-->

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

அடடே!!! எழுபதாவது சுதந்திர தினமாமே!!!

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டதாம்! அடடா!!! ஆமாம்! எழுபது ஆண்டுகளாகிவிட்டது!

வெள்ளையனிடம் இருந்து சுதந்திரம் அடைந்து, நம்மவரிடம் அடிமையாயிருப்பது தான் இன்றைய சுதந்திரத்தின் நிலைமை!

குழந்தை பிறந்த உடனேயே ஆதார் அட்டை எடுக்கச் சொல்லி, பெற்றோரை நிம்மதியாய் இருக்கவிடாமல் அரசு அலுவலகத்துக்கு அலைய வைத்தபோதே அந்த பெற்றோரின் சுதந்திரம் போய்விட்டது!

குழந்தை சிரித்து பேசி ஆரமிக்கும் முன்பே, இரண்டு மூன்று ஆண்டுகள் பள்ளியில் சேர்க்கை முன்பதிவு செய்யவேண்டும் என்ற போதே அந்த பெற்றோரின் நினைவிலிருந்து நிம்மதியின் சுதந்திரம் போய்விட்டது!

பள்ளியில் சேர்ந்தது முதல், பள்ளி முடித்து, கல்லூரி சேர்ந்து, மேல் படிப்பு சேரும் வரை இடஒதுக்கீடுஎன்ற பெயரில் அதிக மதிப்பெண் எடுத்தும் நினைத்த பாடத்திட்டத்தை எடுத்து படிக்கமுடியாமல், கிடைப்பதை மட்டுமே படிக்கவேண்டும் என்ற போதே அந்த குழந்தையின் கனவின் சுதந்திரம் பொய்த்து விட்டது!

வேலையில் சேர்ந்தபின்னர், பொறியாளர் படிப்பு படிக்கவில்லையே கலைக்கல்லூரி பட்டம் தானா என்று பனி உயர்வு நேரத்தில் இழுத்தடிக்கும் போதே அந்த நபரின் திறமையின் சுதந்திரம் போய்விட்டது!

காலம் காலமாக இயற்க்கை அன்னை வழங்கிவந்த தண்ணீரை மாநிலம் வாரியாக பிரித்து, மக்களிடையே வெறுப்புணர்ச்சியும், காழ்ப்புணர்ச்சியும், விரோதத்தையும் ஏற்படுத்தியபோதே மக்களிடையே இருந்த அமைதியின் சுதந்திரம் போய்விட்டது!
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது என்றார் வள்ளுவர்.

எவ்வளவுதான் வறுமையில் வாடினாலும், தான் உண்டு தன் விலை உண்டு என்றிருந்த விவசாயி, தன் விவசாய நிலத்தில் விவசாயம் செய்யமுடியாமல் அரசாங்கத்தின் எரிபொருள் பேராசைக்காக, மக்களுக்கு சோறுபோடும் பூமியை பறிகொடுத்து நிர்கதியாய் நின்றபோதே தன் தொழிலின் சுதந்திரத்தையும் தன் வாழ்வாதாரத்தின் பறிகொடுத்தார்கள்!

பச்சிளம் குழந்தைகள் முப்பது பேர் (அறுபத்தி மூன்று குழந்தைகள் என்பது கடைசி தகவல்) சுவாசிக்க பிராணவாயு இல்லாமல் மருத்துவமனையில் உயிரை பறிகொடுத்த கொடுமை நான்குநாட்களுக்கு முன்னர்நடந்த போது, பெற்றோராகிய அவர்களின் மனது எவ்வளவு துடிதுடித்து போயிருக்கும்? அறுபத்தி மூன்று குழந்தைகள், நூற்றி ஆறு கணவன் மனைவிகள், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் என்று அத்தனை பேரின் கனவு மருத்துவர்களின் அலட்சியத்தாலும், ஆட்சியாளர்களின் கவனக்குறைவாலும் தங்கள் குழந்தை சுதந்திரமாக பிறக்கக்கூட முடியாமல் போனது!

யாருக்கு சொல்கிறோம் சுதந்திர தின வாழ்த்துக்கள்? எதற்காக சொல்கிறோம் சுதந்திர தின வாழ்த்தை?

நம் தேசம் உயர்ந்ததுதான், ஆனால் ஆட்சியாளர்கள் தான் மக்களை உயரவிடாமல் அவர்களின் சுதந்திரத்தை முடக்கிக் கொண்டிருக்கின்றனர்!

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! வாழ்க பாரதம்!


Blogger Widget