-->

புதன், 24 அக்டோபர், 2018

இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு!

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...

எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும்.  



அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இருக்க வேண்டிய ஆள்டா என்று கௌண்டமணியும்; அழகேசன் என்ற பெயரை பில்கேட்ஸ் போல ஆல்கேட்ஸ் என்று வைத்துக்கொண்டு  அமெரிக்காவுக்கு போக விசா அப்ளை செஞ்சிருக்கேன் இன்னும் கொஞ்ச நாள் தான், நான் அமெரிக்கா போகுற நேரம் நெருங்கிடிருக்கு என்று விவேக்கும் மற்றும் பல படங்களில் இப்படி அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது பற்றி நிறைய காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். ஏன் வேறு நாடுகளைப் பற்றி பெரிதாக சொல்லாமல் அமெரிக்காவை மட்டும் இப்படி உயர்வாக கருதுகிறார்கள்? பணம் சம்பாதிக்கலாம் என்பதாலா? இதோ இந்த அத்தியாயத்தில் அமெரிக்காவில் வேலை செய்யும் அனுபவம் பற்றியும், பணியிடத்தில் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்பதையும் பார்க்கலாம்.

முதலில் நம் நாட்டிலிருந்து இங்கு வேலை பார்க்க வருபவர்களைப் பற்றி சுருக்கமாக ஒரு விளக்கம். நம் நாடு மட்டுமல்லாமல், உலகில் வேறு எந்த நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வேலைப் பார்க்க வரவேண்டும் என்றாலும் அதற்கு விசா வேண்டும். அந்த விசாவில் சில வகைகள் உண்டு, H1B, L1A, L1B, B1 போன்றவை அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கு வகுக்கப்பட்ட விசாக்கள். இதில் ஒவ்வொரு வகைக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. B1 என்பது பிசினஸ் விசா, இதில் முந்தைய காலங்களில் (அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை) ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை அமெரிக்காவில் வேலை காரணமாக தங்கியிருக்கலாம், அதற்கு பின் cooling period என்று தமது தாய் நாட்டுக்கு சென்று விட வேண்டும், இந்த cooling period மூன்று மாதங்களுக்குள் மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லக் கூடாது என்பது பொருள் - ஆனால் இன்போசிஸ், TCS, Wipro போன்ற கம்பெனிகள் இதை தவறாக பயன் படுத்தியமையால் இப்போதெல்லாம் இந்த பிசினஸ் விசாவில் ஐந்து வாரம் வரை தான் அமெரிக்காவுக்கு பெரும்பாலும் வர முடியும்.

மற்ற மேற்குறிப்பிட்ட விசாக்களில் வருபவர்கள் அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் வரை தான் தங்கியிருக்க முடியும். H1B விசாவிற்கு ஆண்டுக்கு ஒரு முறை தான் விண்ணப்பிக்க முடியும். உலகில் அனைத்து நாடுகளையும் சேர்த்து ஓர் ஆண்டுக்கு 65, 000 பேர் வரைதான் ஓர் ஆண்டுக்கு இந்த விசா வழியாக அமெரிக்காவுக்கு வர இயலும். இதுதவிர ஆண்டுக்கு 20, 000 F விசாக்கள் அனுமதிக்கப்படும் இந்த F விசா என்பது மேற்படிப்புக்காக அமெரிக்கா வரும் மாணவர்களுக்கானது. இந்த விண்ணப்பிக்கும் தேதி பெரும்பாலும் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும். விண்ணப்பங்களின் எண்ணிக்கை அறுபத்தைந்தாயிரத்தை தாண்டினால் லாட்டரி முறையில் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் ஓர் எண் கொடுக்கப்பட்டிருக்கும் அது கணினி வழியாக சீரற்ற முறையில் ஒரு 65,000 விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்கும்.
பி.கு: இப்படி ஒரு முறையில் நம் நாட்டில் ரோடு போடும் டெண்டர் விட்டால் எல்லா கான்ட்ராக்ட்டும் பழனிச்சாமியின் சம்மந்திக்கே போகாமல் வெளியாட்களுக்கும் செல்லும்.

அதே போல H1B, L1A, L1B விசாக்களும் அனைவருக்குமெல்லாம் கொடுக்கப்படாது, specialized skills என்று ஒரு குறிப்பிட்ட சில தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விசாக்கள் கொடுக்கப்படும். மேலும் இது அனைவரும் எளிதாகவும் விண்ணப்பிக்க இயலாது. அமெரிக்க விசா என்பது இங்கே இருக்கும் ஒரு கம்பெனி தனக்கு வேண்டிய வேலையை செய்ய அமெரிக்காவிலேயே ஆள் கிடையாது அதனால் நான் வேறு நாட்டிலிருக்கும் திறமைசாலிகளை அந்த வேலை செய்து முடிக்கும் வரை எனது நாட்டுக்கு நான் அழைத்துக்கொள்கிறேன், அந்த நபர் இங்கு வந்து வேலை செய்ய நான் சம்பளம் கொடுக்கிறேன் என்று sponsor செய்யவேண்டும், அப்படியாக அந்த வேளைக்கு ஏற்ற அனுபவமும், திறமையும் உண்டு என்று பத்தாவதிலிருந்து, +2, கல்லூரி, இதற்கு முன் வேலை பார்த்த கம்பெனி என்று அனைத்து ஆவணங்களையும் நாம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆவணங்களை அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பும் முன் அவரவர் வேலை பார்க்கும் கம்பெனிகள் அதை ஒரு முறை சரிபார்த்து பின் அ.தூ-க்கு அனுப்பிவைப்பார்கள். பின் அவரவர் மாநிலத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட அமெரிக்க தூதரகத்துக்கு நேர்காணலுக்கு செல்ல வேண்டும். அங்கே இருக்கும் அமெரிக்கர்கள் அவரவர் விண்ணப்பத்துக்கு ஏற்ப கேள்விகளை கேட்பார்கள், நாம் அமெரிக்கா செல்ல திறமையானவர்கள் என்று அவர்களுக்கு பட்டால் மட்டுமே approved என்று நம் பாஸ்ப்போர்ட்டில் ஒரு சீல் அடிப்பார்கள், பின் நமது படம் போட்டு எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை நாம் அமெரிக்காவில் இருக்கலாம் என்று ரேஷன் கார்டில் இருப்பது போல ஒரு பக்கத்தை நமது பாஸ்ப்போர்ட்டில் அச்சடித்து கொடுப்பார்கள் - இதற்கு பெயர் தான் விசா.

தற்சமயம் இந்தியாவிலிருந்து ஒருவர் அமெரிக்காவுக்கு வருவது என்பது ரெட்டை குழந்தைப் பெற்றெடுப்பது போல. மிக கடினமான ஒன்று. பல கட்ட தடங்கல்களை தாண்டி தான் வர இயலும்.
சரி, விசா பற்றி பார்த்தாச்சு. இங்கே வேலைபார்க்குமிடம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

காலை ஆறு மணி முதலே பேருந்து, ரயில், கப்பல் (Ferry), கார் என்று எல்லாமே பரபரப்பாக இயங்க தொடங்கிவிடும். காலை ஏழு மணி முதல் பத்து மணிவரை நெரிசலாக இருக்கும். பேருந்திலிருந்து இறங்கி பத்து நிமிடம் எனது அலுவலகத்துக்கு நடந்து செல்லும் வழியில் உலகையே பார்த்துவிடலாம். அமெரிக்கர்கள், இந்தியர்கள், சீன மக்கள், ஜப்பான், ஐரோப்பியர்கள் என்று உலக மக்கள் அனைவரும் சங்கமித்திருக்கும் இடம் தான் அமெரிக்கா, குறிப்பாக நியூயார்க், கலிபோர்னியா (இதுதான் நமக்கு தெரிந்த தெரியாத அனைத்து மென்பொருள் நிறுவனங்களின் பிறப்பிடம்), லாஸ் ஏஞ்சலஸ் போன்ற முக்கிய நகரங்கள். இங்கே தான் அனைத்து வித கம்பெனிக்களும் இருக்கும். இது தவிர இருக்கும் மற்ற மாநிலங்களில் குறிப்பாக ஒன்றிரண்டு பெரிய கம்பனிகள் இருக்கும்.

நம் ஊரில் கழுத்தில் ஒரு கயிறில் நமது அடையாள அட்டையை நாள் முழுதும் தொங்க விட்டிருக்க வேண்டும், சிலர் இடுப்பில் தொங்க விட்டிருப்பார், இங்கே அது தேவை இல்லை. பாக்கெட்டினுள் வைத்திருந்தால் போதும், ஏனென்றால் அலுவலக அக்கதவுகள் திறக்க அந்த அடையாள அட்டையை பயன் படுத்த வேண்டும். இந்தியாவில் இருக்கும் மேனேஜர் போல இந்த நாட்டு மேனேஜர் ஒருவர் அலுவலகம் நுழைந்தவுடன் கடிகாரத்தை பார்ப்பதோ, ஏன் லேட்டு என்பது போன்ற கேள்விகளை கேட்கமாட்டார்கள். அவர் வேலையை அவர் பார்த்துக்கொண்டிருப்பார், நாமும் நம் வேலையை ஒழுங்காக பார்க்க வேண்டும், அவ்வளவு தான்.

நம் ஊரில் இருக்கும் கம்பெனிகளில் பொதுவாக காலை அலுவலகம் சென்ற உடன் பையை வைத்துவிட்டு ஒரு மணிநேரம் டிபன் சாப்பிட செல்வது, பின் இருப்பிடம் வந்து கணினியில் செய்தி படிப்பது, பெயருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு, மீட்டிங் என்று சொல்லி ஒரு தொலைபேசி அழைப்பில் சேர்ந்து அதை muteஇல் போட்டுவிட்டு முகநூலை நோண்டுவது, மதியம் ஒரு மணிநேரம் உணவு விடுப்பு எடுப்பது, பின்னர் ஒப்புக்கு ஒரு மணி நேரம் வேலை பார்த்துவிட்டு மீண்டும் டீ பிரேக் என்று ஒரு அரை மணிநேரம் வெளியில் சென்று விட்டு வந்து அப்போது தான் வேலைக்கு வந்தது போல சில நேரம் வேலை பார்த்துவிட்டு எதற்கு உட்கார்ந்திருக்கிறோம் என்றே தெரியாமல் பெரும்பாலானோர் வேண்டுமென்றே ஏழு மணி வரை உட்கார்ந்துவிட்டு மேனேஜரிடம் நல்ல பெயர் எடுப்பதாக நினைத்து லேட்டாக வீட்டிற்கு செல்வது. அந்த மேனேஜரும் எதற்கு உட்கார்ந்திருக்கிறோம் என்று தெரியாமல் உட்கார்ந்து client இடம் நல்ல பெயர் வாங்குவதாக நினைத்துக்கொள்வார். உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்ட என்று இவனால் அவன் லேட்டா வீட்டுக்கு போவான் அவனால இவன் லேட்டா வீட்டுக்கு போவான். (முட்டா பசங்க!)

பி.கு: சரி நீயும் அந்த கும்பல்ல ஒன்னு தான என்று உங்களுக்கு தோணலாம், மேற் கூறியவை  பொதுவாக பெரும்பாலானோர் பின்பற்றுவது. எனது மானேஜர் மும்பையிலும் நான் பெங்களுருவில் இருந்தமையால் நானே ராஜ நானே மந்திரி!

சரி, இங்கே எப்படி என்று பார்ப்போம். இங்கே பல நாட்டினர் பல ஆண்டுகளாக வேலை பார்ப்பதால் வேலை செய்யுமிடத்தில் அனைத்து நாட்டினரும் கலந்திருப்பர். அமெரிக்க நபர் மானேஜராக இருந்தால் எந்த தொல்லையும் இருக்காது. தாம் நம்மிடம் அவர் எதிர்பார்ப்பது நமது வேலையை, அந்தந்த வேலை குறிப்பிட்ட நேரத்தில் முடிய வேண்டும். எந்த நேரத்துக்கு வருகிறோம் எந்த நேரத்துக்கு செல்கிறோம் போன்றவற்றில் பெரிதாக கவனம் செலுத்த மாட்டார்கள், அதே போல யாரும் அனாவசியமாக தாமதமாக வருவதோ சீக்கிரமாக செல்வது போன்றவையும் செய்ய மாட்டார்கள். ஒன்பது மணிக்கு வந்து டான் என்று ஐந்து மணிக்கு கிளம்பிவிடலாம், இன்னும் சொல்ல போனால் நான்கு ஐம்பத்தி எட்டுக்கு பிசியாக பார்த்த ஒருவரை ஐந்து மணிக்கு பார்க்க முடியாது, அரை குறையாக கிளம்ப மாட்டார்கள், ஆனால் அதற்கு ஏற்றார் போல வேலையை திட்டமிட்டு முடித்துவிட்டு செல்வர். சரியான நேரத்துக்கு நம் ஊரில் கிளம்பினாள் ஏதோ தவறியழைத்தது போல பார்ப்பார், ஆனால் இங்கே அப்படி இல்லை. இந்த குழாயடியில் வம்பு பேசுவது போன்ற செயலிலெல்லாம் யாரும் ஈடு படமாட்டார்கள், அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று போய்க்கொண்டே இருப்பார்கள்.
உடன் பணிபுரியும் ரஷ்ய, சீன, அமெரிக்க நண்பர்கள்.
ஆனால்.... ஹ்ம்ம் ஆனால்... இதே இந்த அமெரிக்கர்களுக்கு பதிலாக ஒரு இந்தியரே மானேஜராக வந்துவிட்டால் அங்கே  வலி தான். அணைத்து இந்திய மேனேஜரும் அப்படி என்று சொல்லி விடமுடியாது, இங்கேயே பிறந்து வளைந்த இந்திய வம்சாவெளியை சேர்ந்த அமெரிக்கராகட்டும், அல்லது பள்ளி, கல்லூரி சமயத்தில் இங்கே வந்து பின் பல ஆண்டுகள் இங்கேயே அனுபவம் பெற்று மானேஜராக ஆனா நபர்கள் அமெரிக்கர்களை போல தான் சிந்திப்பர், நடந்துக்கொள்வர். ஆனால் நம் நாட்டிலிருந்து ஒரு நாற்பது வயதுக்கு மேல் அல்லது நம் ஊர் அலுவலக கலாச்சாரத்திலேயே  நபர் மானேஜராக வாய்த்தால் அவ்வளவுதான். அமெரிக்கா வந்தது போலவே இருக்காது. இது போன்ற சில இந்திய மேனேஜர்களால் அமெரிக்கர்களும் கூட இந்தியர்கள் கண்டா நேரத்திலெல்லாம் வேலை செய்வதால் அவர்களும் அபப்டி செய்யவில்லை என்றால் அவர்களுடைய வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் அவர்களும் தாமதமாக செல்வது மற்றும் வீட்டிற்கு சென்ற பின்னரும் வேலை செய்ய வேண்டி இருக்கிறது என்று புலம்புவதாக வேறு மாநிலங்களில் வேலை செய்யும் எனது நண்பர்கள் பிரவீன் மற்றும் கெளதம் சொல்ல கேட்டு அமெரிக்கர்களின் மேல் பரிதாபம் தான் வந்தது.

இங்கே பெரும்பாலானோர் எவ்வளவு பெரிய பதவியிலிருந்தாலும் அலுவலகத்தில் அனைவரிடமும் சரிசமமாக பழகுவர். யார் எந்த பதவியிலிருக்கிறார் என்று பாராமல் அனைவரிடமும் சகஜமாக பேசி பழகுவார்கள். நான் வேலை பார்க்குமிடத்தில் எங்கள் கம்பெனி Vice President மற்றும்  எங்கள் அலுவலகம் சுத்தம் செய்யும் நபர் இருவரும் தாங்கள் அந்த வார இறுதியில் என்ன செய்யப்போகிறார்கள் என்பது பற்றி சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தனர். இதே நம் ஊரில் பெரும்பாலான கம்பெனிகளில் நம் மேனேஜருக்கு அடுத்த இடத்தில் இருப்பவரே நம்மிடம் பேச மாட்டார்கள்.

அதே போல பல கம்பெனிகளின் முதலாளிகள் கூட நியூயார்க்கில் பேருந்து, ரயில் என்று பொது வாகனங்களில் தான் பெரும்பாலும் பயணிப்பர். சாலையோரம் இருக்கும் food cart மற்றும் பொதுவான உணவகங்களில் மதிய உணவுக்கு செல்வர்.

இது தவிர அமெரிக்காவில் வேலை செய்பவர், அதாவது எந்த வேலை செய்பவரானாலும் அதை பெருமையாக தான் செய்கிறார்கள். காபி கடையில் வேலை பார்ப்பவராகட்டும், துணிக்கடையில் வேலை பார்ப்பவராகட்டும், ரோட்டில் பேப்பர் விற்பவராகட்டும், காவலராகட்டும், தீ அணைப்பு வீரராகட்டும், விவசாயியாகட்டும் (சும்மா சொல்ல வேண்டுமே என்று சொல்லவில்லை, சில உழவர்களிடம் பேருந்தில் பேசியிருக்கிறேன்), சாலையை சுத்தம் செய்பவராகட்டும், பேருந்து ஓட்டுநராகட்டும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் தங்கள் வேலையை செய்வர்.

சாலையை சுத்தம் செய்பவராகட்டும், பேருந்து நிலையங்களில் கழிப்பறையை சுத்தம் செய்பபவராகட்டும் அவர்களுக்கென்று கண்ணியமான சீருடை கொடுக்கப்பட்டிருக்கும், எல்லோருமே ஷூ தான் போட்டுக்கொண்டிருப்பர். கையில் gloves, சாலையில் வேலை செய்பவர்கள் reflector அணிந்திருப்பார். இப்படி அவர்களை மரியாதையாக அவர்களின் பணியாளர்கள் நடத்துகிறார்கள், அவர்களின் சம்பளம் அவர்களின் ஆடைகளில் பிரதிபலிக்காது.

படம்: நானே தான்! உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா என்றேன், தாராளமாக என்றார்.
இதோ இந்த படத்தில் இருப்பவர் ஸ்டீவ் மேக்கயா, இவர் சாலையில் செய்தித்தாள் விற்பவர் என்றால் நம்ப முடிகிறதா? இவரை கடந்து தான் தினமும் எனது அலுவலகம் செல்வேன், இருவரும் காலை வணக்கம் பரிமாறிக்கொள்வோம். ஒரு நாள் கூட அவர் முகம் சுளித்து நான் கண்டதில்லை. இவர் போலியோவால் பாதிக்கப்பட்டவர் என்றோ, செய்தித்தாள் விற்பவர் என்றோ அவர் முகம் ஒருநாளும் வெளிப்படுத்தியதில்லை, கம்பீரமாக தனது சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பார். மழையிலும் அதே கம்பீரத்துடன் உட்கார்ந்திருந்தது சென்ற வாரம் கூட கண்டேன். உலகின் மிக stylish ஆனா பேப்பர் விற்பவர் என்றுகூட இவரை கூறலாம். இவரைப் பற்றிய செய்தி ஒன்று தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூட வந்திருக்கிறது.

அதே போல முடி திருத்தும் இடத்திலாகட்டும், துணிக்கடையிலாகட்டும் ஏதேனும் வாங்கும் போது நாம் வாங்கும் விலையை விட குறைவாக வாங்குவதற்கான கூப்பன், அல்லது தள்ளுபடிக்கான வேறு வகைகள் இருந்தால் பல தடவை அவர்களே எனக்கு சொல்லியிருக்கிறார்கள், அதற்கு பதில் அது வாங்கிக்கொள்ளுங்கள், ஒரு நிமிடம் இருங்கள் வருகிறேன் என்று நான் கேமரா வாங்க சென்ற போது ஒரு ஊழியர் சொன்னார் - இந்த காமெரா அடுத்த வாரம் தள்ளுபடி விலையில் விற்கப் பட இருக்கிறது, நீங்கள் அடுத்த வாரம் வாங்கினால் பணம் சேமிக்கலாம் என்று. எனக்கு அப்படி ஒரு ஆச்சர்யம்!

நம் நாட்டில் துணிக்கடையில் வேலை பார்க்கும் பக்கத்து தெரு பையன் தானே கடைக்கு முதலாளி என்று நினைத்துக்கொண்டு அதெல்லாம் முடியாது என்று கறாராக பல முறை நடந்துக்கொண்டது உண்டு. ஆனால் இங்கோ, முதலாளியும் கூட தன்னை தொழிலாளியாக தான் நடத்திக்கொள்கின்றனர். இதற்கு இலான் முஸ்க் (Elon Musk) என்பவரே மிக முக்கிய கண்கூடான எடுத்துக்காட்டு. Elon Musk என்பவர் இக்கால இளைஞர்கள் (நான் உட்பட) ஹீரோவாக பார்க்கப்படும் ஒரு நபர். தமது சிறு வயது முதலே பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இப்போது எலக்ட்ரிக் கார்களுக்கு புத்துணர்ச்சியுடன் புதுப்பொலிவு கொடுத்து உலகில் உள்ள அனைத்து பெரும் கார் நிறுவனங்களும் இவர் ஒருவராலேயே அவர்களும் மின்சாரத்தால் இயங்கும் கார்களை தயாரிக்க ஆரமித்துள்ளனர். அபப்டி பட்ட ஓவர் கடந்த சில மாதங்களாக தமது நிறுவன தயாரிப்பில் சற்று பின்தங்கியது மற்றும் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்ட சமயத்தில் மற்ற தொழிலாளர்களுடன் தாமும் கம்பெனியிலேயே சில வாரங்களாக தங்கி வேலை செய்து இப்போது பழைய படி விறுவிறுப்பாக இயங்க தொடங்கியுள்ளது Tesla நிறுவனம்.

இப்படி வேலை செய்யுமிடத்தில் அறிவுக்கும், திறமைக்கு மதிப்பளிப்பது, பதவி பாராமல் அனைவரிடமும் சமமாக நடந்துக்கொள்வது, work life balance என்று தனி நபரின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை மதித்து வேண்டிய சமயத்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது என்று வேறு நாட்டவர் என்று ஒதுக்காமல் நம்மையும் அவர்களுள் ஒருவராகவே மதித்து நமக்கும் முக்கியத்துவம் கொடுத்து தாமும் முன்னேறுவதால் தான் ஒவ்வொருவரும் அமெரிக்காவுக்கு வந்து வேலை பார்க்க துடிக்கின்றனர்.

பி.கு: ஏதோ எழுத மறந்தது போல தோணுகிறது... நாளை இரவு மீண்டும் இந்த அத்தியாயத்தில் சில கூடுதல் தகவல் எலினாலும் எழுதுவேன். சமயம் கிடைத்தால் இரண்டு நாள் கழித்து ஒரு முறை படிக்கவும். கூடுதல் தகவலை நீல நிறத்தில் எழுதுகிறேன், அதனால் முழுதையும் படித்து தங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

அடுத்த அத்தியாயம் விரைவில்...

மேலும் ஐந்து அத்தியாயங்களுடன் இதுதாங்க அமெரிக்கா தொடர் முற்றுபெரும்.

பி.கு: கருத்துக்களத்தின் எண்பத்தியொரு பதிவுகளில் முதல்முறையாக பின்குறிப்பு சில இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. (பி.கூவுக்கே பி.குவா என்கிறீர்களா!) 
Blogger Widget

செவ்வாய், 2 அக்டோபர், 2018

கனவு, ஏக்கம்!

கனவு:
இவனுக்கு சேகுவேரா ஆகணும்னு,
அவனுக்கு பிடல் காஸ்ட்ரோ ஆகணும்னு,
ஆறு, ஏழு பேருக்கு தான் தான் முதல்வராகணும்னு,
ஒருத்தனுக்கு பிரதமராகணும்னு,
இன்னொருத்தனுக்கு பிரதமராகவே இருந்துடணும்னு,
மதத்தையும், ஜாதியையும் பேசியே மக்களை முட்டாளா வைக்கணும்னு,
மேடைல விடற கதையை மக்கள் மறந்துடுவாங்கன்னு.

ஏக்கம் (மக்களுக்கு):
தரமான கல்வி கிடைக்காதான்னு,
பள்ளி, கல்லூரிகள்ல பீஸ்க்கு பதிலா சொத்தை எழுதி கேக்கறத நிறுத்த மாடங்களான்னு,
மதிப்பெண்ணை பார்க்காம, ஜாதி பாத்து காலேஜுல சீட்டு குடுக்கறத நிறுத்தமாட்டாங்களான்னு,
படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்காதான்னு, 
படிச்சவன் அரசியலுக்கு வரமாட்டானான்னு,
சினிமா பைத்தியம் பிடிச்சு, அவன் சினிமாவுல நடிக்கிறத பாத்து மக்கள் ஏமாறாம இருக்க மாடங்களான்னு,
எப்படியாவது நாடு முன்னேறிடாதான்னு,
ஊழல் ஒழிஞ்சிடாதான்னு,
நல்லது நடந்துடாதான்னு,
கறுப்புப்பணம் திரும்ப வந்துடாதான்னு,
தூய்மை இந்தியா ஆகிடாதான்னு,
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைஞ்சிடாதான்னு,
இந்த சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு சுமையையம் மீறி எப்படியாவது வெயில்லயும், மழைலையும் நடந்து, ஓடி, வயசானாலும் சரின்னு கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கடன் வாங்காம, வர வருமானத்தை வெச்சு எப்படியாவது மாசத்த ஓட்டிடணுமேன்னு,
பாங்குல லோன் வாங்கிட்டு திரும்ப குடுக்காம ஓடி போனவங்க கிட்டேர்ந்து அந்த பணத்த வசூல் பண்ணமாட்டாங்களான்னு,
(ஏன்னா) நம்ம பாங்கு கணக்குலேர்ந்து கம்மி காசு இருந்தா, ஏன் கம்மியா இருக்குனு பைன் போடாம, அச்சச்சோ கம்மியா இருக்கேன்னு பைன் போடாம விடமாட்டாங்களான்னு.
லட்ச கணக்கான கோடிகள்ல கொள்ளை அடிக்கிறவன் தண்டனை அனுபவிக்க மாட்டானான்னு.


Blogger Widget

திங்கள், 1 அக்டோபர், 2018

இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 14 - அமெரிக்கப் பண்டிகைகள்!

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...

அமெரிக்கர்களின் பொழுதுபோக்கை பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், இதன் தொடர்ச்சியாய் அமெரிக்காவில் வார இறுதியிலும், விடுமுறை நாட்களிலும் என்ன செய்வார்கள் என்று எழுத ஆரமித்தேன் (அடுத்த அத்தியாயம்), ஆனால் அதற்கு முன் எப்போதெல்லாம் இங்கே விடுமுறை, எந்தந்த நாட்களில் விடுமுறை என்பது பற்றிய விவரத்துடன் இந்த அத்தியாயம் அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த தொடர் எழுத ஆரமித்தபோது எனது அக்கா ராதிகா, இங்கே முக்கிய கொண்டாட்டமான Thanks Giving பற்றி எழுத சொன்னார். அது பற்றி எழுத இப்போதுதான் சமயம் வந்துள்ளது.


நம் நாட்டிற்கும் இந்நாட்டிற்கு என்ன வித்தியாசம் என்று ஒரு வரியில் சொல்லப் போனால், இவர்கள் நமக்கு வேலை கொடுப்பவர்கள், நாம் வேலை செய்பவர்கள் (கூடிய விரைவில் இது விவசாயத்தில் நேர்ந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!). இந்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு (உலகில் வேறு நாடுகளுக்கும் கூட...) ஒரு வேலையை குடுத்து, இதை எனக்கு சில மாதங்களில் முடித்துக்கொடு, அல்லது எனது இந்த வேலைகளை இத்தனை ஆண்டுகளுக்கு பராமரித்துக்கொடு என்று நம் நாட்டில் உள்ள இன்போசிஸ், விப்ரோ, TCS, காக்னிசண்ட் போன்ற நிறுவனங்களுக்கு கொடுக்கும், நம் நாட்டில் உள்ள நம் மக்கள் கல்லூரி முடித்தவுடன், கல்லூரியில் எந்தத் துறையை தேர்ந்தெடுத்து படித்திருந்தாலும், அதாவது பொறியியல் (Computer Science, Mechanical Engineering, Textie Engineering, Electrical Engineering, Aeronatical Engineering, Marine Engineering) என்று எந்தப் படிப்பை படித்திருந்தாலும் இந்த நிறுவனங்களில் தான் வேலை பார்ப்பார்கள் (இது பற்றி விரிவாக அத்தியாயம் 16இல்!).

நம் நாட்டிலேயே இருந்தாலும் இந்நாட்டு நிறுவனங்களுக்கு வேலை பார்ப்பதால் அவர்கள் கடைபிடிக்கும் விடுமுறையை தான் நம் நாட்டில் உள்ள நிறுவனங்கள் கடைபிடிக்கும், அதில் வேலை பார்க்கும் நபர்களுக்கும் அமெரிக்க விடுமுறை நாட்களில் தான் விடுமுறை கிடைக்கும். நம் பண்டிகை நாட்களில் நம்மால் விடுமுறை எடுக்க முடியாது பெரும்பாலும், ஆனால் அமெரிக்க விடுமுறை நாட்களில் நமக்கு விடுமுறை கிடைக்கும். பெங்களூரில் உள்ள தமிழகம், கேரளா செல்லும் பேருந்து நிறுவனங்கள் அமெரிக்க விடுமுறை நாட்காட்டியை வைத்திருப்பார்கள். தீபாவளி பொங்கல் சமயத்தில் பேருந்தில் விலை ஏற்றுவதைப்போல அமெரிக்க விடுமுறையை ஒட்டி வரும் வாரயிறுதிக்கும் பேருந்தில் விலை ஏற்றுவார்கள் தெரியுமா?

அமெரிக்காவில் ஓர் ஆண்டில் பத்து நாட்கள் தான் அரசு விடுமுறை. இந்த விடுமுறை நாட்களும் எப்படி அமைந்திருக்கும் என்றால், மக்கள் கொண்டாடும் விதமாக திங்கள், வியாழன், வெள்ளிக் கிழமைகளில் வரும் விதமாக அமைந்திருக்கும். நம் நாட்டில் சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமையில் வந்தால் அவ்வளவு தான்... "அடச்சே... ஒரு நாள் தள்ளி வந்துருக்கக் கூடாதா... ரெண்டு நாள் சேர்ந்தாற்போல லீவு கிடைச்சிருக்குமே" என்று சலித்துக்கொள்வோம். ஆனால் இங்கே பண்டிகை (அமெரிக்க சுதந்திரதினம், கிருஸ்துமஸ் தவிர...) வார நாட்களில் வந்தால், அந்த வார வெள்ளிக்கிழமையோ அல்லது திங்கட்கிழமையோ அந்த விடுமுறை அனுசரிக்கப்படும். இதனால் மூன்று அல்லது நான்கு நாட்கள் சேர்ந்தாற்போல விடுமுறை கிடைக்கும்.

இதோ, இது இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டின் விடுமுறை நாள் பட்டியல்... இதில் தேதியில் வித்தியாசம் இருந்தாலும் வார நாளைப் பார்த்தல் பெரும்பாலும் திங்கட்கிழமையில் விடுமுறை இருக்கும்.


இது விடுமுறையின் வழிமுறை, எந்தெந்த விடுமுறை எந்த நாளில் வர வேண்டும் என்று, நாள் முறையில் அனுஷ்டிக்கப் படும், நீண்ட விடுமுறை கிடைக்கும் என்பதனால்.

பொதுவாகவே அமெரிக்காவில் பல நிறுவனங்களில் விடுமுறை நாட்களுக்கு முந்தைய நாளில் மதியம் மூன்று மணிக்கே வீட்டுக்கு சென்று விடலாம். மேலும் Summer Fridays என்று கோடை காலத்தில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் மதியம் மூன்று, சில நிறுவனங்களில் மதியம் ஒருமணிக்கே வீட்டுக்கு சென்று விடலாம். இது பெரும்பாலும் Memorial Day தொடங்கி Labor Day வாரம் வரை இருக்கும். கோடை காலத்தின் முதல் நாள், குளிர்காலத்தின் முதல் நாள், இலையுதிர் காலத்தின் முதல் நாள் என்று இங்குள்ள நாள்காட்டியை குறிப்பிட்டிருக்கும்.
இது தவிர மாநில அளவில் சிறு வித்தியாசத்தில் ஒன்றிரண்டு விடுமுறை இருக்கும். மொத்தம் ஐம்பது மாநிலம் இருப்பதனால் சில மாநிலங்களில் நியூயார்க்கில் இருக்கும் விடுமுறை அன்று அட்லாண்டாவில் விடுமுறை இருக்காது, அங்கே விடுமுறை இருக்கும் நாளில் நியூயார்க்கில் விடுமுறை இருக்காது. ஆனால் எது எப்படியோ ஆண்டில் மொத்தம் பத்து நாட்கள் தான் விடுமுறை இருக்கும், அதன் படி கூடி கழித்து கணக்கு சரியாக வரும்படி பார்த்துக்கொள்வார்கள்.

ஆனால், சில நிறுவனங்கள் அந்த ஆண்டு வருமானம் லாபகரமாக இருந்தால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துமஸ் முதல் புது வருடம் வரை ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் விடுமுறை கொடுத்து வேலை பார்ப்பவர்களை மகிழ்விப்பார்கள்.

ஜூலை 4 மற்றும் புது ஆண்டை ஒட்டி அன்றைய தினங்களில் எங்கெங்கும் வாணவேடிக்கை, பட்டாசு வெடிக்கும் நிகழ்ச்சி இருக்கும். சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இதை காண அந்தந்த இடங்களுக்கு சென்று கண்டு ரசிப்பர்.

கொட்டும் மழையில் வானவேடிக்கை! (அதெப்படி மழையில பட்டாசு வெடிக்குது?!)

இந்த ஆண்டு அமெரிக்க சுதந்திர தினத்தன்று நடந்த வானவேடிக்கை. இதன் முழு காணொளி எனது YouTube சேனலில் உள்ளது.விருப்பம் உள்ளவர்கள் பார்க்கவும்.
மேலே குறிப்பிடாத, ஆனால் விடுமுறையில் வராத நாட்கள் சில பல உள்ளன. குறிப்பாக St.Patricks Day, Easter, Halloween போன்றவை. St Patricks Day அன்று நியூயார்க்கில் ஊர்வலம் செல்வார்கள். அன்றைய தினம் அனைவரும் பச்சை நிறத்தில் ஆடை அணிந்திருப்பார்கள், பச்சை தொப்பி, பச்சை பலூன் என்று பச்சை பச்சையாக ஊர்வலம் (எந்த உள் அர்த்தமும் இல்லை) வருவார்கள்!

Halloween அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரும். இதுதான் திகிலான (சும்மா லுலுலுவே) கொண்டாட்ட நாள். அன்றைய தினம் அனைவரும் பேய் போல, பேர் விரட்டுபவர் போல, எலும்பு கூடு போல, முகத்தில் ரத்தம் வருவது போல என்று கன்னாபின்னாவென்று makeup செய்துக்கொண்டு இருப்பார்கள். அன்றைய இரவு பெரும்பாலான ஊர்களில் ஊர்வலம் நடக்கும். விதவிதமாக வேடம் அணிந்தவர்கள் இசையுடன் பேரணி வருவார்கள், இதை பார்த்து ரசிக்க ஊரே திரண்டு போகும். நியூயார்க்கில் இது மிக பிரபலம். இந்த Halloween கொண்டாட காரணம் அந்தக் காலங்களில் பேய் விரட்டுபவர்களை கவுரவிக்கும் பொருட்டு இந்த அக்டோபர் 31 ஆம் பிரிட்டன், அமெரிக்க போன்ற நாடுகளில் இதை அனுஷ்டிக்கிறார்கள். இந்த மாதம் எங்கு காண்டாலும் பூசணிக்காய் மற்றும் ஆரஞ்சு நிறமாக இருக்கும் அமெரிக்கா. அதாவது halloween சமயம் இங்கே இலையுதிர் காலம், கோடையின் வெப்பத்திலிருந்து குளிர்காலம் ஆரமிக்கும் சமயம், குளிரின் தன்மையால் மரங்களிலுள்ள இலைகளெல்லாம் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு நிறமாக மாறும் காலம். இதை குறிக்கும் மற்றும் கொண்டாடும் விதமாக எங்கு காணிலும் ஆரஞ்சு நிற அலங்காரங்கள் இருக்கும். சோளக்காட்டு பொம்மை போல அனைவரது வீட்டின் முன்பும் வைக்கோல் போற்றிய பொம்மைகள் நிறுவப்பட்டிருக்கும், பூசணிக்காயை முகம் போல கீறி அதனுள் விளக்கேற்றி அல்லது மின்சார விளக்குகளால் அலங்கரித்திருப்பர். கடைகளில் பூசணிக்காய் காபி (ஹாஹா ஆமாம், Pumpkin latte!), பூசணி doughnut, பூசணி ஜூஸ் (pumpkin cider) என்று எங்கு காணிலும் பூசணி மயம் தான்!

நம் தமிழகத்தில் தான் இன்னும் கடவுளே இல்லை என்று சத்தமாக வெளியே வாய் கிழிக்க பேசிவிட்டு, சத்தம் போடாமல் வீட்டுக்குள் சென்று சாமியிடம் CM ஆக்கிவிட்டுடு என்று பம்பும் கூட்டம் உள்ளது, இங்கே அப்படி இல்லை. (யாருக்காக யார் கிட்ட பேசுறானுங்கன்னு அவனுங்களுக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது!)


இப்படித்தான் கடைகளில் halloweenகான பொம்மைகள் விற்கப்படும்.

  

மேலும் street fair என்று கோடை, இலையுதிர் காலங்களில் அந்தந்த ஊர்களில் தெருக்களில் கடைகள் வைத்து, ஆட்டம் பாட்டத்துடன்  கொண்டாட்டமாக இருக்கும். இது நம்மூர் திருவிழாவுடன் ஒப்பிட்டால் இவர்களை பார்க்க பாவமாக இருக்கும், ஆனால் இவர்களுக்கு இது ஒரு கொண்டாட்டம் அவ்வளவுதான்! ஒன்னும் இல்லை, நேற்று ஒரு பஞ்சு மிட்டாய் வாங்கினேன், ஹ்ம்ம்... ஒண்ணுமே இல்லை அதில்! நம்மூரில் பஞ்சுமிட்டாய் வாங்கினால் அவ்வளவு அடர்த்தியாக பெரிதாக இருக்கும், ஆனால் இங்கோ மெலிந்து மிக சிறியதாக இருக்கும், அதாவது இது ஒரு உதாரணம், நம் நாட்டில் நாம் அனுபவித்த திருவிழாவில் அரைப்பங்கு கூட இருக்காது, இவர்களுக்கு இதுதான் உலகம் என்பதால் அதை மகிழ்ந்துக் கொண்டாடுகின்றனர்!

நியூயார்க் நகரில் நடந்த ஒரு street fair இல் எடுத்த படம்.
Thanks Giving நவம்பர் மாதம் கடைசி வியாழன், வெள்ளி கொண்டாடப்படும். இது முதன்முதலில் 1621ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் அமெரிக்காவுக்கு வந்த பின்னர் செய்த அறுவடை நாளைக்குகிரிக்கும் விதமாக கொண்டாடுவது. பின்னர் அன்றைய தினம் அனைத்து விஷயங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய உணவில் வான்கோழியை சமைத்து உண்பார்கள், இதை grand feast என்பார்கள். குறிப்பாக அன்றைய தினம் வெவேறு இடங்களில் வசிக்கும் நபர்கள் புறா கூட்டிற்கு திரும்ப வருவது போல, குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடி விருந்துண்ணவர். இந்த Thanks Giving தினத்தன்று பெரிய நகர்களில் நம் ஊரில் பல்லக்கில் விதவிதமாக கடவுள்களை அலங்கரித்து கொண்டு வருவது போல, பொம்மைகளை, பலூன்களை அலங்கரித்து பேரணியாக கொண்டு செல்வர். அதை பார்க்க பெரும் திரளாக மக்கள் வந்து கண்டு ரசிப்பர். இதையொட்டி வருடா வருடம் நான்கு நாள் விடுமுறை கிடைக்கும்.

