-->

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

இதுதாங்க அமெரிக்கா - SEASON 2: விரைவில்

இதுதாங்க அமெரிக்கா கட்டுரைத் தொடர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, முதல் அத்தியாயம் செப்டம்பர் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதுவரை பத்து அத்தியாயங்களும், மூன்றாவது அத்தியாயத்தின் தொடர்ச்சியாக 3.0 என்ற துணை அத்தியாயமும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நடுவில் கடந்த ஆண்டின் சிறந்த தமிழ்  வலைத்தளமாக கருத்துக்களம், வலை எழுத்தாளர்களின் தொகுப்பாளரான, நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வலைப்பூக்களை (அனைத்து மொழி வலைப்பூக்களும் அடக்கம்) கொண்ட IndiBlogger என்ற அமைப்பால் வல்லுநர்களை கொண்ட குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டது என்ற செய்தியையும் உங்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்துக்கொண்டேன்.
முகப்பு கட்டுரையை தவிர்த்து, இதுவரை வெளிவந்த மொத்த அத்தியாயங்களையும் ஏழாயிரத்தி நூற்று எழுபத்தியாறு (7176) வாசகர்கள் படித்துள்ளார். வலைதளத்தில் எழுபத்தியாறு பேர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தும், ஒவ்வொரு அத்தியாயத்துக்கு பின்னரும் எனது Whatsapp, Facebook பக்கங்களில் அவ்வப்போது சிலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.

நீங்கள் கருத்துக்களத்தின் புதிய வாசகராக இருந்தால், அமெரிக்காவைப் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால், கீழ் கண்ட அத்தியாயங்களை Season 2 வெளிவருவதற்கு முன் படியுங்கள்.


பத்தாவது அத்தியாயத்துக்குப் பின்னர் எனது YouTube சேனலில் சற்று கவனம் செலுத்தியமையால் கடந்த ஒரு மாதமாக புதிய அத்தியாயம் வெளியிடுவதில் தாமதமாகிவிட்டது.

இப்போது மீண்டும் இதுதாங்க அமெரிக்கா கட்டுரைத் தொடரை புதுப்பொலிவுடன் SEASON 2  (நாமும் சொல்லிக்கொள்ளலாமே!) என்று வெளியிடவுள்ளேன். தொடர்ந்து இணைந்திருந்து படித்து புதிய விஷங்களை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த கட்டுரையில் எழுதப்படும் அனைத்து விஷயங்களும் நான் நேரடியாக காணும் எனது அனுபவம், செய்திதாள்களை போலோ, வாரப் பத்திரிகையை போலோ நான் எங்கும் சென்று ஆராய்ந்து முழு விபரங்களை வெளியிடுவதில்லை, அதனால் சில புள்ளி விபரங்கள் தவறாக இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

பகிர்ந்துக்கொள்ளும் விஷயத்தில் ஏதும் தவறு இருப்பின் தாராளமாக அதை comments பகுதியில் தெரிவியுங்கள் (சில வாசகர்கள் ஏற்கனவே தவறை திருத்தியுள்ளனர்). மிக விரைவில் புதிய அத்தியாயம் வெளியிட முனைத்துக்கொண்டிருக்கிறேன். நன்றி!! நன்றி!!!

Blogger Widget

புதன், 14 மார்ச், 2018

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 10 | அமெரிக்காவில் கோவில்கள்


உணவு விலைகளை பற்றி அறிந்தீர்கள் அல்லவா, இந்த உணவு நம் கோவில்களிலும், கோவில் கேன்டீனிலும் கிடைக்கும். அங்கே விலை குறைவாக வைத்து விற்பார்கள். நியூயார்க்கின் Pomona (ஊர் பெயர்) ரங்கநாதர் கோவில், பெனிசில்வேனியாவில் சிருங்கேரி மடத்தின் சாரதாம்பாள் கோவில்களில் மட்டும் இலவச அன்னதானம் வழங்கப்படும். அதுவும் ரங்கநாதர் கோவிலில் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை மடப்பள்ளியில் சுடச்சுட செய்த வெண்பொங்கல், கதம்ப சாதம், தயிர் சாதம் இருக்கும். அபப்டியே மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கொடுக்கும் பிரசாதம் போலவே இருக்கும்.உலகிலேயே மக்கள் பெருமளவில் செல்வது கிறித்துவர்களின் தேவாலயம் இருக்கும்  வாடிகன் நகரம், மற்றொன்று இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்கா. இதுபோல உலகிலேயே அதிக மக்கள் சென்று வழிபடும் ஹிந்துக் கோவில் திருப்பதி திருமலை தேவஸ்தானம். நல்லவேளையாக திருப்பதி தமிழகத்துடன் அல்லாமல் ஆந்திராவுடன் இணைந்தது. தமிழகத்தில் இருந்திருந்தால் வெங்கடாசலபதியைவிட அரசியல்வாதிகள்தான் பணக்காரர்களாக இருந்திருப்பார்கள். இப்பமட்டும் என்னவாம் என்றுதானே கேட்கிறீர்கள்? அதுவும் சரிதான்...

சரி இந்தக் கோவில்கள், ஆலய வழிபாடுகள் இங்கே எப்படி இருக்கிறது என்று காண்போம்.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்று அந்த காலத்தில் சொல்வது உண்டு. அது நம் நாட்டில் மட்டுமல்ல, நம் மக்கள் இங்கேயும் அதை மிக நல்ல முறையில் கடைபிடிக்கிறார்கள். இந்தியர்கள் வசிக்கும் ஊர்களில் நிச்சயம் கோவில்கள் இருக்கும். குறிப்பாக இங்கே நியூ ஜெர்சி, நியூயார்க், பென்சில்வேனியா, விர்ஜினியா, டெக்சாஸ் போன்ற மாநிலங்களை எடுத்துக்கொண்டால் நம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் வகையில் பிரபலமாக இருக்கும் இந்தக் கோவில்கள். எப்படி நம் நாட்டில் ஒரு மாநிலத்தில் இருக்கும் கோவில் மற்ற மாநிலத்தவர்க்கும் தெரிந்திருக்குமோ, இங்கேயும் அதுபோல வேறு மாநிலத்தில் இருக்கும் கோவில் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும்.

