-->

சனி, 30 டிசம்பர், 2017

கருத்துக்களம் 2017இன் சிறந்த வலைப்பூவாக தேர்வு செய்யப்பட்டது!

மூன்று மாதங்களுக்குமுன் கருத்துக்களம் வலைப்பூ 2017இன் சிறந்த வலைப்பூ என்ற விருதுக்கு IndiBlogger நடத்திய 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர்க்கான போட்டியில் தாக்கல் செய்யப்பட்டது. http://www.karutthukkalam.com/2017/09/2017.html

இன்று IndiBlogger (30 டிசம்பர் 2017) நடத்திய பிரம்மாண்டமான விருது வழங்கும் விழாவில் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த வலைப்பூவாக கருத்துக்களம் தேர்வு செய்யப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விருது பெற்றவர்களுக்கான பட்டியலை காண்க!

https://www.indiblogger.in/iba/2017/winners/regional-languages

Winner of The Indian Blogger Awards 2017 - Regional Languages

#IBA2017 
Blogger Widget

புதன், 27 டிசம்பர், 2017

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 7 | வாயை மூடி (விலை) பேசவும்

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...

முந்தைய அத்தியாயம் (6) படித்துவிட்டு வாசகர்களிடமிருந்து பெரிதாக கருத்துக்கள் ஏதும் வரவில்லை என்று எனக்கு வருத்தம். ஹ்ம்ம்.. ஆனால் கோடிகளை ஆயிரக்கணக்கில் கொள்ளை அடித்த கேடிகள் எல்லாம் நல்லவர்கள், மேஜையின் கீழ் கட்டுக்கட்டாக நோட்டுகளை கொடுத்தாலும் வாங்க தெரியாத மகான்கள் என்று "நியாயவாதி நீதிபதி" தீர்ப்பு கொடுத்ததை பார்த்து வந்த வருத்தத்தை விட இது பெரிதல்ல.


ராஜு... போயி ஒரு ரூபாய்க்கு பச்சைமிளகாய், ஒரு ரூபாய்க்குகருவேப்பிலை வாங்கிண்டு வா - என்று என் அம்மா நான் சிறு வயதில் இருக்கும்போது சொல்வார். பின்னர் அது இரண்டு ரூபாய்க்கு என்று மாறியது. அப்படியே எனக்கு கடலை மிட்டாய் வாங்க ஒரு ரூபாய் கொடுப்பார். நானும் ஓடி சென்று உடனே வாங்கி வருவேன். சிலருக்கு வீட்டு வாசலிலேயே மளிகை கடை இருக்கும். அண்ணாச்சி அரை கிலோ ரவை குடுங்க இதோ வந்து காசு தரேன் என்றும், பன்னீர் சோடா குடித்த பின்னர் காசு எடுத்து வர மறந்ததை தலையை சொரிந்த படியே அன்னே.. காசு கொண்டு வர மறந்துட்டேன், இதோ இருங்க எடுத்துட்டு வரேன் என்று சொன்ன அனுபவம் பலருக்கும் நடந்திருக்கும். கடைக்கு பதினைந்து ரூபாய் எடுத்து சென்று பத்து ரூபாய்க்கு துக்ளக் பத்திரிகை வாங்கி, ஒரு Rose Milkகும் குடித்துவிட்டு வருவேன். 

உழவர் சந்தைக்கு சென்று காய்கறிகள், பழங்கள் வாங்க சென்றால் சில சமயங்களில் நாமே வியக்கும் படி விலை உயர்ந்திருக்கும். மழை வந்து வாழை தோப்பெல்லாம் வீணாகிடிச்சுப்பா அதான் இந்த தடவை சுகந்தம் பழம் (இது ஓசூர் ஸ்பெஷல் வாழை ரகம்!) விலை ஏறிடுச்சு என்றும்  ரஸ்தாளியை டசன் இருபத்து ஐந்து ரூபாய்க்கே வாங்கி பழகி அதை தடால் என்று நாற்பது ரூபாய் என்று சொன்ன போதெல்லாம் ஒரு ஐந்து ரூபாய் குறைத்து கேட்டு வாங்கியது ஒரு காலம்.

வேலை கிடைத்த பின்னாட்களில், எவ்வளவோ பொருட்களெல்லாம் அநியாய விலை விற்க, வியர்வை சிந்தி நாளெல்லாம் ரோட்டில் கடைபோட்டு, தலையை சொரிந்தும், தொப்பையையும் தடவிக்கொண்டும் வரும் போலீசுக்கு ஓசியில் ஒரு டசன் பழம் கொடுத்து, தொந்தரவு தராமல் இருக்க அடிக்கடி ஐம்பது ரூபாய் கொடுத்தும், மழை வரும்போது அப்படியே தள்ளுவண்டியை தார்பாய் போட்டு மூடி, ஓடி பின்னே இருக்கும் மருந்துக்கடையில் கதவருகே மழைக்கு ஒதுங்கியும், மாலைவேலையில் தள்ளுவண்டியின் கீழே பஞ்சாயத்து யூனியன் ஸ்கூலில் படிக்கும் தன் குழந்தை உட்கார்ந்து பள்ளிப்பாடங்களை படித்துக்கொண்டிருக்கும்.

இதற்கு அடுத்தபடியாக பீரோவோ அல்லது சோஃபாவோ வாங்க கடைக்கு சென்றால், கடை முன்னே வைத்திருக்கும் மரச்சாமான்களின் மேல் ரோட்டில் செல்லும் வண்டிகளால் படிந்த தூசியை கடைக்கார பையன் தட்டிக்கொண்டிருப்பான். கடையில் இருக்கும் ஐந்து வித  சோஃபாவில் ஒன்றை தேர்ந்தெடுத்து "என்ன பாய் நீங்க, நம்மக்கிட்டயே இந்த விலை சொல்றீங்க!  கம்மிபண்ணுங்க பாய்..." என்று பதினோராயிரம் விலை சொன்ன சோஃபாவை ஒன்பதாயிரத்து முந்நூறு வரை பேரம்பேசி ஒரு minidor வேனில் பொருளுடன், இரண்டு ஆட்களை அனுப்பி வைப்பார் கடை முதலாளி. எவ்வளவு கனமாக இருந்தாலும் பாவம் அவர்களே இறக்கி, மாடி வீடோ, சந்தில் இருக்கும் வீடோ அவர்களே சுமந்துக்கொண்டு வந்து நம் வீட்டில் வைப்பார்கள்.

தெருவில் விநாயகர் வைக்க நன்கொடை கேட்டு வரும் பசங்களுக்கு நூறு ரூபாய்க்கு கீழ் கொடுத்தால் அடுத்த தடவை நாம் ரோட்டில் நடந்து செல்லும்போது பசங்கள் கூட்டம் நம்மை பார்க்கும் பார்வையே வேறு.  ஆனால் நாம் வாங்கிய பொருளின் சுமையை தாங்கி வந்து வீட்டில் வைக்கும் கடைக்கார பையன்களுக்கு ஏதோ தர்மத்துக்கு பணம் கொடுப்பதாக பலருக்கு நினைப்பு. தாராள மனமுடையவர்களாக இருந்தால் ஆளுக்கு ஐம்பது ரூபாய் கொடுப்பர், சிலர் இருவருக்கும் சேர்த்து வெறும் நாற்பது ரூபாயை கொடுத்துவிட்டு ஏதோ பெரிதாக காசு மிச்சம் பிடித்ததாக வீட்டில் பீற்றிக்கொள்வர்!

இப்படியாக ஒவ்வொருநாளும் ஒரு அனுபவம். இதுதான் நம் நடைமுறையும் கூட. இதை மொத்தமாக தவறு என்று சொல்லவில்லை, இதில் எங்கெங்கே தவறு இருக்கிறது என்று சொல்ல ஆரமித்தால் அதற்கே தனி அத்தியாயம் தேவைப்படும்.

நம் நாட்டில் இவையெல்லாம் இப்படி இருக்க, இங்கே மேற்கண்ட இந்த விஷயங்களில் மட்டும் இந்நாட்டில் என்ன மாறுதல்கள் என்று பார்ப்போம்.

நம்மூரில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் இங்கே கிடைக்கும். குறிப்பாக நியூ ஜெர்சியில் கிடைக்காத, இந்தியாவில் விற்கும் பொருள் எது என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். மல்லிகைப்பூ, கனகாம்பரம், ரோஜாப்பூ, வெற்றிலை, காய்கறிகள், பருப்பு வகைகள், மற்ற சமையல் சாமான்கள், அம்பிகா அப்பளம், பதஞ்சலியின் நூடுல்ஸை சந்தையில் புழலவிட தற்காலிகமாக நம்மூரில் தடையிலிருந்த போதும் அந்த தடை செய்யப்பட்ட மாகி நூடுல்ஸ், வறட்டி, கோமியம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதை எல்லாம் முதலில் இங்குள்ள கடைகளில் பார்த்த போது மிக ஆச்சர்யமாக இருந்தது. இருக்காதா பின்ன!

இதில் விஷயம் என்னவென்றால், இங்கே காய்கறிகள் இறக்குமதி செய்தாலும் அதற்கு ஏதோ விதிமுறைகளெல்லாம் இருக்கின்றன, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சில மாதங்களுக்கு நம் நாட்டிலிருந்து பச்சைமிளகாய் இங்கே இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தார்கள். அதில் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்தின் தன்மை அதிகமாக காணப்பட்டதால் அதை தடை இந்தியாவிலிருந்து இங்கே ஏற்றுமதி செய்ய இந்தியாவிற்கு தடை விதித்திருந்தார்கள். இதை ஆராய ஒரு அமைப்பு இருப்பதே அப்போதுதான் எனக்கு தெரியும். இங்கே ஏற்றுமதிக்கு தடை என்றால், அந்த சமயத்தில் அதை நம் நாட்டில் நம் தலையில் கட்டி ஏகபோகமாக விற்றிருப்பார்கள். ஹ்ம்ம்...

பெரும்பாலான மாநிலங்களில் இங்கிருக்கும் முக்கிய இந்திய மளிகைக்கடை Patel Brothers என்னும் கடை. பின் Subzi Mandi, அது இது என சில பெயர்களில் பல கடைகள் இருக்கும். நம் சமையலுக்கு தேவையான பொருட்களை இங்கு மட்டும் தான் வாங்க முடியும். பொன்னி அரிசி, சோனா மசூரி என்று நம்மூரில் கிடைக்கும் அனைத்து அரிசி வகைகளும், இதயம் நல்லெண்ணெய், நரசூஸ் காபி பொடி, நன்னாரி சர்பத் கூட கிடைக்கும். இங்கு கிடைக்கும் சில பொருட்கள் நம்மூரிலேயே இப்போதெல்லாம் தேடித் தேடித்தான் வாங்க வேண்டும்.

எந்த பொருளாக இருந்தாலும் என்ன விலை போட்டிருக்கிறதோ அந்த விலைதான்! நம்மூரிலேயே இப்போதெல்லாம் AC போட்டு மளிகை சாமான் விற்கும் கடைகளில் "என்னது! Ruchi palm oil எழுபது ரூபாயா! இதெல்லாம் நான் நாற்பத்தைந்து ரூபாய்க்குலாம் வாங்கியிருக்கேன்! ஹ்ம்ம்.. என்ன விலை விக்கறானுங்களோ!!"  என்று எப்படி வாயைமூடி மனதுக்குலேயே விலை பேசிக்கொள்கிறோமோ அதுபோலத்தான் இங்கேயும். தோசைமாவு, இட்லி மாவு, ரெடிமேட் சப்பாத்தி எல்லாம் சில நேரங்களில் அதிக விலை போல தோணினாலும் இவையெல்லாம் கிடைக்கின்றனவே அதுவே பெரிய விஷயம் என்று தான் தோணும். இப்போதெல்லாம் சில மாநிலங்களில் இருக்கும் அமெரிக்க கடைகளிலேயே நம் பருப்பு, அரிசி வகைகள் விற்க ஆரமித்துவிட்டனர். (இதை பார்த்து இந்த டிரம்ப் தாத்தா ஏதும் பண்ணாம இருக்கணும்!)

எங்கள் ஓசூரில் தயாராகும் GRB நெய் இங்கே கிடைக்கிறது!
மன்னார்குடியில், மயிலாடுதுறையில் என் சிறு வயதுமுதல் விரும்பிக் குடித்த நன்னாரி சர்பத் இங்கே கிடைக்கிறது!
மளிகை சாமான்கள் தவிர, மரச்சாமான்கள், Chair, என்று எது வாங்கினாலும் தன் கையே தனக்கு உதவி தான்! அதாவது... நம்மூரில் வண்டியுடன் கூடவே வரும் கடை பசங்க, மினிடோர் வண்டி, போனால் போகட்டும் என்று நம் சுமையை தூக்கிவந்து வீட்டில் வைக்கும் கடை பையன்களுக்கு தருகிற ஐம்பது ரூபாய் இது எதுவும் இங்கே கிடையாது. இங்கே இந்த வீட்டு பொருட்கள் விற்கும் கடை இதுதான் என்று அவ்வளவு சிரிய பட்டியல் போட்டுவிட முடியாது.

Walmart, Costco, IKEA, Target, Matress Firm என்று எந்த கடைக்கு சென்றாலும் அந்த பொருள் எப்படி இருக்கும் என்று Sampleகாக ஒரு சோஃபாவோ, shelfபோ வெளியே வைத்திருப்பார்கள். எந்த பொருள் வேண்டுமோ அதை பக்கத்திலேயே ஒரு அட்டைப்பெட்டியில் வைத்திருப்பார்கள். இதுவே IKEA என்ற கடையில் பெரிய கிடங்கு போன்ற இடத்தில் பல ராக்குகளில் அடுக்கி வைத்திருப்பார்கள். அந்தந்த பொருள் எந்த ராக்கில் இருக்கிறது என்பதை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டு கடையை முழுதும் சுற்றி பார்த்து வெளியே செல்லும் இடத்தில் இந்த கிடங்கை தாண்டி billing கவுண்டர்க்கு  செல்லும்போது பணத்தை கட்டிவிட்டு, எவ்வளவு பெரிய பொருளாக இருந்தாலும் பெரிய்ய trolley இருக்கும், அதில் நாம் தான் அதை வைத்து தள்ளிக்கொண்டு வண்டியில் ஏற்றி, கயிறு கட்டி (வண்டி நிறுத்தும் இடத்திலேயே கயிறு பெரிய rollலில் இருக்கும்) எடுத்து செல்ல வேண்டும்.


இப்படி விலைப்பட்டியலில் எந்த ரேக்கில் இந்த பொருள் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கும்.

இப்படி அந்த ராகில் நாம் வாங்கப் போகும் பொருள் அட்டைப்பெட்டியில் இருக்கும்.
எந்த பொருளாக இருந்தாலும் அட்டை பெட்டியினுள் அதற்கு தேவையான Screw, அதை திருகுவதற்கு திருகான் (screw டிரைவர் அல்ல, எளிதான திருகான் ஒன்று இருக்கும்), மற்ற அனைத்து தேவையான பொருட்களும், மேலும் அதை எப்படி assemble செய்வது என்பதற்கான வழிமுறைகளும் மிக தெளிவாக கொடுக்கப் பட்டிருக்கும். அதில் கொடுத்திருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் பொருள் அதற்கான வடிவம் பெரும். எங்கள் வீட்டில் இருக்கும் நாற்காலி, கணினி வைக்கும் மேஜை, புத்தக அலமாரி,  டிவி வைக்கும் மேஜை, Fan என்று எல்லாமே நானே தான் செய்தேன். இப்படித்தான் இங்கிருக்கும் எல்லோருமே செய்வார்கள்.


இப்படி ஒவ்வொன்றும் நாமே assemble செய்ய ஆரமித்தால்தான் ஒரு பொருள் வடிவம் பெற எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கும் என்று புரியும், அந்த பொருளின் சுமை தெரியும், "ச்ச... இதே நம்ம ஊரா இருந்தா இந்த தொல்லையே இல்ல" என்றுதான் எல்லோருக்கும் முதலில் தோணும், ஆனால் இப்படி நாமே செய்வதால் ஒவ்வொரு பொருளையும் மேலும் பொறுப்புடன் கையாளத் தோணும். நம் நாட்டில் துரும்பைக்கூட கிள்ளிப்போடாத சோம்பேறிகளாக இருந்தாலும் இங்கே வந்தால் வீட்டுப் பொருட்களின் சுமையை தானே தான் சுமக்கவேண்டும்!
நிறைவடைந்த வடிவில் புத்தக அலமாரி. சோ அவர்கள் ஆசிரியராக இருந்தபோது வெளிவந்த துக்ளக். கடந்த செப்டம்பரில் வாங்கியது. அவர் நினைவாக வைத்துள்ளேன்.
அடுத்த அத்தியாயம் விரைவில்...

போக்குவரத்து - என்ற தலைப்பில் பிபிசி தமிழ் நடத்திய புகைப்படப் போட்டியில் நான் எடுத்த புகைப்படம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பென்சில்வேனியாவில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு கிராமம் - பார்கவ் கேசவன், ஒசூர் என்ற பெயரில் எனது படம் இடம் பெற்றிருக்கும். அதற்கான இணைப்பு இங்கே http://www.bbc.com/tamil/arts-and-culture-42456053 

இந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி!
Blogger Widget

வியாழன், 14 டிசம்பர், 2017

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 6 | போலாம் ரைட்...

பெங்களூரில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், வார இறுதிக்கு ஓசூர் சென்றுவிடுவேன். திங்கட்கிழமை காலை ஓசூரிலிருந்து கிளம்பி பெங்களூருக்கு வேலைக்கு செல்வேன். பெரும்பாலும் silkboard flyover மேல் செல்லும் பேருந்தில் தான் செல்வேன், குறைந்தபட்சம் நாற்பது நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க அதுதான் ஒரே வழி.

ஓசூர் பேரூந்து நிலையத்திலிருந்து பெங்களூருக்கு ஐந்து நிமிடத்துக்கு ஒரு வண்டி கிளம்பும். அதிலும் பலவிதமான வண்டிகள் உண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து, தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் தனியார் வண்டி, கர்நாடக அரசு போக்குவரத்து, கர்நாடகாவிலிருந்து இயங்கும் தனியார் வண்டி, இதுதவிர தனியார் company கார்கள், வேன்கள் மற்றும் காலை நேரத்தில் ஓசூர்-பெங்களூர் ரயில் வண்டி. இப்படி பல விதத்தில் தத்தம் சௌகரியத்துக்கு ஏற்றார் போல பெங்களூர் செல்ல வசதிகள் உண்டு.

இந்த தனியார் வண்டிகளில் செல்லும்போது பலவந்தமாக சில மொக்கை திரைப்படங்களை திருட்டு சிடியில் போட்டு சித்திரவதை செய்வார்கள். எப்படா ஊர் வரும் என்றிருக்கும். அப்படிப்பட்ட மொக்கை படம் எடுத்து அதை திரையரங்கில் வெளியிடுபவர்களுக்கே முதலில் தண்டனை குடுக்க வேண்டும்! பல சமயம் வேறு வழி இல்லாமல் இந்த சசிகுமார், சில பொறுக்கிகளை ஹீரோவாக சித்தரிக்கும் படங்களை எல்லாம் தவிர்க்க முடியாமல் பார்த்து நொந்திருக்கிறேன். அதிலும் ஏதோ RDX, DTS இருக்கும் நடமாடும் திரையரங்கு நடத்துவதாக நினைப்பு அந்த ஓட்டுநர், நடத்துனர்களுக்கு - காது கிழியும் அளவுக்கு சத்தம் பின்னாடி வரும் அரசு பேருந்துக்கே கேட்கும்!

19 ரூபாய், 28 ரூபாய் பயண சீட்டு விலை இருந்த காலத்தில் அந்த மீதி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லறையை வாங்க நாம் படும்பாடு சொல்லி மாளாது! அந்த "ரெண்டம்பது" வடிவேலு comedy தான் நினைவுக்கு வரும். ஒருமுறை ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து அருமையான காற்று வீசிக்கொண்டிருந்த அந்த அருமையான பயணம் இந்த கண்டக்டர் நம்ம பாக்கி சில்லறையை குடுப்பானா என்ற சந்தேகத்தினாலேயே ரசிக்க முடியாமல் போனது! சந்தேகித்தது சரிதான் என்னும் வகையில் வேறு யாரோ ஒரு பயணிக்கும், எனக்கும் சேர்த்து ஒரு பத்து ரூபாயை என்னிடம் குடுத்து ரெண்டுபேரும் அஞ்சஞ்சு ரூபாய் பிரிச்சு எடுத்துக்கோங்க என்று இறக்கிவிட்டார்!

இது போதாதென்று திங்கட்கிழமை காலையில் வழக்கமாக போகும் வண்டியையே சும்மா ஸ்பெஷல் பஸ் என்று ஒரு ஸ்டிக்கரை மட்டும் ஒட்டிவிட்டு, ஐந்து ரூபாயை கூட்டி டிக்கெட் விலையை விற்பதும், இதற்காக பயணிகளுக்கும், நடத்துனருக்கும் வாக்குவாதம் நடப்பதும் பலமுறை பெரும்பாலோனோர்  அனுபவப்பட்ட விஷயங்கள். அந்தந்த நேரத்தில் இதெல்லாம் கடுப்பை கிளப்பும் நிகழ்வுகள் என்றாலும் இதெல்லாம் பெரும்பாலானோர் பலமுறை அனுபவப்பட்ட சம்பவங்கள் தானே! 

காலை ஒன்பது மணிக்குமுன் பெங்களூரு பஸ் பிடிக்க வேண்டும் என்றால், பேருந்து நிலையத்தினுள்  பஸ் நுழையும் முன்னரே பேருந்து நிலையத்தின் வாயிலிலிருந்து பஸ்சை துரத்தி சென்று உள்ளிருப்பவர்கள் இறங்குவதற்கு முன் அவர்களை மீண்டும் உள்ளேயே தள்ளி உட்கார வைக்கும் அளவுக்கு ஆக்ரோஷமாக போருக்கு செல்லும் வீரனை போல தள்ளுமுள்ளு நடத்தி, யோவ் இங்க நான் போட்ருந்த துண்டு எங்க? யோவ் அது என் கர்சீப்பு, குட்டி பசங்களை ஜன்னல் வழியே ஒரு மூணு பேர் சீட்டில் உக்கார வைத்து இடம்பிடிப்பது என்று பல வழிகளில் ஒரு மணிநேரம் செல்லும் பயணத்துக்காக ரகளை ரணகளமாக இருக்கும் பெரும்பாலான காலை நேரங்களில். (பின் குறிப்பு - மேற்கூறிய விஷயங்களில் துளியும் மிகைப்படுத்தி கூறவில்லை, நான் பெங்களூரு சென்ற சமயங்களில் நடந்த சில நிகழ்வுகள் தான் இவை.)

இப்படி ஓசூரிலிருந்து பெங்களூருக்கு பேருந்தில் சென்ற அனுபவம் பல இருக்க, இங்கு
நியூ ஜெர்சியியிலிருந்து நியூயார்க் செல்லும் அனுபவத்தைபற்றி தான் இந்த தலைப்பில் எழுதியிருக்கிறேன். 


முதல் நாள், நியூ ஜெர்சியில் நான் தங்கியிருக்கும் பார்சிபணியிலிருந்து (என்னது பாசிபருப்பா என்று தான் பலர் முதலில் கிண்டல் செய்வர், இந்த பெயரை முதலில் கேட்ட நான் உட்பட!) நியூயார்க் செல்ல பேருந்துக்கு காத்திருந்தேன். 7:20க்கு பேருந்து என்றால், 7:18க்கு பேருந்து நிறுத்தத்துக்கு சென்றால் போதும். சரியான நேரத்துக்கு பேருந்து வந்து நம்மை அசரவைக்கும்!அழகான பேருந்து நிறுத்தம். காத்திருந்தேன், நான் பேருந்து நிறுத்தத்துக்கு சென்றதற்கு முன் ஏற்கனவே ஒரு பெண் அங்கிருந்தார், அடுத்து நான் சென்றேன், பின்னர் இரண்டு பேர் வந்தனர். Bus Stop என்று வைத்திருந்த கம்பத்திற்கு முன் பேருந்து சரியாக நின்றது. (ஆச்சர்யம் தான்!)

அங்கிருந்தவர்கள் எங்கடா புஸ்ஸு, ஹாய் ஹூய் என்று எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல், ஹாயாக கைபேசியை பார்த்துக்கொண்டும், பெரிய, சிறிய என்று ரகரகமான ear phoneகளில் பாட்டு கேட்டுக்கொண்டும் நின்றிருந்தனர். நிழற்குடையினுள் நின்று இதையெல்லாம் நான் வேடிக்கை பார்த்துக்கொண்டும், நொடிக்கு ஒருமுறை இடப்புறம் திரும்பி பேருந்து வருகிறதா என்று பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் நாளல்லவா! பதட்டம் இருக்காதா என்ன?!

அதுவரை நிழற்குடையினுள் காத்திருந்த நான், பேருந்து வந்ததை பார்த்தவுடன் குடுகுடுவென முதலில் பேருந்தினுள் ஏற விரைந்து சென்றேன், புஸ்ஸ்ஸ் என சத்தத்துடன் பஸ்ஸின் கதவு திறந்தது (நம் ஊர் பேருந்துகளில் கதவை கயிற்றால் கட்டும் வழக்கம் இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!), எனக்கு முன்னரே பேருந்து நிறுத்தத்திற்கு வந்து காத்திருந்த பெண்மணி என்னை முறைக்காத குறையாக ஒரு மாதிரி பார்த்தார்... அப்போதான் சட்டென நினைவுக்கு வந்தது அடடா இது வெளிநாடு ஆச்சே!! இங்கே இப்படி எல்லாம் அடித்து பிடித்து என்ற மாட்டார்களே! என்று எங்கெங்கோ நான் படித்த, கேட்ட விஷயங்களெல்லாம் நினைவுக்கு வந்தது... உடனே பேச்சை மாற்றுவது போல ஏங்க... இந்த பஸ் நியூயார்க் போகுமா? என்று கேட்டு அவரை முன்னே செல்ல விட்டு என் வரிசையில் நான் ஏறினேன். 

பேருந்து நிறுத்தம் என்றாலும், பேருந்து நிலையம் என்றாலும், எத்தனை நபர்கள் இருந்தாலும் இங்கே First Come, First Serve தான். நாம் எந்த வரிசையில் ஒரு இடத்திற்கு செல்கிறோமோ அந்த வரிசையில் நமக்கான இடம் இருக்கும். ஓவுவர் பின் ஒருவராக மிக நீண்ட வரிசை நிற்கும் பெரிய பெரிய பேருந்து நிலையங்களில்! நூறு பேருக்கு மேலெல்லாம் நீண்ட வரிசையில் நிற்பதை தினமும் பார்க்கிறேன் தினமும். சில படங்கள், வீடியோ இங்கே கொடுத்துள்ளேன் காணுங்கள்.
இந்த படத்தை பார்த்துவிட்டு இதுதான் அந்த அழகான பேருந்து நிறுத்தமா என்று கேட்டுவிடாதீர்கள், இது நியூயார்க் பேருந்து நிலையம். நான்காவது மாடியிலிருக்கும் பேருந்து நிலையம். சாலையிலிருந்து flyover ஒன்று பேருந்து நிலையத்தின் கட்டிடத்துக்கு ஒவ்வொரு மாடிக்கு செல்லும். 

Port Authority Bus Terminal - இந்த பேருந்து நிலையத்தில் தான் இந்த வாரம் குண்டு வெடித்தது.
அப்படியாக முதல் நாள் பேருந்தில் ஏறி ஓட்டுனரிடம் எனது பயணசீட்டை கொடுத்துவிட்டு சென்று ஒரு இருக்கையில் அமர்ந்தேன். இங்கே நடத்துனர் என்று தனியாக பேருந்துகளில் கிடையாது. நியூஜெர்சியிலிருந்து நியூயார்க் செல்லும் பேருந்துகளுக்கு ஒரு கதவு தான். ஜன்னல்கள் எந்த பெருந்திலுமே கிடையாது, பெரிய முழுநீள கண்ணாடியுடன் தான் எல்லா பேருந்துகளும் இருக்கும். பேருந்தில் ஏறும்போது எந்த நிறுத்தம் என்று சொல்லிவிட்டு இருக்கையில் அமரவேண்டும், எல்லா இருக்கையும் நிறைந்திருந்தால் அடுத்த பேருந்தில் செல்ல சொல்லி, ஓட்டுனரே Walkie Talkie radioவில் operatorரிடம் சொல்லிவிடுவார். அடுத்த ஐந்து நிமிடத்தில் அடுத்த பேருந்து வரும். சில மாநிலங்களில் இது மாறுபடும். எல்லா மாநிலங்களிலும் இங்கு பேருந்து வசதி கிடையாது. குறிப்பாக லாஸ் எஞ்சலஸ், விர்ஜினியா போன்ற மாநிலங்கள். மற்ற இடங்களில் மணிக்கு ஒருமுறைதான் பேருந்து வசதி உண்டு. சில இடங்களில் அதுவும் கிடையாது.

பேருந்தின் ஒவ்வொரு இருக்கைக்கு புத்தகம் படிக்க light, சின்ன Fan இருக்கும் (நம் தமிழக அரசு UD வண்டி வந்த புதுசில் ஒரு குட்டி tablefan மாதிரி ஒன்றிருந்ததே... அதுபோல கிடையாது, lightடுக்கு பக்கத்தில் ceilingகுடன் சேர்ந்தாற்போல இருக்கும்). மேலும் அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு சீட்டுக்கு STOP என்ற button இருக்கும், அதை அழுத்தினால்  "stop requested" என்று ஓட்டுநர் இருக்கைக்கு மேல் ஒரு digital displayவில் வரும், அதை பார்த்து அடுத்த நிறுத்தத்தில் நிறுத்துவார். உள்ளூருக்குள் இயங்கும் பேருந்துகளில் வழக்கம் போல இரண்டு கதவுகளும், பஸ் பாஸ்களும் உண்டு, பஸ் பாஸ் மொபைல் போன், நம்மூரிலிருக்கும் அட்டை என்று பல விதங்களில் உண்டு.

