-->

வியாழன், 19 ஜூலை, 2018

கிளிங் கிளிங்.., சார் Post...

காலைக் கண் விழித்தது முதல், இரவு உறங்கும் வரை, சிலசமயம் நடுராத்திரியிலும் கூட "டிங்ங்..." "டொய்ங்ங்..." "பீப்...பீப்.." என்று விதவிதமாக கைபேசியில் குறுஞ்செய்திக்கான சத்தம் வந்தவண்ணம் இருக்கும் இந்த காலத்தில், கேட்காமலேயே போனது ஒரு சத்தம்; அது மதியம் பதினோரு மணிமுதல் இரண்டு மணிவரை வாசலில் கேட்ட "கிளிங்... கிளிங்..." என்ற தபால்காரரின் சைக்கிள் சத்தம்.

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, சமையல் வேலைகளை முடித்துவிட்டு, துணி துவைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் வாசலில் "க்ளிங்... கிளிங்..." என்று சத்தம் கேட்டாலே அது தபால்காரர் தான் என்று அனைவருக்கும் தெரியும்.

மாடி வீட்டில் நாங்கள் இருந்த சமயத்தில், அம்மா துணி துவைத்துக் கொண்டிருக்கும்  நேரத்தில் சைக்கிள் சத்தம் கேட்ட உடனே, ராஜு... போய் நமக்கு லெட்டர் வந்துருக்கா பாரு என்று அம்மா சொல்வார், குடுகுடு என்று வாசலுக்கு ஓடி நின்றால், சைக்கிளை நிறுத்திவிட்டு பக்கத்துக்கு காம்பௌண்டுக்குள் சென்றிருப்பார் தபால்காரர். அவர் வரும்வரை காத்திருந்து, அங்கிள் எங்களுக்கு லெட்டர் வந்துருக்கா என்று கேட்டு, அவர் கொடுக்கும் லெட்டரை வாங்கிக்கொண்டு ஓடிவந்து அம்மாவிடம் கொடுப்பேன். யார் கிட்டேர்ந்து வந்துருக்கு அம்மா என்று கேட்டு, மாமாவிடமிருந்து வந்திருக்கு என்று சொல்லி லெட்டரை முழுதும் படித்துவிட்டு எனக்கு படித்து காண்பிப்பார் அம்மா.

அன்று மதியமே வந்த கடிதத்துக்கு பதில் கடிதம் எழுதுவார் அம்மா. பல சமயம் கண்கலங்கியபடியே எழுதுவார். எங்கள் வசிப்பிடம் ஓசூர், மாமாக்கள், பெரியம்மா, பாட்டி இருந்ததோ ராஜ மன்னார்குடி, மயிலாடுதுறை, நாகைப்பட்டினம், குடந்தை என்று தஞ்சை ஜில்லா முழுக்க எங்கள் ஊர் தான். (ஆஹா... சொல்லும்போதே அந்த இயற்கை எழில் கண்முன் நிற்கிறது!) பாட்டி, அத்தை என்று சென்னைக்கு அப்பா லெட்டர் எழுதுவார்.

அப்படி அன்று மதியமே எழுதிய கடிதத்தை, தபால் நிலையம் எங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவு என்பதால்; நான் நான்கு, ஐந்தாம் வகுப்பு படிக்க ஆரமிக்கும் முன்னர் வரை (அதற்கு பிறகும்கூட) 2nd shift செல்ல பேருந்து நிலையம் செல்லும் வழியில் இருக்கும் தலைமை தபால் நிலையத்தில்  அப்பா தான் போஸ்ட் செய்துவிட்டு செல்வார். அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு நானும் உடன் சென்று எப்படி போஸ்ட் செய்வது என்று முதல் முதலில் கற்றுக்கொண்ட நினைவு என் கண்முன்னே அழகாக மலர்கிறது. கம்பெனிக்கு கிளம்பும் முன் அம்மாவிடம், போஸ்ட் செய்ய லெட்டர் இருக்கிறதா என்று கேட்டுவிட்டு தான் செல்வார். அப்பாவுக்கு நேரம் ஆகிவிட்டது அல்லது அம்மா சில சமயம் லெட்டர் கொடுக்க மறந்துவிட்டால் நான் சென்று போஸ்ட் செய்துவிட்டு வருவேன்.
படம்: corbisimages 
எனது சிறுவயதிலேயே அப்போது பல இடங்களில் வைக்கப்பட்ட தபால் பெட்டிகளை சில இடங்களிலிருந்து நீக்கிவிட்டனர், அப்போதுதான் தொலைபேசி வர ஆரமித்த காலக்கட்டம். தலைமை தபால் நிலையத்திலேயே தான் எப்பொழுதும் சென்று போஸ்ட் செய்துவருவேன். மூன்று நிறத்தில் தபால் பெட்டிகள் இருக்கும். சிகப்பு, நீலம் மற்றும் பச்சை. ஒன்று எங்கள் மாவட்டத்துக்குளேயே அனுப்ப, மற்றொன்று வெளி ஊர்களுக்கு அனுப்ப, மற்றொன்று வேறு மாநிலத்துக்கு அனுப்ப என்று நினைக்கிறன்.

ஒவ்வொரு தடவையும் போஸ்ட் செய்ய செல்லும் முன்னர் அம்மா சொல்லி அனுப்புவார், சரியான பெட்டியில் போஸ்ட் செய்துவிட்டுவா என்று. பொதுவாகவே அனுப்பிய தபால் சென்று சேர நான்கு நாட்கள் வரை ஆகும், மழைக்காலம், புயல் என்றால் மேலும் தாமதம் ஆகும். ஒரு தடவை கடிதம் அனுப்பிவிட்டு, அடுத்தவாரம் பதில் வரவில்லை என்றால் அடடா, ஏன் எட்டு நாட்கள் ஆகியும் இன்னும் பதில் வரவில்லை என்றிருக்கும், அந்த காத்திருப்பு மற்றும் எதிர்பார்ப்பில் ஒவ்வொரு நபரின் அன்பும் ஏக்கமும் வெளிப்படும்.

ஹ்ம்ம்... இன்று பள்ளி, கல்லூரி படிக்கும் பொடிசுகள் whatsappஇல் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு ஒரு டிக் தான் வந்திருக்கிறது, ரெண்டாவது டிக் வரவில்லையே... என்ன ரெண்டு டிக் தான் வந்திருக்கு படிச்சதுக்கு blue டிக் வரவில்லையே என்றெல்லாம் ஒரு நிமிடத்துக்கே அங்கலாய்த்துக்கொண்டிருக்கும் காலத்தில், ஒரு கடிதத்துக்கு எட்டு நாட்கள் வரை ஒரு காலத்தில் காத்திருந்த அருமையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உடுத்திய அரைக்கால் டிராயரில் பொத்தான் இல்லை என்றால், ஏ.. postbox, postbox என்று சொல்லி பள்ளியில் கிண்டல் செய்ததும், postbox போன்ற வடிவில் திருவிழாக்களில் உண்டியல்கள் விற்றதும், postman பாத்திரத்தை மையமாக வைத்து வெளிவந்த எத்தனையோ திரைப்படங்களும், நகைச்சுவைகளும்  இன்று அனைவரும் மறைந்த ஒன்றாகிவிட்டது.

இரண்டாவது, மூன்றாவது படிக்கும்போதே உடன் உட்கார வைத்துக்கொண்டு மாமாவுக்கும், பெரியம்மாவுக்கு, பாட்டிக்கும் கடிதத்தில் சில இடம் எனக்கு ஒதுக்கி என்னையும் கடிதம் எழுதவைப்பார் அம்மா. இன்று ஒரு வயது நிரம்பிய என் தங்கையின் குழந்தை என்னை Whatsappஇல் வீடியோ வழியே  பேசும்போது மாமா என்று கூப்பிடும் பொது ஏற்படும் மகிழ்ச்சி, பள்ளி முடிந்து, புழுதி பறக்க தெருவில் விளையாடி முடித்துவிட்டு அம்மாவுடன் உட்கார்ந்து "அன்புள்ள மாமாவுக்கு" என்று இருபது மூன்று மூன்று வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய கடிதத்தின் கையெழுத்தில் எனது மாமாக்களும், பெரியம்மாவும் மகிழ்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

பொங்கல், தீபாவளி, புது வருடம் என்றால் அம்மா, அப்பாவுடன் Greeting Card வாங்க கடைக்கு சென்று அண்ணாவுக்கு எந்த ஹீரோ பிடிக்கும், அக்காவுக்கு எந்த ஹீரோ பிடிக்கும், அத்தைக்கு எந்த கார்டு அனுப்புவது, அத்தைப் பையனுக்கு எந்த ஹீரோ பிடிக்கும், மாமாவுக்கு, பெரியம்மாவுக்கு தெய்வங்கள் படம் போட்ட வாழ்த்து அட்டை என்று எனக்கு தெரிந்த, நினைவில் பசுமையாக நிற்கும் "shopping" என்றால் அது இந்த shopping தான்.

என் தம்பியும், நானும். உப்பிலியப்பன் கோவில் தபால் நிலையத்தில் சில வருடங்களுக்கு முன்பு எடுத்த படம்.
என்னதான் இன்று whatsappஇல் விதவிதமாக குட் மார்னிங், குட் நைட் என்று அனைத்துக்கும் ஒரு படம் வந்தாலும்,  அன்று ஊரில் நமக்காக, நமக்கு பிடித்த நடிகர்கள், வாசகங்கள் கொண்ட வாழ்த்து அட்டைகளை நமக்கு அனுப்பிவைத்து அது வந்த பின்னர் அதை பிரித்து படித்து மகிழ்ந்த அந்த காலம் இன்று மறைந்த ஒன்றாகிவிட்டது. எனக்காக என் அக்காக்கள் அனுப்பிய விஜயகாந்த் படம் போட்ட வாழ்த்துப் படங்களும், ஜெயலலிதா படம் போட்ட வாழ்த்துப்படங்களும் ஏராளம், எங்கள் வீடு முழுக்க விஜயகாந்தும், ஜெயலலிதா படமும் அத்தனை ஒட்டிவைத்து அந்த வாழ்த்து அட்டைகளை பாதுகாத்தது ஒரு காலம்.

இருபது, சிலநேரங்களில் அதற்கும் மேற்பட்ட கூட்டமாக மக்கள் நின்ற நீண்ட வரிசையில் நானும் நின்று, ஏங்க... பத்து ரூபாய்க்கு போஸ்ட் கார்டு, அஞ்சு ரூபாய்க்கு inland லெட்டர், அஞ்சு  ரூபாய்க்கு stamp குடுங்க என்று அதை வாங்க வரிசையில் நின்ற நாட்கள் எத்தனை, எத்தனை!!! போஸ்ட் கார்டு, இன்லேண்ட் லெட்டர், நாலணா ஸ்டாம்பு, ஐம்பதுக்காசு ஸ்டாம்பு, ஒரு ரூபாய் ஸ்டாம்பு, Money Order, Telegram, Postoffice Savings என்று எத்தனையோ விஷயங்களுக்காக எத்தனையோ நாட்கள் தபால் நிலையத்துக்கு சென்ற நமக்கு அங்கே வேலை செய்பவர்களில் பாதிபேர் நண்பர்களாகவே இருந்தனர்.

