-->

திங்கள், 1 அக்டோபர், 2018

இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 14 - அமெரிக்கப் பண்டிகைகள்!

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...

அமெரிக்கர்களின் பொழுதுபோக்கை பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், இதன் தொடர்ச்சியாய் அமெரிக்காவில் வார இறுதியிலும், விடுமுறை நாட்களிலும் என்ன செய்வார்கள் என்று எழுத ஆரமித்தேன் (அடுத்த அத்தியாயம்), ஆனால் அதற்கு முன் எப்போதெல்லாம் இங்கே விடுமுறை, எந்தந்த நாட்களில் விடுமுறை என்பது பற்றிய விவரத்துடன் இந்த அத்தியாயம் அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த தொடர் எழுத ஆரமித்தபோது எனது அக்கா ராதிகா, இங்கே முக்கிய கொண்டாட்டமான Thanks Giving பற்றி எழுத சொன்னார். அது பற்றி எழுத இப்போதுதான் சமயம் வந்துள்ளது.


நம் நாட்டிற்கும் இந்நாட்டிற்கு என்ன வித்தியாசம் என்று ஒரு வரியில் சொல்லப் போனால், இவர்கள் நமக்கு வேலை கொடுப்பவர்கள், நாம் வேலை செய்பவர்கள் (கூடிய விரைவில் இது விவசாயத்தில் நேர்ந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!). இந்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு (உலகில் வேறு நாடுகளுக்கும் கூட...) ஒரு வேலையை குடுத்து, இதை எனக்கு சில மாதங்களில் முடித்துக்கொடு, அல்லது எனது இந்த வேலைகளை இத்தனை ஆண்டுகளுக்கு பராமரித்துக்கொடு என்று நம் நாட்டில் உள்ள இன்போசிஸ், விப்ரோ, TCS, காக்னிசண்ட் போன்ற நிறுவனங்களுக்கு கொடுக்கும், நம் நாட்டில் உள்ள நம் மக்கள் கல்லூரி முடித்தவுடன், கல்லூரியில் எந்தத் துறையை தேர்ந்தெடுத்து படித்திருந்தாலும், அதாவது பொறியியல் (Computer Science, Mechanical Engineering, Textie Engineering, Electrical Engineering, Aeronatical Engineering, Marine Engineering) என்று எந்தப் படிப்பை படித்திருந்தாலும் இந்த நிறுவனங்களில் தான் வேலை பார்ப்பார்கள் (இது பற்றி விரிவாக அத்தியாயம் 16இல்!).

நம் நாட்டிலேயே இருந்தாலும் இந்நாட்டு நிறுவனங்களுக்கு வேலை பார்ப்பதால் அவர்கள் கடைபிடிக்கும் விடுமுறையை தான் நம் நாட்டில் உள்ள நிறுவனங்கள் கடைபிடிக்கும், அதில் வேலை பார்க்கும் நபர்களுக்கும் அமெரிக்க விடுமுறை நாட்களில் தான் விடுமுறை கிடைக்கும். நம் பண்டிகை நாட்களில் நம்மால் விடுமுறை எடுக்க முடியாது பெரும்பாலும், ஆனால் அமெரிக்க விடுமுறை நாட்களில் நமக்கு விடுமுறை கிடைக்கும். பெங்களூரில் உள்ள தமிழகம், கேரளா செல்லும் பேருந்து நிறுவனங்கள் அமெரிக்க விடுமுறை நாட்காட்டியை வைத்திருப்பார்கள். தீபாவளி பொங்கல் சமயத்தில் பேருந்தில் விலை ஏற்றுவதைப்போல அமெரிக்க விடுமுறையை ஒட்டி வரும் வாரயிறுதிக்கும் பேருந்தில் விலை ஏற்றுவார்கள் தெரியுமா?

