-->

புதன், 23 மே, 2012

இரண்டு ரூபாயில் ஊர் சுத்தலாம்!

சமீப காலமாக மக்கள் மத்தியில் தலை வலியாக இருந்து வருவது விலை உயர்வு.

நமக்குள்ளேயே புலம்பிக்கொள்வதால் ஒன்றும் பெரிதாய் நடந்திவிட போவதில்லை.

பத்து வருடத்திற்கு முந்தய S.Ve.Shekher நாடகம் "நம் குடும்பம் - பெட்ரோல்" இன்று கேட்டுக் கொண்டிருக்கும்போது செய்தி வந்தது, இன்றைய பெட்ரோல் விலை உயர்வு ஏழு ரூபாய் ஐம்பது காசு என்று!

வாய் விட்டு சிரிப்பு வந்தது, காரணம் அப்போதுதான் அந்த நாடகத்தில் ஒரு வசனம் "பெட்ரோல் விலை ஆகாசத்துல விக்குது, பதினோரு ருபாய் ஐம்பது காசுங்கறான்" என்று அந்த வசனம் தொடரும்!

ஆக, எப்பொழுதுமே இந்த விலை உயர்வு இருந்துக் கொண்டே தான் இருக்கிறது! 

சரி, புலம்பிக்கொண்டே நாமும் தொடர்ந்து வாங்கிக்கொண்டிருப்பதால் அதுவும் ஏறிக்கொண்டே போகிறது!

இதனை ஒரு காரணமாகக் கொண்டு,ஒவ்வொருவர் தனி தனியாக செல்ல ஒரு நன்கு சக்கர வாகனம் இருக்கும் இந்த காலத்தில், குறைந்த பட்சம் வாரம் இருமுறையாவது முன்பு சென்றது போல பொது வாகனத்தை பயன் படுத்துவதும்...

இரண்டு தெரு கடந்து இருக்கும் கடைக்கும் வண்டியில் போவது, நடக்கும் தூரம் இருக்கும் உணவு விடுதிக்கு சாப்பிடபோகும் போதும் வாகனத்தை தவிர்ப்பதும்.. நமது பழைய நடை பழக்கத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டும்!
நண்பர்கள் வீடிற்கு போகும்போதும், வார இறுதியில் நண்பர்களோடு சுற்றும்போதும் நாம் பள்ளியில் படிக்கும்போது சைக்கிளில் சுற்றி உலா வந்தது போல, இன்று அந்த சைக்கிளை தூசு தட்டி, இரண்டு ரூபாய்க்கு முன் பின் சக்கரத்தில் காற்றடித்துக் கொண்டு மும்பு போல ஊர் சுற்றலாம்!

Blogger Widget

செவ்வாய், 15 மே, 2012

நாமெல்லாம் அதிர்ஷ்டக்காரர்கள்!

 முன்பெல்லாம் பெரும்பாலான திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் "இருவத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி" என்று... அப்படிதான் நாம் இப்பொது ஆரமிக்க போகிறோம்...

நாம் அனுபவித்து, ரசித்து புசித்த சில நினைவுகள்...

அம்மா.. அந்த சேமியா ஐஸ் வேணும்... என்று போட்ட கூப்பாடு; வெயிலில் தள்ளு வண்டிக்காரர் தள்ளிக்கொண்டு வந்த அந்த ஐஸ் பெட்டியிலிருந்து நாம் விரும்பிய பத்து பைசா சேமியா ஐஸ் அவர் எடுப்பதற்குள் , மஞ்சள், ஆரஞ்சு நிற ஐசின் மனம் ஈர்க்கும்... முழங்கை வரை ஒழுகியபடி ருசித்த அந்த குச்சி ஐஸ்.., இன்றைய தலைமுறை அதை காணவில்லை.

கடலை மிட்டாய், தேங்காய் மிட்டாய், தேன் மிட்டாய், பால்கோவா, எள்ளுருண்டை, கமர்கட்டு, சோளம், வேர்கடலை, தட்டை போன்ற பல வகைப்பட்ட தின்பண்டங்களை நாம் பல ஆண்டுகளாக ரசித்து ருசித்திருக்கிறோம், இன்றும் அதன் சுவை கண்டவர்கள் அதை தொடர்கிறோம், இந்த சமயத்தில் ஒரு விஷயத்தை நினைத்து பார்த்தால் சற்று வேதனை அளிக்கிறது...
'குழந்தைகளின் விருப்பத்திற்கு' என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் பெற்றோர்கள் 'Chetos , Lays , Kurkure' போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய (பிளாஸ்டிக் பையில் பல மாதங்களாக அடைத்து வைத்து, பல இடங்களுக்கு வண்டியில் எடுத்து செலும்போது அதனால் ஏற்பட கூடிய தட்பவெட்பம் காரணமாக பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு அதன் தின்பண்டங்களிலும் திணிகிறது, இதனால் உடலுக்கு ஊரு விளைகிறது...) பண்டங்களை கேட்கும்போதெல்லாம் வாங்கிக்கொடுக்கிரார்கள்.

நம் காலத்திலெல்லாம் கண்டிராத சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு சரியிலாமல் போவதற்கு இவையும் ஒரு வகையில் காரணம்.

மேல் குறிப்பிட்டவை மட்டும் தான் என்று இல்லை, பல ரசாயன கலவை கலந்த திண்பண்டங்கள் இப்போது ஒரு ருபாய் தின்பண்டங்களை விழுங்கிவிட்டன!

பல லட்சம் கொடுத்து வாங்கும் விலை உயர்ந்த வாகனத்திற்கு அதற்கு தேவையான எரிபொருளை ஊற்றினால் மட்டுமே அது சரியாக ஓடும், அதற்கு ஒத்துவராத வேறு விலை உயர்ந்த ஒரு பொருளை ஊற்றினாலும் அது ஓடாது; பழுது பட்டுவிடும், அதனை அதன் சொந்தக்காரார் எப்படி பழுதுபட்டுவிடாமல் பாதுகாக்கிராரோ...

அது போல விலை மதிப்பிற்கு அப்பாற்பட்ட நம் உடலை பாதுகாப்பது நமது கடமை. அப்படி பட்ட உடம்பிற்கு Pizza , Burger, Maggi என்று நம் உடம்பிற்கு ஒவ்வாத பண்டங்களை தின்பதும், ரசாயனம் கலந்த ஆணியையே கரைய செய்யும் குளிர்பானங்களான Coke ,  Pepsi மற்றும் பல வகைகளை குடிப்பதுமாக அல்லாமல் அதிலிருந்து நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

என்ன தான் பெருமைக்காக இக்கால குளிர்பானங்களை வாங்கி வயற்றில் ஊற்றிக்கொண்டாலும்... அவை; பானகம், நீர்மோர், ரோஸ் மில்க் போன்றவற்றின் சுவைக்கு பக்கத்தில் கூட நிற்க முடியாது என்பதை நாம் நன்கு உணர்வோம்!

இனியும் தாமதிக்காமல் நம் நலனில் கவனம் செலுத்துவோம்!

Blogger Widget

சனி, 12 மே, 2012

பெயர் மாற்ற அறிவிப்பு!


எமது வலைப்பூ புதுப் பெயர் பெறுகிறது...

கருத்துக்களம்.காம்

இதுவரை...

மார்ச்சு 2011இல் தொடங்கப்பட்ட எமது வலைப்பூவில் இன்று நாற்பத்து ஒன்றாம் பதுவு வெளியிடப்படுகிறது.

இதுவரை வெளியாகிய நாற்பது பதிவுகளில் எமது சிந்தனையில் தோன்றிய இருபத்தி மூன்று பதிவுகளும், எமது வலைப்பூவின் இணை ஆசிரியர் ஆனந்த் சுரேஷ் பத்தித்த ஆறு கட்டுரைகளும் மட்டும் அல்லாது, பிற ஊடகங்களில் யாம் படித்த கருத்துகள் அடங்கிய கட்டுரையினையும் இங்கு பகிர்ந்துள்ளோம், அவை பின்வருமாறு..

சவுக்கு ஆசிரியர் எழுதிய இரண்டு பதிவுகள், மிஞ்சல் மூலம் நண்பர்கள் பகிர்ந்துகொண்ட ஐந்து கட்டுரைகளும், தினமணியில் வெளியான ஒரு தலையங்கம் உட்பட மூன்று பதிவுகளும், மறைந்த 103  வயதான S.A.P.வரதன் அவர்கள் துக்ளக்கில் எழுதிய 'பேச்சை குறை' என்ற கட்டுரை உட்பட மொத்தம் பதினேழு பதிவுகளும் இங்கு பகிர்ந்துள்ளோம்.

பதிவுகளைப் படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருக்கும் நம் மக்கள் தமிழகத்தின் வானொலி கேட்கும் விதமாக ஹலோ FM இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வலைப்பூவில் எழுத விரும்புவோர்கான 'விதிமுறைகளும், நிபந்தனைகளும்' உள்ளடங்கிய PDF கோப்பு(PDF file) இவ்வலைப்பதிவில் எழுத விரும்புவோர்... என்ற தலைப்பின் கீழ இணைக்கப்பட்டுள்ளது.

இளைய தளத்தில் நமது வலைப்பூ நல்ல அங்கீகாரம் பெற்றிட தொடர்ந்து முனைந்துக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில்,  நமது வலைபூவிற்கு வாசகர்கள் அணுக இணைப்பு கொடுக்க உதவும் தளங்களான தினமணி, tamil10, தமிழ்மணம், எழுத்து.காம், udaanz, முகநூல், orkut , ulavu போன்ற தளங்களுக்கு கருத்துக்களம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Blogger Widget

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

குட்டு வைத்து சொல்லித் தருகிறார்கள்...

அமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்தில் நடிகர் ஷாரூக் கான் இடப்பெயர்வு சான்றளிப்புக்காக இரண்டு மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தடுத்து நிறுத்திவிட்டு மன்னிப்புக் கேட்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது அமெரிக்கா என்றும்கூட அவர் குறிப்பிட்டார்.


ஆனால், அமைச்சரிடம் காணப்பட்ட இந்தக் கொந்தளிப்பு ஷாரூக் கான் ரசிகர்களிடம் இல்லை. எந்தவிதமான பரபரப்பும் காணப்படவில்லை. குறைந்தபட்சம் ஏதாவது ஓர் அமெரிக்கத் தூதரகத்தின் வாசலில் ஷாரூக் கான் ரசிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று எதிர்பார்த்தால் அதுவும்கூட நடக்கவில்லை.

இடப்பெயர்வு அதிகாரிகளால் நடிகர் ஷாரூக் கான் தடுத்து நிறுத்தப்படுவது இது இரண்டாவது முறை. 2009-ஆம் ஆண்டு நியுஆர்க் விமான நிலையத்தில் (நியுஜெர்சி) தடுத்து நிறுத்தப்பட்டார். தற்போது நியூயார்க் விமான நிலையத்தில். இந்தப் பயணம் வெறும் சுற்றுலாப் பயணம் அல்ல. முகேஷ் அம்பானி குடும்பத்துடன் தனி விமானத்தில் சென்று "யேல்' பல்கலைக்கழகத்தில் பெலோஷிப் விருது வாங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கான பயணம். ஆகவே, இவரது பயணத்துக்கு விசா கொடுக்கும்போதே அமெரிக்கா இதுகுறித்துத் தெளிவான, அதிகாரப்பூர்வமான தரவுகளின் அடிப்படையிலேயே இவருக்கு விசா வழங்கியிருக்க முடியும். இருந்தும் கடைசி நேரத்தில் இவ்வாறு நிறுத்தி வைத்து அவமானப்படுத்துவது ஏன் என்பது புரியவில்லை.

இந்த விவகாரத்தில் மனவருத்தம் இருந்தாலும்கூட, ஷாரூக் கான் இதை இலகுவாக எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசவே இல்லை. யேல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசும்போதுதான் இதை ஒரு வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். ""எனக்குக் கொஞ்சம் தலைக்கனம் ஏறும்போதெல்லாம் ஒருமுறை அமெரிக்கா வருவேன். இங்குள்ள இடப்பெயர்வு சான்று அதிகாரிகள் எனக்குள் இருக்கும் சூப்பர் ஸ்டாரை உதைத்து வெளியேற்றிவிடுவார்கள்'' எனும் அவரது வேடிக்கைப் பேச்சு, ஒருவிதமான வேதனைப் பேச்சு என்பதை உணர முடிகிறது.

"மை நேம் இஸ் கான்' என்ற படத்தில் ஷாரூக் கான் நடித்திருக்கிறார். இந்தப் படம் அமெரிக்காவில் நடைபெறும் கதை. முஸ்லிம் பெயர் இருப்பதால் அமெரிக்காவில் தன்னை அனைவரும் சந்தேகத்துடன் பார்க்கப்படுவது குறித்த கதை இது. அந்தப் படக் கதை முழுக்க முழுக்க உண்மை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது வேதனையானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதன் மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா ஒரு பாடத்தைச் சொல்லித் தருகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதே சம்பவம் ஓர் அமெரிக்க நடிகருக்கு இங்கே நேர்ந்திருக்குமெனில், அதை அமெரிக்கா எப்படி எடுத்துக் கொண்டிருக்கும்? நடிகை ஆஞ்சலினா ஜூலி மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம், உடனடியாக பாலிவுட், கோலிவுட் நடிகர்கள் ஆதரவாகக் களத்தில் குதிப்பார்கள். ஒரு கலைஞனுக்கு ஏற்பட்ட அவமதிப்பு என்பார்கள். இடப்பெயர்வு அதிகாரிகள் மீது இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, குறைந்தபட்சம் அவர்களைப் பணியிடை நீக்கம் செய்து, நம் உள்ளூர் நடிகர்களையும், அமெரிக்காவையும் சமாதானம் செய்யும்.

அதுதான் அமெரிக்காவில் நடக்கவில்லை. அங்கும் அறிவுஜீவிகள் உண்டு. எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டம் உண்டு. ஆனால், இதற்காக அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்வதும் நடவடிக்கை எடுப்பதும் அங்கே காணப்படாதவை. அதிகாரிகள் அவர்கள் கடமையைச் செய்தார்கள் என்பதற்காகப் பாராட்டப்படுகிறார்கள்.

ஓர் அரசு தன் நிலையிலிருந்து இறங்கிப் பகிரங்க மன்னிப்புக் கேட்டாலும் கேட்குமே தவிர, அதிகாரிகள் மீது பழி போடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், ஷாரூக் கான் எதற்காகத் தடுத்து நிறுத்தப்பட்டார் என்று அதிகாரிகளிடம் விளக்கம்கூடக் கேட்கவில்லை அமெரிக்க அரசு. அதிகாரிகளை அந்த அளவுக்கு அரசியல் தலையீடு இல்லாமல் கடமையாற்ற விடுகின்றது. இதைத்தான் இந்தியா கற்க வேண்டிய பாடமாகக் கொள்ள வேண்டும்.

நெடுஞ்சாலைச் சுங்கச் சாவடிகளில்கூட கட்சிக் கொடியிருந்தால் கட்டணம் செலுத்தாமல் போக முடியும். ஆட்சியும் பதவியும் இருந்துவிட்டால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஏவலாளிகளாகி விடுகிறார்கள். அரசியல்வாதிகளின் குடும்பத்தினராக இருந்தால் அவர்களைச் சோதனையிடக்கூடாது. இப்படியெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும். இதுதான் மக்களாட்சியின் மகத்துவம் என்று நாம் பெருமையடித்தும் கொள்வோம்.

 காவல்துறையிலும், இத்தகைய இடப்பெயர்வு விவகாரத்திலும் அமெரிக்கா இத்தனைக் கறாராக இருப்பதை முஸ்லிம் தீவிரவாதத்தின் மீதான பயம் என்று சொல்லலாம். ஆனால், அதிகாரிகள் கடமையாற்றுவதில் தலையிடாத இந்தப் போக்குதான் அமெரிக்காவில் 9/11 க்குப் பிறகு மீண்டும் ஒரு சம்பவம்கூட நடக்காமல் காத்து வருகின்றது என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

முந்தைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சென்றபோது அவரைச் சோதித்துப் பார்த்து உள்ளே அனுமதித்தனர். அதற்காகப் பிறகு மன்னிப்புக் கோரியது அமெரிக்கா.

உலக இந்தியர்கள் அனைவருக்கும் அடையாளம் தெரிந்த நபரான நடிகர் ஷாரூக் கான் இரண்டு முறை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். மன்னிப்புக் கேட்கிறது அமெரிக்கா.

மெரிக்கா சொல்லித் தரும் பாடம் என்ன? நீங்கள் எங்களை மட்டுமல்ல, இந்தியாவுக்குள் வரும் அனைவரையும் சோதனை செய்யுங்கள். அந்தக் கடமையைச் செய்வதில் அரசியலைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஹிலாரி கிளிண்டன் வந்தாலும் சோதனை செய்து வர விடுங்கள். அதிகாரிகளைத் தங்கள் கடமையைச் செய்யவிடுங்கள் என்கிறது அமெரிக்கா.

குட்டு வைத்து சொல்லித் தருகிறார்கள். நமக்குத்தான் மண்டையில் ஏறமாட்டேன் என்கிறது

நன்றி: தினமணி  
Blogger Widget

வியாழன், 22 மார்ச், 2012

தண்ணீர்... தண்ணீர்...

பல நாட்களாக 'நினைத்துக்' கொண்டிருந்தேன், தண்ணீர் பற்றி ஒரு பதிவு எழுதவேண்டும் என்று, உலக தண்ணீர் தினமான இன்று (22 மார்ச்) தான் அது இயல்பாக அமைந்தது.

பூனாவில் இருந்த சமயம் ஒரு நாள், திடீரென காலை எட்டு மணிக்கெல்லாம் அலுவலகத்திற்கு ஊழியர்கள் வர தொடங்கிவிட்டனர். எங்கள் மேலாளர் உட்பட. முன்பே பணிக்கு வந்திருந்தவர்களுக்கு ஆச்சர்யம். என்னடா இது!! பத்து மணி ஆனாலும் பணிக்கு வராத இவங்க, இன்று இவ்வளவு சீகரம் வர காரணம் என்ன? என்று.

அனைவரையும் இவ்வளவு சீகரம் வர வைத்தது 'தண்ணீர்' தான்.

ஆம் அனைவரது வீட்டிலும் தண்ணீர் 'வராதது' தான் இவர்கள் 'வர' காரணம்.   பல் தேய்த்து முதல், அனைத்தும் அலுவலகத்தில் தான்.

கிட்ட தட்ட மூன்று லட்சம் பேர் குடி இருக்கக் கூடிய குடியிருப்பு பகுதி அது. குடியிருப்பு பகுதி, பள்ளி, ஐம்பதிற்கும் மேல் மென்பொருள் நிறுவனம் இயங்கிக்கொண்டிருக்கும் மாதிரி துணை நகரம் அது.
(இடம் பெயர் - Magarpatta  City).




அங்கு இருக்கும் பெரும்பாலனவர்கள் வேற்று மாநிலத்திலிருந்து அங்கு வந்தவர்கள் தாம். கணக்கு இல்லாமல் தண்ணீர் செலவு செய்து, குடிப்பதற்கு தவிர, அடுத்த நாள் பல் தேய்பதற்கு கூட தண்ணீர் சேமித்து வைக்காத/ வைக்க தோணாத தருணத்தில் ஒரு நாள் தான் மேல் சொன்ன சம்பவம் நடந்தது.

இரண்டு மாதம் முழுதும் தண்ணீர் கிடையாது. ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் மட்டும் தான் தண்ணீர் வந்தது. அப்படி பட்ட சூழலில் தாம் தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவம் பெரியவர்களும் கற்றுக்கொண்டனர்.

இது தாம் தண்ணீர் இருக்கும் பல இடங்களில் நடப்பது, அதன் சேமிப்பு பற்றி யோசிக்காமலேயே இருப்பது. ஏதோ காற்று தொடர்ந்து இருப்பது போல தண்ணீரையும் தொடர்ந்து உபயோகப் படுத்தி வருகிறோம். கடந்த இரண்டு மாதங்களாக ஒரு வாளி தண்ணீரில் குளித்து, துணியும் துவைத்து பழகி வருகிறேன். ஆம், முடிகிறது. நமக்கு தண்ணீர் தர மறுக்கும் பெங்களூரில் தான் இந்த நிலைமை. 

பெங்களூரின் மைய்யப் பகுதியில் குடியிருக்கும் எங்கள் வீட்டில் தண்ணீர் வற்றி விட்டது என்று வீட்டு சொந்தக்காரர் சொன்னபோது அலுவலகம், பொழுபோக்கு என்று சற்று நேரம் எதுவும் நினைவுக்கு வரவில்லை, 'அத்யாவசியத்திர்க்கு' கூட தண்ணீர் இல்லை என்றால் எங்கு செல்வது என்று தான் தோணியது.

வயதில் பெரியவர்களாக இருப்பவர்களிலேயே பலர் தண்ணீரை வீணடிப்பதை பார்க்கும் போது எப்பொழுது அதன் முக்கியத்துவத்தை உணர்வார்கள் என்று தான் தோணுகிறது.

தண்ணீர் சேமிப்பு மூலம் நாம் சேமிப்பது தண்ணீரை மட்டும் அல்ல. சேமிக்க கற்றுக்கொள்ளும் பழக்கமும் தாம். இந்த தலைப்பை யோசித்த சமயம் மனதில் நினைவுக்கு வந்தது பள்ளிப் பாடத்தில் கடன் வாங்கியது யார், ஊதாரி யார் என்று பஞ்சாயத்து தலைவர் யசோதையை ஒரு சொம்பு தண்ணீரில் சேற்றில் நினைத்த காலை அலம்ப சொன்னது தான். சேற்றுக் காலை ஒரு சொம்பு தண்ணீரில் அலம்பி தண்ணீரையும் சிறிது மிச்சம் வைத்த அந்த கதை பள்ளியில் காரணம் இல்லாமல் வைக்க வில்லை.அந்த பாடம் இந்த கால குழந்தைகளுக்கு பாடத்திட்டத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை.

குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பது மட்டுமே பாசம் அல்ல, அவர்கள் பின்னாளில் கடை பிடிக்க வேண்டிய நற்பழக்கத்தயும் புகட்ட வேண்டியதும் நமது கடமை. நம் வீட்டு குழந்தைகளுக்கு தான் இதனை சொல்லி தர வேண்டும் என்று இல்லை,. அக்கம் பக்கத்துக்கு வீட்டு குழந்தைகள், எங்கேனும் பேச வாய்ப்பு கிடைத்தால் அங்கெல்லாம் சேமிப்பின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துவது என்று நாமாகவே அந்த வாய்ப்பினை எடுத்துக்கொள்ள வேண்டும்.


நன்றி: திறந்த குழாயை மூடாமல் படம் பிடித்த விக்னேஷ் பார்த்தசாரதி 
பால் வண்டி, எரிபொருள் ஏற்றி செல்லும் வண்டியில் இருந்தெல்லாம் ஒரு சொட்டு வெளியில் சிந்தி வீணானதாக நினைவு இல்லை. அந்த நிலைமை தண்ணீர் ஏற்றி செல்லும் வண்டிக்கும் வர வேண்டிய கட்டாயம் வந்து பல ஆண்டுகளாகிவிட்டது என்பதை உணர வேண்டிய நேரம் இது.

வேண்டிய இடத்திற்கு எடுத்து சென்று, போகும் வழியிலேயே தண்ணீரை காலி செய்யும் தண்ணீர் வண்டி. 
அந்நியன் திரைப்படத்தில் அதிக வாடகை வாங்கியவருக்கு காசை தண்ணீராக குடித்துக்கொள் என்று கோபப்படும் இடம் போல, என்ன வேண்டுமானாலும் ஒருவரிடம் இருக்கலாம், ஆனால் தண்ணீர் பயன் படுத்த வேண்டிய இடத்தில் தண்ணீர் மட்டும் தான் பயன் படுத்த முடியும்.

தண்ணீரின் அவசியத்தை உணர மறந்தால் தாகமெடுக்கும் போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் கேட்கக் கூடிய குரல் 'தண்ணீர்... தண்ணீர்...'
Blogger Widget