ஹ்ம்ம்... இப்படி ஒரு புது பண்டிகை நம் நாட்டுக்கே இப்போது வேண்டும் என்று நினைக்கிறன்... நம் நாட்டிலேயே இப்போதெல்லாம் எங்கே பண்டிகை நாட்களுக்கு எல்லோரும் வீட்டில் இருக்கிறோம்? ஒன்று ஊரில் இருந்தாலே நம்ம பண்டிகைக்கு லீவு கிடையாது என்று அலுவலகத்தில் சொல்லிவிடுவார்கள், இல்லை என்றால் இப்படி வெளி நாடுகளுக்கும், வெளி மாநிலத்துக்கும் வேலைக்கு சென்று விட்டால் வீட்டுக்கு சென்று கொண்டாடுவதே குறைந்து விட்டது!






கிறிஸ்துதாஸ், புது வருடம் என்று வந்துவிட்டால் ஊரே கலைக்கட்டிவிடும், எங்கு பார்த்தாலும் வண்ண விளக்குகள், அலங்காரங்கள், இசை என்று அற்புதமாக இருக்கும். குறிப்பாக நியூயார்க் அலங்காரத்தில் ஜொலிக்கும். இந்த சமயங்களில் தான் இங்கே பனி பொழியும் காலம், எங்கு கண்டாலும் பனிபடர்ந்த வெளியிலும், சாலையிலும் வண்ண விளக்குகளும், சிகப்பு அலங்காரங்களும் நிறைந்திருக்கும் காட்சிகளை பார்க்கும்போது ஏதோ அனிமேஷன் படம் பார்ப்பது போல இருக்கும்.

இந்த மின் அலங்காரம் ஒரு கட்டிடத்தில் நவம்பர் மாதம் thanks giving முதல் புத்தாண்டு வரை ஒவ்வொரு கால் மணிநேரத்துக்கும் நடக்கும். இதன் காணொளி கீழே.



எவ்வளவு பனி இருந்தாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே செல்வார்கள், தேவாலயம், இசை நிகழ்ச்சிகள் என்றும் புது ஆன்டு பிறக்கும்முன் டிசம்பர் 31ஆம் தேதி இரவில் நியூயார்க் நகருக்கு உலகில் பல இடங்களிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து BallDrop கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்வார்கள்.

Balldrop என்பது நமது தேசியக்கொடியை கம்பத்தில் கீழிருந்து மேலே ஏற்றுவோம் அல்லவா? அதுபோல, டிசம்பர் 31 மாலை ஆறு மணிக்கு, நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் (Timessquare) பெரிய கட்டிடத்தின் மேலே, ஒரு கம்பம் இருக்கும், அந்த கம்பத்தில் கொடிக்கு பதிலாக ஒரு பெரிய 13 டன் எடை கொண்ட மினுமினுக்கும் பந்து வடிவில் படிகக்கல்லை (Crystal Ball),  ஏற்றுவார்கள், பின் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் அந்த கட்டிடத்தின் மேலிருந்து பட்டாசு வெடிப்பார்கள் (ஒரு மணி நேரம் என்பதை குறிக்க) பின் சரியாக 11:59:50 நொடிகள் இருக்கும்போது அங்கிருக்கும் பெரிய திரைகளில் 10, 9, 8, 7 என்று அன்றைய ஆண்டின் இறுதி பத்து நொடிகள் அடிக்கும் போது அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அந்த எண்களைக் கூறி கத்தி ஆர்ப்பரிக்க ("வெற்றி வேல்...வீர வேல்..." என்று கந்தன் கருணை படத்தில் போர் காட்சில் வரும் காட்சி போல) சரியாக 12:00 மணிக்கு அந்த கம்பத்தில் ஏற்றிய பந்தை கட்டிடத்தின் மேலுள்ள கம்பத்தின் கீழ் பகுதிக்கு வரும் படி இறங்குவார்கள். இதுதான் balldrop, நமக்கு கேட்கவும் பார்க்கவும் இது சிரிப்பாகவும், இதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்றிருக்கும், ஆனால் இம்மக்கள் அதை மிக மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

ஆக பண்டிகைகளை அமெரிக்க தொலைக்காட்சியில் முதல் முறையாக, திரைக்கு வந்து சில மாதங்களே ஆன.... மாலை ஆறு மணிக்கு....  என்றெல்லாம் நம் போல தொலைக்காட்சிக்கு அடிமை ஆகிவிடாமல், பண்டிகை தினங்களை வெகு சிறப்பாகவும் எவ்வளவு குளிர், பனி இருந்தாலும் வெளியே சென்றும், குடும்பத்துடன் இணைந்தும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

அடுத்த அத்தியாயம் விரைவில்...
Blogger Widget

வியாழன், 6 செப்டம்பர், 2018

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 13 | பொழுதுபோக்கு

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...


டிவி, சினிமா பற்றி மட்டுமே சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதையே இன்னும் விரிவாக எழுதியிருக்க வேண்டும், ஆனால் அது அரைத்த மாவாகிவிடும் என்று முற்றுப்புள்ளியிட்டேன்.

ஆனால் அதுமட்டுமே இங்கு பொழுதுபோக்கு அல்ல, அதைத் தாண்டி ஒரு உலகமுள்ளது!

எனது சிறு வயதில் எங்கள் ஓசூரில் ஆண்டாண்டுகளாக தேர் திருவிழாவையொட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கும் பொருட்காட்சியில் ஒரு முறை S.Ve.சேகரின் மேடை நாடகம் நடந்தது, அப்போது அந்த நாடகத்தை கண்டு ரசித்திருக்கிறேன். அதன் பின் நாகைப்பட்டினத்தில் எனது மாமாவின் இல்லத்திற்கு சென்றிருந்த சமயத்தில் சிவன் தெற்கு வீதியில் T.K.S.நடராஜனின்

என்னடி முனியம்மா ஒன் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னால போனா நான் பின்னாலே வாரேன்

மாடு ரெண்டும் மதுர வெள்ளமணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
மாடு ரெண்டும் மதுர வெள்ளமணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணம்மா - அது
கூடுதடி சாலபாதை பொன்னம்மா

என்னடி முனியம்மா ஒன் கண்ணுல மையி

என்ற நாட்டுப்புற பாடலைக் கேட்டு ரசித்து அதையே பல ஆண்டுகளாக பாடி முணுமுணுத்திருக்கிறேன்... அதற்கும் முன் குழந்தையாக இருந்த சமயத்தில் நான் பிறந்த ராஜ மன்னார்குடியில் தெருக்கூத்து பார்த்த நினைவு. இந்தியாவிலேயே மிக பிரமாண்டமாகவும், அற்புதமாகவும் கொண்டாடப்படும் எங்கள் ஓசூர் விநாயகர் சதுர்த்தி சமயத்திலும், உகாதிப் பண்டிகையையொட்டி தெருவில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சியை நினைவு தெரிந்தது முதல் ரசித்திருக்கிறேன்.

இதன் பின்னர் மயிலாப்பூரில் படித்த சமயத்தில் தவறாமல் பாரதி வித்யா பவனில் நடந்த இசைக் கச்சேரிக்கு, பாரதநாட்டியத்திற்கும் - அப்படியே இதையும் சேர்த்துக்கொள்கிறேன் - கருணாநிதியின் தலைமையில் 2005இல் அவர் வெளியிட்ட புத்தக வெளியீட்டிற்கும், "Yes, you can" என்ற ஒபாமாவின் புத்தகத்தை அவர் முதல் முறை அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்குமுன் வைகோ அவர்கள் ஒபாமாவை சந்தித்து அந்தப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து "ஆம், நம்மால் முடியும்" என்று வெளியிட்ட விழாவிலும், ராமகிருஷ்ணா விஜயம் புத்தகத்தின் எண்பத்து  ஐந்தாவது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் அனைவருக்கும் பிடித்த தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் பேச்சுரையையும், தினமணியில் கேலிச்சித்திரம் வரையும் மதியின் புத்தக வெளியீட்டு விழாவில் அப்துல் கலாம் அவர்கள் வெளியிட எங்கள் கல்லூரி செயலாளர் ஆத்மகனானந்தாஜி  அவர்கள் பெற்ற விழாவில் அவருடனேயே காரின் மயிலாப்பூர் மியூசிக் அகாடெமிக்கு சென்று பத்தாவது வரிசையில் உட்கார்ந்து அப்துல் கலாமின் சுறுசுறுப்பையும் அவர்களின் குழந்தை போன்ற மென்மையான குரலின் பேச்சையும் பார்த்து ரசித்திருக்கிறேன்.

இதுதவிர 2005 முதல் 2013 வரை தொடர்ந்து துக்ளக் ஆண்டுவிழா அன்று எப்படியும் அரங்கினுள் சென்று ஆசிரியர் சோ அவர்களின் பேச்சை கேட்க வேண்டும் என்று மாலை ஆறு மணி விழாவுக்கு மதியம் இரண்டு மணிமுதலே துக்ளக் வாசகர்கள் சாரைசாரையாக வரத் தொடங்கிவிடுவார்கள். நானும் ஆரம்பத்தில் தனியாகவும், பின் வந்த ஆண்டுகளில் எனது மாமா மற்றும் அண்ணாவுடன் மதியமே காமராஜர் அரங்கம் சென்றும்,  சில வருடங்கள் அரங்கிற்கு வெளியேயும் உட்கார்ந்தும் பல முறை அந்த நிகழ்ச்சியை கண்டு ரசித்திருக்கிறேன். பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிலைப்படுத்தவேண்டும் என்று பாஜகவை அறிவிக்க அதவானியிடம் மோடியை வைத்துக்கொண்டே வாசகர்கள் முன் உரையிட்ட சோ அவர்களின் பேச்சை அரங்கமே கைதட்ட கேட் நேரங்களில் நானும் பங்கு பெற்றுக்கிறேன் என்பதில் எனக்கு பெருமையே! (துக்ளக் ஆண்டு விழா எப்படி நடக்கும் என்று அறியாதவர்களுக்கு அதைப் பற்றி ஒரு கட்டுரை விரைவில் எழுத உள்ளேன், அவசியம் படிக்கவும்!)


ஒரு முறை எனது இதயம் முழுதும் நிறைந்திருக்கும் இசைக்கு அதிபதியான இசைஞானியையும், யுவனையும் Yuvan – Live in Concert என்று   2011இல் விஜய் டிவி நடத்திய நிகழ்ச்சியை நந்தனம் YMCA மைதானத்தில் என் அக்கா என்னை அழைத்து சென்ற சமயத்தில் கைதட்டி ரசித்து மகிழ்ந்திருக்கிறேன்.

இதுதவிர பொழுதுபோக்கு என்றால் புத்தகங்கள், செய்தித்தாள்கள். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த சமயங்களில் ஒரு நாளில் ஏழு நாளிதழ்களும் (தினமலர், தினமணி, தினகரன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து, தமிழ் முரசு, Deccan Chronicle), வார இறுதியில் இன்று 118 ஆண்டுகள் பழைமை வாய்ந்த - "கோபால கிருஷ்ண கோகலே" அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு மஹாதேவ் கோவிந்த் இரானடே அவர்களின் பெயரால் வழங்கப்பெறும் "தென்னிந்திய தேசிய சங்கம் - இரானடே நூலகம்" சுருக்கமாக இரானடே  நூலகத்தில் வார இறுதி மாலை நேரங்களில் பக்கங்கள் திருப்பும் சத்தம் மட்டுமே கேட்கும் வேளையில்நீண்ட செவ்வக மர மேஜையில் அங்கே இருக்கும் வயதில் மூத்தவர்களுடன் துக்ளக் பத்திரிகை படிப்பதும் எனது வழக்கமாக இருந்தது. அந்த சமயங்களில் அரசு நூலகத்தில் துக்ளக் வைக்க மாட்டார்கள் (கருணாநிதி ஆட்சி அது!ஹாஹா!).


இப்படியாக நேரடி நிகழ்ச்சிகள் தவிர மாதா மாதம் ரேஷன் கடைக்கு அரிசி வாங்க செல்லும்போது, அப்பா அம்மாவும் எனக்கும் என் தங்கைக்கும் பிடித்த இரண்டு படத்தை தேர்ந்தெடுத்து அந்தப் படத்தின் காசெட்டை பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கிவந்து பாடல் கேட்போம். கல்லூரி சமயத்தில் 2005இல் அப்போதுதான் FM famous ஆக தொடங்கியது. இரவு நேரம் ஆனாலே கொண்டாட்டம் தான், எந்த FM stationனை திருப்பினாலும் இரவு முழுக்க இளையராஜாவின் பாடல்கள் தான்!

அதன் பின் கடந்த பதிமூன்று ஆண்டுகளாக எனக்குப் பிடித்த விஷயங்களில் சினிமாவைப் பின்தள்ளிவிட்டு இடம் பிடித்தது நாடகம். மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் எனது நண்பன் பிரவீன் கண்ணன் மற்றும் வேதாத்ரி ஆகியோரால் தான் நான் நாடகம் ஒலிவடிவில் "கேட்க" நேரிட்டது. அன்று முதல் என்று வரை Crazy மோகன், S.Ve.சேகர், காத்தாடி ராமமூர்த்தி, சோ போன்றவர்களின் நாடகங்கள் கேட்டுவிட்டு தான் தூங்க செல்வேன்.

மேலே குறிப்பிட்ட நம்மூர் பொழுதுபோக்குகளுக்கு அமெரிக்காவில் சற்றும் குறைவில்லை. இங்கே ஒவ்வொரு மாநிலங்களிலும் சில மாவட்டங்களிலுமே கூட (County என்பார்கள்) தமிழ் சங்கங்கள் உண்டு. நியூ ஜெர்சி தமிழ் சங்கம், நியூயார்க் தமிழ் சங்கம், அட்லாண்டா தமிழ் சங்கம் என்று ஒவ்வொரு தமிழ் சங்கங்களிலும் பல ஆண்டுகளாக இங்கேயே குடிமக்களாக இருக்கும் நம் மக்கள் செவ்வன செயல்பட்டு வருகிறார்கள்.

பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு என்று ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தமிழ் பட்டிமன்றம், நடனம், கர்நாடக சங்கீதம், நாட்டுப்புறப் பாடல்கள் என்று அனைத்துமே நடைபெறும். அது தவிர நம் நாட்டு இசைக் கலைஞர்களும், நகைச்சுவைக் கலைஞர்களும் அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டே இருப்பர். இதற்கான விளம்பரங்கள் இங்கே வெளிவரும் தமிழ் மாத புத்தகங்களான தென்றல், 8K தமிழ் எக்ஸ்பிரஸ் புத்தகங்களிலும், இது தவிர Little India, Indian Express (நம் நாட்டில் வெளிவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் அல்ல) போன்ற பல நம்மூர் வார ஆங்கில இதழ்களிலும் இதற்கான விளம்பரங்கள் வெளிவரும்.

இங்கே இருக்கும் நூலகங்களில் குஜராத்தி புத்தகங்களும், மாத இதழ்களும் இருக்கும். தமிழ் புத்தகங்கள் வேறு ஊர்களில் உள்ள நூலகங்களில் உள்ளனவா என்று எனக்கு தெரியவில்லை. (தெரிந்தவர்கள் கருத்து பகுதியில் தெரிவிக்கவும்!)

இது தவிர அவ்வப்போது பாஜகவோ காங்கிரஸோ யார் ஆட்சியில் இருந்தாலும் இங்கே அடிக்கடி யாராவது அவர்களை அழைத்து பேச வரவழைத்து ஒரு சின்ன கூட்டம் ஒன்று நடத்தி விடுவார்கள், கையில் அன்பளிப்பாக ஒரு தொகையை நிச்சயம் குடுத்து அனுப்புவார்கள் என்று நினைக்கிறன்! (இல்லை என்றால் அவர்கள் ஏன் இங்கே வர போகிறார்கள்!)

தமிழ் நாடகங்கள் இங்கே முக்கிய சமயங்களில் நடைபெறுகின்றன, தமிழ் வருடப்பிறப்பு மற்றும் சில உள்ளூர் விடுமுறை நாட்களில் இது நடை பெறுகிறது. எனக்கு தெரிந்து Stage Friends என்ற நாடக அமைப்பு கடந்த இருபத்தி ஆறு ஆண்டுகளாக இங்கே நாடகங்கள் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் கலந்து பேச ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, இரமணி அவர்களின் இல்லத்திற்கு இந்த ஆண்டு ஜனவரியில் சென்றேன். இவர்கள் நடத்தும் ஒவ்வொரு நாடகமும் இந்தியாவில் சீர்காழியில் இருக்கும் கணவகம் மற்றும் காரைக்குடியில் இருக்கும் ஒரு ஆசிரமத்துக்கு இங்கே வரும் டிக்கெட் பணம் முழுவதையும் அனுப்பி வைக்கின்றனர். நாடகம் நடத்த உள்ளூர் பள்ளி அரங்கத்தில் முன்பே முன்பதிவு செய்வதிலிருந்து, நாடகத்திற்கு இசை அமைப்பது, இயக்குவது என்று அனைத்தும் ஒரு குடும்பமாக செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ரூபாய்க்கும் என்ன செலவு என்பதை வனமாலி (பொருளாளர் பொறுப்பில் இருப்பவர்) அன்று அனைவருக்கும் விளக்கினார்.  சில காரணங்களால் Stage Friends உடன் என்னால் தொடர்ந்து இணைந்திருக்க முடியவில்லை. அவர்களுடன் இருந்த ஒரு நாளிலேயே என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவனாக நடத்தி அவ்வளவு அன்பாக பழகினர். இந்தக் குடும்பத்தில் மூத்தவர் பேராசிரியர் ந.வே.சு எங்கள் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் என்று அங்கே சென்ற போதுதான் தெரிந்தது.



நம்மூர் போல இங்கே தமிழ் ரேடியோவும் உண்டு. 8K ரேடியோ என்று தமிழ் வானிலை (இணையம் மூலம் செயல் படும்) கைபேசியில் ஒரு செயலிகாக உள்ளது. இதுதவிர வானொலியில் ஒரு ஸ்டேஷன் இந்தி மொழியிலும் வரும்.

முக்கியப் பண்டிகை நாட்களில் கோவில்களில் இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் என்று எப்போதும் கலைக்கட்டியிருக்கும். இது தவிர ஹோலி, உகாதி, தீபாவளி, பொங்கல் என்று அனைத்து பண்டிகைகளும், நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெறும். இந்திய சுதந்திர தின நிகழ்ச்சிகள் அந்தந்த ஊர்களில் வெகு சிறப்பாக நடக்கும். நியூயார்க்கு நகரத்தில் நம் நாட்டு அணிவகுப்பும், நிகழ்ச்சிகளும் மிக பிரபலம்.

ஒவ்வொரு ஊர்களிலும் கர்னாடக சங்கீதம், பரதநாட்டியம் என்று நம் மக்கள் கற்றுக் கொடுத்து வருகின்றனர்.





கடந்த வாரம் நியூ ஜெர்சியில் உள்ள பார்சிபணியில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியில் இடம்பெற்ற பரதநாட்டியம்.

இப்படி பொழுதுபோக்கிற்கு குறைவின்றி அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறுகிறது இங்கே! அது சேரி,  நீங்கள் கடைசியாக கலந்துக்கொண்ட பொது நிகழ்ச்சி என்ன என்று இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்களேன்!

அடுத்த அத்தியாயம் அடுத்த வாரம்!

இந்த பதிவுகள் அனைத்தையும் நானே காணொளியில் பேசி பகிர இருக்கிறேன், அதை தவறாமல் பார்க்க கருத்துக்களம் youtube சேனலுக்கு subscribe செய்யவும்.

கீழே உள்ள இந்த இணைப்பை சொடுக்கி அங்கே subscribe என்றிருக்கும் பொத்தானை அழுத்தவும். நன்றி.

https://bit.ly/karutthukkalam
Blogger Widget

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம்

--> சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...

--> எச்சரிக்கை: வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியிட்டுள்ளேன், முக்கிய பிழைகள் இருப்பின், கருத்தில் தெரிவிக்கவும், திருத்திக்கொள்கிறேன். நன்றி.


திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை, காலை பத்து மணிமுதல், இரவு பதினொரு மணிவரை, எந்த சேனலுக்கு மாறினாலும் அதில் ஒரு நாடகம் ஓடிக்கொண்டிருக்கும். அந்த நாடகத்தை ஒரே ஒரு நாள்; விளம்பரம் வரும் நேரம் கழித்து அந்த பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் பார்த்துவிட்டால் போதும், வாரத்தில் வேறு எந்த நாளில் அந்த நாடகத்தைப் பார்த்தாலும் அதில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்பது உடனே தெரிந்துவிடும்.

நூற்றில் தொண்ணூற்றெட்டு நாடகம் ஒன்றாக இருக்கும் தம்பதியை எப்படி பிரிப்பது என்று மாமியார் கணக்கு போடுவதும், புதிதாக திருமணமான ஒருவனை எப்படி பிரித்து தான் திருமணம் செய்துக்கொள்வது என்று ஒருத்தியும், ஒன்றாக இருக்கும் குடும்பத்தை எப்படி பிரிப்பது என்று ஒருத்தியும் என்று அனைத்து நாடகத்தின் கதையுமே இதுதான்.

மேலும் அமைதியான ஒரு இசை வந்தாலும், மகிழ்ச்சியான காட்சி வந்தாலும், யாரேனும் ஒரு இடத்தில் சிரித்துவிட்டாலுமே  "ஆஹா... என்னமோ நடக்கபோகுதுடா இப்போ" என்று உடனே நமக்கும் தெரிந்துவிடும். அந்த ஏதோ ஒன்னு மட்டும் சும்மா நடந்துவிடுமா? உட்கார்ந்திருக்கும்  சேரிலிருந்து நாமே கீழே விழுந்துவிடும் வகையில் "தீம் தன னன னன னன னன னன னன தின னன னாஆஆஆ" என்று ஒரு பத்து பேர் கொண்ட பின்னணி chorus, யார் அந்த வில்லியோ (வில்லன் பெண்பால்!) எங்கிருந்தோ நடந்து யாரை அடிக்கவோ திட்டவோ வருகிறாளோ அதுவரையிலும்,  இருக்கும் எல்லா தபலா, மிருதங்கம் என்று அனைத்தையும் ஒரு அடி அடித்து... slowmotionனில் நடந்து வருவதற்குள் ஒரு விளம்பரமே வந்துவிடும்.  சரியாக செவ்வாய், வெள்ளிக்கிழமை அன்று பார்த்து ஒரு இறப்பு காட்சி வந்து "பே எ எ எ ஏஏஏ" என்று சோகமான நாதஸ்வரத்தயும், ஷெனாயையும் வாசித்து நம்மையே முகம் வாட வைத்து வீட்டையே சோகத்தில் ஆழ்த்திவிடுவார்கள், அந்த நேரத்தில் மட்டும் குழம்பு சாதம் சாப்பிட்டு முடித்துவிட்டு ரசம் எடுத்து வர சொன்னால் அந்த "பே எ எ எ ஏஏஏ" உங்களுக்கு தான்!!!

கேமராவில் இந்த slowmotionனை கண்டுபிடித்தாலும் பிடித்தார்கள், கருணாநிதியை பிடித்துக்கொண்ட கருப்புக்கண்ணாடி போல, இந்திய மொழிகளில் நாடகங்கள் எடுப்பவர்கள் இந்த slowmotionனை பிடித்துக்கொண்டுவிட்டனர். திரும்பினா slowmotion, நடந்தா slowmotion சப்பா!!! இந்த லட்சணத்தில் episode-453, episode-890 என்று இரண்டு ஆட்சிகள் மாறினாலும் இவர்கள் எடுக்கும் காட்சிகள் மட்டும் மாறாமல் அப்படியே இருந்துக்கொண்டிருக்கிறது. 

இது இப்படி இருக்க, சினிமா. ஹ்ம்ம்.. அதை பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம். சினிமா பார்ப்பவரை தவறாக சொல்லவில்லை, அதை கிறுக்குத்தனமாக பார்ப்பவரை தான் சாடுகிறேன். அந்த காலத்தில் ஒரு புது சினிமா வெளியாகிறது என்றால், நாளிதழிலும், வார இதழ்களில் அதுபற்றி சில செய்திகள் வந்தாலும், வெளியான அன்று தான் அதைப் பற்றி பேச்சுவரும். நான் சினிமா பார்க்க ஆரமித்த வயதில் விகடனிலும், குமுதத்தில் விமர்சனம் வரும்.
விகடனில் 35, 36 என்றால் தேறாது, 42க்கு மேல் இருந்தால் தான் அது தேறின படம், 45 என்றால் நல்ல படம். 48, 55 அதற்கு மேல் என்றால் அருமையான படம் (கொசுறு: எனக்கு தெரிந்து பாரதி, ஹே ராம், பொற்காலம் மட்டும் தான் விகடனில் ஐம்பதுக்கு மேல் மதிப்பெண் பெற்ற படம்!).

என்ன அம்மா இது என்று புத்தகத்தில் வரும் படத்தைப் பார்த்து, என்னென்ன படம் என்று  அம்மாவை கேட்பேன், ஒரு விமர்சனம் படித்து விட்டு உருப்படியான படம் என்றால் அதற்கு அப்பா அம்மா தங்கை நான் என்று ஒன்றாக செல்வோம். நான் கல்லூரி படிக்கும்போதுதான் எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டி வாங்கினோம் என்பதால், அப்போது ஞாயிற்று கிழமைகளில் சினிமா பார்ப்பது மட்டும் தான் ஒரே பொழுதுபோக்கு. இதுதவிர மாதத்தில் ஒரு முறை முடிவெட்ட நானே தனியாக செல்ல ஆரமித்த வயதில், சலூனில் எனது திருப்பதுக்கு காத்திருக்கும் நேரத்தில் அந்த தினத்தந்தியின் கடைசி பக்கங்கள் தான் அப்போதைய சினிமா ட்ரைலர் பக்கங்கள். சதுரம், சதுரமாக ஒரு பத்து பதினைந்து திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகியிருக்கும். ஏதேனும் பெரிய ஹீரோ படம் என்றால் முதல் பக்கத்தின் கீழ் வலது பக்கத்தில் அந்த போட்டோ வந்திருக்கும். (அப்போது டிவியில் ட்ரைலர் வந்ததா என்று எனக்கு தெரியாது! கேள்விப்பட்டதில்லை. ) 

ஆனால் இப்போதோ...!!! அப்படியே தலைகீழ். Technology வளர்ந்தது யாருக்கு எப்படி உதவுகிறதோ இல்லையோ, இந்த சினிமாகாரர்களுக்கு 'அப்படி' உதவுகிறது. ஒரு படம் எப்போது ஆரமிக்க போகிறது என்று தெரியாத சமயத்திலேயே அது பற்றி பேச்சை கிளப்பி விடுவிவார்கள் - ட்விட்டர், முகநூல் போன்ற வலைதளத்தில் - எப்போதோ ஒரு இரண்டரை மணிநேரம் பார்க்கப்போகும் படத்துக்கு மாதக்கணக்கில் Firstlook, Teaser, Trailer, Second Trailer, பொறி கடையில் சம்பிளிக்கு ரெண்டு பட்டாணி சாப்பிடறா மாதிரி படத்திலிருந்து ஐந்து அல்லது பத்து நிமிட காட்சிகளை  YouTubeஇல் Sneak Peek என்ற பெயரில் வெளியிடுவது என்று, மாதக்கணக்கில் ஒரு படத்தை பற்றி பேசுவது, அதற்காக அடிடுத்க்கொள்வது, பேசிக்கொண்டே இருப்பது, பார்த்த பின்னரும் பிடித்தவன் ஆஹா ஓஹோ என்று நாள் கணக்கில் பேசிக்கொண்டே போவது, பிடிக்காதவன் அதுபற்றி பேசுவது என்று இப்படியே ஒரு சுழற்சியில் போய்க்கொண்டே இருக்கும்.

ஆனால் இங்கோ, இவர்கள் தயாரிக்கும் தொலைக்காட்சி நாடகமே நம் இந்திய சினிமாவில் ஆஹா ஓஹோ என்று சொல்லக்கூடிய திரைப்படத்தை விட அனைத்து விதத்திலும் பிரமாதமாக இருக்கும். இந்த தொலைக்காட்சி தொடர்கள் நம் நாட்டு தொடர்களைப்போல வாரத்தில் "அனைத்து நாட்களும்" என்று ஆண்டு முழுக்க தொடர்ந்து ஐந்து, பத்து ஆண்டுகள் என  செல்லாது. நம் நாட்டில் வெளிவரும் தொடர்களை Serial என்போம், இங்கே Series என்பார்கள், காரணம் ஒரு தொடர் பெரும்பாலும் 12-22 episode வரை கொண்டிருக்கும், ஒரு ஆண்டுக்கு ஒரு Season வெளிவரும், ஒரு சீசனுக்கு 12-22 episode வெளிவரும், அவ்வளவு தான். மீண்டும் அந்த தொடர் அடுத்த ஆண்டு தான் வெளிவரும். இது HBO, CBS, AMC, ABC  என்று பல டிவி சேனல்கள் உள்ளன. ஒவ்வொரு சேனலிலும் மிக அருமை என்று பாராட்டும் விதமான தொடர்கள் எண்ணில் அடங்காது. குறிப்பாக சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால் Dr. House MD, Game of Thrones, Ballers, Breaking Bad, Better Call Saul, Big Bang Theory, Prison Break, F.R.I.E.N.D.S என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவைகளுக்கு நிகராக ஒரே ஒரு தொலைக்காட்சி தொடர் கூட இந்தியாவில் உண்டு என்று சொல்லமுடியாது. (நிச்சயமாக!)