வாசலில் தபால் கொடுக்க வருபவரோ, வருவது சில நொடிகளானாலும் அவர் கொண்டு வரும் தபால் எத்தனையோ பேரின் மன பாரத்தையும், அன்பையும், எதிர்பார்ப்பையும் கொண்டதாக அமைந்தது. மே மாதம் என்றால் பள்ளி மாணவர்களுக்கு கிளிங் கிளிங் சத்தம் என்றாலே கிளி பறக்கும்!!! முழு ஆண்டு பரீட்சையின் முடிவு வரும் சமயம் ஆச்சே!!! அந்த இன்லேண்ட் லெட்டர் வந்து அதை திறந்து "promoted" என்ற செய்தியை கண்ட உடன் கையில் பிடிக்கமுடியாமல் சுற்றிய காலம் அது! இப்போதெல்லாம் பத்து, பன்னிரண்டு வகுப்பு தவிர மற்ற வகுப்புக்கு எப்படி முடிவு வருகிறது என்று எனக்கு தெரியவில்லை, உங்களுக்கு தெரிந்தால் கீழே கருத்துப் பகுதியில் தெரிவியுங்கள். அந்த பத்து, பன்னிரண்டாம் வகுப்புக்கும் நாளிதழ்களில் தான் அப்போது தேர்வு முடிவு வரும்.

இன்றோ, நாளிதழ், டிவி போட்டியில் பங்குகொள்ள தபால் நிலையம் சென்று அஞ்சல் அட்டை கேட்டால், தலைமை தபால் நிலையத்திலேயே அஞ்சல் அட்டை இல்லை என்கின்றனர். பாவம், அவர்கள் என்ன செய்வார்கள், அரசாங்கம் தான் அஞ்சல் துறையை மறந்து விட்டதே. ஹ்ம்ம்.. BSNLஐ முடுக்கி விட்டால் தங்கள் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு திருட்டு தனமாக connection கொடுத்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கலாம், அஞ்சல் அட்டையை வைத்து என்ன லாபம் பார்க்க முடியும் இவர்களால்? ஹ்ம்ம்..
நன்றி: இந்தியா போஸ்ட் 
வெறும் சிவப்பு நிறபெட்டியாக மட்டும் அன்றி எத்தனையோ மக்களின் இன்ப, துன்ப, மனபாரத்தையும், அன்பையும், பிரிவையும் வார்த்தைகளால் சுமந்த பெட்டியாகவே இருந்தது. இப்படி ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரின் வாழ்வில் முக்கிய பங்கு வகித்து ஆங்காங்கே கடைத்தெருவில், ஊரின் மற்ற பகுதியிலும் அழகாக சிவப்பு நிறத்தில் தொங்கிக்கொண்டிருந்த தபால் பெட்டியும், தபால் பெட்டியும், தபால் நிலையமும், கிளிங் கிளிங் சைக்கிள் ஓசையும், சார் போஸ்ட் என்ற குரலும், ஸ்டாம்ப் ஒட்டும் பழக்கமும், பொடி நடையாக சென்று கடிதத்தை போஸ்ட்டு செய்துவிட்டு வந்த சமயமும், எட்டு, பத்து நாட்கள் கடிதத்துக்காக காத்திருந்த அனுபவமும் இன்று காணாமலேயே போனது.

இந்த பதிவை ஒரு தபால்காரர் போல உங்களுக்கு கொடுக்கிறேன்

கிளிங்... கிளிங்... சார் போஸ்ட்...
Blogger Widget

2 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான நினைவுகள். நீங்கள் ஒப்பிலியப்பன் கோவிலா? என் திருமணம் அங்குதான் கோவிலில் நடந்தது.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, ஸ்ரீராம் அவர்களே.

    நான் பிறந்தது ராஜ மன்னார்குடி, வளர்ந்தது ஓசூரில். என் மாமாவுக்கு திருமணம் உப்பிலியப்பன் கோவிலில் நடந்தது, அந்தப் படம் என் மாமாவின் சஷ்டியப்தபூர்த்தி அன்று எடுக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு