-->

புதன், 29 நவம்பர், 2017

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 5 | புது வெள்ளை மழை!


நினைவிருக்கிறதா? இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் ஏதோ பொறாமை வரும், கோவம் வரும் என்றெல்லாம் சொன்னேனே? அதில் பாதி எந்த இடத்தி என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். மீதி என்ன என்றால்... இப்படி பறந்து கிடைக்கும் அமெரிக்காவில் காட்டுக்கு நடுவே சென்றாலும் சாலை அற்புதமாக போடப் பட்டிருக்கும், ஒருசில இடம் கன்னாபின்னா மேடு, ஒரு வீடும் கண்ணுக்கு தென்படவில்லையே, இந்த பக்கம் ஒன்னும் இல்லையே, இது அடர்ந்த காடாச்சே, என்று என்னென்ன தோணுமோ அந்தந்த இடத்துக்கு சென்றாலும் அங்கெல்லாம் "தரமான ரோடு" போடப் பட்டிருக்கும். இந்த மூன்று ஆண்டுகளில் நான் குறைந்தது இருபதாயிரம் மைல்கள் பயணித்திருப்பேன், முகம் சுழிக்கும் அளவு எங்கும் சாலையை கண்டதில்லை. 

இங்கே பனிக்காலத்தில் சாலையில் பனி விரைவில்கரையவும், வண்டிகள் வழுக்காமல் செல்லவும்    கல்லுப்பு தூவுவார்கள்! பல truckகுகள் (தனியார் மற்றும் அரசு வண்டிகள்) தொடர்ந்து சாலையை சுத்தம் செய்துக்க கொண்டே இருக்கும், சாலையில் பனி இல்லாமல் , மக்கள் வேலைக்கு செல்ல சிரமம் இல்லாமல் இருக்க தொடர்ந்து பணியை அகற்றிக்கொண்டே இருப்பார்கள். அதே போல சாலையின் இரு புறமும் அங்கங்கே மழை தண்ர் செல்ல வடிகால் இருக்கும், எவ்வளவு பெரிதாக மழை வந்தாலும் சாலையில் தண்ணீர் தேங்கவே தேங்காது!

டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அவ்வவ்போது பனி பொழியும். சில ஆண்டுகள் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த பனி கரைவதற்கு மே மாதம் இறுதி வரை கூட ஆகும். இந்த பனியை பற்றி சொல்லும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும், இந்த தலைப்பு அமெரிக்காவில் உள்ள பருவ காலங்களைப் பற்றி தான் இந்த தலைப்பு என்று! ஆம், இங்கிருக்கும் பருவ காலங்களை பற்றி இந்த தலைப்பில் பார்ப்போம்.

2015இல் பெய்த பெரும் பனிக்கு (Blizzard) அடுத்த நாள் எடுத்த படம்.
இங்கு நான் வந்திறங்கியது அக்டோபர் மாதம். மரங்களில் உள்ள இலைகளெல்லாம் ஆரஞ்சு நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும், சிகப்பு நிறத்திலும் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது. ஆஹா... சினிமாவில் வருவது போலவே இருக்கிறதே என்று மிக பரவசமாக இருந்தது. இப்படித்தான் எப்பொழுதும் இருக்கும் போல என்று நினைத்துக்கொண்டேன். ஒரு வாரம் இருக்கும், வழக்கம் போல அலுவலகம் செல்ல பேருந்து நிறுத்தத்திற்கு வழக்கமான பாதையில் நடந்து சென்றேன், மரங்களில் இருந்த இலைகளெல்லாம் உதிர்ந்திருந்தன! என்னடா இது... இவ்வளவு அழகா இருக்கே என்று நினைத்ததாலோ என்னவோ எல்லா இலைகளும் கொட்டி விட்டது என்று நினைத்துக்கொண்டே வருத்தத்தில் அன்று அலுவலகம் சென்றேன். பிறகு தான் இங்கிருக்கும் பருவ காலம் பற்றி புரிய ஆரமித்தது.

நம்மூரிலும் இலையுதிர் காலம் இருக்கிறது, நான் படித்த வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியிலும், ஓசூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முழு ஆண்டு பரிட்சை விடுமுறைக்கு முன்னர் பள்ளியிலிருக்கும் மரங்களிலிருந்து இலைகளெல்லாம் உதிர்ந்து இருக்கும், ஜூன் மாதம் பள்ளி திறக்கும் போது பச்சைபசேலென்று புதிதாக இலைகள் வந்திருக்கும். இதுதான் எனக்கு தெரிந்த இலையுதிர்காலம், ஆனால் இங்கோ... இலையுதிர்காலம் என்றால் நாட்டிலிருக்கும் மொத்த மரமும்மொட்டையாகிவிடுகிறது!


செப்டம்பர், அக்டோபர் மாதம் முதல் குளிர் ஆரமிக்கும். அக்டோபர் மாதம் முதல் பகலில் வெயிலும் (மிதமான வெயில் தான்!) இரவில் குளிரும் இருக்கும்... குளிர் அதிகமாக ஆக, பச்சை இலைகளெல்லாம் நிறம் மாற ஆரமிக்கும். ஒரு வேலை வெயில் அதிகமாக இருந்தால் நிறம் மாறுவதற்கு தாமதம் ஆகும். நியூ ஜெர்சியின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பருவம் மாறும்.  அதாவது வடக்கில் குளிர் செப்டெம்பர் மாதமே ஆரமித்துவிடும். நியூ ஜெர்சியில் செப்டெம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் குளிர் ஆரமிக்கும், அப்படியே வாஷிங்டன், விர்ஜினியா என்று தெற்கு நோக்கி செல்லும். சரி இதுல என்ன இருக்கு என்கிறீர்களா? ஆம், இதுல தான் விஷயம் இருக்கு.... இப்படி குளிர் ஆரமித்தவுடன் தான் இயற்கை விரும்பிகளுக்கு கொண்டாட்டமே. 

Bear Mountain 

எனது குடியிருப்பிலிருந்து ரெண்டு தெரு தள்ளி...

படங்கள்: நானே தான்!
குளிர் ஆரமித்த மாநிலங்களில் முதலில் இலைகளின் நிறம் மாற... மாற இயற்கையின் அழகு நாளெல்லாம் கண்டு கழித்தாலும் மேலும் மேலும் ரசிக்கத் தூண்டும். அந்த சமயங்களில் இந்த நிற மாற்றத்தை கண்டு களிக்க நாட்டின் பல பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம் வரும், ஆனால் சரியான நாட்களில் வந்தால் தான் இந்த இயற்க்கை அழகை காண முடியும். அதனால் தான் இந்த நிறம் மாற்றங்களை கண்காணிக்க பல வலைத்தளங்கள் இருக்கின்றன. பல வலை தளங்களில் எழுதுபவர்கள் தினமும் சில முக்கிய இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து இன்று இவ்வளவு விழுக்காடு நிறம் மாறியிருக்கிறது, அவ்வளவு விழுக்காடு இலைகள் உதிர்ந்திருக்கிறது என்று நேரடி update கொடுத்துக் கொண்டிருப்பர். இதை பொறுத்து தான் மக்கள் சுற்றிப்பார்க்க திட்டமிடுவர்.  குறிப்பிட்ட ஒரு வாரம் அலலது அதற்கும் குறைவான நாட்கள் மட்டும் தான் நிறங்கள் இருக்கும், இந்த காலத்தில் இலைகள் பலவீனமாக இருக்கும், அதனால் இந்த சமயத்தில் வரும் மழை, காற்று  போன்றவற்றால் நாளுக்கு நாள் இலைகள் உதிர்ந்துகொண்டே இருக்கும். 

மேலே குறிப்பிட்டது இது தான்!
இலைகள் முதலில் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும், குளிரை பொறுத்து வேகமாக ஆரஞ்சு நிறத்துக்கு அடுத்து மாறும், அதிலிருந்து சிகப்பு நிறமாக மாறும், மழை, காற்றிலிருந்து தப்பியது என்றால் brown நிறமாக மாறி அதன் பின்னர் உதிர்ந்து விடும். மரத்தில் ஒரு இலைகூட இல்லாமல் மொட்டை மரமாக மூன்று மாதங்கள் இருக்கும். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் மொத்த நாடும், அல்லது எனக்கு தெரிந்தமட்டில் குறைந்தபட்சம் ஒரு இருபது மாநிலங்களிலாவது மொத்தம் மரமும் மொட்டையாக இருக்கும். இத்தனை நாள் வழி நெடுக்க பச்சை பசேலென்று இருந்த மரங்களெல்லாம் களையிழந்து இருக்கும். இதெல்லாம் சில நாட்களுக்கு தான்.... ஏனென்றால் இதன் பின்னர் தான் பனிகாலம்ஆரமித்து, மொட்டை மரங்களை பனி அலங்கரிக்கும்.

பெரும்பாலும் டிசம்பர் மூன்றாவது வாரம் முதலெல்லாம் பனி பொழிய ஆரமித்துவிடும். முதல் பனி கொள்ளை அழகு! ரோஜா படைத்து பாட்டுலதானேபனியை முதன் முதலில் பார்த்தோம்! நிச்சயம் நம் மக்கள் எங்கு கண்ணிலும் புகைப் படம் எடுத்துக்கொண்டிருப்பர். அதை பார்ப்பதே ஒரு அழகு! பொறுமையாக கவனித்தால் பனி ஒரு அழகு இலைபோல பொழியும். சாரல், தூறல், மழை... இதுபோல Flurry, Snow. எனக்கு தெரிந்து இது இரண்டு வார்த்தைகள் தான். Flurry என்பது சாரல், குட்டி தூறல் போல ஒவ்வொரு வெள்ளை பூ போல மென்மையாக வெள்ளை சாரல் பொழியும். இதுவே பெரிதாக வரும்போது மழைபோல பனி பொழியும். 

அங்கே தெரியும் Signalஐ தாண்டினால் எனது bus stop.   
பனியில் ஒரு மான் குட்டி!


இந்தப் படத்தில் இருப்பவர் தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறார்!
முன்பு சொன்னது போல தான், நியூ ஜெர்சியின் வடக்கிலிருந்து தெற்கே பனியின் அளவு மாறும். Maine, New Hampshire, Upstate New York (நயாகரா நீர் வீழ்ச்சி, அமெரிக்க - Canada எல்லை) பகுதியெல்லாம் பெரும்பாலும் அதிகமாக பனிபொழியும் இடங்கள். நியூ ஜெர்சியும் அதிகம் பனிபொழியும் இடம் என்றாலும் மேற் கூறிய இடங்களை விட குறைந்த அளவில் தான் பனி இருக்கும். இந்த மூன்று முதல் நான்கு மாதங்கள் குளிர் -25 வரை செல்லும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் -29 ஆக இருந்தது குளிர். மொட்டை மரங்களெல்லாம் குல்லாய் போட்டது போல பனியால் மூடப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்!

இந்த குளிர் காலங்களில் மக்கள் அணியும் ஆடைகளும் மாறும். வெளியில் செல்ல வேண்டும் என்றாலும், வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் குளிருக்கான ஆடைகள் அணிவதற்க்கே கூடுதலாக ஒரு ஐந்து, பத்து நிமிடங்கள் ஆகும். Thermal Wear என்று ஒன்று உண்டு, சட்டை, pant இரண்டும் இருக்கும், உடம்பை சூடாக இருக்கு வைக்கும் ஆடை. இதை போட்டுக்கொண்டு, இதன் மேலே வழக்கமான சட்டை, pant அணிந்துக்கொண்டு, அதன் மேல் குளிருக்கான Jacket (ஆம், இப்படித்தான் சொல்கிறார்கள் அதன் பெயரை!), சிலர் அந்த jacket அணிவதற்கு முன் sweater கூட போட்டுக்கொள்வார்கள், அதன் பிறகு குல்லா, கைக்கு gloves... சப்ப்ப்ப்ப்பா... இதை type பண்ணவே அஞ்சு நிமிஷம் ஆயிடிச்சு!!

முகமூடி கொள்ளைக் காரன்!
இந்த குளிர் காலத்தில் பனிச்சறுக்கு, snow tubing, ice கட்டியில் சிற்பம் வடிப்பது போன்று பனி காலத்துக்கு ஏற்ப பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும். பனிக்காலங்களில் எல்லாம் சூரியன் இருக்காதா என்ன என்று தோணலாம், இருக்கும்... மாலையில் வீட்டில் வெளிச்சத்துக்கு tubelight போட்டு தூங்கும் முன் அணைப்பதுபோல வெறும் வெளிச்சத்துக்காக மட்டும் தினமும் சூரியன் வந்துபோகும். உடம்பில் சூடு உரைக்கவே உரைக்காது. ஆனால் பளிச்சென்று கண்ணில் வெளிச்சம் படும், எல்லா இடங்களும் பனியால் சூழ்ந்து இருக்கும், அதனால் சூரிய வெளிச்சம் பட்டு எல்லா பக்கத்திலிருந்தும் வெளிச்சம் பிரதிபலிக்கும். இதனால் கண் கூசாமல் இருக்க தான் Sunglass அதிகம் அணிகிறார்கள். அது கண்ணை இந்த அதீத வெளிச்சத்திலிருந்து  பாதுகாக்கும்.



இங்கே மழைக்காலம் என்று தனியாக ஒன்று கிடையாது. பனிக்காலம் இறுதியிலும், இலையுதிர்காலம் இறுதியிலும், வசந்தகாலத்தின் ஆரம்பத்திலும் அவ்வப்போது மழை பெய்யும். சில மாநிலங்களில் இது மாறுபடும். ஆக, மார்ச் மாதம் இறுதி முதல் சற்று மழை பெய்து ஏற்கனவே பெய்த பனியை கறையவைக்க ஆரமிக்கும். இதுதான் வசந்த காலத்தின் ஆரம்பம். இலைகளெல்லாம் அழகாக துளிர் விட ஆரமிக்கும். சில பகுதிகளில் Cherry Blossom என்று சொல்லப்படும் Cherry மரங்கள் நடப்பட்டிருக்கும், சில ஊர்களில் அந்த Cherry Blossomஐ காண ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் கூட்டம் களைகட்டும். குறிப்பாக வாஷிங்டனில் இது மிக பிரபலம். 
இது Washingtonஇல் எடுத்தது!
இது வீட்டுக்கு பக்கத்துலயே எடுத்தது!
பூத்துக்கு குலுங்கும் cherry blossom.
ஜப்பானிலிருந்து வரவழைக்கப்பட்டு அமெரிக்காவில் நடப்பு பட்ட இம்மரங்கள் இந்த வசந்த காலத்தின் ஆரமத்தில் பெரும் அழகாக இருக்கும்! மரம் முழுதும் Pink, வெள்ளை சில நேரத்தில் ஊதா நிறத்திலும் மொத்த மரமும் பூத்திருக்கும். இது வெறும் இரண்டு நாட்கள் நாட்டும் தான் இப்படி இருக்கும், இந்த இரண்டு நாட்களில் காண தவறினால் மீண்டும் அடுத்த ஆண்டு மட்டும் தான் இந்த அழகை காண முடியும்.

இந்நாட்டில் பெரும்பாலும் இப்படித்தான். இயற்கையின்மாற்றங்களை கால அட்டவணை போட்டு மக்கள் ரசிப்பார்கள். அரசாங்கமும், தனியார் பொழுதுபோக்கு துறையும் மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு செல்லவும், வீட்டிலேயே முடங்கி இருக்காமல் வெளியில் சென்று பொழுது போக்க காலத்துக்கு ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்களை அட்டவணை போட்டு கடைபிடிப்பார்கள்.  ஏப்ரல், மே முதல் குளிர் குறைய ஆரமிக்க... ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் இங்கே கோடை காலம்! இந்நாட்டவர்க்கு கொண்டாட்டம் தான்! 
நிறைந்த ஆடையிலிருந்து குறைந்த ஆடைகளுக்கு மாறும் காலம்; மக்களுக்கு! குறைந்த இலைகளிலிருந்து முழுதும் இலைகளால்  நிறைந்திருக்கும் காலம்; மரங்களுக்கு!
பள்ளிகளுக்கு மூன்று மாதங்கள் விடுமுறை. அலுவலகத்தில் பலர் விடுமுறை எடுத்து வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் காலம். நீச்சல், Scuba diving, para sailing என்று கோடை காலத்துக்கு ஏற்ற பொழுது போக்கு அம்சங்கள் ஆரமிக்கும்.

குளிர்காலம் முழுக்க கடலில் தண்ணீர் வெகு ஜில்லென்று இருக்கும். யாரும் கடற்கரைக்கு செல்ல மாட்டார்கள்... நீர் நிலைகள் உறைந்து பணியாள் படர்ந்திருக்கும்... ஏரியில் தண்ணீர் உறைந்த பின்னர் நடக்கவேய முடியும்... ஆனால் யாராவது பார்த்தல் அனுமதிக்க மாட்டார்கள், அது மிக ஆபத்தாக முடியும் ஒருவேளை மிகவும் கெட்டியாகவில்லை என்றால்!  அட... கடற்கரையை கோடை காலத்துக்கு தான் திறப்பாங்கன்னா பாத்துகோங்களேன்! அதென்ன கடையா திறக்கறதுக்குன்னு நினைக்கிறீங்களா? ஆமாம்... இங்கே இருக்கு எல்லா கடற்கரையும் நம்மூரில் இருப்பது போல இலவசம் இல்லை... beachஇல் குறிப்பிட்ட தூரம் வெவ்வேறு சிலரால் நிர்வகிக்கப்பட்டு வரும். $10 அலலது $20 கட்டணம் இருக்கும் ஒரு முழு நாளுக்கு. கையில் ஒரு band கட்டிவிடுவார்கள். அவவ்ளவுதான், மற்ற படி கடலில் அவர்கள் போட்ட எல்லை கோடு வரை நீந்தலாம், விளையாடலாம்... பலர் sunbath எடுத்துக்கொண்டிப்பார்கள். மேலும் Lifeguard அந்தந்த பகுதியில் மக்களை கவனித்து கொண்டே இருப்பார்கள் கடலில் தத்தளித்தால் உடனே வந்து காப்பாற்ற ஆட்கள் இருந்து கொண்டே இருஓப்பார்கள். பீச்சில் சற்று குப்பை இருந்தாலும் டபக்கென்று உடனே வந்து கொண்டு சென்று சுத்தம் செய்து விடுவார்கள்.

இப்படியாக மூன்று மாதம் கோடை முடிந்து மெதுவாக மீண்டும் செப்டம்பர் மாதம் முதல் மிதமான குளிரிலிருந்து மீண்டும் இலையுதிர் காலம் ஆரமிக்கும்..... இந்த நான்கு காலங்களையும் காட்டும் படங்களாக, ஒரே இடத்தை நான்கு காலங்களிலும் நான் எடுத்த படத்தை ஒரு காணொளியாக இங்கே உங்களுக்காக இனப்பிப்பு கொடுத்துள்ளேன். 


Spring -> Summer -> Fall -> Autumn -> Winter இதுதான் பருவகால சுழற்சி. இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால்... ஆறு மாதங்கள் விரைவில் இருட்டிவிடும்.... ஆறு மாதங்கள் மிக தாமதமாக இருட்டும்.... நான் பள்ளியில் படித்த in summer days are longer, nights are shorter; in winter days are shorter, nights are longer என்பதற்கு அர்த்தம் இங்கு வந்த பின்னர் தான் புரிந்தது! அதாவது நான்காம் வகுப்பில் படித்த பாடத்தின் practical அர்த்தம் இருபது ஆண்டு கழித்து தான் காண நேர்ந்தது! அக்டோபர் முதல் மாலை நான்கு மணிக்கே "கும்மிருட்டாக" இருக்கும். நான்கு மணிக்கெல்லாம் சூரிய அஸ்தமனம் ஆகிவிடும், காலையில் ஏழு மணிக்கு மேல் தான் சூரிய உதயம் இருக்கும், வெளிச்சம் வரும். மார்ச்சு மாதம் கழித்து மெதுவாக சூரிய அஸ்தமனம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நிமிடம் தாமதம் ஆகி, ஆகஸ்ட் இறுதி வரை இரவு ஒன்பது மணிக்கு தான் சூரிய அஸ்தமனம் ஆகும், இரவி பத்து மணி வரை நல்ல வெளிச்சம் இருக்கும்! இந்த சமயத்தில் தான் Day Light Saving என்று ஒன்று உண்டு இதை சுருக்கி DST என்பார்கள். நவம்பர் மாதம் முதல்  வாரத்தில் நாட்டில் எல்லோருமே கடிகாரத்தை ஒரு மணி நேரம் பின் திருப்பி வைப்பார்கள்... மார்ச் மாதம் இரண்டாம் வாரம் கடிகாரத்தை ஒரு மணி நேரம் அதிகப் படுத்தி வைப்பார்கள்.

இப்படியாக எந்த காலமாக இருந்தாலும் வெளியே சென்று இயற்கையுடன் இணைந்திருக்க, இயற்கையை ரசிக்க என்று ஒரு விஷயம் இருக்கும். அதை தவற விட்டால், மீண்டும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்! ஹ்ம்ம்.. இப்போதிருக்கும் பருவ மாற்றத்தை பார்த்தால், அடுத்த வருடம் என்பது ஒரு மாயை... காற்றுள்ளபோதே தூற்றிக் கொண்டால் தான் இயற்கையை ரசிக்க முடியும்!

*** அடுத்த அத்தியாயம் விரைவில்.... ***

இந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி!
Blogger Widget

6 கருத்துகள்:

  1. படிக்கும் போதே குளிரை கைல் கால் ஆடுது. எங்க ஊரில் இந்த பனி பிரச்சனை இல்லை ... வருசத்துக்கு ஒருமுறை அருகில் உள்ள மலைக்கு சென்று ரெண்டு மணி நேரம் ஆட்டம் பாட்டம் மற்றும் செலஃபீ எடுத்துட்டு வீட்டுக்கு வந்துடுவோம்..

    பதிலளிநீக்கு
  2. நன்றி திரு நாகேந்திர பாரதி அவர்களே!

    பதிலளிநீக்கு