-->

திங்கள், 4 மார்ச், 2013

நீயா? நானா? - திரைக்குப் பின்னால்.

தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சி நீயா? நானா? கடந்த 2006 முதல் நடந்துகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட தலைப்புகளில் விவாதம் நடந்திருக்கிறது.


இந்த நீயா? நானா? நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு கடந்த வாரம் வாய்ப்பு கிடைத்தது (28-02-2013, வியாழக்கிழமை). சென்னை வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் படப்பிடிப்புக்கு வரும்படி சொல்லியிருந்தார்கள். பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன, படப்பிடிப்பு தளம் எப்படி இருக்கும் யாரெல்லாம் வருவார்கள், வேறு ஏதாவது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்குமா? என்றெல்லாம் பல கற்பனைகள்.

வியாழன் மதியம் இரண்டிலிருந்து மூன்று மணிக்குள் வரும்படி சொல்லியிருந்தார்கள். நான் ஒன்றரை மணிகெல்லாம் சென்றடைந்தேன். பிரசாத் ஸ்டுடியோ சென்றடைந்தவுடன் ஒரு கல்லூரியில் நுழைந்ததை போல உணர்ந்தேன். அங்கிருந்த காவலாளி ஒருவரிடம் 'அண்ணா, நீயா? நானா? படப்பிடிப்பு எங்கே நடக்கிறது என்று கேட்டேன்', கையை நீட்டி, அந்த கடைசியில் வண்டிகள் நிருத்தப்பட்டிருக்கிறதே, அங்கே இடது பக்கம் இருக்கிறது, என்றார்.

திரும்பும் முன் வலப்பக்கம் 'விஜய் டிவி' என்று எழுதப்பட்டிருந்தது, அங்கே சென்றேன், இது 'சூப்பர் சிங்கர்ஸ்' படப்பிடிப்பு தளம், தற்சமயம் செட் தயார் செய்யும் வேலை நடந்துக் கொண்டிருக்கிறது என்றார். சரி என்று இடப்பக்கம் சென்றேன்.

ஆண், பெண்  கலந்து சுமார் பத்து பேர் நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அதிலிருந்து ஒருவர் எழுந்து வந்து 'உங்கள் பெயர்?' என்றார். 'பார்கவ் கேசவன்' என்றேன். கையில் இருந்த பட்டியலில் பெயர் உள்ளதா என்று பார்த்தார், அது முதல் பெயராக இருந்தது.

பட்டியலை பார்த்துவிட்டு என் பெயர் மேல் ஒரு 'டிக்' செய்தார். என்னை பார்த்து, உள்ளே ஒரு வேறு எபிசொடுக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது, நீங்கள் விரும்பினால் உள்ளே சென்று பார்க்கலாம், இல்லை என்றால் இங்கேயே காத்திருக்கலாம், உள்ளே சென்றால் எபோது வேண்டுமானாலும் வெளியே வரலாம், என்று பணிவாக, நிதானமாக சொனார்.
உள்ளே செல்லும் முன் கைப்பேசியை அணைத்துவிடுங்கள் என்றார், ராம் குமார்.

உள்ளே செல்ல முற்படும்போது வேறொருவர், 'கொஞ்ச நேரத்துல மதிய உணவு தயார் ஆகிடும் சார், நீங்க இங்கேயே சாப்பிடலாம் என்றார்'. சரிங்க, என்று சொல்லி ஒரு கதவை திறந்தேன், ஒரு காவலாளி இருந்தார், அந்த கதவை சாத்திவிட்டு மற்றொரு கதவை திறந்தேன், ஏற்கனவே நடந்துக்கொண்டிருந்த விவாத சத்தம் கேட்டது. 'ஆஹா! ஒரு வழியாக படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிட்டோம்' என்றொரு மகிழ்ச்சி.

ஏற்கனவே படப்பிடிப்பை பார்துக்கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்தோம். அந்த தளம் எனக்கு ஒரு ஆச்சர்யத்தை கொடுத்தது.

தொலைகாட்சியில் பார்த்த போதெல்லாம் அந்த படப்பிடிப்பு தளம் பிரமாண்டமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஒரு பெரிய கூடம், உயரமான மேற்கூரை, அரை முழுதும் காற்று குளிர்விப்பியால் குளிர்ந்திருந்தது.

திரை மறைவில் இருக்கும் நீயா? நானா? படப்பிடிப்பு தளம். 
இயக்குனர் அந்தோணி கோபிநாத்தை ஒரு தனி ஒலிபெருக்கி வழியே இயக்கொக்கொண்டிருக்க; 'மைக்கை அவர்கிட்ட குடுங்க', 'வேற வேற வேற', 'இதுக்கு நீயா? நானா? நிகழ்ச்சி இடம் கொடுக்காது', 'இதை தான் இவர்கள் அறிவுறுத்துகிறார்' என்று இயக்குனர் வழிநடத்த அதை கோர்வையாக கோபிநாத் பேசிக்கொண்டிருந்தார்.

திரை மறைவில், இயக்குனர் அந்தோணி.
வேறு இடத்தில் சென்று உட்கார்ந்தேன், எனக்கு தெரிந்து ஆறு காமெராக்கள், ஒவ்வொரு காமேரமனுக்கும் ஒரு உதவியாளர், கமேராமேன் நாற்காலியில் உட்கார்ந்தவாறே, படம் பிடிக்க , ட்ராலியில் இருந்த கமேரமேனை உதவியாளர் இடது, வலது புறமாக மெதுவாக தள்ளிக்கொண்டிருந்தார். ஒரு கமேராமேன் கொஞ்சம் முக சுளிவுடன் என்னிடம் மணி என்ன ஆச்சு என்று ஜாடையாக கேட்டார், இரண்டரை என்றேன். காலை பதினோரு  மணியிலிருந்து அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.  குனிந்த நிலையிலேயே ட்ராலியில் நாற்காலியை தள்ளி கொண்டிருந்த உதவியாளர்கள் அனைவரும் இடுப்பை பிடித்துக்கொண்டே தள்ளிக் கொண்டிருந்தனர்.

 காமெராமேன்கள்

காமெராமேன்கள் 
உதவியாளர், விவாதத்தில் ஈடுபட்டவர்கள் பேசிக்கொண்டிருந்த பங்கேற்பாளர்களின் முக்கியக் கருத்துக்களை கவனித்து, அவர்களிடம் சில கேள்விகளை கேட்கும்படி கோபிநாத்திடம் சொல்லிக்கொண்டிருந்தார். பாரம்பரிய உணவு பற்றிய விவாதம் வெகு சூடாக நடந்துக் கொண்டிருக்க, மணி நான்கானது, கோபமாக சிறப்பு விருந்தினரை பார்த்து பேசிக்கொண்டிருந்த ஒரு பங்கேற்பாளரை சமாதானப் படுத்தி, 'பசிக்குதுங்க, காலைலேர்ந்து இன்னும் சாப்பிடவே இல்லை' என்று கோபிநாத் சொல்லி சற்று நேரத்தில் அந்த விவாதம் நிறைவடைந்தது.

அடுத்ததாக படப்பிடிப்புக்காக காத்திருந்த எங்கள் பெயர்களை அழைத்தார்கள், வெளியே உட்கார்ந்திருந்த அந்த பத்து பேர் குழு ஒவ்வொருவரை ஒவ்வொரு இடத்தில் உட்கார சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கு முதல் வரிசையில் உட்கார சொனார்கள்.

முதல் வரிசையில் இரண்டாவதாக நான் (வலமிருந்து இடம்)
கோபிநாத் வரும் முன் வெள்ளை தரையில் அழுக்கு தெரியாதவாறு அந்த தளத்தை இரண்டு மூன்று பேர் துடைத்தார்கள். காபி, பஜ்ஜி, போண்டா போன்ற நொறுக்கு தீனி கொடுத்த பின்னர், இயக்குனர் இருபக்கமும் வந்து தலைப்பை சிரித்த முகத்துடன் விளக்கினர். பின்னர் ஒரு அறையில் கோபிநாத்துக்கும் விளக்கிக்கொண்டிருந்தார்.

ஆறரை மணிக்கு தான் படப்பிடிப்பு ஆரமித்தது, விவாதம் ஆரமித்த சற்று நேரத்திலெல்லாம் மைகுக்காக சலசலப்பு ஏற்பட, படப்பிடிப்பு முடிவதற்குள் குறைந்தபட்சம் பதினைந்து முறையாவது சிரித்த முகத்துடனேயே கடிந்து கொண்டார் கோபிநாத், 'TVல பார்க்கும்போது அசிங்கமா தெரியும்க, ஏன் இப்படி மைகுக்குகாக அடிசுகறீங்க' , காலை ஒன்பது மணியிலிருந்து நின்றுக்கொண்டே இருக்கிறேன், நான் கோபப் பட்டேன் என்றால், விவாதம் செய்யும் மனநிலை போய்விடும், புரிஞ்சுகோங்க' என்று பல முறை சலிப்படைந்தார்'.

பங்கேற்ற பங்கேற்பாளர்களும் எங்கெங்கிருந்தோ வந்து பல மணி நேரம் காத்திருந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

கோபிநாத்துடன்
மொத்தம் நான்கு மணி நேரம் நடந்த படப்பிடிப்பு இரவு பத்தரை மணிக்கு முடிந்ததும் விறுவிறுப்பாக கைகொடுத்து விட்டு சென்றார் கோபிநாத், அடுத்த படப்பிடிப்புக்காக தயார் ஆகா சென்றார். அடுத்தது இரவு பதினோரு மணி முதல் விடியற்காலை மூன்று மணி வரை நடைபெறுமாம்.

இரண்டரை மாதத்திற்கு மூன்று நாள், நாள் ஒன்றுக்கு மூன்று தலைப்புகளைப் பற்றிய விவாதம் படப்பிடிப்பு செய்யப்படுகிறது.

ஆக, நாம் தொலைகாட்சியில் பளிச்சென, சிரித்த முகத்துடன் பார்க்கும் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா? நானா?வுக்கு பினால் பல இடுப்பு வலிகள், பல மணிநேரங்கள் நின்றுகொண்டிருக்கும் கடுகடுத்த கால்கள் பல பசித்த வயிர்கள், தூக்கத்தை எதிர்நோக்கி இருக்கும் பல கண்கள் இருந்துக் கொண்டே இருக்கின்றன.

நவீன சாதனங்கள் நம் வாழ்க்கையை இலகுவாக்குகிறதா? இல்லை அடிமையாக்குகிறதா? என்று இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. 19:00 மற்றும் 39:20 ஆவது நிமிடங்களில் பேசுகிறேன்.

நன்றி.Blogger Widget

3 கருத்துகள்: