-->

திங்கள், 19 ஜனவரி, 2015

மக்கள் சேவை - என்ன கத உடுறியா?!

மக்கள் சேவையே மாகேசன் சேவை. அந்த மக்களுக்கு சேவை செய்யத் தான் நம் நாட்டில் எத்தனை பேர் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐயகோ... எம் மக்கள் வறுமையிலும், துயரத்திலும், பசியிலும் துடிக்கிறார்களே, அவர்களை காப்பாற்ற வேண்டியதும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தவேண்டியதும் நம் கடமை அல்லவா என்று மக்களின் பாரத்தை தம் தோளில் சுமந்து நிற்கின்றனர் பலர்.

யார் இவர்கள்? வேறு யார், நம் அரசியல்வாதிகள் தான். தேசிய விடுதலைக்காக ஆரமிக்கப் பட்ட ஒரு கட்சி, விடுதலை பெறும் முன்னரே அதிலிருந்து பிரிந்த கிளைக் கட்சி என்று தேசிய அளவிலும், மாநில அளவிலும், ஒரு கட்சியிலிருந்து பல கிளைக் கட்சிகள் பிரிந்து நம் தேசிய நதிகளின் கிளைகளை விட இந்த கட்சிகளின் கிளைகள் அதிகமாக பறந்து விரிந்திருக்கிறது.

மக்களுக்கு சேவை செய்யத்தான் என்னென்ன செய்யவேண்டியிருக்கிறது, மைக்கை பிடித்து தொண்டை தண்ணீர் வற்ற பேசவேண்டியிருக்கிறது, 'இல்லை... இல்லை... நான் தான் மக்களுக்கு சேவை செய்வேன், எனக்கு தான் அவர்களின் துயரம் தெரியும், அவர்களின் நிலையை நான் தான் உயர்த்துவேன்' என்று பல போட்டி கட்சிகள் மக்களுக்கு சேவை செய்ய வீடு வீடாக சென்று, உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று அந்த மக்களிடமே கேட்டு துடிக்கிறது.

கட்சியின் தலைவராக தந்தை இருந்தால், 'அப்பாவை விட நாம் அதிகம் நல்லது செய்ய வேண்டும்' என்று துடிக்கும் மகனும், இல்லை... இல்லை... நம் தம்பி மக்கள் சேவை செய்தால் நமக்கென்ன மரியாதை என்று கோபப்படும் அண்ணன்னும், நான் தேசிய அளவில் சேவை செய்கிறேன் என்று தங்கையும், அக்காள் மகனும், தம் பேரனும் என மக்கள் மீது அன்பு மழை பொழிய எவ்வளவு பேர் துடிக்கின்றனர். அம்மக்களுக்கு ஏவை செய்ய கடவுளை வேறு அவ்வபோது வசை பாடுகின்றனர்! அட அட!!!

இது மட்டுமா? நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகை இருக்கும் எம் நாட்டில் இத்தாலியிலிருந்து வந்த ஒருவரை கட்சியின் தலைவராக எற்றுக்கொண்ட பெருமை வாய்ந்த கட்சியும், எம் கட்சி தேசிய அளவில் எத்தனையோ சேவை செய்கிறது, நாங்களும் சேவை செய்வோம் என்று கட்சியின் அலுவலகத்தில் வேஷ்டியை அடிக்கடி மக்களுக்காக கிழித்துக் கொண்டும், அவ்வபோது தனியாக கிளை தொடங்கி வேஷ்டியை கிழித்துக்கொள்ளும் கட்சியும், தம் நாட்டு மக்களுக்கு குரல் கொடுக்க பல கட்சிகள் இருக்கின்றன; நாம் பிற நாட்டு மக்களுக்கு குரல் கொடுப்போம் என்று பிறநாட்டில் வாழும் மக்களுக்கு இந்த நாட்டிலிருந்து குரல் கொடுத்து, அவர்களுக்காக இந்த நாட்டில் ஓட்டு கேட்க ஒரு கட்சியும், தெரு முனையில் உறங்கிக்கொண்டிருப்பவனை எழுப்பி என்ன ஜாதி என்று கேட்டு, அந்த ஜாதிக்காக ஒரு கட்சியும், முடிந்தால் புதிதாக ஒரு ஜாதியை ஆரமித்து அதற்கு ஒரு கட்சியும் என தமிழகத்தில் மட்டும் ஒரு எழுபத்தி மூன்று கட்சிகள் (73) இருக்கின்றன.

கட்சியை தொடங்கிவிட்டால் முடிந்து விட்டதா? போட்டிக்காக இருக்கும் அடுத்த கட்சி 'மக்களை' அவ்வபோது சந்தை 'சந்துகளிலும்', சாராயக் கடைகளிலும், விளையாட்டு மைதானங்களிலும், சாலை ஓரங்களிலும், புதர் பகுதிகளிலும் வெட்டி அல்லவா சாய்க்க வேண்டியிருக்கிறது? கட்சி தலைவரின் வாரிசையே தலைவனாகவும், தொண்டனின் வாரிசை தொண்டனாகவுமே வைத்திருக்கவும் வேண்டும்! எதற்காக இவ்வளவும்?!
அட.. மக்களுக்கு சேவை செய்தாக வேண்டுமல்லவா!

தேசிய அளவில் சேவை செய்ய இங்கிருந்து டெல்லி சென்றும், மாநில அளவில் சேவை செய்ய தேசிய தலைவர்கள் மாநிலங்களுக்கு வந்தும், மக்களுக்கு சேவை செய்ய அந்த மக்களிடமே கடை கடையாக சென்று பணம் வசூலித்தும்,, அப்படியாக வந்த வசூலை உதிரி கட்சிகளுக்கு இனாமாக கொடுத்து நாம் கூட்டாக சேவை செய்யலாம் என்று தோள் கோர்த்துக் கொள்ளவேண்டும், தோள் சேரா சமயத்தில் கிடைத்தது சமயம் என்று கேவலமாக வசைபாட வேண்டும், குறுகிய காலத்திலேயே அதை கை குட்டையால் துடைத்துக் கொண்டு மீண்டும் ஒன்று சேர வேண்டும்.  கூட்டணிக்கு பலம் சேர்க்க அரிதாரம் பூசிய நவீன கூத்தாடிகளை கட்சியில் சேர்க்கவேண்டும். யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று மண்டையை குடைந்துக் கொள்ளவேண்டும். இவை எல்லாம் எதற்காக? மக்களுக்கு சேவை செய்ய அல்லவா?!

உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், பாராளு மன்ற தேர்தல் என்று ஒவ்வொரு தேர்தலுக்கும் மக்கள் பிரதிநிதிகளை, அவர்களிடம் இருக்கும் 'நிதி'யை வைத்து தேர்ந்தெடுப்பதும், மக்களுக்காக எத்தனை கொலைகள் செய்திருக்கிறார்கள், எவ்வளவு முறை சிறை சென்றிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது கட்சியின் தலைவர்களுக்கு!

தங்கள் உயிரை வைத்து, தங்கள் மானம், மரியாதையை பத்திரமாக வீட்டிலேயே பூட்டி வைத்து மக்களுக்காக சேவை செய்ய இவர்கள் படும் பாடு நம்மை வியக்க அல்லவா வைக்கிறது!

மக்களுக்காக...! மக்களுக்காக...! என்று ஒவ்வொரு மேடையில் இவர்கள் பேசும்போதும் அந்த மக்கள் மனதில் எழும் ஒரே ஒரு எண்ணம் - 'என்ன கத உடுறியா!!! எங்களுக்கு தெரியாம அப்படி எந்த மக்களுக்குய்யா சேவை  செய்யறீங்க' என்பது மட்டுமே!
Blogger Widget