அமெரிக்காவில் ஓர் ஆண்டில் பத்து நாட்கள் தான் அரசு விடுமுறை. இந்த விடுமுறை நாட்களும் எப்படி அமைந்திருக்கும் என்றால், மக்கள் கொண்டாடும் விதமாக திங்கள், வியாழன், வெள்ளிக் கிழமைகளில் வரும் விதமாக அமைந்திருக்கும். நம் நாட்டில் சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமையில் வந்தால் அவ்வளவு தான்... "அடச்சே... ஒரு நாள் தள்ளி வந்துருக்கக் கூடாதா... ரெண்டு நாள் சேர்ந்தாற்போல லீவு கிடைச்சிருக்குமே" என்று சலித்துக்கொள்வோம். ஆனால் இங்கே பண்டிகை (அமெரிக்க சுதந்திரதினம், கிருஸ்துமஸ் தவிர...) வார நாட்களில் வந்தால், அந்த வார வெள்ளிக்கிழமையோ அல்லது திங்கட்கிழமையோ அந்த விடுமுறை அனுசரிக்கப்படும். இதனால் மூன்று அல்லது நான்கு நாட்கள் சேர்ந்தாற்போல விடுமுறை கிடைக்கும்.

இதோ, இது இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டின் விடுமுறை நாள் பட்டியல்... இதில் தேதியில் வித்தியாசம் இருந்தாலும் வார நாளைப் பார்த்தல் பெரும்பாலும் திங்கட்கிழமையில் விடுமுறை இருக்கும்.


இது விடுமுறையின் வழிமுறை, எந்தெந்த விடுமுறை எந்த நாளில் வர வேண்டும் என்று, நாள் முறையில் அனுஷ்டிக்கப் படும், நீண்ட விடுமுறை கிடைக்கும் என்பதனால்.

பொதுவாகவே அமெரிக்காவில் பல நிறுவனங்களில் விடுமுறை நாட்களுக்கு முந்தைய நாளில் மதியம் மூன்று மணிக்கே வீட்டுக்கு சென்று விடலாம். மேலும் Summer Fridays என்று கோடை காலத்தில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் மதியம் மூன்று, சில நிறுவனங்களில் மதியம் ஒருமணிக்கே வீட்டுக்கு சென்று விடலாம். இது பெரும்பாலும் Memorial Day தொடங்கி Labor Day வாரம் வரை இருக்கும். கோடை காலத்தின் முதல் நாள், குளிர்காலத்தின் முதல் நாள், இலையுதிர் காலத்தின் முதல் நாள் என்று இங்குள்ள நாள்காட்டியை குறிப்பிட்டிருக்கும்.
இது தவிர மாநில அளவில் சிறு வித்தியாசத்தில் ஒன்றிரண்டு விடுமுறை இருக்கும். மொத்தம் ஐம்பது மாநிலம் இருப்பதனால் சில மாநிலங்களில் நியூயார்க்கில் இருக்கும் விடுமுறை அன்று அட்லாண்டாவில் விடுமுறை இருக்காது, அங்கே விடுமுறை இருக்கும் நாளில் நியூயார்க்கில் விடுமுறை இருக்காது. ஆனால் எது எப்படியோ ஆண்டில் மொத்தம் பத்து நாட்கள் தான் விடுமுறை இருக்கும், அதன் படி கூடி கழித்து கணக்கு சரியாக வரும்படி பார்த்துக்கொள்வார்கள்.

ஆனால், சில நிறுவனங்கள் அந்த ஆண்டு வருமானம் லாபகரமாக இருந்தால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துமஸ் முதல் புது வருடம் வரை ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் விடுமுறை கொடுத்து வேலை பார்ப்பவர்களை மகிழ்விப்பார்கள்.

ஜூலை 4 மற்றும் புது ஆண்டை ஒட்டி அன்றைய தினங்களில் எங்கெங்கும் வாணவேடிக்கை, பட்டாசு வெடிக்கும் நிகழ்ச்சி இருக்கும். சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இதை காண அந்தந்த இடங்களுக்கு சென்று கண்டு ரசிப்பர்.

