-->

புதன், 14 மார்ச், 2018

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 10 | அமெரிக்காவில் கோவில்கள்


உணவு விலைகளை பற்றி அறிந்தீர்கள் அல்லவா, இந்த உணவு நம் கோவில்களிலும், கோவில் கேன்டீனிலும் கிடைக்கும். அங்கே விலை குறைவாக வைத்து விற்பார்கள். நியூயார்க்கின் Pomona (ஊர் பெயர்) ரங்கநாதர் கோவில், பெனிசில்வேனியாவில் சிருங்கேரி மடத்தின் சாரதாம்பாள் கோவில்களில் மட்டும் இலவச அன்னதானம் வழங்கப்படும். அதுவும் ரங்கநாதர் கோவிலில் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை மடப்பள்ளியில் சுடச்சுட செய்த வெண்பொங்கல், கதம்ப சாதம், தயிர் சாதம் இருக்கும். அபப்டியே மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கொடுக்கும் பிரசாதம் போலவே இருக்கும்.



உலகிலேயே மக்கள் பெருமளவில் செல்வது கிறித்துவர்களின் தேவாலயம் இருக்கும்  வாடிகன் நகரம், மற்றொன்று இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்கா. இதுபோல உலகிலேயே அதிக மக்கள் சென்று வழிபடும் ஹிந்துக் கோவில் திருப்பதி திருமலை தேவஸ்தானம். நல்லவேளையாக திருப்பதி தமிழகத்துடன் அல்லாமல் ஆந்திராவுடன் இணைந்தது. தமிழகத்தில் இருந்திருந்தால் வெங்கடாசலபதியைவிட அரசியல்வாதிகள்தான் பணக்காரர்களாக இருந்திருப்பார்கள். இப்பமட்டும் என்னவாம் என்றுதானே கேட்கிறீர்கள்? அதுவும் சரிதான்...

சரி இந்தக் கோவில்கள், ஆலய வழிபாடுகள் இங்கே எப்படி இருக்கிறது என்று காண்போம்.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்று அந்த காலத்தில் சொல்வது உண்டு. அது நம் நாட்டில் மட்டுமல்ல, நம் மக்கள் இங்கேயும் அதை மிக நல்ல முறையில் கடைபிடிக்கிறார்கள். இந்தியர்கள் வசிக்கும் ஊர்களில் நிச்சயம் கோவில்கள் இருக்கும். குறிப்பாக இங்கே நியூ ஜெர்சி, நியூயார்க், பென்சில்வேனியா, விர்ஜினியா, டெக்சாஸ் போன்ற மாநிலங்களை எடுத்துக்கொண்டால் நம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் வகையில் பிரபலமாக இருக்கும் இந்தக் கோவில்கள். எப்படி நம் நாட்டில் ஒரு மாநிலத்தில் இருக்கும் கோவில் மற்ற மாநிலத்தவர்க்கும் தெரிந்திருக்குமோ, இங்கேயும் அதுபோல வேறு மாநிலத்தில் இருக்கும் கோவில் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும்.

இந்துக்கோவில்கள், குருத்வாரா, அக்ஷர்த்தம் கோவில், இஸ்கான் கிருஷ்ணர் கோவில், புத்தர் கோவில், கிறித்துவ தேவாலயம், மசூதிகள் என்று அனைத்து மத மக்களின் கோவில்களும் பெருமளவில் உண்டு. இந்தியாவிலிருந்து வேதம் படித்து இங்கே கோவில்களுக்கு வேலைக்கு வரவேண்டுமானால் அதற்கு தனி Visa உண்டு. Religious Visa என்று பெயர். ஆறு மாதங்களிலிருந்து இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் இந்த விசா. கோவில்கள் கேட்டுக்கொண்டால் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு விசா நீட்டிகிக்கப்படும்.



ஹிந்து கோவில்களுக்கு அனைத்து மொழி பேசும் மக்களும் வந்து செல்வதால் கோவில்களில் பெரும்பாலும் அர்ச்சகர்கள் பல மொழி பேசுபவர்களாக இருப்பர். அதிக எண்ணிக்கையில் அர்ச்சகர்கள் இருக்கும் சில கோவில்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று அந்தந்த மொழி பேசும் மாநிலத்திலிருந்தே வந்திருப்பார். அனைத்து கோவில்களிலுமே எல்லா அர்ச்சகர்களும் ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்க முடியும். அதை கேட்கும் போது பெருமையாகவும் இருக்கும். இன்னாருக்கு இப்போதுதான் ஒரு மொழி தேவை என்று எப்போதுமே ஏதும் கிடையாது. தமிழ் மட்டும் பேசினால் போதும் என்று அரசியல் செய்யும் மக்களுக்கு இதெல்லாம் எங்கே தெரிய, புரியப் போகிறது. நம் மாநிலத்தை/நாட்டை விட்டு வெளியே செல்லும்போது தான் மற்ற மொழி ஒன்றிரண்டு தெரிந்து வைத்திருப்பதன் அருமை புரியும்.

நான் வசிக்கும் நியூஜெர்சியில் BridgeWater என்ற ஊரில் இருக்கும் வெங்கடேஸ்வரப் பெருமாள் கோவில், Morganvilleலில் இருக்கும் குருவாயூரப்பன் கோவில்,  நியூயார்க்கின் Pomona வில் உள்ள அருள்மிகு ரங்கநாதர் கோவில், Flushing இல் இருக்கும் பிள்ளையார் கோவில், ராகவேந்திரா தியானக் கூடம், சாய்பாபா கோவில், பென்சில்வேனியாவில் உள்ள சிருங்கேரி மடம், அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் கோவில், கனெக்டிகட்டில் (பக்கத்துக்கு மாநிலம்) சில கோவில்கள் என்று நினைத்தால் சென்று வரும் தூரத்தில் இருக்கும் கோவில்கள். பெரும்பாலான இந்தியர்கள் வசிக்கும் இடத்திலிருந்து ஒன்றரை மணி நேரத்துக்குள் செல்ல முடியும். 30-70 மைல்கள் இருக்கும். இது தவிர சற்று தொலைவில் பயணம் மேற்கொண்டு செல்லும் கோவில்களும் உள்ளன.

அமெரிக்காவிலேயே பெரிய கோவில் என்றழைக்கப்படும் அக்ஷர்தம் எனப்படும் ஸ்வாமி நாராயண் மந்திர் என்ற கோவில் நியூ ஜெர்சியில் உள்ளது. இதே கோவில் டெக்சாஸ் மற்றும் வேறு இரண்டு மாநிலங்களிலும் உண்டு. இது குஜராத்தை மக்கள் கட்டி பராமரித்து வரும் கோவில். அதே போல பல மாநிலங்களில் ISKCON கிருஷ்ணர் கோவில்கள் உண்டு.

Flushing பிள்ளையார் கோவில் - நியூயார்க்

ஸ்ரீ சாரதாம்பாள் கோவில் - பென்சில்வேனியா

Pomona ரங்கநாதர் கோவில் - நியூயார்க்
குருவாயூரப்பன் கோவில் - நியூ ஜெர்சி
வெங்கடேச பெருமாள் கோவில் - நியூ ஜெர்சி
புத்தர் கோவில் நுழைவு வாயில் - நியூயார்க்
பெரும்பாலான கோவில்கள் அமைந்திருக்கும் இடமே எழில் மிகுந்திருக்கும். கோவில்கள் கம்பீர தோற்றத்துடன் நம் நாட்டில் உள்ள கோவில்கள் போலவே இருக்கும். ஆனால் என்ன, கோவில் கதவு மட்டும் நம்மூர் போல திறந்திருக்காது. கோவிலுக்குள் AC அல்லது Heater என்று பருவக்காலத்துக்கு எட்டாற்போல அமைந்திருப்பதால் நாம் தான் கதவை திறந்து மூடிக்கொள்ளவேண்டும். கோவிலுக்குள் நுழைந்தவுடன் காலணிகள் அடுக்கி வைக்க மர ரேக்குகள் இருக்கும். கால் அலம்பிக்கொள்ள குளிர் நீர், வெந்நீர் வரும் குழாய்கள் (Showerஇல் வரும் நீர் போல, கால் அருகில்) இருக்கும். Coatகளை மாட்டிவைக்க hanger உடன் கூடிய கொடி இருக்கும்.

பெரும்பாலான கோவில்களில் எல்லா கடவுள்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பர். வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் பெருமாள், தாயார் மட்டும் அன்றி சிவலிங்கம், பிள்ளையார், ஹனுமார், ராமர், கிருஷ்ணர், ஐயப்பன், முருகன், சத்யநாராயணா, நவகிரகம், அபிஷேக காசி லிங்கம் என்று அனைத்து கடவுள்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பர். சபரி மலைக்கு மாலை போடுவதுபோல இங்கேயும் மாலை போட்டுக்கொண்டு சற்று தொலைவில் இருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு என் நண்பர்கள் செல்வார்கள். Flushing பிள்ளையார் கோவிலுக்கு செல்ல அந்த வீதிக்கு சென்றாலே மயிலை கபாலி கோவில் சன்னிதி தெருவுக்கு சென்றார் போல இருக்கும். சில வீடுகள் சிகப்பு வெள்ளை என்று நம் ஊரில் கோவில் மதில் சுவரிலிருக்கும் வண்ணம் போல இருக்கும். அங்கே தேங்காய் உடைக்கும் இடமும் உண்டு.

எல்லா கோவில்களிலும் கலாச்சாரக் கூடம் இருக்கும். மாலை நேரங்களில் சிறுவர், சிறுமிகளுக்கு சஹஸ்ரநாமம், திவ்விய பிரபந்தம் என்று கலாச்சார வகுப்புகள் நடக்கும். சிறப்பு தினங்களில், பண்டிகை நிகழ்ச்சிகள் அன்று இந்த கலாச்சாரக் கூடங்களில் மேடை நாடகம், பரதநாட்டியம், கர்னாடக சங்கீத நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடக்கும். திருமண நிகழ்ச்சிகளும் நடக்கும்.

உத்சவகாலங்களில் பெருமாள் புறப்பாடு, தேர், வாகனம் என்று நம் ஊரில் கடைப் பிடிப்பது போலவே இங்கேயும் மிக அழகாகவும், சிறப்பாகவும் கடைபிடிக்கிறார்கள்.

சரி கடவுள் சேவித்தாகிவிட்டது, அடுத்து என்ன? பிரசாதம் தானே. ஆம், அதே தான். என்ன ஒரு புன்னகை உங்கள் முகத்தில்? கோவில் பிரசாதம் என்றாலே எல்லோருக்கும் ஒரு தனி பிரியம் தான். கோவில் ப்ரசாதத்தில் இருக்கும் சுவை என்னதான் முயற்சி செய்தாலும் நம்மால் கொண்டு வருவது சற்று கடினம் தான். இங்கேயும் அப்படிதான். Pomona வில் இருக்கும் ரங்கநாதர் கோவிலில் காலை முதல் இரவு வரை கோவிலே உள்ள மடப்பள்ளியில் சமைத்த பிரசாதம் பெரிய அண்டாவில் வைத்திருப்பார்கள். பக்கத்திலேயே Use & Throw தட்டுகள், Spoon, Tissue Paperகள் இருக்கும்.கோவிலில் இருக்கும் தன்னார்வலர்கள் பிரசாதம் பரிமாறுவார்கள், எவ்வளவு வேண்டுமானாலும் வீணாக்காமல் சாப்பிடலாம். ரங்கநாதர் கோவிலில் மட்டும் ப்ரசாதத்திற்கு கட்டணம் கிடையாது, "விருப்பப்பட்டால்" நமக்கு விருப்பப்பட்ட தொகையை உணவுக்கு கூடத்தில் இருக்கும் உண்டியலில் செலுத்தலாம். அதேபோல ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலுக்கு சென்றால், முதலில் அன்னதானக் கூடத்திற்கு சென்று சாப்பிட்டு வர சொல்லி பின்னர் அர்ச்சனை செய்ய சொல்வார்கள். ஏனைய கோவில்களில் இருக்கும் உணவகத்தில் வெளி உணவாக விலையை விட குறைவான விலையில் உணவு பண்டங்களை விற்பார்கள். Flushing பிள்ளையார் கோவில் உணவகத்தின் சுவைக்கு சரவணா பவனும், ஆனந்த பவனும் வரிசையில் நிற்கவேண்டும். அப்படி இருக்கும் அங்கே சுதை! (ஆஹா... எச்சில் ஊறுகிறது!!! கூடிய விரைவில் செல்ல வேண்டியதுதான்!)

நானும் என் மனைவியும்.
சொர்கவாசல் நுழைய சென்ற நாள்.
இங்கே, கோவில்களில் நம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து வைத்திருந்தால் தவறாமல் ஒவ்வொரு பண்டிகை, கிரஹணம், சிறப்பு தினங்கள் என்று அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் நாள், நேரம் என்று விரிவாக அனைத்து அம்சங்களையும் அனுப்பிவிடுவர். நம் நாட்டை விட்டு இங்கே வந்தாலும் அங்கே கடைபிடித்து வந்த ஒவ்வொரு விஷயமும் வானிலை இடம் கொடுக்காவிட்டாலும் இங்கிருக்கும் அர்ச்சகர்களும், கோவில் நிர்வாகிகளும், தர்மகர்தாக்களும், கோவில் கட்ட நன்கொடையை அள்ளிக்கொடுப்பவர்களும், பக்தர்களும் சிறிதளவும் குறையாமல் இங்கே கடைபிடித்து வருகிறார்கள் என்பது மிக மிக பாராட்ட வேண்டிய விஷயம்.


அடுத்த அத்தியாயம் விரைவில்...

கருத்துக்களத்தின் பதிவுகளை குரலொலியில் பதிவு செய்யும் முயற்சியாக, எனது YouTube பக்கத்தில் ஒரு முந்தைய பதிவுவை ஒலிவடிவில் பதிவேற்றம் செய்துள்ளேன். அதை கேட்டு தங்கள் கருத்தை தெரிவிக்கவும். வரவிருக்கும் பதிவுகளை மறவாமல் கேட்க https://youtube.com/bhargavkesavan என்ற எனது YouTube சேனலுக்கு Subscribe செய்யவும். நன்றி.

Blogger Widget