இந்துக்கோவில்கள், குருத்வாரா, அக்ஷர்த்தம் கோவில், இஸ்கான் கிருஷ்ணர் கோவில், புத்தர் கோவில், கிறித்துவ தேவாலயம், மசூதிகள் என்று அனைத்து மத மக்களின் கோவில்களும் பெருமளவில் உண்டு. இந்தியாவிலிருந்து வேதம் படித்து இங்கே கோவில்களுக்கு வேலைக்கு வரவேண்டுமானால் அதற்கு தனி Visa உண்டு. Religious Visa என்று பெயர். ஆறு மாதங்களிலிருந்து இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் இந்த விசா. கோவில்கள் கேட்டுக்கொண்டால் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு விசா நீட்டிகிக்கப்படும்.ஹிந்து கோவில்களுக்கு அனைத்து மொழி பேசும் மக்களும் வந்து செல்வதால் கோவில்களில் பெரும்பாலும் அர்ச்சகர்கள் பல மொழி பேசுபவர்களாக இருப்பர். அதிக எண்ணிக்கையில் அர்ச்சகர்கள் இருக்கும் சில கோவில்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று அந்தந்த மொழி பேசும் மாநிலத்திலிருந்தே வந்திருப்பார். அனைத்து கோவில்களிலுமே எல்லா அர்ச்சகர்களும் ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்க முடியும். அதை கேட்கும் போது பெருமையாகவும் இருக்கும். இன்னாருக்கு இப்போதுதான் ஒரு மொழி தேவை என்று எப்போதுமே ஏதும் கிடையாது. தமிழ் மட்டும் பேசினால் போதும் என்று அரசியல் செய்யும் மக்களுக்கு இதெல்லாம் எங்கே தெரிய, புரியப் போகிறது. நம் மாநிலத்தை/நாட்டை விட்டு வெளியே செல்லும்போது தான் மற்ற மொழி ஒன்றிரண்டு தெரிந்து வைத்திருப்பதன் அருமை புரியும்.

நான் வசிக்கும் நியூஜெர்சியில் BridgeWater என்ற ஊரில் இருக்கும் வெங்கடேஸ்வரப் பெருமாள் கோவில், Morganvilleலில் இருக்கும் குருவாயூரப்பன் கோவில்,  நியூயார்க்கின் Pomona வில் உள்ள அருள்மிகு ரங்கநாதர் கோவில், Flushing இல் இருக்கும் பிள்ளையார் கோவில், ராகவேந்திரா தியானக் கூடம், சாய்பாபா கோவில், பென்சில்வேனியாவில் உள்ள சிருங்கேரி மடம், அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் கோவில், கனெக்டிகட்டில் (பக்கத்துக்கு மாநிலம்) சில கோவில்கள் என்று நினைத்தால் சென்று வரும் தூரத்தில் இருக்கும் கோவில்கள். பெரும்பாலான இந்தியர்கள் வசிக்கும் இடத்திலிருந்து ஒன்றரை மணி நேரத்துக்குள் செல்ல முடியும். 30-70 மைல்கள் இருக்கும். இது தவிர சற்று தொலைவில் பயணம் மேற்கொண்டு செல்லும் கோவில்களும் உள்ளன.

அமெரிக்காவிலேயே பெரிய கோவில் என்றழைக்கப்படும் அக்ஷர்தம் எனப்படும் ஸ்வாமி நாராயண் மந்திர் என்ற கோவில் நியூ ஜெர்சியில் உள்ளது. இதே கோவில் டெக்சாஸ் மற்றும் வேறு இரண்டு மாநிலங்களிலும் உண்டு. இது குஜராத்தை மக்கள் கட்டி பராமரித்து வரும் கோவில். அதே போல பல மாநிலங்களில் ISKCON கிருஷ்ணர் கோவில்கள் உண்டு.

Flushing பிள்ளையார் கோவில் - நியூயார்க்

ஸ்ரீ சாரதாம்பாள் கோவில் - பென்சில்வேனியா

Pomona ரங்கநாதர் கோவில் - நியூயார்க்
குருவாயூரப்பன் கோவில் - நியூ ஜெர்சி
வெங்கடேச பெருமாள் கோவில் - நியூ ஜெர்சி
புத்தர் கோவில் நுழைவு வாயில் - நியூயார்க்
பெரும்பாலான கோவில்கள் அமைந்திருக்கும் இடமே எழில் மிகுந்திருக்கும். கோவில்கள் கம்பீர தோற்றத்துடன் நம் நாட்டில் உள்ள கோவில்கள் போலவே இருக்கும். ஆனால் என்ன, கோவில் கதவு மட்டும் நம்மூர் போல திறந்திருக்காது. கோவிலுக்குள் AC அல்லது Heater என்று பருவக்காலத்துக்கு எட்டாற்போல அமைந்திருப்பதால் நாம் தான் கதவை திறந்து மூடிக்கொள்ளவேண்டும். கோவிலுக்குள் நுழைந்தவுடன் காலணிகள் அடுக்கி வைக்க மர ரேக்குகள் இருக்கும். கால் அலம்பிக்கொள்ள குளிர் நீர், வெந்நீர் வரும் குழாய்கள் (Showerஇல் வரும் நீர் போல, கால் அருகில்) இருக்கும். Coatகளை மாட்டிவைக்க hanger உடன் கூடிய கொடி இருக்கும்.

பெரும்பாலான கோவில்களில் எல்லா கடவுள்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பர். வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் பெருமாள், தாயார் மட்டும் அன்றி சிவலிங்கம், பிள்ளையார், ஹனுமார், ராமர், கிருஷ்ணர், ஐயப்பன், முருகன், சத்யநாராயணா, நவகிரகம், அபிஷேக காசி லிங்கம் என்று அனைத்து கடவுள்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பர். சபரி மலைக்கு மாலை போடுவதுபோல இங்கேயும் மாலை போட்டுக்கொண்டு சற்று தொலைவில் இருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு என் நண்பர்கள் செல்வார்கள். Flushing பிள்ளையார் கோவிலுக்கு செல்ல அந்த வீதிக்கு சென்றாலே மயிலை கபாலி கோவில் சன்னிதி தெருவுக்கு சென்றார் போல இருக்கும். சில வீடுகள் சிகப்பு வெள்ளை என்று நம் ஊரில் கோவில் மதில் சுவரிலிருக்கும் வண்ணம் போல இருக்கும். அங்கே தேங்காய் உடைக்கும் இடமும் உண்டு.

எல்லா கோவில்களிலும் கலாச்சாரக் கூடம் இருக்கும். மாலை நேரங்களில் சிறுவர், சிறுமிகளுக்கு சஹஸ்ரநாமம், திவ்விய பிரபந்தம் என்று கலாச்சார வகுப்புகள் நடக்கும். சிறப்பு தினங்களில், பண்டிகை நிகழ்ச்சிகள் அன்று இந்த கலாச்சாரக் கூடங்களில் மேடை நாடகம், பரதநாட்டியம், கர்னாடக சங்கீத நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடக்கும். திருமண நிகழ்ச்சிகளும் நடக்கும்.

உத்சவகாலங்களில் பெருமாள் புறப்பாடு, தேர், வாகனம் என்று நம் ஊரில் கடைப் பிடிப்பது போலவே இங்கேயும் மிக அழகாகவும், சிறப்பாகவும் கடைபிடிக்கிறார்கள்.

சரி கடவுள் சேவித்தாகிவிட்டது, அடுத்து என்ன? பிரசாதம் தானே. ஆம், அதே தான். என்ன ஒரு புன்னகை உங்கள் முகத்தில்? கோவில் பிரசாதம் என்றாலே எல்லோருக்கும் ஒரு தனி பிரியம் தான். கோவில் ப்ரசாதத்தில் இருக்கும் சுவை என்னதான் முயற்சி செய்தாலும் நம்மால் கொண்டு வருவது சற்று கடினம் தான். இங்கேயும் அப்படிதான். Pomona வில் இருக்கும் ரங்கநாதர் கோவிலில் காலை முதல் இரவு வரை கோவிலே உள்ள மடப்பள்ளியில் சமைத்த பிரசாதம் பெரிய அண்டாவில் வைத்திருப்பார்கள். பக்கத்திலேயே Use & Throw தட்டுகள், Spoon, Tissue Paperகள் இருக்கும்.கோவிலில் இருக்கும் தன்னார்வலர்கள் பிரசாதம் பரிமாறுவார்கள், எவ்வளவு வேண்டுமானாலும் வீணாக்காமல் சாப்பிடலாம். ரங்கநாதர் கோவிலில் மட்டும் ப்ரசாதத்திற்கு கட்டணம் கிடையாது, "விருப்பப்பட்டால்" நமக்கு விருப்பப்பட்ட தொகையை உணவுக்கு கூடத்தில் இருக்கும் உண்டியலில் செலுத்தலாம். அதேபோல ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலுக்கு சென்றால், முதலில் அன்னதானக் கூடத்திற்கு சென்று சாப்பிட்டு வர சொல்லி பின்னர் அர்ச்சனை செய்ய சொல்வார்கள். ஏனைய கோவில்களில் இருக்கும் உணவகத்தில் வெளி உணவாக விலையை விட குறைவான விலையில் உணவு பண்டங்களை விற்பார்கள். Flushing பிள்ளையார் கோவில் உணவகத்தின் சுவைக்கு சரவணா பவனும், ஆனந்த பவனும் வரிசையில் நிற்கவேண்டும். அப்படி இருக்கும் அங்கே சுதை! (ஆஹா... எச்சில் ஊறுகிறது!!! கூடிய விரைவில் செல்ல வேண்டியதுதான்!)

நானும் என் மனைவியும்.
சொர்கவாசல் நுழைய சென்ற நாள்.
இங்கே, கோவில்களில் நம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து வைத்திருந்தால் தவறாமல் ஒவ்வொரு பண்டிகை, கிரஹணம், சிறப்பு தினங்கள் என்று அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் நாள், நேரம் என்று விரிவாக அனைத்து அம்சங்களையும் அனுப்பிவிடுவர். நம் நாட்டை விட்டு இங்கே வந்தாலும் அங்கே கடைபிடித்து வந்த ஒவ்வொரு விஷயமும் வானிலை இடம் கொடுக்காவிட்டாலும் இங்கிருக்கும் அர்ச்சகர்களும், கோவில் நிர்வாகிகளும், தர்மகர்தாக்களும், கோவில் கட்ட நன்கொடையை அள்ளிக்கொடுப்பவர்களும், பக்தர்களும் சிறிதளவும் குறையாமல் இங்கே கடைபிடித்து வருகிறார்கள் என்பது மிக மிக பாராட்ட வேண்டிய விஷயம்.


அடுத்த அத்தியாயம் விரைவில்...

கருத்துக்களத்தின் பதிவுகளை குரலொலியில் பதிவு செய்யும் முயற்சியாக, எனது YouTube பக்கத்தில் ஒரு முந்தைய பதிவுவை ஒலிவடிவில் பதிவேற்றம் செய்துள்ளேன். அதை கேட்டு தங்கள் கருத்தை தெரிவிக்கவும். வரவிருக்கும் பதிவுகளை மறவாமல் கேட்க https://youtube.com/bhargavkesavan என்ற எனது YouTube சேனலுக்கு Subscribe செய்யவும். நன்றி.

Blogger Widget

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து சாப்பிடுவோம், மற்ற நாட்களில் வேளைக்கு ஓரிடம் என வகை வகையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். காலை silkboard service ரோட்டில் இருக்கும் அண்ணன் கடை (அவர் பெயர் ராஜேஷ் என்று நினைக்கிறன்) நீங்கள் பெங்களூரில் இருப்பவராக இருந்தால், அவசியம் அங்கே சாப்பிடுங்கள்... காலை சிற்றுண்டி அவ்வளவு ருசியாக இருக்கும்... இட்லி, தோசை, மெதுவடை, வாங்கிபாத் இவை மட்டும் தான், இதனுடன் ஒரு கார சட்னி கொடுப்பார் பாருங்க!!! அச்சோ... அவ்வளவு ருசியாக இருக்கும்! இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே என் நாக்கில் எச்சில் ஊறுகிறது! (அங்கே சென்றால் என் படத்தை காண்பித்து அவரை விசாரித்ததாக சொல்லவும்!), மதியம் சேட்டா கடையில் கேரளா அரிசியுடன் முழு சாப்பாடு, இரவு பெரும்பாலும் அலுவலகத்தில் இருக்கும் கேன்டீனில் சாப்பாடு அல்லது, அலுவலகத்துக்கு எதிர் ரோட்டில் இருக்கும் ஆந்திரா மெஸ்ஸில் தோசை அல்லது ஊத்தப்பம்! ஆஹா... என்ன ஒரு சாப்பாடு!!! நான் தங்கியிருந்த வெங்கடாபுரத்தில் உள்ள கிருஷ்ணா உபஹாரில் இட்லி, வடை, சாம்பார் தான் பெரும்பாலான நாட்களில் காலை சிற்றுண்டி. சாம்பாரில் பெரிய அளவில் இருக்கும் மெது வடை ஊறிக்கொண்டிருக்க, "சாம்பார் இன்னா சொல்பா பேக்கு" என்று கேட்டு வாங்கி ருசித்து சாப்பிட்டு வருவேன்.

இங்கே வரும்போது சாம்பார்பொடி, ரசப்பொடி, இட்லி மிளகாய்ப்பொடி என்று எனக்கு பிடித்ததெல்லாம் சில மாதங்களுக்கு வருமளவு என் அம்மா எனக்கு அரைத்து கொடுத்து அனுப்பினார். இங்கே வரும் வழியில் சாப்பிடவும் அமிர்தம் போல கேசரி கொடுத்து அனுப்பினார். இங்கே வரும் வழியிலேயே அபு தாபியில் அமெரிக்க homeland security அலுவலர்கள் நான் கொண்டு வந்த பையை திறந்துப் பார்த்து கேள்விகேட்டுக் கொண்டிருந்தனர். நானும் ஜீன்ஸ் படத்தில் வரும் லட்சுமி போல டேய் இது கேசரி டா... sweet... சாப்பிடறது என்று கையை வாயில் போடுவது போல சைகை காமித்தும் ஆங்கிலத்தில் சொல்லியும் அதை அவன் என் கையில் கொடுத்தால் போதும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஹோ.. சேரி என்று அவன் கொடுத்ததும் ஆளை விட்டால் போதும்டா சாமி என்று அங்கிருந்து கிளம்பினேன்.

இங்கே வந்திறங்கிய முதல் நாள். என் நண்பன் வீட்டில் தங்கியிருந்தேன், அன்று என்ன சாப்பிட்டேன் என்று கூட நினைவில்லை (இன்றல்ல... அன்றே நினைவில் இல்லை)... பத்தரை மணிநேரம் பின்னோக்கி இங்கே வந்திறங்கினேன் அல்லவா, அதனால் jetlagஇல் இருந்தேன். நேரம் மாறி ஒரு இடத்துக்கு வரும்போது, நம் உடல் அந்த நாட்டில் உள்ள நேரத்துக்கு ஏற்ப அமையும் வரை நாம் மந்தமாகவே இருப்போம். அப்போது எல்லோரும் உறங்கும் நேரத்தில் நாம் அவ்வளவு தெளிவாக இருப்போம், எல்லோரும் விழித்திருக்கும் நேரத்தில் நமக்கு அப்படி ஒரு தூக்கம் வரும். நம் உடல் அந்த நேரத்துக்கு ஏற்ப அமைய பெரும்பாலும் ஒரு வாரம் ஆகும்.

ஆக, முதல் நாள் இரவு நண்பன் சமைத்ததை சாப்பிட்டு உறங்கி, மறுநாள் காலை எனக்கு சமைத்துக்கொண்டு எனது lunchboxஇல் போட்டுக்கொண்டு அலுவலகம் கிளம்பினேன். நல்லவேளை. அங்கே சென்றால் அலுவலகத்தில் நம்மூர் கான்டீன் போல வகை வகையான உணவெல்லாம் கிடையாது. வகைவகையான மாமிசம் தான்!! எருமை, பன்றி என பெரிய பட்டியலே உண்டு. இதோ... இதுதான் என் அலுவலக கான்டீன் மெனு... ச்சி கருமம் என்கிறீர்களா! ஹ்ம்ம்.. அப்படிதான் எனக்கும் இருந்தது!


இந்த கான்டீன் கூட இல்லாத பல அலுவலகங்கள் உண்டு. பெரிய நகரில் உள்ள அலுவலகம் என்றால் பெரும்பாலானோர் வெளியே சாப்பிடுவார்கள் சிறிய நகரம் என்றால் வெளியே அவ்வளவு கடைகள் இருக்காது. அனால் எந்த நகரானாலும் நம்நாட்டு மக்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவுதான் பெரும்பாலும் சாப்பிடுவார்கள். அதுதான் நமக்கு த்ரிப்திகரமாக அமையும்!

நம்மை போலவே உணவு உண்ணக்கூடிய பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று பல நாட்டினர் இங்கே நியூயார்க் நகரில் கடைகள் வைத்திருப்பார்கள். மதிய உணவு நேரத்தில் தெருக்கடைகளில் கூட்டம் அலை மோதும். அனைத்து விதமான உணவும் கிடைக்கும் இங்கே இருக்கும் தெருக்கடைகளில். எனது திருமணத்திற்கு முன், வாரத்தில் ஒரு நாள் வெளியே சாப்பிடுவேன். Dhal ரொட்டி, சாப்பாடு, vegetable பிரியாணி என்று சைவ உணவு விற்கும் கடைகள் நிறையவே உண்டு.

இந்த ரோட்டோர கடைகள் ஏனோ தானோ என்று இருக்காது. அனைத்து கடைகளும் முறையாக உரிமம் பெற்று நடக்கும் கடைகள், அதனால் ஒவ்வொரு கடைக்கும் அவர்கள் உபயோகப் படுத்த plugpoint தரையுடன் சேர்ந்தாற்போல இருக்கும். ஓசியில் சாப்பிட எந்த காவலரும் வந்து தொல்லை செய்வதோ, தொப்பியை நீட்டி மாமூல் வசூலிப்பதோ கிடையாது. அனைத்து ரோட்டோர கடைகளிலும் கடையின் உரிமத்தின் நகல் போட்டோ பிரேமில் மாட்டப்பட்டிருக்கும். இவை அனைத்தும் தள்ளு வண்டிபோல, நிரந்தர கடைகள் அல்ல. அவரவரின் வண்டியின் பின்புறம் கொக்கியில் மாட்டி கொண்டு வந்து கொண்டு செல்வர்.

நியூயார்க் நகரில் நமக்கு தெரிந்த, தெரியாத அனைத்து நாட்டவரின் கடைகளும் இருக்கும். ரோட்டோர கடைகளில் Falafal என்பது மிகவும் பிரபலமானது. அது கிட்டத்தட்ட நம் மசால் வடை போலவே இருக்கும். இது மத்திய கிழக்கு நாடுகளின் உணவு. இந்த ரோட்டோர கடைகள்  பெரும்பாலும் பாகிஸ்தான், வங்காளம், வளைகுடா நாடுகளை சேர்ந்தவர்களின் கடைகளாக தான் இருக்கும். ஆனாலும் இத்தாலி, தாய்லாந்து ஏன் நம்மவர் ஒருவரின் தோசைக் கடை கூட இங்கு  மிக பிரபலம். (அது Brooklyn நகரில் இருப்பதால் அங்கே இன்னும் செல்ல இயலவில்லை, சென்றால் மேலும் விபரங்களை தெரிவிக்கிறேன்.)இவர் என் நண்பர், முகமது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். 17 ஆண்டுகளாக இங்கே கடை வைத்துள்ளார். இவருக்கு முன்னிருந்து இவரின் பெற்றோர் 25 ஆண்டுகளாக இங்கே உணவுக்கு கடை வைத்துள்ளனர்.
இது தவிர chain food restaurants பல உண்டு. Subway, Chipotle, Taco Bell, McDonald's, Pizza Hut, Domino's Pizza, Burger King என்று பல கடைகள் உண்டு. இவை அனைத்தும் அமெரிக்காவில் எந்த மூலைக்கு சென்றாலும் இருக்கும். ஏன்? இவற்றில் பாதி இப்போது நம் நாட்டிலேயே உள்ளதே! இவற்றுள் chipotle என்ற மெக்ஸிகோ நாட்டின் கடை நமது மக்கள் மத்தியில் பிரபலம். இந்த கடையில் தான் அரிசி உணவு இருக்கும், மற்ற கடைகளில் வெறும் பர்கர், pizza மட்டும் தான் கிடைக்கும் அது நமக்கு ஒரு முறைக்கு மேல் ஒத்துவராது.

இந்த அமெரிக்க உணவகங்களை தவிர இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பல இந்திய உணவகங்கள் இருக்கும். நம் ஊரில் பிரபலமான ஹோட்டல் சரவணா பவன், அடையாறு ஆனந்த பவன், அஞ்சப்பர் என்று பல பிரபல உணவகங்களும், வேறு சிறிய உணவகங்களும் உண்டு. இதில் ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், ஹிந்திக்கார ஹோட்டல்கள் என பல உண்டு. தமிழக ஹோட்டலுக்கு சென்றால் இங்கே இருக்கும் தமிழ் மாத இதழ்கள் கிடைக்கும். தென்றல், 8K Express என்று இரண்டு தமிழ் மாத இதழ் அமெரிக்காவில் வெளிவருகின்றன.

ஏதாவது பண்டிகை நாள் என்றால் இங்கே இருக்கும் தமிழக ஹோட்டல்களில் வாழை இலையில் சாப்பாடு பரிமாறுவார்கள். குறிப்பாக இங்கே இருக்கும் ரஜினி என்ற ஹோட்டலில் பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு நாட்களில் வாழையிலையில் சாப்பாடு போடுவார்கள். நம் வீட்டில் பண்டிகை நாட்களில் அம்மா ஆசையாக சமைத்து உணவு பரிமாறும்போது, அட போதும்மா ஏன் இவ்ளோ சாப்பாடு போடுற என்று கோபித்துக் கொண்டவரெல்லாம், இங்கே ஓட்டலில் இரு முறை கொடுக்கும் சாப்பாடு பத்தாமல் extra சாப்பாட்டுக்கு மேலும் காசு கொடுத்து வாங்கும்போது தான் அம்மாவின் அருமையும், பண்டிகைக்கு நம் வீட்டிலும், ஊரிலும் இல்லாத வருத்தமும் தெரியும்.

ஒரு முழு சாப்பாடு பொதுவாக $12 - $15 டாலர் இருக்கும். பண்டிகை நாள் சாப்பாடு என்றால் பெரும்பாலும் $20 - $25 இருக்கும். இங்கேயே குடியுரிமை பெற்ற மக்களுக்கு அது பெரும் தொகையாக இருக்காது, ஆனால் இது ஒரு பெரும் தொகையே. வடை, சமோசா போன்றவையெல்லாம் $5 முதல் $7குள் இருக்கும். இந்த உணவகங்கள் தவிர நான் தங்கியிருக்கும் பகுதியில் நம்மூரில் இருப்பது போலவே bakery ஒன்று உள்ளது. முதன் முதலில் அங்கே சென்ற போது எங்கள் ஓசூரில் பிரபலமான கண்ணையா பேக்கரியின் சின்ன கிளை போலவே இருந்தது. இங்கே பப்ஸ், பாணி பூரி, வடா பாவ், கேக், butter biscuit, ரஸ்க், bread என்று அப்படியே நம்மூரில் இருப்பது போலவே ருசியுடன் இருக்கும். இந்த நாட்டில் நம்மூர் போல bakery எல்லாம் அவ்வளவு கிடையாது, இங்கே Doughnut என்பது தான் மிக பிரபலம். ஒரு Bun அளவில் இருக்கும், உளுந்து வடையில் இருப்பது போல நடுவில் ஓட்டை இருக்கும், அதனுள் cream, jelly, தேங்காய் என்று பல வித flavorகளில் கிடைக்கும். Dunkin Donut, Wawa போன்ற கடைகளில் இந்த Doughnut கிடைக்கும். Dunkin Doughnut என்பது நம் ஊரிலும் கூட இப்போது இருப்பதாக கேள்விப்பட்டேன். இங்கே dunkin donut, Starbucks என்பது நமூரில் தெருவுக்கு ஒன்று என்றிருக்கும்  தேநீர் கடையை போல நூற்றுக் கணக்கில் இருக்கும். ஆனால் இங்கே இந்த கடைகள் பிரபலம் என்ற ஒரே காரணத்தினால் நமூரில் ஒரு காபியை 120 ரூபாய் கொடுத்து வாங்குவதும், ஒரு Bunஐ அறுபது ரூபாய் கொடுத்து வாங்குவதும் காலக் கொடுமை!

இதையெல்லாம் சொல்லி முடிக்கும்போது வெற்றிக்கொடி கட்டு வடிவேலுவின் ஒட்டகப் பால் நியாபகம் தான் நினைவுக்கு வருகிறது. என்ன, இங்கே ஒட்டகப் பால் கிடையாது, ஆனால் பலவகைப் பால்கள்  உண்டு. Whole Milk (இது தான் நம் ஊரில் கிடைப்பது போல இருக்கும்), 2% fat free, 1% low fat, Almond Milk என்று பல வகையில் இருக்கும். நம்மூர் போல காலையில் தினமும் வாங்கிக்கொண்டு வரும் பழக்கமோ வழக்கமோ இல்லை இங்கே. ஒரு முறை வாங்கினால் அது பதினைந்து நாள் வரை கெடாமல் இருக்கும். ஹ்ம்ம்... என்னத்த கலக்குறாங்களோ.. ஆனால் அப்படி மட்டும் தான் கிடைக்கும்.

இந்த உணவு விலைகளை பற்றி மேலே படித்தீர்கள் அல்லவா, இந்த உணவு நம் கோவில்களிலும் கோவில் கேன்டீனில் கிடைக்கும். அங்கே விலை கம்மியாக வைத்து விற்பார்கள். நியூயார்க்கின் Pomona (ஊர் பெயர்) ரங்கநாதர் கோவில், பெனிசில்வேனியாவில் சிருங்கேரி மடத்தின் சாரதாம்பாள் கோவில்களில் மட்டும் இலவச அன்னதானம் வழங்கப்படும். அதுவும் ரங்கநாதர் கோவிலில் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை மடப்பள்ளியில் சுடச்சுட செய்த வெண்பொங்கல், கதம்ப சாதம், தயிர் சாதம் இருக்கும். அபப்டியே மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கொடுக்கும் பிரசாதம் போலவே இருக்கும்.

கோவிலைப் பற்றி சொன்னதாலேயே அடுத்த அத்தியாயம் எதை பற்றி என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அடுத்த அத்தியாயம் விரைவில்...

வாரத்தின் எந்த நாளில் புதிய அத்தியாயங்களை வெளியிடலாம் என நினைக்கிறீர்கள்? உங்கள் பதிலை கீழே பதிவிடுங்கள்.

இந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி!

------------

விஜய் மல்லையா போல நிரவ் மோடி 11,400 கோடி மோசடி செய்ததை பற்றிய கேலி வீடியோ ஒன்று தமிழில் டப்பிங் செய்துள்ளேன். இங்கே அந்த விடியோவை காண்க.


https://youtube.com/bhargavkesavan என்ற எனது youtube பக்கத்திற்கு subscribe என்ற பொத்தானை அழுத்தி மேலும் பல காணொளிகளை காண subscribe செய்யவும்.

நன்றி.
Blogger Widget

செவ்வாய், 23 ஜனவரி, 2018

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 8 | America - Made in China

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...


இங்குள்ள நம் கடைகளையும், அமெரிக்காவில் வசிக்கும் நம்மவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கும் கடைகளை பற்றியும், இந்த ஊரில் உள்ள சில கடைகளை பற்றியும் சென்ற அத்தியாயத்தில் படித்திருப்பீர்கள். இந்திய பொருட்கள் கிடைக்கும் கடைகளை தவிர இங்குள்ள கடைகளை பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

நம் நாட்டில் இருக்கும் போது, இங்கிருந்து யார் இந்தியாவுக்கு வந்தாலும் அவர்கள் வாங்கிக்கொண்டு வரும் பொருட்களில் முக்கியமாக chocolate இருக்கும். பின் deodrant. இதுதவிர ஒவ்வொருவரும் அவர்களின் சேமிப்புக்கு ஏற்ப அவர்களின் சக்திக்கு உட்பட்ட Electronic பொருட்களை வாங்கி வருவதை பார்த்திருப்பீர்கள். ஆம், பல விதமான chocolate உண்டு. ஒவ்வொன்றையும் பார்த்தாலே அள்ளிக்கொண்டு வாங்க தோணும். எதை பார்த்தாலும் வங்கத்தோணும். chocolate வாங்கும் கடைகளில் பெரும்பான்மையான கடை Costco, Walmart, Trader Joe's என்று பல கடைகள் உண்டு. ஒவ்வொரு கடைகளுக்கும் சிறப்பம்சம் உண்டு. குறிப்பாக சொல்லப் போனால், Costcoவில் பெரிய பெரிய அளவில் தான் எல்லா பொருட்கள் கிடைக்கும். இது நாம் ஊருக்கு செல்லும்போது அக்கம் பக்கத்து வீட்டினர், உறவினர்களுக்கு என்று அதிக நபர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது Costcoவில் Chocolate வாங்கினால் மற்ற கடைகளில் வாங்குவதை விட விலை "சற்று" குறைவாக இருக்கும். இதுவே Walmartஇல் சிறிய, நடுப்பட்ட, பெரிய என்று எல்லா அளவிலும் அனைத்து பொருட்களும் கிடைக்கும்.

அதனால் இங்கிருந்து யாராவது வந்து சில சாக்லேட்கள் மட்டும் கொடுத்தால் கோபித்துக்கொளாதீர்கள், அதை வாங்க சில கடைகள் சென்று, சில பாக்கெட்டுகள் வாங்கினாலே நூறு டாலரை தொட்டுவிடும் அதன் விலை, சராசரி இல்லத்தில் நூறு டாலர் என்பது மாத சேமிப்பில் பெரிய தொகை. யாராவது வம்பு பேச்சில் - அமெரிக்காவுல சாக்குலேட்டெல்லாம் சீப்பாம் அப்டின்னு சொன்னா அவங்கள மன்னிச்சிடுங்க. பாவம் தெரியாம பேசிருப்பாங்க. உங்களுக்கு சாக்லேட் கொடுக்க அவர்கள் ஊருக்கு கொண்டு வர அனுமதிக்கப்பட்ட 23 கிலோ கொண்ட இரண்டே பையில் ஒருமாதத்துக்கு வேண்டிய துணிகளுடன் இந்த சாக்லேட் பைகளை அடுக்கி, அனுமதிக்கப் பட்ட இடையை தாண்டிவிட்டதா என்றெல்லாம் சரிபார்த்து மிக சிரம பட்டு கொண்டு வருவார்கள். முடிந்தால் அவர்களுக்கு நீங்கள் ஒரு சாக்லேட் கொடுங்கள்!

சரி விஷயத்துக்கு வருவோம்... இங்கே ஒவ்வொரு கடைக்கும் ஒரு தனித்தன்மை உண்டு அதனால் தான் எல்லா கடைகளிலும் எப்போதுமே மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும். காய்கறிகள் வாங்க Farmers Market (நம் ஊர் உழவர் சந்தைப்போலவே தான்!), எண்ணெய், கறிவகைகள், குடி தண்ணீர் கேன்கள், மற்ற வீட்டு சாமான்கள் வாங்க Walmart, Shoprite, ACME, Foodtown என்று ஒவ்வொரு மாநிலங்களிலும் வேறு சில பெயர்களில் இந்தக் கடைகள் இருக்கும். இது தவிர மரச்சாமான்கள் வாங்க IKEA (சென்ற அத்தியாயத்தில் படித்திருப்பீர்கள்), வீடு கட்ட, அல்லது வீட்டுக்கு தேவையான வேலைகள் செய்ய தேவைப்படும் ஆணி, Fevicol, என்று எந்த துரும்பானாலும் Home Depot என்ற கடையில் கிடைக்கும். மேலும் Electronic பொருட்கள் வாங்க Best Buy. அடிக்கடி வெளியே பயணம் மேற்கொள்பவருக்கு என்னென்ன வேண்டுமோ - Camping செய்பவருக்கு Tent, Sleeping bag, Torch (இதென்ன பிரமாதம் என்கிறீர்களா - குறைந்தது ஒரு இருபது வகையான டார்ச் பார்த்துள்ளேன் இதுவரை! அம்மாடியோவ்!) மீன் பிடிக்க பயணிப்பவருக்கு என்று அதற்கு தேவையானவை, Trekking, Hiking, பாறையில் ஏறுதல், Scuba diving, Swimming, Running, jogging, River Rafting, பனி சறுக்கு என்று என்னென்ன நமக்கு தெரியுமோ, தோணுமோ அந்த அனைத்து விஷயங்களுக்கும் வேண்டிய ஒவ்வொரு சின்ன சின்ன பொருட்கள் கூட Walmart, Sierra என்ற கடைகளில் கிடைக்கும்.

குழந்தைக்கு தேவையான பொருட்கள் விற்க மட்டுமே Toys R us, Babys R us என்ற கடைகள் - குழந்தைக்கு தேவையான நமக்கு சற்றும் தோணவும் தோணாத சின்ன சின்ன பொருட்கள் கூட இந்த கடைகளில் கிடைக்கும். உதாரணத்துக்கு plug சொருகும் ஓட்டையில் குழந்தையின் விறல் பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்த ஓட்டையை மூடிவைக்கும் சின்ன பொருள் ஒன்று விற்பார்கள், இப்படியாக தொட்டில், பால்புட்டி, என்னென்ன தேவைப்படுமே அனைத்தும் அந்த கடையில் இருக்கும். படுக்கை சம்மந்தமான போட்டுக்களுக்கு மட்டுமே Bob's Furniture, Mattress King போன்ற கடைகள். துணிகளுக்கு சொல்லவே வேண்டாம், அவ்வளவு கடைகள் உண்டு - GAP, Macys, Target, H&M, JC Penny என்று நூற்றுக் கணக்கில் கடைகள் உண்டு. இது தவிர திருமணத்துக்கான ஆடைகள் விற்கும் கடைகள் மட்டுமே பல உண்டு.

விஷயம் புரிகிறதல்லவா? home depot என்றால் வீட்டுக்கு தேவையான அனைத்துப் பொருட்கள்,  குழந்தைகள் கடைகள் என்றால் குழந்தைக்கு வேண்டிய அனைத்து பொருட்கள் என்று ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு தனித்துவம். இவ்வளவு ஏன்? PETCO என்று ஒரு கடை உள்ளது, அதாவது நாம் வளர்க்கும் நம் செல்லப் பிராணிகளுக்கு தேவையான அனைத்து அம்சமும் அங்கு விற்பார்கள். பறவை, நாய், பூனை, மீன் என்று அதற்கு உணவு பண்டங்கள், விளையாட்டு பொருட்கள் (ஆம், பந்து, எலும்பு துண்டு போன்ற விளையாட்டுப் பொருள், எழுதி மாளாத அளவு பொருட்கள்!), நாய் வளர்ப்பவர்கள் அந்த நாய்க்குட்டிக்கு மெத்தை (அதற்கான அளவில்!) என்று என்னென்ன வேண்டுமோ அனைத்தும் இருக்கும் அந்தக் கடையில்.


நம் நாட்டில் எப்படி  எப்படி மளிகை கடைகளில் மாதம் முதல் தேதியில் அல்லது சம்பளம் வந்த முதல் வார இறுதியில் பொருட்கள் வாங்குவோமோ, இங்கேயும் அப்படிதான். ஆனால் என்ன ஒரு வித்தியாசம் என்றால் இங்கே மாத வருமானம் கிடையாது. என்னது... மாத வருமானால் கிடையாதா என்று shock ஆகிவிட்டிர்களா? சரி, உடனே சொல்லிவிடுகிறேன்... அதாவது... நம் நாட்டில் மாத வருமானால் வாங்குவோம் அல்லவா, ஆனால் இங்கே மாதம் இருமுறையாக சம்பளத்தை பிரித்து கொடுப்பார்கள். மாத இரண்டாவது வார இறுதியில் ஒரு சம்பளம் (First fortnight என்பார்கள்), மாத இறுதியில் மீதி சம்பளம் (Second fortnight என்பார்கள்). சம்பளத்தை பற்றி பின்னர் வரும் அத்தியாயத்தில் விரிவாக பார்ப்போம். ஆக, இப்படி சம்பளம் வரும் வார இறுதியில் இந்த கடைகளில் கூட்டம் வெகுவாக இருக்கும். ஒவ்வொரு கடைகளிலும் கடை அளவுக்கு மிக பிரம்மாண்டமான car parking இருக்கும். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் கடுப்பாகாமல், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வீடு வந்து சேரலாம்.

Costco, Walmart பெரும்பாலும் dynamic கடைகள். (ஆஹா... இந்தக் கடைகளுக்கு இந்த வார்த்தையை எனக்கு தெரிந்து நான்தான் முதலில் உபயோகிக்கிறேன்!) ஏன் என்றால் இந்த கடைகளில் மட்டும்தான் பருவ காலத்துக்கு ஏற்ற பொருட்களை விற்பார்கள். குளிர்காலம் தொடங்கும் ஒரு மாதம் முன்பு sweater, jacket, jerkin, குடை, கம்புளி, heater fan போன்ற குளிருக்கு சம்மந்தமான பொருட்கள். கோடை காலம் வரும் முன் அதற்கான கண்ணாடி, மெல்லிய ஆடைகள், நீச்சல் உடை என்று பருவ காலத்துக்கு ஏற்ப மற்றும் Halloween, Thanks Giving, ஈஸ்டர், காதலர் தினம்,  கிறிஸ்துமஸ் போன்று பண்டிகை, விஷேஷ நாட்கள் சம்மந்தமான பொருட்களும் விற்பார்கள்.

சரி இதென்னப்பா என்னமோ அடுக்கிகிட்டே போய்ட்டிருக்க? அத்தியாயத்தோட தலைப்புக்கும் சொல்லிட்டிருக்க கதைக்கும் சம்மந்தமே எல்லை என்கிறீர்களா? இதோ வருகிறேன்.... இப்படி நூற்றுக்கணக்கில் கடைகள் இருக்கிறதல்லவா? இதில் இருக்கும் பல கடைகளும் உலகில் வெவேறு நாடுகளிலும் நூற்றுக்கணக்கில் கிளைகள் கொண்டவை. சில கடைகள் இந்தியாவுக்கு வர துடிக்கின்றன (Walmart - சென்ற மத்திய ஆட்சியின் FDI நினைவுக்கு வருகிறதா?), சில வர இருக்கின்றன (IKEA - இந்த செய்தியை சென்ற அத்தியாயத்தின் கருத்துப் பகுதியில் பகிர்ந்துகொண்ட நண்பர் மதனுக்கு நன்றி!), சில வந்திருக்கின்றன(H&M). இந்த ஒவ்வொரு கடைகளிலும் கோடிக்கணக்கில் பொருட்கள் விற்கப் படுகின்றன. இதை எல்லாம் நாம் அமெரிக்க பொருள் என்று விரும்பி வாங்குகிறோம், ஆனால் இதெல்லாம் அமெரிக்காவிலா தயாரிக்கப் படுகின்றன?!!! "ஒரு பெரிய ஊஹூம்..." இந்தக் கடைகளில் விற்கும் தொன்னூறு சதவிகித பொருட்கள் சீனாவில் தயாரிக்கபட்டது, துணிகள் பல வியட்நாம், வங்காளத்தில் தயாரிக்கப்பட்டது. பழங்கள், காய்கள் மெக்ஸிக்கோவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. நம் நாட்டிலிருந்து தயாரிக்கப்பட்டதாக நான் பார்த்ததில் ரோட்டில் இரும்பில் சாக்கடை குழியை மூடும் மூடி (நம் நாட்டை இழிவு படுத்தும் தொனியில் சொல்லவில்லை. உண்மையில் நான் பார்த்ததில் நம் நாட்டில் தயாரிக்கபட்ட பொருள் அதுதான்!), சில கடைகளில் விற்கும் அலங்கார பொருட்கள். IKEA வில் விற்கும் அனைத்து பொருட்களும் ஸ்வீடன் நாட்டில் தயாரிக்கப் பட்டவை - அந்தக் கடையே ஸ்வீடன் கடை தான். அமெரிக்காவில் அமெரிக்கரால் அல்லாத முதல் பெரிய கடை IKEA, நாம் எப்படி நம் நாட்டில் இந்த வெளிநாட்டுக்கு கடைகள் வர எதிர்க்கிறமோ இங்கேயும் இந்த IKEA கடை வர முதலில் அப்படி எதிர்ப்பு இருந்திருக்கிறது.சரி, இப்படி இங்கே பிரபலமான அனைத்து கடைகளில் விற்கும் அனைத்துப் பொருட்களும் வேறு நாட்டில் தயார் செய்யப்படுபவை. இந்த ஒரு மிக முக்கிய காரணத்தால் தான் இந்த நாடு இயற்கை வளத்தில் அழகு பொங்க இருக்கிறது. இந்த பொருட்களெல்லாம் தயார் செய்யும் நாடுகளை பார்த்தாலே ஏன் அந்தந்த நாடுகள் எல்லா இயற்கை வளங்களையும் இழந்து மாசுபட்டு இருக்கிறது என நமக்கு விஷயம் புரிந்துவிடும். வேறு நாடுகளில் பொருட்கள் தயாரிப்பதால் அந்த தயாரிப்பு கழிவுகள் தயாரிக்கும் நாட்டிலேயே தான் இருக்கும், அது நீர்வளம், நில வளம், காற்று மாசுபடுதல் என அனைத்து இயற்கை வளங்களையும் இழக்க வைக்கிறது. ஆனால் ஒன்று, இந்த பெரிய நிறுவனங்கள் இந்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு சுத்திகரிப்புகளுக்காகவும், பல saftey measurements களுக்காக பல கோடிகளை செலவிடுகின்றன. ஆனால் அந்த பணம் அனைத்தும் இந்திய, சீன, முதலாளிகளுக்கு தான் செல்கின்றன. தயாரிப்பு நிறுவன சுத்திகரிப்பில் பணம் செலவழிப்பது இல்லை, அதை நம் அரசாங்கமும் கண்டுக்கொள்ளாது, கண்டுக்கொள்ளும் ஒரு சில அதிகாரிகளை கொல்லவும் தயங்கமாட்டார்கள் இந்த கீழ்த்தர அரசியல் தரகர்கள்.

அமெரிக்கா மட்டும் அல்ல, உலகில் எங்கு chocolate விற்றாலும் அதற்க்கு தேவையான கோகோ (COCOA) ஏழமையிலும் ஏழ்மையான - ஆனால் கொள்ளளவு இயற்கை வளம் படைத்த ஆப்ரிக்காவில் மட்டும் தான் கிடைக்கின்றன. அங்கிருக்கும் லட்ச கணக்கான நிலங்களில் கோகோ வை வளர்த்து பாதுகாத்து இங்கிருக்கும் சாக்லேட் நிறுவனங்கள் பெற்றுக்கொள்கின்றன. ஹ்ம்ம்... அந்த ஆப்ரிக்க நாடுகள் நினைத்தால் இந்த அமெரிக்காவை விட பணக்கார நாடாக இருக்க முடியும்... MAKE IN AFRICA என்று அங்கே அடுத்த ஆட்சியாளர் நினைத்தால் நடத்திக் காட்டலாம், ஆனால் அங்கோ நம் நாட்டை விடவும் ஊழல் தலை விரித்தாடுகிறது.

அண்மையில் Hershey என்ற சாக்லேட் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சென்ற பொது எடுத்த படம்.
அமெரிக்கா என்றாலே என்னமோ தேசிய சின்னம் போல கருதப்படும் iphone கூட முழுக்க முழுக்க சீனாவில் தான் தயாரிக்கப் படுகிறது.

ஆக, அடுத்தமுறை அமெரிக்காவிலிருந்து யாராவது எந்தப் பொருள் வாங்கி வந்தாலும் - அருணாச்சலம் படத்தில் ரஜினி (அட இந்தாளு அரசியலுக்கெல்லாம் நான் விளம்பரம் கொடுக்கல... அதுல நடிச்சதால சொல்றேன்!) "அண்ணே ... மாப்பிள்ளை இவருதான்... ஆனா அவரு போட்டிருக்க T-shirt எண்ணுதில்ல" அப்படிம்பாரே.... அதா போல தான்...

உங்களுக்கு வாங்கிட்டு வந்த பொருள் அமெரிக்காவுலேர்ந்து தான்... ஆனா அதை தயாரிச்சது அமெரிக்காவுல இல்லை... ஏன்னா அது AMERICA - MADE IN CHINA.

அடுத்த அத்தியாயம் விரைவில்...

கருத்துக்களத்தை அடுத்த படிக்கு கொண்டு செல்லும் முயற்சியாக, கருத்துக்களத்தின் ஒரு பதிவை ஒலியாக பதிவு செய்துள்ளேன். இதை கேட்டு தங்கள் கருத்தை பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன். கருத்துக்களத்தில் உள்ள அனைத்துப் பதிவுகளையும் ஒலிவாயிலாக பதிவேற்றும் முயற்சிக்கு தங்கள் கருத்துக்கள் உதவும். தாங்கள் SoundCloud உபயோகித்திருந்தால் பின்வரும் இணைப்பை சொடுக்கி, அதில் எனது பக்கத்தை பின்தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். 

SoundCloudஇல் கருத்துக்களம் - https://soundcloud.com/bhargavkesavan/sets/karutthukkalam 

வாரத்தின் எந்த நாளில் புதிய அத்தியாயங்களை வெளியிடலாம் என நினைக்கிறீர்கள்? உங்கள் பதிலை கீழே பதிவிடுங்கள்.

இந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி!
Blogger Widget
Related Posts Plugin for WordPress, Blogger...