கொட்டும் மழையில் வானவேடிக்கை! (அதெப்படி மழையில பட்டாசு வெடிக்குது?!)

இந்த ஆண்டு அமெரிக்க சுதந்திர தினத்தன்று நடந்த வானவேடிக்கை. இதன் முழு காணொளி எனது YouTube சேனலில் உள்ளது.விருப்பம் உள்ளவர்கள் பார்க்கவும்.
மேலே குறிப்பிடாத, ஆனால் விடுமுறையில் வராத நாட்கள் சில பல உள்ளன. குறிப்பாக St.Patricks Day, Easter, Halloween போன்றவை. St Patricks Day அன்று நியூயார்க்கில் ஊர்வலம் செல்வார்கள். அன்றைய தினம் அனைவரும் பச்சை நிறத்தில் ஆடை அணிந்திருப்பார்கள், பச்சை தொப்பி, பச்சை பலூன் என்று பச்சை பச்சையாக ஊர்வலம் (எந்த உள் அர்த்தமும் இல்லை) வருவார்கள்!

Halloween அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரும். இதுதான் திகிலான (சும்மா லுலுலுவே) கொண்டாட்ட நாள். அன்றைய தினம் அனைவரும் பேய் போல, பேர் விரட்டுபவர் போல, எலும்பு கூடு போல, முகத்தில் ரத்தம் வருவது போல என்று கன்னாபின்னாவென்று makeup செய்துக்கொண்டு இருப்பார்கள். அன்றைய இரவு பெரும்பாலான ஊர்களில் ஊர்வலம் நடக்கும். விதவிதமாக வேடம் அணிந்தவர்கள் இசையுடன் பேரணி வருவார்கள், இதை பார்த்து ரசிக்க ஊரே திரண்டு போகும். நியூயார்க்கில் இது மிக பிரபலம். இந்த Halloween கொண்டாட காரணம் அந்தக் காலங்களில் பேய் விரட்டுபவர்களை கவுரவிக்கும் பொருட்டு இந்த அக்டோபர் 31 ஆம் பிரிட்டன், அமெரிக்க போன்ற நாடுகளில் இதை அனுஷ்டிக்கிறார்கள். இந்த மாதம் எங்கு காண்டாலும் பூசணிக்காய் மற்றும் ஆரஞ்சு நிறமாக இருக்கும் அமெரிக்கா. அதாவது halloween சமயம் இங்கே இலையுதிர் காலம், கோடையின் வெப்பத்திலிருந்து குளிர்காலம் ஆரமிக்கும் சமயம், குளிரின் தன்மையால் மரங்களிலுள்ள இலைகளெல்லாம் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு நிறமாக மாறும் காலம். இதை குறிக்கும் மற்றும் கொண்டாடும் விதமாக எங்கு காணிலும் ஆரஞ்சு நிற அலங்காரங்கள் இருக்கும். சோளக்காட்டு பொம்மை போல அனைவரது வீட்டின் முன்பும் வைக்கோல் போற்றிய பொம்மைகள் நிறுவப்பட்டிருக்கும், பூசணிக்காயை முகம் போல கீறி அதனுள் விளக்கேற்றி அல்லது மின்சார விளக்குகளால் அலங்கரித்திருப்பர். கடைகளில் பூசணிக்காய் காபி (ஹாஹா ஆமாம், Pumpkin latte!), பூசணி doughnut, பூசணி ஜூஸ் (pumpkin cider) என்று எங்கு காணிலும் பூசணி மயம் தான்!

நம் தமிழகத்தில் தான் இன்னும் கடவுளே இல்லை என்று சத்தமாக வெளியே வாய் கிழிக்க பேசிவிட்டு, சத்தம் போடாமல் வீட்டுக்குள் சென்று சாமியிடம் CM ஆக்கிவிட்டுடு என்று பம்பும் கூட்டம் உள்ளது, இங்கே அப்படி இல்லை. (யாருக்காக யார் கிட்ட பேசுறானுங்கன்னு அவனுங்களுக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது!)


இப்படித்தான் கடைகளில் halloweenகான பொம்மைகள் விற்கப்படும்.

  

மேலும் street fair என்று கோடை, இலையுதிர் காலங்களில் அந்தந்த ஊர்களில் தெருக்களில் கடைகள் வைத்து, ஆட்டம் பாட்டத்துடன்  கொண்டாட்டமாக இருக்கும். இது நம்மூர் திருவிழாவுடன் ஒப்பிட்டால் இவர்களை பார்க்க பாவமாக இருக்கும், ஆனால் இவர்களுக்கு இது ஒரு கொண்டாட்டம் அவ்வளவுதான்! ஒன்னும் இல்லை, நேற்று ஒரு பஞ்சு மிட்டாய் வாங்கினேன், ஹ்ம்ம்... ஒண்ணுமே இல்லை அதில்! நம்மூரில் பஞ்சுமிட்டாய் வாங்கினால் அவ்வளவு அடர்த்தியாக பெரிதாக இருக்கும், ஆனால் இங்கோ மெலிந்து மிக சிறியதாக இருக்கும், அதாவது இது ஒரு உதாரணம், நம் நாட்டில் நாம் அனுபவித்த திருவிழாவில் அரைப்பங்கு கூட இருக்காது, இவர்களுக்கு இதுதான் உலகம் என்பதால் அதை மகிழ்ந்துக் கொண்டாடுகின்றனர்!

நியூயார்க் நகரில் நடந்த ஒரு street fair இல் எடுத்த படம்.
Thanks Giving நவம்பர் மாதம் கடைசி வியாழன், வெள்ளி கொண்டாடப்படும். இது முதன்முதலில் 1621ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் அமெரிக்காவுக்கு வந்த பின்னர் செய்த அறுவடை நாளைக்குகிரிக்கும் விதமாக கொண்டாடுவது. பின்னர் அன்றைய தினம் அனைத்து விஷயங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய உணவில் வான்கோழியை சமைத்து உண்பார்கள், இதை grand feast என்பார்கள். குறிப்பாக அன்றைய தினம் வெவேறு இடங்களில் வசிக்கும் நபர்கள் புறா கூட்டிற்கு திரும்ப வருவது போல, குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடி விருந்துண்ணவர். இந்த Thanks Giving தினத்தன்று பெரிய நகர்களில் நம் ஊரில் பல்லக்கில் விதவிதமாக கடவுள்களை அலங்கரித்து கொண்டு வருவது போல, பொம்மைகளை, பலூன்களை அலங்கரித்து பேரணியாக கொண்டு செல்வர். அதை பார்க்க பெரும் திரளாக மக்கள் வந்து கண்டு ரசிப்பர். இதையொட்டி வருடா வருடம் நான்கு நாள் விடுமுறை கிடைக்கும்.

ஹ்ம்ம்... இப்படி ஒரு புது பண்டிகை நம் நாட்டுக்கே இப்போது வேண்டும் என்று நினைக்கிறன்... நம் நாட்டிலேயே இப்போதெல்லாம் எங்கே பண்டிகை நாட்களுக்கு எல்லோரும் வீட்டில் இருக்கிறோம்? ஒன்று ஊரில் இருந்தாலே நம்ம பண்டிகைக்கு லீவு கிடையாது என்று அலுவலகத்தில் சொல்லிவிடுவார்கள், இல்லை என்றால் இப்படி வெளி நாடுகளுக்கும், வெளி மாநிலத்துக்கும் வேலைக்கு சென்று விட்டால் வீட்டுக்கு சென்று கொண்டாடுவதே குறைந்து விட்டது!


கிறிஸ்துதாஸ், புது வருடம் என்று வந்துவிட்டால் ஊரே கலைக்கட்டிவிடும், எங்கு பார்த்தாலும் வண்ண விளக்குகள், அலங்காரங்கள், இசை என்று அற்புதமாக இருக்கும். குறிப்பாக நியூயார்க் அலங்காரத்தில் ஜொலிக்கும். இந்த சமயங்களில் தான் இங்கே பனி பொழியும் காலம், எங்கு கண்டாலும் பனிபடர்ந்த வெளியிலும், சாலையிலும் வண்ண விளக்குகளும், சிகப்பு அலங்காரங்களும் நிறைந்திருக்கும் காட்சிகளை பார்க்கும்போது ஏதோ அனிமேஷன் படம் பார்ப்பது போல இருக்கும்.

இந்த மின் அலங்காரம் ஒரு கட்டிடத்தில் நவம்பர் மாதம் thanks giving முதல் புத்தாண்டு வரை ஒவ்வொரு கால் மணிநேரத்துக்கும் நடக்கும். இதன் காணொளி கீழே.எவ்வளவு பனி இருந்தாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே செல்வார்கள், தேவாலயம், இசை நிகழ்ச்சிகள் என்றும் புது ஆன்டு பிறக்கும்முன் டிசம்பர் 31ஆம் தேதி இரவில் நியூயார்க் நகருக்கு உலகில் பல இடங்களிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து BallDrop கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்வார்கள்.

Balldrop என்பது நமது தேசியக்கொடியை கம்பத்தில் கீழிருந்து மேலே ஏற்றுவோம் அல்லவா? அதுபோல, டிசம்பர் 31 மாலை ஆறு மணிக்கு, நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் (Timessquare) பெரிய கட்டிடத்தின் மேலே, ஒரு கம்பம் இருக்கும், அந்த கம்பத்தில் கொடிக்கு பதிலாக ஒரு பெரிய 13 டன் எடை கொண்ட மினுமினுக்கும் பந்து வடிவில் படிகக்கல்லை (Crystal Ball),  ஏற்றுவார்கள், பின் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் அந்த கட்டிடத்தின் மேலிருந்து பட்டாசு வெடிப்பார்கள் (ஒரு மணி நேரம் என்பதை குறிக்க) பின் சரியாக 11:59:50 நொடிகள் இருக்கும்போது அங்கிருக்கும் பெரிய திரைகளில் 10, 9, 8, 7 என்று அன்றைய ஆண்டின் இறுதி பத்து நொடிகள் அடிக்கும் போது அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அந்த எண்களைக் கூறி கத்தி ஆர்ப்பரிக்க ("வெற்றி வேல்...வீர வேல்..." என்று கந்தன் கருணை படத்தில் போர் காட்சில் வரும் காட்சி போல) சரியாக 12:00 மணிக்கு அந்த கம்பத்தில் ஏற்றிய பந்தை கட்டிடத்தின் மேலுள்ள கம்பத்தின் கீழ் பகுதிக்கு வரும் படி இறங்குவார்கள். இதுதான் balldrop, நமக்கு கேட்கவும் பார்க்கவும் இது சிரிப்பாகவும், இதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்றிருக்கும், ஆனால் இம்மக்கள் அதை மிக மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

ஆக பண்டிகைகளை அமெரிக்க தொலைக்காட்சியில் முதல் முறையாக, திரைக்கு வந்து சில மாதங்களே ஆன.... மாலை ஆறு மணிக்கு....  என்றெல்லாம் நம் போல தொலைக்காட்சிக்கு அடிமை ஆகிவிடாமல், பண்டிகை தினங்களை வெகு சிறப்பாகவும் எவ்வளவு குளிர், பனி இருந்தாலும் வெளியே சென்றும், குடும்பத்துடன் இணைந்தும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

அடுத்த அத்தியாயம் விரைவில்...
Blogger Widget

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக