-->

வியாழன், 5 மே, 2011

யாம் பெற்ற இன்பம்.


ஒவ்வொரு பொழுதும் உணவு உண்ணும்பொழுது, 'நல்லா இருக்கு அம்மா...' என்று சொன்னபோது என் தாய் பெற்ற மகிழ்ச்சி;

விடுமுறைக்கு என் பாட்டியின் வீடிற்கு சென்றிருந்த சமயம், மாடியில் இருந்த கிரிக்கெட் மட்டையை கையில் எடுத்து, 'பந்து போடுடா நம்ம ஒரு ஆட்டம் விளையாடலாம்' என்று குழந்தை மனதுடன் என் தந்தை கூறிய அந்த சமயம்;

விளையாட்டில் ஆர்வம் கொண்ட என் தந்தையை ஒரு நாள் மாலையில், 'வாங்கப்பா விளையாடலாம்' என்று நான் அழைத்த பொழுது அவர் நெகிழ்ந்த விதம்;

வெகுநேரமாக அழுதுக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு குழந்தையை, என் மடியில் போட்டு, என் காலாட்டி துங்கவைத்தபோது;

விடியற்காலையில் பணிக்கு சென்றபொழுது, எட்டு ரூபாய் பயனசீட்டிற்கு முழுதும் சில்லறையாய் கொடுத்தபொழுது, புன்முறுவலுடன் அகத்திலிருந்து நடத்துனர் கூறிய 'நன்றி';

சாலையில் சென்றுகொண்டிருந்தபொழுது ஒரு பந்து என் மேல் விழ, மறுபுறம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன், 'அண்ணா, அந்த பந்தை எடுத்து போடுங்கண்ணா என்று பயம் கலந்த புன்னகையுடன் கேட்டபொழுது நினைவிற்கு வந்த 'என் சிறுவயது விளையாட்டு';

ஏழு வருடம் கழித்து சந்தித்த என் நண்பனுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது, அவனுக்கு வந்த அழைப்பில்... 'பல வருடம் கழித்து என் நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கிறேன், பிறகு உன்னுடன் பேசுகிறேன் என்று 'தன் காதலியிடம்' என் நண்பன் கூறிய அந்த நிகழ்வு;

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒருநாள் சக நண்பர்கள் முன்னிலையில் 'நீ இல்லாமல் போயிருந்தால், இந்த அளவு என் கல்லூரி நாட்களை கொண்டாடியிருபேனா என்பது சந்தேகமே' என்று என் நண்பன் கூறிய அந்த சமயம்...

இது போல் இன்னும் சிற்சில நிகழ்வுகளாலும், நிகழ்சிகளாலும் வாழ்வில் யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்.
Blogger Widget

4 கருத்துகள்: