர். 

முன்பு இருந்ததைப்போல வழக்கமான Sun TV, Vijay TV என்று மட்டும் இல்லாமல் தனி நபர்களின் திறமையை பிறருடன் பகிர்ந்துக்கொள்ளும் வகையில் உள்ள YouTube சேல்களும், Prime Video, Hotstar போன்ற OTT தளங்களில் அழுகை, குடும்பத்தை கெடுக்கும் மாமியார் மருமகள் கதைகள் என்று தொலைக்காட்சி தொடங்கியது முதல் நானும் நாடகம் எடுக்கிறேன் என்ற பெயரில் கொலையாய் கொன்றது போன்ற கேவலமான கதைகள் இல்லாமல் பல அற்புதமான கதைகளும், நம் நாட்டு தொடர்கள் மட்டும் இன்றி உலகின் பல பகுதிகளை சேர்ந்த திரைப்படங்களையும் இணைய தொடர்களையும் எப்போது வேண்டுமானாலும் தமது நேரத்துக்கேற்ப பார்க்கும் வகையில் மக்களுக்கு பொழுதுபோக்குக்கு குறைவே இல்லை என்னும் வகையில் வளர்ந்திருக்கிறது இணையத்தளம்.

அப்படி இருக்க, காணாமல் போன கதை சொல்லிகளும் இந்த இணையத்தின் வழியே கிடைக்க ஆரமித்திருக்கின்றனர்! 

எனது குழந்தை பருவத்தில் நானும் என் தங்கையும் அப்பாவையும், அம்மாவையும் தினமும் கதை சொல்லச் சொல்லிக் கேட்டு, அவர்களும் விடாமல் சொல்லும் கதைகளை கேட்டுக்கொண்டே எப்போது தூங்குவோம் என்றே தெரியாமல் தூங்குவதும், ராட்ஷச இயந்திரங்களில் நாள் முழுதும் வேலை பார்த்துவிட்டு வந்த களைப்பிலும் விடாமல் கதை சொல்லும் சில நாட்களில் கதை சொல்லும்போதே களைப்பில் எனக்கு முன்பு அப்பா தூங்கிவிடுவதும் மலரும் நினைவுகள்.

இது மட்டும் இன்றி, எங்கள் வீதியில் இருக்கும் சிறுவர்கள் அனைவரும் ஒன்றாக விளையாடிவிட்டு, வீட்டுக்கு போகும் முன்பு, கடைசி வீட்டில் இருந்த திண்ணை முன்பு சாலையில் ஒரு ஏழு மணிவாக்கில் உட்கார்ந்துக்கொள்வோம், எங்கள் தெருவில் வசித்து வந்த "முதல் அத்தையிடம்" கதை கேட்போம் (எங்கள் தெருவின் தொடக்கத்தில் உள்ள முதல் வீட்டில் அவர் வசித்து வந்ததால் அவரை நாங்கள் அனைவரும் முதல் அத்தை என்று கூப்பிடுவோம்). அவர் தம் கிராமத்து கதைகளை எங்களுக்கு சொல்வார், சில நாட்கள் சட்டென்று சில நண்பர்கள் பேய்க் கதை சொல்லச் சொல்லி கேட்டு முதல் அத்தையும் பேய் கதை சொல்வார்கள், நாங்கள் அனைவரும் பயம் ஏற்படாமல் இருக்க மேலும் நெருக்கமாக உட்கார்ந்துக்கொண்டு கதை முடிந்ததும் தடதடவென்று வீட்டுக்கு ஓடிவிடுவோம்! மேலும்  எங்கள் ஓசூரிலேயே பலரிடம் கதை கேட்ட அனுபவமும் இருக்கிறது.

இப்படியாக அப்போதெல்லாம் நம் வீதியில் வசித்த யாரிடம் வேண்டுமானாலும் கதை கேட்கலாம், அவர்களும் பிரியத்துடன் கதை சொல்வார்கள். இதன்பின் அதை எல்லாம் கெடுத்துவிட்ட தொலைக்காட்சி பெட்டியும், காணாமல் போன திண்ணைகளும், காணாமல் போன கதை சொல்லிகளும் என்று நம் கருத்துக்களத்திலேயே சில பதிவுகளை முன்பு படித்திருப்பீர்கள். 

ஆனால் இன்று மீண்டும் இந்த கதை சொல்லிகளுக்கு இந்த இணையதளம் உயிர் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது, நம் வீட்டில் நமது குழந்தைகளுக்கு மட்டுமே கதை சொல்லமுடியும் என்ற நிலை சென்று இன்று நாம் இருந்த இடத்திலிருந்தே உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு கதை சொல்லி, அவர்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் அருமையான வாய்ப்பை பயன் படுத்தி சிலர் இன்று கதை சொல்ல ஆரமித்துள்ளனர். அதில் நானும் ஒருவனாக இருந்து என் தங்கைகளின் குழந்தைகளுக்கு, அக்கா குழந்தைகளுக்கு, அண்ணாவின் குழந்தைகளுக்கு என்று ஆரமித்து பின்னர் எனது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆரமித்து கதை கேட்கும் ஆர்வம் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் என்று இணையத்தில் பகிர்ந்துகொண்டுள்ளேன். இப்போதெல்லாம் இரவு பத்து மணிக்குள் நான் கதை சொல்லி இணைப்பை அனுப்பவில்லை என்றால் என் தங்கை குழந்தை அவனாகவே Whatsappஇல் Voice Message அனுப்பிவிடுகிறான்!

இந்த கதைகள் சொல்லும்போதெல்லாம் நான் சிறுவனாக இருந்த சமயத்தில் ஆர்வமாக கடைக்கு சென்று முல்லா நஸ்ருதின், தெனாலிராமன் கதைப் புத்தகங்கள் வாங்கி குதூகலத்துடன் படித்ததும், சிறுவர்மலர், வார மலர் (திண்ணை பகுதி), விகடன் (செழியனின் உலக சினிமா), குமுதம் என்று ஒரு புத்தகம் விடாமலும்; கல்லூரிச் சமயத்தில் அரசாங்க நூலகமும், Luz கார்னரில் உள்ள "ஸ்ரீ கோபால கிருஷ்ண கோகலே" அவர்களால் திறந்து வைக்கப்பட்ட Ranade நூலகத்திலும் என்று நல்ல கதைகளை தேடித்தேடிப் படித்ததும் தான் நினைவுக்கு வருகிறது.

இதுதான் எனது கதை நேரத்தின் இணைப்பு - https://bit.ly/KadhaiNeram-BhargavKesavan 

நான் சொல்லும் கதை மட்டும் இன்றி மேலும் பலர் ஆர்வமாக கதைகள் சொல்லி வருகிறார்கள், Spotify என்ற இலவச செயலியை தங்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்துகொண்டு இப்போதே கேட்க ஆரமிக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் இன்றி நீங்களும் உங்களுக்கு விருப்பமான கதைகளை கேட்டுக்கொண்டே உங்கள் மழலைப் பருவத்து நினைவலைகளுக்கு சென்றுவாருங்கள்.

 
 
 
 


தங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவிடுங்கள். அடுத்தப் பதிவில் விரைவில் சந்திப்போம், நன்றி.
Blogger Widget

வியாழன், 9 ஏப்ரல், 2020

கூடாரத்தில் புகுந்த ஒட்டகம் நாம்!

மூன்று மாதங்களுக்கு முன் நாம் நினைத்தே பார்த்திராத சம்பவங்கள் இந்த உலகத்தில் இப்போது  நடந்துக்கொண்டிருக்குறது. இது ஏன் ஆரம்பித்தது, எப்படி ஆரம்பித்தது, இதற்கு தீர்வு காண்பது எப்படி என்பதை எல்லாம் நாம் ஆராயப்போவதில்லை. ஆனால், கடந்த மூன்று மாதங்களில் உலகின் ஒட்டுமொத்த பகுதியுமே ஸ்தம்பித்து நிற்கிறது என்பதை மறுக்கமுடியாது.

உலகிலேயே மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நமது பாரததேசம், முதன்முறையாக இப்படி பல நாட்களுக்கு வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறது. பகுத்தறிவு வாதிகளும், மெத்த படித்த மேதாவிகளும் பலரைக் கொண்ட நாடு என்று பறைசாற்றிக்கொண்ட நாடும், உலகின் மற்ற நாடுகளில் பிரச்சனை எழும்போதெல்லாம் (தானாகவோ அல்லது அவர்கள் ஏற்படுத்தியோ) தனது கழுகு மூக்கை நுழைத்துக்கொண்டு "அமைதியை" நிலைநாட்டுகிறேன் என்று அவர்கள் மேல் "போர்" புரிந்து அனைவரையும் அடக்கியாண்டு வந்த அமெரிக்காவெல்லாம் கடந்த மூன்று மாதங்களாக உலக மக்கள் முன் சந்தி சிரிக்க நின்று கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

கொடுமையான தொற்றுநோய்ப் பரவிக்கொண்டிருக்கும் இந்த மூன்று மாதகாலத்தில், படிப்புக்கும் அறிவுக்கும் சற்றும் சம்மந்தம் இல்லை என்று மிகத் தெளிவாக அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகள் நிரூபணம் செய்துக்கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் அனுபவத்தின் மூலம் பாடம் கற்ற மக்களை அதிகமாகக் கொண்ட நாம் சிறந்தவர்களாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறோம். பொது இடங்களுக்கு செல்லவேண்டாம், கூட்டம் கூடவேண்டாம், அனாவசியமாக வெளியே செல்லவேண்டாம் என்றும், இருபத்தியொரு நாட்களுக்கு வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று ஊரடங்கு பிறப்பித்தவுடன் நூற்று முப்பது கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நமது நாடு ஒரு மனிதனின் கட்டளைக்குட்பட்டு, அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துக்கொண்டு வீட்டிலேயே இருப்பது என்பது, யார் ஏற்க மறுத்தாலும் இது மிகப்பெரிய சாதனை தான். இப்படி இருந்தால் தான் நோய் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர இயலும் என்ற விஷயத்தைப் புரிந்துக்கொண்டு இருக்கின்றோம். முப்பது பேர் இருக்கும் ஒரு வகுப்பிலேயே ஆசிரியர் சொல்வதை கேட்காமல் திமிராக இருக்கும் மூன்று, நான்கு பேர்களைப்போல சில முட்டாள்கள் தேவையின்றி வெளியே கும்பல் கும்பலாக சுற்றுவதையும் பார்க்கத்தான் செய்கிறோம்.

ஆனால் வெறும் முப்பத்து மூன்று கோடி மட்டுமே ஜனத்தொகை கொண்டு, நிலப்பரப்பில் நம் நாட்டை விட மூன்று மடங்கு பெரிதாக உள்ள அமெரிக்காவோ, திமிராகவும், ஆராய்ந்துப்பார்க்கும் அறிவில்லாமலும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்காமலும், இதுத் தொற்றுநோயே இல்லை என்று தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு இன்று அம்போ என்ற கதியில் நிற்கிறது! கண்கெட்ட பிறகு சூரியனை வணங்கியவனைப்போல பதினாறாயிரத்துக்கும் மேல் (இந்தப் பதிவு எழுதும்போது 16,246, எழுதி முடிப்பதற்குள் 16,444!!) தம் மக்களை இந்தத் தொற்றுநோய்க்கு பலிகொடுத்தப்பின் ஆங்காங்கே சில மாநிலங்களில் மேம்போக்காக ஊரடங்கு பிறப்பித்துக்கொண்டிருக்கிறது. (முழு ஊரடங்கு பிறப்பிக்காததற்கு இவர்கள் சொல்லும் காரணம், இவர்கள் சர்வாதிகாரிகள் இல்லையாம் மக்களை முடக்கி வைக்க..! ஆம், சர்வாதிகாரிகள் இல்லை, வெறும் முட்டாள்கள் தான் போலும்!)

இப்படி ஐரோப்பியா, எழுபத்தியாறு நாட்களுக்கு சீனாவின் சில பகுதிகள், இந்தியா என்று உலகமே முடங்கிக்கிடக்கும் இந்த வேளையில் தான், இந்த உலகத்தின் முதல் உரிமையாளர்களும் இயற்கை வாசிகளுமான விலங்கினங்கள், பறவையினங்கள், மீன்கள் என்று அனைத்தும் பயமில்லாமல் உரிமையாக வெளியே வந்து உலகைப் பார்க்கின்றன! ஆயிரம், நூறு ஆண்டுகளாக தாம் வசித்து பராமரித்து வந்த தங்கள் உலகம் எப்படி இருக்கிறது என்று பார்க்க, மனிதனிடம் இருந்து மீதி இருக்கும் சொற்ப காடுகளிலிருந்து வெளியே வந்துப் பார்க்கின்றன! மூன்றே மாதத்தில், மாசற்ற இத்தாலியின் வெனிசு நதிகளில் டால்பின் மீன்களும், ஜெர்மனி மற்றும் பிரிட்டனில் கரடியும், ஜப்பானில் மான்களும் பல வருடங்களுக்கு பிறகு சுதந்திரமாக வெளியே வந்துள்ளதை பார்த்து தம் நாட்டில் இவையெல்லாம் இருக்கின்றனவா என்று பிரமிக்கும் நிலைக்கு மக்கள் வியப்படைந்துள்ளனர்!

அந்த விலங்கினங்கள், தாம் வசித்து வந்த எழில்மிகு இந்த பூவுலகை, எங்கு பார்த்தாலும் புகைப் படிந்த இடமாகவும், குப்பைக் கூடமாகவும், நீர் வற்றிய வறண்ட பூமியாகவும், இயற்கைக் கொடுத்த கொடையான பிராணவாயுவையே சுதந்திரமாக சுவாசிக்க முடியாமல் முகமூடி போட்டுக்கொண்டும், முக்காடு போட்டுக்கொண்டும் சுவாசிக்கும் அளவுக்கு சில நகரங்களையும் (விரைவில் பல நகரங்கள்!), சில நாடுகளையும் மாற்றிவிட்ட பொறுப்பற்ற, கேடுகெட்ட சுயநல குடித்தனக்காரர்களாக இருப்பார்கள் என்று சற்றும் எதிர்பாராதவையாக இந்த உலகை வினோதமாக பார்த்துக்கொண்டிருக்கின்றன!

உலகின் மிகப்பெரிய உயிரினமான திமிங்கலம், தன் வசிப்பிடமான நடுக்கடலில் உண்ண மீன்கள் இன்றி, பெரிய கப்பல்களில் ராட்சத போக்லைன் மூலம் ஒரே வலை விரிப்பில் ஆயிரக்கணக்கான மீன்களை இயற்கை வாசிகளான திமிங்கலம், சுறா மற்றும் ஒவ்வொரு மீனையும் சார்ந்திருக்கும் வேறு மீன்களிடமிருந்து கொள்ளையடித்து செல்லும் அளவுக்கு கொடூரர்களாக மக்களையும்; தேவைக்காக, தேவையான போது மட்டும் உணவைத் தேடிச் சென்றும், தன் கூட்டத்துடன் பகிர்ந்து உண்ணும் விலங்கினங்கள், ஊரடங்கு என்றதும் அடித்து பிடித்து தேவையானது, தேவையில்லாதது என்று கண்டதையெல்லாம் வாங்கி அதை தேவையானவர்களுக்கு கிடைக்காதவாறு செய்த மனிதக் கூட்டத்தை வினோதமாக பார்த்துக்கொண்டே சுற்றித்திரிகின்றன!


பல ஆண்டுகளுக்கு பிறகு மாசற்ற காற்றும், கீங் கீங் என்று வாகன சத்தத்தால் ஏற்படும் ஒலி மாசுகளும் இல்லாமல் புள்ளினங்கள் பறப்பதையும், மனித மந்தைகளைப்பற்றி கவலையின்றி   விளையாடிக்கொண்டே பரந்துத் திரிவதை வீட்டின் உள்ளேயே நின்றுகொண்டு சாளரம் வழியே வெறித்து பார்க்கும்போது தான்.., இப்படி விலங்கினங்கள், பறவையினங்கள், மீன்கள் என்று அனைத்து ஜீவராசிகளுடனும் சேர்ந்து இந்த உலகில் வாழாமல் இவைகளை அச்சப்படுத்தும் விதத்தில் இயற்கையின் கனிம வளங்களை தோண்டி எடுத்து, அதற்காக வேறு நாடுகளுடன் போர் புரிந்து, அடுத்த உயிர்களைக் கொன்று குவித்து, தேவைக்கு அதிகமாக பூமியைத்தோண்டி அந்த நிலப்பரப்பின் தட்பவெட்பமே அதனால் அதிகரிக்க காரணமாகி, அதனால் காட்டுத்தீயை ஏற்படுத்தி கோடிக்கணக்கான; என்ன நடக்கிறது என்று தெரிந்துக்கொள்ள முடியாத, தன் குமுறல்களை வாய்விட்டுப் பேசத்தெரியாத வாயில்லா ஜீவன்கள் எரிந்து சாம்பலாவதற்கு காரணமாகவும், இதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் ஆடை ஆபரணங்களுக்காக காட்டினுள் சென்று மிருகங்களை வேட்டையாடுவதும், தந்தங்களுக்காக இயற்கையின் கொடையான யானையையே கொல்லும்  அளவுக்கு மனசாட்சியில்லாத ஜந்துவாகவும், மருத்துவ குணத்துக்காக என்று பொய்யை சொல்லி பல மிருகங்களையும், வெள்ளை காண்டாமிருகம் என்ற ஒரு இனத்தையே இந்த உலகத்திலிருந்து அழித்து என்று என்னென்ன கொடுமைகளை இந்த இயற்கை பூமிக்கு செய்துக்  கொண்டிருக்கிறோம்?

திங்காதடா என்று சொன்ன ஒரு ஆப்பிள் பழத்தை தின்று தொலைத்த ஆதாமாலோ என்னமோ, இந்த உலகில் மனித வகை வந்த பிறகு, தம்முடன் இனைந்து வாழ இந்த பூமியாகிய தமது கூடாரத்தில் மனிதராகிய நமக்கு இடம் கொடுத்த விலங்கினங்களையும் காடுகளையும் மெல்ல மெல்ல அபகரித்து, ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடி பின்னர் அவைகளையே இல்லாமல் செய்துக்கொண்டிருக்கும் நாம், எப்படியும் சில மாதங்களில் முன்புபோல வெளியே நடமாட ஆரமித்தபின்னர் இயற்கை அளித்த கொடைக்கு நன்றியுடன் நடந்துக்கொள்ள முயற்சிப்போம்!
Blogger Widget

புதன், 17 ஜூலை, 2019

இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள்
பொழுதுபோக்கைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக வார இறுதியிலும், விடுமுறை நாட்களிலும் இங்கே என்ன செய்வார்கள், எங்கே செல்வார்கள் என்பதைப் பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

நேரடியாக இந்த அத்தியாயத்தில் நுழைவதற்கு முன், "வேலை முடிஞ்சா கிளம்பு" என்ற அத்தியாயத்தில் அமெரிக்காவில் வேலை பார்க்குமிடம், அங்கே இருக்கும் வழக்கம் பற்றி விரிவான தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அத்தியாயத்தை படித்துவிட்டு இதை தொடர்ந்து படிக்கவும்.

நம் நாட்டில் ஆண்டுக்கு இருபத்து இரண்டு முதல் இருபத்து ஐந்து பண்டிகைகளும், அதில் மாநிலத்திற்கு ஏற்ப சில வேறுபாடுகளுடன் பொது விடுமுறை கொடுக்கப்படும். அமெரிக்காவில் நம் அளவுக்கு பண்டிகைகளெல்லாம் கிடையாது என்பதை "அமெரிக்கப் பண்டிகைகள்" என்ற அத்தியாயத்தில் விரிவாக பார்த்தோம். அப்படி ஒவ்வொரு விடுமுறைக்கு முதல் நாள், "Early dismissal" என்று ஒரு வழக்கம் உண்டு, விடுமுறை தினத்துக்கு முந்தைய தினம், மதியம் ஒருமணிக்கே வீட்டுக்கு செல்லலாம், இது எதற்காக என்றால், விடுமுறையை ஒட்டி வெளியே செல்பவர்களுக்கு சௌகரியமாக இருப்பதற்காக கொண்டு வந்த வழக்கம். சில அலுவலகங்களில் இந்த பழக்கம் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

வார இறுதியில் மற்றும் மூன்று அல்லது நான்கு நாட்கள் என்று தொடர்ந்து விடுமுறை (Long weekend) வந்தால் கோடைக் காலத்தில் பெரும்பான்மை மக்கள் மற்ற மாநிலங்கள் மற்றும் தத்தம் மாநிலத்திலேயே இருக்கும் தேசிய மற்றும் மாநில பூங்காக்கள் மற்றும் வனப்பகுதிக்கு சென்றுவிடுவார்கள். இங்கே விடுமுறையை கழிக்க மக்கள் தொலைக்காட்சி முன்பு உட்காருவதில்லை என்பது வெளியே சென்றுபார்த்தால் தெரியும். பெரும்பாலும் அந்த தொடர் விடுமுறைக்கு முதல் நாள் சாலைகள் அலைகடலென வாகனங்களைக் கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கும், எவ்வளவு நெரிசல் இருந்தாலும் வாகனங்களில் ஒருவர் பின்னர் ஒருவராகத்தான் செல்வர். 

இப்படி செல்லும் வாகனங்களில் முதல் முறை நான் வெளியே சென்ற போது ஒவ்வொரு வாகனங்களின் பின்னர் "trailer" என்று அழைக்கப்படும் வண்டியுடனான இணைப்பில், சைக்கிள், moterbike, Dirt Bike மற்றும் AVT (சேற்றில் ஓடிக்கொண்டு போகும் வண்டிகள்), படகு, Kayak, குதிரைகள் - குதிரையை பத்திரமாக கொண்டு செல்ல பேருந்து போல தங்கள் காரின் பின்பு ஒரு இணைப்பு இருக்கும், குதிரையை மலைப்பகுதிக்கு கொண்டு சென்று ஓட்டி மகிழ்வர். இப்படி பல தரப்பட்ட மக்களும் தங்களுக்கு விருப்பம் போல பொழுதைக்கழிக்க அதற்கு ஏற்ற இடங்களுக்கு செல்வர். 

இது தவிர RV எனப்படும் Recreation Vehicle என்று ஒரு வண்டி உண்டு, அத்த வண்டியிலேயே படுக்கை, சமையல் என்று எல்லா வசதியும் உண்டு. கழுகு என்ற 1981ஆம் ஆண்டு  வெளிவந்த ரஜினி படத்தில் தான் இதை முதல் முறை பார்த்தேன், அவ்வளவு ஆச்சர்யமாக இருந்தது அதை பார்த்தபோது. இங்கே அந்த வண்டி நூற்றில் ஐந்து பேரிடம் இருக்கும் (ஒரு கணக்கு தான்!), சிறிய பெரிய என்று பல வடிவில் இருக்கும் அந்த வண்டியின் முக்கியத்துவம் என்னவென்றால், அது வைத்திருப்பவர்கள் வெளியில் தங்க தேவை இல்லை, RV parking station என்றே தனி இடம் உண்டு, அவர்கள் அங்கே நாள் கணக்கில் வண்டியை நிறுத்தி விட்டு (தினக் கட்டணம் $10 முதல் $30 வரை இருக்கும்), அந்த வண்டியின் பின்னர் அவர்களின் வாகனத்தை trailerஆக கொண்டு வந்திருப்பார்கள், அருகில் இருக்கும் இடங்களை அதில் சுற்றி பார்த்துவிட்டு அடுத்த மாநிலத்துக்கு செல்ல மீண்டும் பெரிய வாகனத்தை கிளப்பிக்கொண்டு செல்வார்கள். இப்படி இந்த வண்டியில் தொடர்ந்து மாதக் கணக்கில் சுற்றுவோர். பனி ஓய்வு பெற்றவர்கள், சில ஆண்டுகள் வேலை செய்து சேமித்து வைத்துவிட்டு மூன்று அல்லது நான்கு மாதங்கள் வெளியே சுற்றி பார்ப்பவர்கள் என்று இதற்கு ஒரு தனி மக்கள் தொகையே உண்டு!

முதல் முதலில் ஒரு மாநில பூங்காவிற்கு செல்வதற்கு முன், "அட.. என்னடா இது சின்ன பசங்க மாதிரி பார்க்குக்குலாம் போயிகிட்டு" என்று நினைத்தேன். எனக்கு தெரிந்த பூங்காவெல்லாம் எங்கள் ஓசூரில் கோட்டை மாரியம்மன் கோவில் பக்கத்தில் இருக்கும் பூங்காவும், சென்னையில் சிறு வயதில் அப்பா அம்மா அழைத்து சென்றபோது பார்த்த பாம்புப் பண்ணையும், VGPயும், மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வராவ் பூங்காவும், தஞ்சை பெரியகோவில் எதிரில் இருந்த பூங்காவும் மட்டும் தான். இப்படி இரண்டு ஊஞ்சல், ஒரு சறுக்குமரம், காலாற நடக்க கொஞ்சம் இடம் இருக்கும் என்று தப்புக்கணக்கு போட்டிருந்தது அங்கு சென்ற பின்னர் தான் புரிந்தது!

அமெரிக்காவில் இருக்கும் தேசிய பூங்காக்களின் மொத்த பரப்பளவு மட்டும் மூன்று இங்கிலாந்தை கொள்ளும்!!! அவ்வளவு விசாலமான இடங்களாக தான் ஒவ்வொரு பூங்காக்களும் இருக்கும். இது வெறும் தேசிய பூங்காக்கள் இடம் மட்டும், இதை தவிர மாநிலப் பூங்காக்கள், உள்ளூர் பூங்காக்கள் என வகைவகையான இயற்கை எழிலூட்டும் பூங்காக்கள் உள்ளன. முதல் அத்தியாயத்திலே சொன்னதுபோல இங்கே ஐம்பது மாநிலங்கள் உள்ளன, ஒரு கோடியிலிருந்து இன்னுரு கோடிக்கு 3,500 மைல்கள் (5,650 கிலோமீட்டர்), இது வடகிழக்கிலிருந்து மேற்கு திசைக்கு செல்ல மட்டுமே! இப்படி மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடு என்பதால், ஒவ்வொரு திசையிலிருக்கும் பூங்காவுக்கு சில சிறப்பம்சங்கள் உண்டு. அதுவும், குளிர்காலத்தில் பனிக்கட்டிகளால் மூடப்பட்ட மலைகளைக் கொண்ட பூங்காவைப் கோடைகாலத்தில் பார்த்தால் அப்படியே மாறுபட்டு தோன்றும், அதையே இலையுதிர் காலத்தில் பார்த்தால் சொர்கத்துக்கு செல்லும் பாதையை ஒருமுறை எட்டிப்பார்த்துவிட்டு வந்தது போல வண்ணமயமாக இருக்கும், பனிக்காலம் ஆரமிப்பதற்கு முன்னர் சென்று பார்த்தல் மொட்டை மரங்களாக காட்சியளிக்கும்.இப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரு பூங்காவைப் பார்க்கலாம், ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புது அனுபவத்தைக் கொடுக்க காத்துக்கொண்டிருக்கும். நூற்றுக்கணக்கான மையில்கள் ஓடும் கணக்கில்லா ஆறுகளும், கோடிக்கணக்கான ஏக்கரில் பராமரிக்கப்பட்டு வரும் வனங்களும், அதில் இலட்சக்கணக்கில் காலத்துக்கு ஏற்ப இனப்பெருக்கத்துக்கு வந்து முட்டையிட்டு குஞ்சுபொரிக்கும் பறவைகளும், விலங்குகளும் என்று அனைத்தும் மிக சிரத்தையுடன் பராமரிக்கின்றனர். தேசிய பூங்காவிற்கென்று தனியே வரவு செலவு திட்டம் தீட்டப்பட்டு அதற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. மாநில அரசுகள் மாநிலப் பூங்காவுக்கு நிதி ஒதுக்கி பாதுகாத்து வருகிறது. 

ஒரு மாநில பூங்காவில் ஒரு நாள் முழுதும் செலவழிக்கும் அளவுக்கு பல விஷயங்கள் உண்டு. முன்பே சொன்னதுபோல ஒவ்வொரு பூங்காவுக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. பெரும்பாலான பூங்காக்களில் எழில்மிகு ஏரிகள் இருக்கும் - அதில் தண்ணீரும் இருக்கும்! ஆம் தண்ணீருடன் ஏரியையோ, குளத்தையோ நம் தாய்த் தமிழ்நாட்டில் பார்த்து பல வருடங்கள் ஆகின்றன. ஆனால், இங்கே எங்கு சென்றாலும் தண்ணீர், குளம், ஆறு, ஏறி, நீர் வீழ்ச்சி என்று எண்ணற்ற நீர்நிலைகள். ஒவ்வொன்றையும் பூங்கா ஊழியர்களும், அதைக் கண்டும், விளையாடியும், படகோட்டியும், நீந்தியும், எண்ணற்ற நீர் விளையாட்டுகளை விளையாடியும் மகிழும் பலதரப்பட்ட மக்களும் அவ்வளவு பொறுப்புடன் உபயோகப்படுத்தி குப்பையாகாமல் பார்த்துக்கொள்கின்றனர். எவ்வளவு பெரிய பூங்காவாக இருந்தாலும் சாப்பிடுவதற்கு என்று எண்ணற்ற மர மேஜைகளும், Barbeque (திறந்த வெளியில் உணவு சமைக்க உதவும் கருவி - அதற்கு கரி மற்றும் எரிபொருள் நாம் கொண்டு செல்லவேண்டும்), குடி நீர் குழாய், கழிப்பிட வசதி என்று ஒவ்வொன்றும் அணைத்து பூங்காக்களிலும் இருக்கும்.பெரும்பாலான பூங்காக்களுக்கு தங்கள் வளர்ப்பு நாய்குட்டிகளையும் அழைத்துக்கொண்டு தான் செல்வார்கள். அப்படி அழைத்து வரும் செல்லப் பிராணிகள் மலம் கழித்தாலும், அதை கொண்டு வந்தவர்களே அப்புறப்படுத்திவிடுவார்கள். அதற்காகவும் ஒரு கறுப்புப் கவர் ஒன்று பெரும்பாலான இடத்தில் வைத்திருப்பார்கள். யாரும் சொல்ல வேண்டியதெல்லாம் இல்லை, அவர்களே சுத்தம் செய்திவிடுவார்கள்.
மாநில பூங்காக்களில் $5 முதல் $10 வரையும், தேசிய பூங்காக்களில் $15 முதல் $35 வரை நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும், இது மட்டும் தான் செலவு. வண்டியை நிறுத்துவதற்கும் வேறு எதற்கும் கட்டணம் கிடையாது. குறிப்பாக இங்கே எங்கும் கழிப்பிடத்துக்கு பணம் வசூலிப்பது கிடையாது, ஆனால் அவ்வளவு சுத்தமாக இருக்கும். ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஓகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தபோது ஐந்து ரூபாய் கட்டணம் கொடுத்து சிறுநீர் கழிக்க உள்ளே நுழைந்து, அடுத்த நொடியே மூக்கை பொத்திக்கொண்டு வெளியே ஓடி வந்துவிட்டேன், கேவலம்! சுற்றுலா செல்லும் இடத்தை எப்படி வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு, அது மட்டுமா? நம் நாடு முழுவதும் கூடாததற்கு தான் எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றது! சரி, இங்கே வருவோம்.

நெவாடா என்னும் மாநிலத்தில் ஒரு பூங்காவிற்கு சென்றிருந்தேன், அங்கே நுழைவு கட்டணம் பெற்றுக்கொள்வதற்கு ஆள் கிடையாது, பூங்காவிற்குள் நுழையுமிடத்தில் ஒரு அஞ்சல் பெட்டி ஒன்று இருக்கும், அதனருகில் ஒரு படிவம் இருக்கும், அதில் நம் வண்டியின் எண், நமது பெயர் மற்றும் இதர விபரங்களை பூர்த்தி செய்துவிட்டு, $10 பணத்தை அந்த படிவத்தில் வைத்து ஒரு அஞ்சல் உரையில் வைத்து (எல்லாம் அங்கேயே வைத்திருப்பார்கள்!) அந்த அஞ்சல் பெட்டியில் போடவேண்டும், நமக்கு ரசீது போல ஒரு சிறு பகுதி அந்த படிவத்திலிருந்து கிழித்து நம் வண்டியில் கண்ணாடியின் அருகில் வைத்துவிட வேண்டும், பூங்காவினுள் வண்டியை நிறுத்திவிட்டு சுற்றிப்பார்க்க செல்லும்போது ஒரு வேளை காவலரோ அல்லது பூங்கா ஊழியரோ வண்டியருகே வந்தால் நாம் நுழைவு கட்டணம் செலுத்தியதற்கு இது அத்தாட்சியாக இருக்கும். அனைவரும் இதை கடைபிடித்து தான் செல்வார்கள், மக்களின் மேலும் அப்படி ஒரு நம்பிக்கை!!

Death Valley National Park என்ற பூங்காவிற்கு சென்ற ஆண்டு சென்ற பொது, வேற்று கிரஹத்தில் இருந்ததை போலவும், வேற்று கிரஹத்தில் வண்டி ஓட்டிக்கொண்டு இருப்பதுபோலவும் பல முறை தோன்றியது! அப்படி ஒரு நிசப்தமான இடம், அந்த பூங்காவின் பரப்பளவு மட்டும் ஐந்து கோவா மாநிலத்தை கொள்ளும்!! கேரளாவின் மொத்தப் பரப்பளவில் பாதி பகுதி இந்த ஒரு பூங்காவின் பரப்பளவு மட்டும்! இதனுள் உப்புத்தரையும் உண்டு, மணல் மேடுகளைக் கொண்ட பாலைவனமும் உண்டு, கனிம வளங்களை கொண்ட மொட்டை மலைகளும், பாறைகளும் உண்டு, காற்று தள்ளிக்கொண்டு போகும் பாறாங்கல்லும் உண்டு! இப்படி மாநிலத்துக்கு குறைந்தது ஐந்து பெரிய்ய பூங்காக்களாவது நிச்சயம் இருக்கும். தேசிய பூங்காக்களின் எண்ணிக்கை மட்டும் 112. இதன் பரப்பளவுதான் மூன்று இங்கிலாந்தைக் கொள்ளும்!தேசிய பூங்காவுக்கு, மாநில பூங்காவுக்கு ஆண்டு சந்தா கூட செலுத்தி "pass" பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஆண்டு மட்டும் தேசிய பூங்காவின் நுழைவு கட்டணத்தை மூலம் வசூலிக்கப்பட்ட தொகை மட்டும் $310 மில்லியன் அதாவது கிட்டத்தட்ட 21,291,208,791 கோடி ரூபாய்!!! இது முழுக்க முழுக்க மக்கள் விரும்பி அவர்களின் விடுமுறை நாட்களை கழிக்க குடும்பத்துடன் சென்று எந்த தொந்தரவும் இன்றி மகிழ்ச்சியாக செலவழித்துவிட்டு வந்த தொகை! மக்கள் கொடுத்த இந்த நுழைவு கட்டணத்தை எப்படி செலவழிக்கிறார்கள் என்று தேசிய பூங்காவின் வலைத்தளத்திலே மிக தெளிவாக ஒவ்வொரு பூங்காவிலும் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிப்பறையின் விபரண்களைக் கூட "உங்கள் கட்டணப் பணத்தில் நடக்கும் வேலைகள்" என்று வெளியிட்டிருக்கிறார்கள் விபரங்கள் இங்கே


இப்படி ஒரு திசைக்கு சென்றால் எழில் சொட்டும் பணிமலைகளும், மலையை ஒட்டி அடிவாரத்தில் ஆனந்தமாக படகோட்டி செல்ல  ஏரிகளும், பனிப்பாறைகளும், பச்சை பசேலென்று ஐநூறு மைல்கள் செல்லக்கூடிய பூங்காவும் (ஒரு பூங்காவின் நீளம் மட்டும் 800 கிமி), பல வெள்ளை நிற பாலைவனகளும், வெயில் சுட்டெரிக்கும் ஆண்ட வெளிகளும், அங்கே வழங்கி வரும் பல நூறு கணக்கான பறவை இனங்களும், விலங்குகளும், காலத்துக்கு ஏற்ப பச்சையாகவும், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிகப்பு நிறங்களில் மரங்களும் அதன் இலைகளின் நிறங்களும் மாறி சொர்கம் என்றால் ஒருவேளை இப்படி இருக்குமோ என்று தோன வைக்கும் வியப்புகளும் என்று அமெரிக்கா முழுவதும் எழில் கொழிக்கும் பூங்காக்கள் எண்ணற்று இருக்க இங்கே தான் இம்மக்கள் தங்கள் வார இறுதியை கழிப்பார்கள். பலர், விடுமுறை எடுத்துக்கொண்டு, சில மாதங்களுக்கு முன்னரே திட்டம் தீட்டி, விமான முன்பதிவு, தங்குமிடம் முன்பதிவு என்று அனைத்தையும் செய்துக்கொண்டு தங்கள் விடுமுறையை திட்டமிடுவார்கள்.இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒருவர், ஒவ்வொரு ஆண்டு ஒரு மாநிலத்தில் ஒரு முக்கிய தேசிய பூங்காவிற்கு செல்ல திட்டமிடலும் கூட, ஐம்பது பூங்காக்களை பார்க்கவே, ஐம்பது ஆண்டுகள் ஆகும்!!! இது தவிர இதர அழகு முகும் இடங்கள் வேறு!! இப்படி இருக்கும் ஒரு நாட்டில் ஒவ்வொரு  வார இறுதியும் வெளியே சென்று சுற்றி பார்த்தாலும் அலுக்காது!அத்தியாயம் 18 அடுத்த வாரம் வெளியாகும். மேலும் மூன்று அத்தியாயங்களுடன் இந்த கட்டுரைத் தொடர் முற்று பெரும்.

Blogger Widget

சனி, 2 மார்ச், 2019

இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...


நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று வந்தாலும், பேருந்தில் சென்று வந்தாலும், ஒரு முறையாவது ஒரு கோபம் அல்லது எரிச்சல் அல்லது "ச்சை" என்னடா இது என்று தோணும். இப்போதிருக்கும் வண்டி நெரிசல்களில் எங்கள் ஓசூரிலேயே ஒரு சிறிய சாலையை கடக்க ஐந்து நிமிடங்கள் ஆகின்றன. சாலையை கடக்கலாம் என்று சிறுவரோ, வயதானவரோ, இளம் வயதினரோ யார் முயன்றாலும் மதிக்காமல் ஒன்றன் பின் ஒன்றாக வண்டிகள் வந்த வண்ணம் இருக்கும். நூற்றில் நான்கு ஐந்து விபத்துகளும் இதனால் நேரிடுகின்றன.

வண்டியில் சென்றாலோ, wrong side என்னும் பயம் துளியும் கூட இல்லாமல் அப்படியே எதிர் திசையில் வண்டிகளை ஓட்டுவது, கண்ணாபிண்ணாவென்று ஒலிபெருக்கியை உபயோகிப்பது, பின்னால் வரும் வண்டிக்கு வழிவிடாமல் பெப்பரப்பே என்று சாலையை மறைத்துக்கொண்டு செல்வது, சாலையில் இருக்கும் lane; சாலை நடுவில் இருக்கும் வெள்ளைக் கோடுகள், சாலையை இரண்டு வழி, மூன்று வழி, எட்டு வழி சாலை என்று பிரிப்பது, அதை மதித்து கோட்டுக்குள் செல்லாமல் அந்த laneஇல் பாதியிலும், இந்த laneஇல் பாதியும் என்று அடுத்த வண்டியை ஒழுங்காக ஓட்டவிடாமல் செல்வது. பேருந்தில் சென்றால் சுங்கச்சாவடியில் பல மணிநேரம் காத்துக்கொண்டும், தனியார் வண்டி என்றால் தலைகால் தெரியாமல் மின்னல் வேகத்தில் செல்வதும், அரசு பேருந்து என்றால் ஒரு இருக்கை உருப்படியாக இல்லாமலும், மூட்டைப்பூச்சிகளும், கடகடவென ஜன்னல் ஆடும் சத்தமும் என்று நமது இலக்குக்கு சென்றுசேரும் வரை ஏதாவது ஒரு இடைஞ்சல்கள் இருந்துக்கொண்டே இருக்கும்!

ஆனால் அமெரிக்காவில் இவற்றில் ஒரு தொல்லையும் கிடையாது, காரணம் இங்கிருக்கும் சாலை விதிகள்.

முதல்முதலில் ஒருவர் இங்கே ஓட்டுநர் உரிமம் பெறவேண்டுமென்றால், படிக்கவேண்டும். ஆன்லைனில் அவரவர் மாநிலத்திற்கு ஏற்ப சாலை விதிகள் கொண்ட புத்தகம் இருக்கும், அவற்றில் ஒவ்வொரு விதிகளும் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கும். இந்த விதிகளைப் படித்த பின்னர், DMV அலுவலகம் சென்று (நம் நாட்டில் RTO அலுவலகம்) ஒரு படிவத்தை நிரப்பி தேர்வு எழுத வேண்டும், அந்த தேர்வில் சாலை விதிகளைப் பற்றிய கேள்விகள் இருக்கும். அந்தத் தேர்வில் 80 சதவிகிதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே Learner's Permit கொடுக்கப்படும், அதாவது அந்த தேர்வில் "தேறினால்" மட்டுமே வண்டி ஓட்ட கற்றுக்கொள்ள முடியும். ஒரு வேலை தேர்வாகவில்லை என்றால், மறுபடி தேர்வு எழுத முப்பது நாட்கள் காத்திருக்க வேண்டும்.

RTO - Road Transport Office DMV - Driving Motor Vehicle

மிதிவண்டிகள் செல்வதற்கென உள்ள தனி மார்க்கம்.
அந்த புத்தகத்தைப் படித்தும், இந்த தேர்வு எழுதி முடித்தாலுமே நூறு சதவிகிதம் சாலை விதிகள் ஒருவருக்கு புரிந்துவிடும்.  அந்த விதிகளில் - பள்ளி அருகில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும், மேடாக இருக்கும் சாலையில் வண்டியை நிறுத்தும்போது steering எந்தப் பக்கம் திரும்பி இருக்கவேண்டும் (ஒருவேளை வண்டி தானே நகர்ந்துவிட்டால், வெகு தூரம் செல்லாமல் இருக்க, steeringஐ சாலையில் நிறுத்தி இருக்கும் திசைக்கு ஏற்ப திருப்பி வைத்தால், வண்டி அங்கேயே நின்றுவிடும்), மழை சமயத்தில் முன்பிருக்கும் காரிலிருந்து எவ்வளவு தொலைவில் செல்லவேண்டும் எனது போன்ற அணைத்து விதிகளும் இந்த தேர்வில் அடங்கியிருக்கும்.


தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் வாங்க RTO அலுவலகம் சென்றால், ஒரு நாளைக்கு நாற்பது படிவங்கள் தான் என்று சொல்லி, Driving School அல்லது தானாக வரும் நபர்களை அலைக்கழிப்பார்கள். Driving Schoolமூலம் வரும் படிவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, நம்மை மதிக்கக்கூட மாட்டார்கள். RTO அலுவலகத்துக்குள் யார்யாரோ எல்லாம் இருப்பார்கள். ஆனால் இங்கே, சம்மந்தப்பட்ட நபர் தவிர வேறு யாரும் அலுவலகம் உள்ளே வரமுடியாது. DMV அலுவலகம் உள்ளே நுழையும் முன்னரே வெளியில் வரிசையில் நிற்கும்போது ஒரு ஊழியர் வந்து தேவையான படிவங்களை கொடுப்பார், அதை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றால் வரிசையில் நிற்கும் நேரம் மட்டும் தான் ஆகும், எந்த விஷயமாக இருந்தாலும் அதற்கான நேரம், அதற்கான கட்டணம் தவிர எந்த அலைக்கழிப்பும் இருக்காது.


சரி சாலை விதிகளுக்கு வருவோம், முதல்முறையாக அமெரிக்கா வந்த பின் தான் சாலையில் இருக்கும் கோடுகளைப்பற்றி புரிந்தது. அந்த கோட்டினுள் தான் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பதும், அது எவ்வளவு முக்கியம் என்பது எனது இருபத்தி ஏழாவது வயதில் தான் தெரிந்தது! இங்கே பெரும்பாலும் மூன்று வகையான சாலைகள் உண்டு. கிராமப்புற சாலை, உள்ளூர் சாலைகள், நெடுஞ்சாலை. ஒவ்வொரு சாலைகளிலும் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருக்கும். சாலைகளில் உள்ள கோடு மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது இரு மார்க்க சாலை என அர்த்தம். நடுவில் விடுபட்டு போடப்பட்டிருக்கும் கொடு இருந்தால் நமக்கு முன்னே செல்லும் காரை முந்தி செல்லலாம், தொடர்ந்து கோடு இருந்தால் அடுத்த வண்டியை முந்தக்கூடாது.

சாலையில் பாதசாரிகளுக்கு தான் முன்னுரிமை. எவரேனும் நடந்து சென்றால் வண்டியின் வேகத்தை அப்படியே குறைத்துவிடுவார்கள், சாலையை கடக்க மக்கள் நின்றிருந்தால் அவர்கள் சாலையை கடந்த பின்னர் தான் வண்டி செல்லவேண்டும். நம் நாடு போல நெடுஞ்சாலையில் எல்லாம் இங்கே மனிதர்கள் நடந்து செல்ல மாட்டார்கள். உள்ளூர் சாலைகளில் மற்றும் கிராமப்புற சாலைகளில் எப்போதாவது மக்கள் நடப்பதை பார்க்கமுடியும். ஏனென்றால் நடந்து செல்லும் தூரத்தில் எதுவும் இருக்காது. நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்காக தான் பொதுவாக சாலையில் மக்கள் நடப்பார்கள். மற்றபடி சாலையில் நடந்து செல்ல ஏதும் காரணமிருக்காது. முதல் பதிவில் சொல்லியிருந்ததை போல நடந்து சென்று காய்கறியோ, பச்சைமிளகாயோ நம்மூரில் வாங்குவது போல இங்கே வாங்க முடியாது, ஏனென்றால் கடைகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில மட்டும் தான் கடைகள் இருக்கும்.


ஒவ்வொரு சாலையிலும் ஒரு வேக வரம்பு இருக்கும். கிராமப்புற சாலைகளில் 35mph அல்லது 40mph, பள்ளி அருகில் 25mph, உள்ளூர் சாலைகளில் 50 mph, நெடுஞ்சாலைகளில் 65mph இதில் வேக வரம்பு ஒவ்வொரு மாநிலத்திலும் மாறும். ஆனால் நிச்சயமாக ஒவ்வொரு சாலையிலும் மிக தெளிவாக வேக வரம்பு எவ்வளவு என்று குறிப்பிட்டிருக்கும். அந்த வேகத்தை மீறி சென்றால் நிச்சயமாக காவலர் நம் பின்னேயே வந்து வண்டியை ஓரம் கட்டி அபராதம் விதிப்பர், மேலும் காரணத்திற்கு ஏற்ப தண்டனையும் இருக்கும். அதாவது மிக வேகமாக வண்டியை ஓட்டினால் கிட்டத்தட்ட $350 வரை அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்துக்கு இரண்டு அல்லது நான்கு புள்ளிகள் கொடுக்கப்படும், இப்படி ஒருவரது ஓட்டுநர் உரிமத்தில் பன்னிரண்டு புள்ளிகள் வந்துவிட்டால் ஒரு வருடத்திற்கு அவரது உரிமம் ரத்து செய்யப்படும். இந்நாட்டில், நம்நாட்டில் செல்வதுபோல ஓட்டுநர் உரிமம் இல்லாமலேல்லாம் வெளிய செல்ல முடியாது. ஆக உரிமத்தை இழந்தால் அவ்வளவுதான். அதனால் பெரும்பாலானோர் மிக ஜாக்கிரதையாக தான் வண்டியை ஓட்டுவார்கள்.

காவலர் நம்மை ஓரம் கட்டினால் அவர்கள் கேட்கும் கேள்வியை தவிர அநாவசியமாக ஒரு வார்த்தை கூட பேசமுடியாது, வந்து நமது உரிமம், வண்டியின் காப்பீடு மற்றும் வண்டியின் பதிவீடை வாங்கி செல்வர், இதில் ஒரு ஆவணம் இல்லை என்றாலும் ஒவ்வொரு தவறிய ஆவணத்துக்கும் $180 அபராதம் விதிக்கப்படும். அதனால் இது மூன்றும் இல்லாமல் யாவரும் இருக்கமாட்டார்கள். மேலும், நம் நாட்டில் வெட்கப் படாமல் காவலர் கை ஏந்துவதும், நாமும் வெட்கப்படாமல் ஐம்பது அல்லது நூறு ரூபாய் கொடுத்துவிட்டு மீண்டும் அதே தவறை செய்வது போலெல்லாம் இங்கே செய்யமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் அப்படி ஒரு கலாச்சாரம் இருப்பது இங்கே பெரும்பாலானோருக்கு தெரியாது. அவ்வளவு கண்ணியமாக நடந்துக்கொள்வார்கள் காவலர்கள் மற்றும் மக்களும் கூட. இன்னும் சொல்லப்போனால் காவலர்கள் சில நேரத்தில் நமக்கு உதவும் முயற்சியில், பெரிய அபராததுக்கு பதிலாக சிறிய அபராதம் வழங்கி விட்டுவிடுவார் ஆனால் கை மட்டும் எந்தமாட்டார்கள். இது இரண்டு முறை காலவரிடம் மாட்டிய அனுபவத்தில் சொல்கிறேன். ஒருமுறை வண்டியில் முன்விளக்கு (Headlight) போட மறந்தமைக்கும், மற்றொரு முறை 25mph சாலையில் 41mph வேகத்தில் சென்றமைக்கும் இருமுறை $50 அபராதம் விதித்தார்கள். எந்த தேதிக்குள் கட்டவேண்டும் என்று அபராத சீட்டில் குறிப்பிட்டிருப்பர், இதை பெரும்பாலும் இணையதளத்திலும், சிலமுறை நீதிமன்றத்திலும் சென்று செலுத்தவேண்டும்.


ஒருவேளை இரண்டு புள்ளிகள் கொடுத்து விட்டால் வண்டிக்கான மாத காப்பீட்டு தொகை அதிகரித்துவிடும். அதனால் இது வெறும் ஒருமுறை காவலருக்கு செலுத்தும் அபராதம் மட்டும் இன்றி, நமது காப்பீட்டையும் பாதித்து விடும், இதனாலேயே மக்கள் எச்சரிக்கையாக இருப்பர்.

எதிரே வரும் வண்டி highbeamஇல் முன்விளக்கு போட்டுக்கொண்டு வந்தால் ஒருமுறை நம் highbeam விளக்கை போட்டு அணைத்தால் (blink) உடனே அவர்களின் highbeamஐ குறைத்துவிடுவார். 90% ஓட்டுனர்கள் இதை கடைபிடிப்பார். சில மடையர்கள் இங்கேயும் உள்ளனர்.

எங்கே எப்போது திரும்பினாலும் வண்டியின் indicator போடாமல் திரும்ப மாட்டார்கள். இந்நாட்டில் ஒலிபெருக்கி சத்தம் கேட்கவே முடியாது,  சொல்லப்போனால் ஒருவர் தம் வண்டியின் ஒலிபெருக்கியை மாத கணக்கில் எல்லாம் உபயோகப்படுத்தாமல் இருந்ததுண்டு. மிக சில சமயங்களில் மட்டுமே ஒலிபெருக்கி பயன் பட நேரிடும். மற்ற படி ஒலிபெருக்கி அடித்துவிட்டால் தமக்கு முன் செல்லும் ஓட்டுனருக்கு அது ஒரு அவமானம் நேரிட்டதுபோல இங்கே. அடடா நமக்கு horn அடிச்சிட்டானே, என்ன தப்பு பண்ணோம் என்று தோணும் அளவுக்கு இருக்கும்.


அதேபோல சாலையில் கண்ட இடத்தில் எல்லாம் வேகத்தடை கிடையாது, இதுபற்றி நான்காம் அத்தியாயத்தில் படித்திருப்பீர்கள். எந்த ஒரு சாலையிலும் போக்குவரத்து காவலர் என்று ஒருவர் இருக்கவே மாட்டார். அப்படி ஒரு காவலர் இங்கு கிடையாது. மிக முக்கிய நேரங்களில் மட்டும்; ஏதேனும் வண்டி பழுது ஏற்பட்டாலோ, விபத்து நேரிட்டாலோ காவலர் வந்து வண்டிகளை நிறுத்தி அனுப்புவார், மற்றபடி போக்குவரத்துக்கு காவலர் என்று எந்த ஒரு சாலையிலும் இருக்க மாட்டார்கள் ஆனால் ஒவ்வொரு சாலையிலும் பகலானாலும் நள்ளிரவானாலும் signalஇல் சிகப்பு விளக்கு இருந்தால் வண்டிகள் நிறுத்தப்படும். மஞ்சள் விளக்கு வந்த உடனே வண்டியை நிறுத்திவிடுவார். கோட்டுக்கு முன் கூட மிக சில வண்டிகள் தான் நிற்கும்.

இதெல்லாம் இவர்கள் கடைபிடிக்க காரணம் உரிமம் வாங்கும்போதே விதிகளை படித்ததும், learners permit வாங்கும்போது வைத்த தேர்வும், மற்றும் சிறு வயதிலிருந்தே பெற்றோருடனும், மற்றவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை பார்த்தும் வளந்த விதம் தான். வாகனத்தினுள் உட்கார்ந்தவுடனேயே முதல் வேலை seat belt அணிவது, அணியாவிட்டால் வண்டியில் சத்தம் வந்துக்கொண்டே இருக்கும். முன்னிருக்கையில் இருக்கும் இருவரும் கட்டாயமாக அணியவேண்டும். (seat belt அணியாமல் யாரும் இருக்க மாட்டார்கள்), சில மாநிலங்களில் பின்னிருக்கையில் இருப்பவரும் அணியவேண்டும்.


நம் நாட்டில் என்ன விதிகள் இருக்கின்றது என்பது போக்குவரத்து காவலருக்கு கூட நிச்சயம் தெரிந்திருக்காது. ஏனென்றால் நாமெல்லாம் எங்கே விதிகளைப் படித்தோம், தேர்வு எழுதினோம்? எனக்கு நான் விவேகானந்தா கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது அவர்களாகவே வந்து மாணவர்களுக்கு இலவச learners permit என்று கொடுத்தார்கள், எந்த வயதில் விதிகளை தெரிந்துகொள்ள வேண்டுமோ, அங்கேயே தேர்வு இல்லாமல் learners permit கொடுத்துவிடுகிறார்கள். பிறகு எங்கே விதிகளை மதிப்பது?

மூன்று மாதத்துக்குள் சென்று எனது நண்பன் கற்றுக்கொடுத்த வண்டியை எடுத்துக்கொண்டு சென்று; முதல்நாள் நாற்பது பேர் ஆச்சு நாளைக்கு வா என்று அனுப்பிவிடப்பட்டு அடுத்தநாள் சென்று ஏதோ ஓட்டி காட்டினேன், அவர்களும் சேரி இந்தா என்று உரிமத்தை கொடுத்தார்கள். எங்கடா கேமரா என்று தேடிக்கொண்டிருக்கும் போதே போப்பா போட்டோ எடுத்தாச்சு என்று "பே" என்று முழிக்கும் ஒரு கேவலமான போட்டோ கொண்ட ஓட்டுநர் உரிமத்துடன் அனுப்பிவிட்டனர்.


ஆனால் இங்கு, learners permit இருந்தால் தான் வாகனம் ஓட்ட சொல்லிக்கொடுக்கும் நபர் வண்டியில் நம்மை அனுமதிப்பார். மற்றும் வண்டி ஓட்டிக்காட்டும் தேர்வு உள்ள அன்று நம்மை தவிர யாரும் DMV அலுவலகத்தில் பேசக்கூட முடியாது. நம் கூடவே DMV ஊழியர் உட்கார்ந்திருப்பார் அவர் சொல்லும் சாலையில் வண்டியை ஒட்டி காட்டவேண்டும், எந்த ஒரு தவருமின்றி ஓட்டினால் approved என்று உள்ளே அனுப்பிவைப்பார், உரிய கட்டணத்தை செலுத்தி படம் எடுக்க நின்றால், நமக்கு முன்னிருக்கும் computer monitorஇல் படம் தெரியும்,  பிடிக்கவில்லை என்றால் மற்றொரு முறை எடுப்பர்.

சில இடங்களில் சாலையில் "Deaf child in area", மான்கள் நடமாடும் இடம், கரடி நடமாடும் இடம், குதிரை செல்லும் இடம் என்று குறிப்பீடுகள் வைக்கப்பட்டிருக்கும். ஹா... எங்கள் ஓசூரில் யானைகள் நடமாடும் இடம் என்றே குறிப்பீடு உண்டு!

இது யானைகள் நடமாடுமிடம், இது எங்க ஓசூர்!
ஆக, மக்களுக்கு தேவையான அனைத்து குறிப்பீடுகளும் சாலையில் உண்டு, குறிப்பாக மேடு பள்ளம் அல்லாத சாலைகள் உண்டு, நாம் செல்லும் பாதையிலேயே எதிரே தடால் என்று வராத ஓட்டுநர்களும் அதற்கான விதிகளும் உண்டு, கண்டபடி horn அடிக்காத மக்கள், வண்டியை தேவை இல்லாமல் ஓரம் கட்டி கையேந்தாத காவலர், seat belt காவலருக்காக போடாமல், தமக்காக போடும் ஓட்டுனர்கள் என்று அடுத்தவர் வந்து விதிகளை சொல்லிக்கொடுக்க தேவை இன்றி தாமாகவே அனைத்து விதிகளையும் கடைபிடிக்கும் இந்த நாட்டின் மக்களை என்னவென்று சொல்வது? அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம் என்று தான் சொல்லவேண்டும்!

அடுத்த அத்தியாயம் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளிவரும்.

இதுதாங்க அமெரிக்கா தொடர் மேலும் நான்கு அத்தியாயங்களுடன் முற்றுப்பெறும்.
Blogger Widget