நன்றி படம்: www.mazhalaigal.com |
சான்றோன் எனக்கேட்ட தாய்
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்ற காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
நல்ல கணவர் அமைய வேண்டுமென்று அவளும், நல்ல மனைவி அமைய வேண்டுமென்று அவனும் பல ஆண்டுகளாக கண்ட கனவு ஒருநாள் பலித்து, பின் இருவரும் அழகிய குழந்தையை பெற்றெடுத்தனர். குழந்தையின் ஒவ்வொரு பருவத்திலும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்தனர், உகந்த கல்வி, உடை, நேரம் தவறாமல் உணவு என்று அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தனர்.
மழலையாய் இருந்த பொழுது 'அப்ப்ப்பா...இது என்ன ப்ப்பா...' என்று கேட்கும் ஒவ்வொரு நூறுதடவையும் முதல் முறை சொல்வது போலவே குழந்தைக்கு பதில் அளிக்கும் தந்தை, பருவ வயதில், சற்று தலை வலிப்பது போல இருக்கிறது என்று சொல்ல, உடனேயே கஷாயம் வைத்துக் கொடுக்கும் தாய், எவ்வளவு சண்டைப் போட்டாலும் கண்ணீர் விட்டுக்கொண்டே கட்டித்தழுவும் தங்கை, இப்படி பருவ வயது வந்து சேரும் வரை பாசத்தின் பிணைப்பிலேயே வளர்ந்து வந்த நாம், நமது ஒவ்வொரு பிறந்தநாளிலும் நினைக்க வேண்டியது, நமது பிறந்த நாளை மட்டும் அல்ல, நமது பெற்றோர் வயதில் முதிர்ந்துக்கொண்டே வருகிறார்கள் என்பதனையும் தான்.
மழலையாய், குழந்தையாய் இருந்தபோது எவ்வளவு பொறுமையுடன் தந்தை பதில் அளித்தாரோ, அதற்க்கு மேல் பொறுமையுடம் அவர்களின் நிகழ் காலத்திலும், ஒரு சிறு தலை வலிக்கு துடித்த தாயின் நிகழ் காலத்தில் அவருடைய உடல் நலத்தையும் பேணுவது மிக மிக்கியமான ஒன்றாகும்.
நமக்கு எது நடந்தாலும் பாசம் காட்ட நமது பெற்றோர் இருக்கிறார், ஆனால் நம் பெற்றோருக்கு எந்தக்கவலையானாலும் அதை பகிர்ந்துக்கொள்ள அவர்களுடைய பெற்றோர் இல்லை, நாம் தான் அந்த இடத்தில் இருக்கிறோம். இந்த சிறு விஷயம் நம்மில் பலர் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒரு தாய், தந்தை எதிர்பார்ப்பு இதுதான்.
சிறிது நேரம் தொலைக்காட்சி, கைபேசி/தொலைபேசி அனைத்தையும் ஒதுக்கிவிட்டு ஆறுதலோடு மனம் விட்டு பேசினால், அதனால் அவர்களடையும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்கள் ஊருக்கு செல்லும் சில நாட்கள், நண்பர்களோடும், பொழுதுபோக்கிலுமே கழிந்து பின் வீட்டாருடன் பேச நேரமில்லாமல் திரும்பக் கிளம்ப வேண்டிய சூழல் எப்பொழுதும் நடக்கிற ஒன்றாகிவிட்டது!
ஒவ்வொரு நாளும் நம்மை தவமாய் தாமிருந்து' பெற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கிய கடமைகளுள் இதுவும் ஒன்றாகும் என்பதை மறந்துவிடக் கூடாது!