இது தவிர Netflix, HULU, Amazon Prime என்று தொலைக்காட்சி நிறுவனத்துக்கு போட்டியாக பல இணைய நிறுவனங்கள் உள்ளன. இவைகள் தாமே நாடகங்கள், சினிமா, documentary என்று அனைத்தையும் தயாரிப்பவர்கள். ஒவ்வொரு தொடர்களும் பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களுடைய படைப்புகளையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு பிரமாதமாக தயாரிக்கப்பட்டிருக்கும், எடுத்துக்காட்டாக House of Cards, Stranger Things, Ozark என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு தரமாக, இசையிலும் ஒளிப்பதிவில் சினிமாவை ஒதுக்கும் அளவுக்கு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தொடர், சிறந்த நடிகர் நடிகை என்று அனைத்துக்கும் Emmy Awards வழங்கப்படும். சினிமாவுக்கு Oscar விருது போல தொலைக்காட்சி தொடர்களுக்கு Emmy Awards மிகப்பெரிய பெருமைக்குரிய விருது. 


இது இப்படி இருக்க, சினிமா. ஹ்ம்ம்... நம் ஊரில் தான் ஒரு படம் வெளியாகிறது என்றால் முட்டாள் தனமாக விடியற்காலையே திரையரங்குக்கு (முட்டாள்கள் வருவார்கள் என்று தெரிந்து ஐந்து மணி காட்சியெல்லாம் இருக்கும்!) சென்று நூறு ரூபாய் சீட்டை ஐநூறு, ஆயிரம் என்று வாங்கி, பால் பாக்கெட்டு, ஊதுபத்தி என்று அனைத்து கிறுக்கு தனத்தையும் செய்துவிட்டு அதை பெருமையாக வேறு நினைப்பார்கள். ஒன்னும் இல்லாத ஒண்ணரை அனா படத்துக்கே இந்த ஆட்டம்.

ஆனால் இங்கோ, மிக பிரமாண்டமாக உலகமே வியந்து பார்த்த Jurrasic Park போன்ற படமாக இருந்தாலும் சரி, அதிவேக காட்சிகள் நிறைந்த action திரைப்படங்களாக இருந்தாலும் சரி, உச்ச நடிகர்கள் நடித்த படமாக இருந்தாலும் சேரி, படம் திரைக்கு வந்த முதல் நாள் சென்றாலே பாதி திரையரங்கு தான் நிறைந்திருக்கும். சீட்டு வாங்க மிஞ்சிப்போனால் ஒரு பத்து பேர் தான் வரிசையில் இருப்பார்கள். Internet booking எல்லாம் எங்கே பெருசாக கிடையாது, ஏனென்றால் எங்கள் ஓசூர் போல தான் அமெரிக்கா, பெரும்பாலான தியேட்டரில் சீட் நம்பர் எல்லாம் கிடையாது. அப்படியே வந்து சீட்டு வாங்கிக்கொண்டு எங்கே வேண்டுமானாலும் உட்கார்ந்து பார்க்கலாம். திரையரங்கிலேயே தனி ஒருவனாக இரண்டு மூன்று படம் பார்த்திருக்கிறேன். (நானா ஒன்னும் தனியா போகல, யாரும் வரலீங்க!!! இத்தனைக்கும் ஒரு பிரபலமான படம், வெளிவந்து ஒரு வாரத்தில் சென்றேன்!) அப்படியாக உலகையே பிரமித்து பார்க்க வைக்கும் படங்களை தயாரிக்கும் இந்நாட்டில் சினிமாவை எல்லாம் மக்கள் பெரும் பொருட்டாக மதிப்பதே கிடையாது!

நம் நாட்டில் "ச்சூ போ" என்று துரத்தினாலும்.. அட இதோ நினைவுக்கு வருகிறதே!!! நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் வெளிவந்த "வேட்டையாடு விளையாடு" படத்தை பார்க்க கல்லூரி விடுதியிலிருந்து சென்ற என் நண்பர்கள் சென்னை சத்யம் சினிமாஸ் தியேட்டரில் காலை ஐந்து மணிக்கெல்லாம் சென்று சீட்டு வாங்க வரிசையில் நின்றிருக்க, தியேட்டர் கேட்டை திறந்தவுடன் உள்ளே தப தபவென ஓடியபோது, ஒழுங்காக செல்ல சொல்லி காவலர்கள் (திரையரங்குக்கு பாதுகாப்பு குடுக்கறதுதான் போலீசுக்கு முக்கிய வேலையாச்சே!) என் நண்பர்கள் உட்பட பலருக்கு தடியடி கொடுத்துள்ளனர். அப்படி அடி வாங்கிவிட்டு படம் பார்த்துவிட்டு வந்தான் என் விடுதி நண்பன். அப்படியாக "ச்சூ போ" என்று துரத்தினாலும் நம் நாட்டில் கூட்டம் கூட்டமாக சென்று படம் பார்ப்பார்கள்.

ஆனால் இங்கே எப்படி எல்லாம் மக்களை திரையரங்குக்கு வர வைக்கலாம் என்று முழி பிதுங்கிக் கொண்டிருக்கின்றனர்! எனக்கு இருக்கும் கோபமெல்லாம் இப்படி விரும்பி படம் பார்க்க வரும் மக்களுக்கு குறைந்தபட்ச நல்ல படமாவது இவர்கள் தயாரிக்க வேண்டும் என்பது தான். முக்கியமாக தொலைக்காட்சி, எது, என்ன எடுத்தாலும் பார்ப்பார்கள் என்று மக்களை குறைவாக நினைத்துக்கொண்டு சகட்டு மேனிக்கு கேவலமாக நாடகம் எடுக்கும் வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் இந்திய தொலைக்காட்சி தொடர்களை தயாரிப்பவர்கள். ஆனால் இது கூடிய விரைவில் (குறைந்தது ஐந்து ஆண்டுகள்) மாறும் என்று நம்புகிறேன், ஏனென்றால் இங்கே உள்ள Netflix, Amazon Prime போன்றவை நம் நாட்டில் காலூன்ற ஆரமித்துவிட்டனர். ஏற்கனவே ஹிந்தியில் சில Netflix seriesசும், Amazon Primeஇல் தமிழ், ஹிந்தி என்று வர ஆரமித்துவிட்டது. இது தொடர்ந்து வளரும் பட்சத்தில், வழக்கமான தொலைக்காட்சி தொடர்கள் அழிந்து போகும். (போக வேண்டும்!) 

நம் நாட்டில் சினிமா டிக்கெட் போக இடைவேளையில் பாப்கார்ன், கூல் ட்ரிங்க்ஸ் என்று அதுக்கு ஒரு இருநூறு ரூபாயாவது குறைந்த பட்சம் கறந்து விடுவார்கள், அதே தியேட்டருக்கு எதிர் கடையில் விற்கும் 20 ரூபாய் cool drinksஸை எழுபது ரூபாய் என்று விற்பார்கள், "திருடர்கள்"! ஆனால் இந்நாட்டில் படத்துக்கு நடுவில் இடைவேளையெல்லாம் கிடையாது. படம் ஆரமிப்பதற்கு முன்பே பாப்கார்ன், கூல் ட்ரிங்க்ஸ் என்று வாங்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். வாகன நிறுத்தத்துக்கு காசெல்லாம் குடுக்க தேவை இல்லை. ஆமாம், மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்த்தால் தான் படமே ஓடும், இதில் அந்த தியேட்டருக்கு மக்கள் வரவேண்டியதற்கு தேவையானதை தியேட்டர்காரன் தான் செய்து கொடுக்க வேண்டும். அப்படி இருக்க பணம் கொடுத்து படம் பார்க்க வருவர் எதற்கு வண்டியை நிறுத்துவதற்கு பணம் கொடுக்க வேண்டும்? ஹ்ம்ம்.. இது பற்றி அரசு அலுவலர்கள் பற்றிய தலைப்பில் விரிவாக எழுதுகிறேன்.

புலியைப் பார்த்து பூனை கோடுபோட்டுக் கொள்வதைப்போல Hollywoodஐ (இதில் நகைச்சுவை என்ன வென்றால், ஹாலிவுட் என்பது ஒரு ஊரின் பெயர்!) பார்த்து கோலிவுட் (தமிழ்), பாலிவுட் (ஹிந்தி), டோலிவுட் (தெலுகு), mollywood (malayalam), sandalwood (கன்னடம்) என்று பெயரை வைத்துக்கொண்டால் மட்டும் போதாது, அதற்கேட்டாற்போல தரத்தை மக்களுக்கு கொடுக்கவேண்டும்!
என்ன "God Father" இப்படி பண்றானுங்க இவனுங்க!
அடுத்த அத்தியாயம் விரைவில்...
---
சில அத்தியாயங்களில் பகிர்ந்துக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும் படிப்பவர்கள் சலித்துவிடக் விடக்கூடாது என்று எழுத ஆர்வமிருந்தால் குறைத்துக்கொள்வேன், அப்படி விடப்பட்ட விஷயங்களை ஒளியும் ஒலியுமாக நானே பேசலாம் என்று முடிவு செய்து அதற்கான வெள்ளோட்டமாக இரண்டு காணொளிகளை நமது கருத்துக்களம் YouTube சேனலில் வெளியிட்டுள்ளேன். எனது எழுத்துக்களை காணொளியாக பார்க்க விரும்பினால், எனது சேனலுக்கு Subscribe செய்யவும். இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், தங்கள் கருத்தை இங்கே தெரிவிக்கவும். நன்றி. 

கருத்துக்களம் Youtube சேனல் - https://bit.ly/karutthukkalam


Blogger Widget