-->

சனி, 2 மார்ச், 2019

இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...


நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று வந்தாலும், பேருந்தில் சென்று வந்தாலும், ஒரு முறையாவது ஒரு கோபம் அல்லது எரிச்சல் அல்லது "ச்சை" என்னடா இது என்று தோணும். இப்போதிருக்கும் வண்டி நெரிசல்களில் எங்கள் ஓசூரிலேயே ஒரு சிறிய சாலையை கடக்க ஐந்து நிமிடங்கள் ஆகின்றன. சாலையை கடக்கலாம் என்று சிறுவரோ, வயதானவரோ, இளம் வயதினரோ யார் முயன்றாலும் மதிக்காமல் ஒன்றன் பின் ஒன்றாக வண்டிகள் வந்த வண்ணம் இருக்கும். நூற்றில் நான்கு ஐந்து விபத்துகளும் இதனால் நேரிடுகின்றன.

வண்டியில் சென்றாலோ, wrong side என்னும் பயம் துளியும் கூட இல்லாமல் அப்படியே எதிர் திசையில் வண்டிகளை ஓட்டுவது, கண்ணாபிண்ணாவென்று ஒலிபெருக்கியை உபயோகிப்பது, பின்னால் வரும் வண்டிக்கு வழிவிடாமல் பெப்பரப்பே என்று சாலையை மறைத்துக்கொண்டு செல்வது, சாலையில் இருக்கும் lane; சாலை நடுவில் இருக்கும் வெள்ளைக் கோடுகள், சாலையை இரண்டு வழி, மூன்று வழி, எட்டு வழி சாலை என்று பிரிப்பது, அதை மதித்து கோட்டுக்குள் செல்லாமல் அந்த laneஇல் பாதியிலும், இந்த laneஇல் பாதியும் என்று அடுத்த வண்டியை ஒழுங்காக ஓட்டவிடாமல் செல்வது. பேருந்தில் சென்றால் சுங்கச்சாவடியில் பல மணிநேரம் காத்துக்கொண்டும், தனியார் வண்டி என்றால் தலைகால் தெரியாமல் மின்னல் வேகத்தில் செல்வதும், அரசு பேருந்து என்றால் ஒரு இருக்கை உருப்படியாக இல்லாமலும், மூட்டைப்பூச்சிகளும், கடகடவென ஜன்னல் ஆடும் சத்தமும் என்று நமது இலக்குக்கு சென்றுசேரும் வரை ஏதாவது ஒரு இடைஞ்சல்கள் இருந்துக்கொண்டே இருக்கும்!

ஆனால் அமெரிக்காவில் இவற்றில் ஒரு தொல்லையும் கிடையாது, காரணம் இங்கிருக்கும் சாலை விதிகள்.

முதல்முதலில் ஒருவர் இங்கே ஓட்டுநர் உரிமம் பெறவேண்டுமென்றால், படிக்கவேண்டும். ஆன்லைனில் அவரவர் மாநிலத்திற்கு ஏற்ப சாலை விதிகள் கொண்ட புத்தகம் இருக்கும், அவற்றில் ஒவ்வொரு விதிகளும் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கும். இந்த விதிகளைப் படித்த பின்னர், DMV அலுவலகம் சென்று (நம் நாட்டில் RTO அலுவலகம்) ஒரு படிவத்தை நிரப்பி தேர்வு எழுத வேண்டும், அந்த தேர்வில் சாலை விதிகளைப் பற்றிய கேள்விகள் இருக்கும். அந்தத் தேர்வில் 80 சதவிகிதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே Learner's Permit கொடுக்கப்படும், அதாவது அந்த தேர்வில் "தேறினால்" மட்டுமே வண்டி ஓட்ட கற்றுக்கொள்ள முடியும். ஒரு வேலை தேர்வாகவில்லை என்றால், மறுபடி தேர்வு எழுத முப்பது நாட்கள் காத்திருக்க வேண்டும்.

RTO - Road Transport Office DMV - Driving Motor Vehicle

மிதிவண்டிகள் செல்வதற்கென உள்ள தனி மார்க்கம்.
அந்த புத்தகத்தைப் படித்தும், இந்த தேர்வு எழுதி முடித்தாலுமே நூறு சதவிகிதம் சாலை விதிகள் ஒருவருக்கு புரிந்துவிடும்.  அந்த விதிகளில் - பள்ளி அருகில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும், மேடாக இருக்கும் சாலையில் வண்டியை நிறுத்தும்போது steering எந்தப் பக்கம் திரும்பி இருக்கவேண்டும் (ஒருவேளை வண்டி தானே நகர்ந்துவிட்டால், வெகு தூரம் செல்லாமல் இருக்க, steeringஐ சாலையில் நிறுத்தி இருக்கும் திசைக்கு ஏற்ப திருப்பி வைத்தால், வண்டி அங்கேயே நின்றுவிடும்), மழை சமயத்தில் முன்பிருக்கும் காரிலிருந்து எவ்வளவு தொலைவில் செல்லவேண்டும் எனது போன்ற அணைத்து விதிகளும் இந்த தேர்வில் அடங்கியிருக்கும்.


தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் வாங்க RTO அலுவலகம் சென்றால், ஒரு நாளைக்கு நாற்பது படிவங்கள் தான் என்று சொல்லி, Driving School அல்லது தானாக வரும் நபர்களை அலைக்கழிப்பார்கள். Driving Schoolமூலம் வரும் படிவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, நம்மை மதிக்கக்கூட மாட்டார்கள். RTO அலுவலகத்துக்குள் யார்யாரோ எல்லாம் இருப்பார்கள். ஆனால் இங்கே, சம்மந்தப்பட்ட நபர் தவிர வேறு யாரும் அலுவலகம் உள்ளே வரமுடியாது. DMV அலுவலகம் உள்ளே நுழையும் முன்னரே வெளியில் வரிசையில் நிற்கும்போது ஒரு ஊழியர் வந்து தேவையான படிவங்களை கொடுப்பார், அதை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றால் வரிசையில் நிற்கும் நேரம் மட்டும் தான் ஆகும், எந்த விஷயமாக இருந்தாலும் அதற்கான நேரம், அதற்கான கட்டணம் தவிர எந்த அலைக்கழிப்பும் இருக்காது.


சரி சாலை விதிகளுக்கு வருவோம், முதல்முறையாக அமெரிக்கா வந்த பின் தான் சாலையில் இருக்கும் கோடுகளைப்பற்றி புரிந்தது. அந்த கோட்டினுள் தான் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பதும், அது எவ்வளவு முக்கியம் என்பது எனது இருபத்தி ஏழாவது வயதில் தான் தெரிந்தது! இங்கே பெரும்பாலும் மூன்று வகையான சாலைகள் உண்டு. கிராமப்புற சாலை, உள்ளூர் சாலைகள், நெடுஞ்சாலை. ஒவ்வொரு சாலைகளிலும் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருக்கும். சாலைகளில் உள்ள கோடு மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது இரு மார்க்க சாலை என அர்த்தம். நடுவில் விடுபட்டு போடப்பட்டிருக்கும் கொடு இருந்தால் நமக்கு முன்னே செல்லும் காரை முந்தி செல்லலாம், தொடர்ந்து கோடு இருந்தால் அடுத்த வண்டியை முந்தக்கூடாது.

சாலையில் பாதசாரிகளுக்கு தான் முன்னுரிமை. எவரேனும் நடந்து சென்றால் வண்டியின் வேகத்தை அப்படியே குறைத்துவிடுவார்கள், சாலையை கடக்க மக்கள் நின்றிருந்தால் அவர்கள் சாலையை கடந்த பின்னர் தான் வண்டி செல்லவேண்டும். நம் நாடு போல நெடுஞ்சாலையில் எல்லாம் இங்கே மனிதர்கள் நடந்து செல்ல மாட்டார்கள். உள்ளூர் சாலைகளில் மற்றும் கிராமப்புற சாலைகளில் எப்போதாவது மக்கள் நடப்பதை பார்க்கமுடியும். ஏனென்றால் நடந்து செல்லும் தூரத்தில் எதுவும் இருக்காது. நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்காக தான் பொதுவாக சாலையில் மக்கள் நடப்பார்கள். மற்றபடி சாலையில் நடந்து செல்ல ஏதும் காரணமிருக்காது. முதல் பதிவில் சொல்லியிருந்ததை போல நடந்து சென்று காய்கறியோ, பச்சைமிளகாயோ நம்மூரில் வாங்குவது போல இங்கே வாங்க முடியாது, ஏனென்றால் கடைகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில மட்டும் தான் கடைகள் இருக்கும்.


ஒவ்வொரு சாலையிலும் ஒரு வேக வரம்பு இருக்கும். கிராமப்புற சாலைகளில் 35mph அல்லது 40mph, பள்ளி அருகில் 25mph, உள்ளூர் சாலைகளில் 50 mph, நெடுஞ்சாலைகளில் 65mph இதில் வேக வரம்பு ஒவ்வொரு மாநிலத்திலும் மாறும். ஆனால் நிச்சயமாக ஒவ்வொரு சாலையிலும் மிக தெளிவாக வேக வரம்பு எவ்வளவு என்று குறிப்பிட்டிருக்கும். அந்த வேகத்தை மீறி சென்றால் நிச்சயமாக காவலர் நம் பின்னேயே வந்து வண்டியை ஓரம் கட்டி அபராதம் விதிப்பர், மேலும் காரணத்திற்கு ஏற்ப தண்டனையும் இருக்கும். அதாவது மிக வேகமாக வண்டியை ஓட்டினால் கிட்டத்தட்ட $350 வரை அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்துக்கு இரண்டு அல்லது நான்கு புள்ளிகள் கொடுக்கப்படும், இப்படி ஒருவரது ஓட்டுநர் உரிமத்தில் பன்னிரண்டு புள்ளிகள் வந்துவிட்டால் ஒரு வருடத்திற்கு அவரது உரிமம் ரத்து செய்யப்படும். இந்நாட்டில், நம்நாட்டில் செல்வதுபோல ஓட்டுநர் உரிமம் இல்லாமலேல்லாம் வெளிய செல்ல முடியாது. ஆக உரிமத்தை இழந்தால் அவ்வளவுதான். அதனால் பெரும்பாலானோர் மிக ஜாக்கிரதையாக தான் வண்டியை ஓட்டுவார்கள்.

காவலர் நம்மை ஓரம் கட்டினால் அவர்கள் கேட்கும் கேள்வியை தவிர அநாவசியமாக ஒரு வார்த்தை கூட பேசமுடியாது, வந்து நமது உரிமம், வண்டியின் காப்பீடு மற்றும் வண்டியின் பதிவீடை வாங்கி செல்வர், இதில் ஒரு ஆவணம் இல்லை என்றாலும் ஒவ்வொரு தவறிய ஆவணத்துக்கும் $180 அபராதம் விதிக்கப்படும். அதனால் இது மூன்றும் இல்லாமல் யாவரும் இருக்கமாட்டார்கள். மேலும், நம் நாட்டில் வெட்கப் படாமல் காவலர் கை ஏந்துவதும், நாமும் வெட்கப்படாமல் ஐம்பது அல்லது நூறு ரூபாய் கொடுத்துவிட்டு மீண்டும் அதே தவறை செய்வது போலெல்லாம் இங்கே செய்யமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் அப்படி ஒரு கலாச்சாரம் இருப்பது இங்கே பெரும்பாலானோருக்கு தெரியாது. அவ்வளவு கண்ணியமாக நடந்துக்கொள்வார்கள் காவலர்கள் மற்றும் மக்களும் கூட. இன்னும் சொல்லப்போனால் காவலர்கள் சில நேரத்தில் நமக்கு உதவும் முயற்சியில், பெரிய அபராததுக்கு பதிலாக சிறிய அபராதம் வழங்கி விட்டுவிடுவார் ஆனால் கை மட்டும் எந்தமாட்டார்கள். இது இரண்டு முறை காலவரிடம் மாட்டிய அனுபவத்தில் சொல்கிறேன். ஒருமுறை வண்டியில் முன்விளக்கு (Headlight) போட மறந்தமைக்கும், மற்றொரு முறை 25mph சாலையில் 41mph வேகத்தில் சென்றமைக்கும் இருமுறை $50 அபராதம் விதித்தார்கள். எந்த தேதிக்குள் கட்டவேண்டும் என்று அபராத சீட்டில் குறிப்பிட்டிருப்பர், இதை பெரும்பாலும் இணையதளத்திலும், சிலமுறை நீதிமன்றத்திலும் சென்று செலுத்தவேண்டும்.


ஒருவேளை இரண்டு புள்ளிகள் கொடுத்து விட்டால் வண்டிக்கான மாத காப்பீட்டு தொகை அதிகரித்துவிடும். அதனால் இது வெறும் ஒருமுறை காவலருக்கு செலுத்தும் அபராதம் மட்டும் இன்றி, நமது காப்பீட்டையும் பாதித்து விடும், இதனாலேயே மக்கள் எச்சரிக்கையாக இருப்பர்.

எதிரே வரும் வண்டி highbeamஇல் முன்விளக்கு போட்டுக்கொண்டு வந்தால் ஒருமுறை நம் highbeam விளக்கை போட்டு அணைத்தால் (blink) உடனே அவர்களின் highbeamஐ குறைத்துவிடுவார். 90% ஓட்டுனர்கள் இதை கடைபிடிப்பார். சில மடையர்கள் இங்கேயும் உள்ளனர்.

எங்கே எப்போது திரும்பினாலும் வண்டியின் indicator போடாமல் திரும்ப மாட்டார்கள். இந்நாட்டில் ஒலிபெருக்கி சத்தம் கேட்கவே முடியாது,  சொல்லப்போனால் ஒருவர் தம் வண்டியின் ஒலிபெருக்கியை மாத கணக்கில் எல்லாம் உபயோகப்படுத்தாமல் இருந்ததுண்டு. மிக சில சமயங்களில் மட்டுமே ஒலிபெருக்கி பயன் பட நேரிடும். மற்ற படி ஒலிபெருக்கி அடித்துவிட்டால் தமக்கு முன் செல்லும் ஓட்டுனருக்கு அது ஒரு அவமானம் நேரிட்டதுபோல இங்கே. அடடா நமக்கு horn அடிச்சிட்டானே, என்ன தப்பு பண்ணோம் என்று தோணும் அளவுக்கு இருக்கும்.


அதேபோல சாலையில் கண்ட இடத்தில் எல்லாம் வேகத்தடை கிடையாது, இதுபற்றி நான்காம் அத்தியாயத்தில் படித்திருப்பீர்கள். எந்த ஒரு சாலையிலும் போக்குவரத்து காவலர் என்று ஒருவர் இருக்கவே மாட்டார். அப்படி ஒரு காவலர் இங்கு கிடையாது. மிக முக்கிய நேரங்களில் மட்டும்; ஏதேனும் வண்டி பழுது ஏற்பட்டாலோ, விபத்து நேரிட்டாலோ காவலர் வந்து வண்டிகளை நிறுத்தி அனுப்புவார், மற்றபடி போக்குவரத்துக்கு காவலர் என்று எந்த ஒரு சாலையிலும் இருக்க மாட்டார்கள் ஆனால் ஒவ்வொரு சாலையிலும் பகலானாலும் நள்ளிரவானாலும் signalஇல் சிகப்பு விளக்கு இருந்தால் வண்டிகள் நிறுத்தப்படும். மஞ்சள் விளக்கு வந்த உடனே வண்டியை நிறுத்திவிடுவார். கோட்டுக்கு முன் கூட மிக சில வண்டிகள் தான் நிற்கும்.

இதெல்லாம் இவர்கள் கடைபிடிக்க காரணம் உரிமம் வாங்கும்போதே விதிகளை படித்ததும், learners permit வாங்கும்போது வைத்த தேர்வும், மற்றும் சிறு வயதிலிருந்தே பெற்றோருடனும், மற்றவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை பார்த்தும் வளந்த விதம் தான். வாகனத்தினுள் உட்கார்ந்தவுடனேயே முதல் வேலை seat belt அணிவது, அணியாவிட்டால் வண்டியில் சத்தம் வந்துக்கொண்டே இருக்கும். முன்னிருக்கையில் இருக்கும் இருவரும் கட்டாயமாக அணியவேண்டும். (seat belt அணியாமல் யாரும் இருக்க மாட்டார்கள்), சில மாநிலங்களில் பின்னிருக்கையில் இருப்பவரும் அணியவேண்டும்.


நம் நாட்டில் என்ன விதிகள் இருக்கின்றது என்பது போக்குவரத்து காவலருக்கு கூட நிச்சயம் தெரிந்திருக்காது. ஏனென்றால் நாமெல்லாம் எங்கே விதிகளைப் படித்தோம், தேர்வு எழுதினோம்? எனக்கு நான் விவேகானந்தா கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது அவர்களாகவே வந்து மாணவர்களுக்கு இலவச learners permit என்று கொடுத்தார்கள், எந்த வயதில் விதிகளை தெரிந்துகொள்ள வேண்டுமோ, அங்கேயே தேர்வு இல்லாமல் learners permit கொடுத்துவிடுகிறார்கள். பிறகு எங்கே விதிகளை மதிப்பது?

மூன்று மாதத்துக்குள் சென்று எனது நண்பன் கற்றுக்கொடுத்த வண்டியை எடுத்துக்கொண்டு சென்று; முதல்நாள் நாற்பது பேர் ஆச்சு நாளைக்கு வா என்று அனுப்பிவிடப்பட்டு அடுத்தநாள் சென்று ஏதோ ஓட்டி காட்டினேன், அவர்களும் சேரி இந்தா என்று உரிமத்தை கொடுத்தார்கள். எங்கடா கேமரா என்று தேடிக்கொண்டிருக்கும் போதே போப்பா போட்டோ எடுத்தாச்சு என்று "பே" என்று முழிக்கும் ஒரு கேவலமான போட்டோ கொண்ட ஓட்டுநர் உரிமத்துடன் அனுப்பிவிட்டனர்.


ஆனால் இங்கு, learners permit இருந்தால் தான் வாகனம் ஓட்ட சொல்லிக்கொடுக்கும் நபர் வண்டியில் நம்மை அனுமதிப்பார். மற்றும் வண்டி ஓட்டிக்காட்டும் தேர்வு உள்ள அன்று நம்மை தவிர யாரும் DMV அலுவலகத்தில் பேசக்கூட முடியாது. நம் கூடவே DMV ஊழியர் உட்கார்ந்திருப்பார் அவர் சொல்லும் சாலையில் வண்டியை ஒட்டி காட்டவேண்டும், எந்த ஒரு தவருமின்றி ஓட்டினால் approved என்று உள்ளே அனுப்பிவைப்பார், உரிய கட்டணத்தை செலுத்தி படம் எடுக்க நின்றால், நமக்கு முன்னிருக்கும் computer monitorஇல் படம் தெரியும்,  பிடிக்கவில்லை என்றால் மற்றொரு முறை எடுப்பர்.

சில இடங்களில் சாலையில் "Deaf child in area", மான்கள் நடமாடும் இடம், கரடி நடமாடும் இடம், குதிரை செல்லும் இடம் என்று குறிப்பீடுகள் வைக்கப்பட்டிருக்கும். ஹா... எங்கள் ஓசூரில் யானைகள் நடமாடும் இடம் என்றே குறிப்பீடு உண்டு!

இது யானைகள் நடமாடுமிடம், இது எங்க ஓசூர்!
ஆக, மக்களுக்கு தேவையான அனைத்து குறிப்பீடுகளும் சாலையில் உண்டு, குறிப்பாக மேடு பள்ளம் அல்லாத சாலைகள் உண்டு, நாம் செல்லும் பாதையிலேயே எதிரே தடால் என்று வராத ஓட்டுநர்களும் அதற்கான விதிகளும் உண்டு, கண்டபடி horn அடிக்காத மக்கள், வண்டியை தேவை இல்லாமல் ஓரம் கட்டி கையேந்தாத காவலர், seat belt காவலருக்காக போடாமல், தமக்காக போடும் ஓட்டுனர்கள் என்று அடுத்தவர் வந்து விதிகளை சொல்லிக்கொடுக்க தேவை இன்றி தாமாகவே அனைத்து விதிகளையும் கடைபிடிக்கும் இந்த நாட்டின் மக்களை என்னவென்று சொல்வது? அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம் என்று தான் சொல்லவேண்டும்!

அடுத்த அத்தியாயம் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளிவரும்.

இதுதாங்க அமெரிக்கா தொடர் மேலும் நான்கு அத்தியாயங்களுடன் முற்றுப்பெறும்.
Blogger Widget
Related Posts Plugin for WordPress, Blogger...