ஒவ்வொரு பேருந்திலும் Heater, AC இரண்டுமே இருக்கும். பருவநிலைக்கு ஏற்ப ஓட்டுநர் அதை இயக்குவார். பெரும்பாலான ஓட்டுனர்கள் மிக தன்மையாக அனைவரிடமும் நடந்துகொள்வர். ஒருமுறை, ஒரு தாத்தாவை இறக்கிவிட ஓட்டுனரே பஸ்சிலிருந்து இறங்கி கொண்டுவிட்டார். இவ்வளவு கனிவு எல்லாம் நம்ம ஊருல எதிர்பார்க்கவில்லை, காலங்கார்த்தால பீப் போடும் அளவு கொச்சையாக ஓட்டுநர், நடத்துனர் பேசாமல் இருந்தாலே போதும் என்று தான் பல சென்னை வாசிகள் நினைப்பர். அவ்வளவு கனிவாக நடந்துக்கொள்வர் இங்கே.

ஒவ்வொரு பயணியரும் பேருந்தில் ஏறியதும் Good Morning அல்லது how are you doing என்றும் பேருந்திலிருந்து இறங்கும் போது Have a nice day அல்லது have a good one என்றும் சொல்லிவிட்டுத்தான் ஏறுவர், இறங்குவர். ஒவ்வொரு பயணியருக்கும் ஓட்டுனர் சிரித்தமுகத்துடனே பதிலளிப்பார். இதே பாணிதான் காபி கடை, taxi மற்றும் எல்லாஇடங்களிலும். முதலில் greet செய்துவிட்டு தான் அடுத்த பேச்சு!
படம்: Dummys Photography 
பெரும்பாலும் அனைத்து பேருந்துகளும் தனியார் பேருந்துகள்தான். NJ Transit, Lakeland, Coach USA என்று பல lease, sublease என்று அரசாங்க மானியத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள். பேருந்துகள் மட்டுமல்லாது ரயில்களும் தனியார் இயக்கம் தான். NJ Transit Train, Path Train, Bus, ferry (படகு) என்று பல வகையில் நியூ ஜெர்சியிலிருந்து நியூயார்க் செல்ல வசதிகள் உண்டு.  இத்தனை விதமாக இருந்தாலும் கட்டணமெல்லாம் அதிகம் தான், மாதம் பேருந்துக்கே $400 ஆகும்! நியூயார்க்கு பக்கத்திலேயே இருந்து ரயிலில் செல்பவர்களுக்கு $100க்குள் முடிந்துவிடும். 



மாற்று திறனாளிகள் தங்கள் சக்கரவண்டியை பேருந்தினுள் எடுத்து செல்லும் வகையில் கதவை இயக்கும் ஓட்டுநர். 
பெரும்பாலான பேருந்து நிறுத்தத்தில் "park & ride" என்று உண்டு. எல்லோருக்குமே வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் பேருந்து நிறுத்தம் இருக்காது, பெரும்பாலானோர் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு காரில் சென்று, அங்கே காரை நிறுத்திவிட்டு பஸ் பிடித்து வேலைக்கு செல்வர். அப்படி பேருந்தில் செல்பவருக்கான வண்டி நிறுத்தும் இடம் தான் இந்த Park & Ride, இங்கு காலை முதல் மாலை வரை காரை நிறுத்துவிட்டு செல்ல தனியாக கட்டணமெல்லாம் கிடையாது! காலை பொழுதில் நியூயார்க் செல்லும் பேருந்துக்கு என, எதிர்புறம் வண்டி வரும் பக்கத்தில் ஒரு lane பேருந்துக்கு என ஒதுக்கியிருப்பார்கள். காலை பத்து மணி வரை இந்த bus lane இயங்கும்.

அனைத்து பேருந்திலும் மாற்று திறனாளிகள் செல்லும் வகையில் வசதி இருக்கும், சக்கர நாற்காலியில் பயணிப்பவர்கள், அந்த வண்டியுடனே பேருந்தினுள் ஏறும் வகையில் தானியங்கி கதவு தரையை ஒட்டி இறங்கும், சக்கர வண்டி உள்ளே சென்றவுடன் மற்றவர்கள் ஏறும் வகையில் படிகளை மேலே உயர்த்திவிடுவார் ஓட்டுநர். பெரும்பாலான பேருந்தில் முன் பக்கத்தில் மிதிவண்டி எடுத்து செல்லும்படி வசதி இருக்கும், ரயில்களில் பல பேர் மிதிவண்டி எடுத்து செல்வர். luggage எடுத்து செல்பவர் நம்மூர் kpn போன்ற தனியார் வண்டியில் கதவருகே இருக்கும் இடத்தில் luggage வைக்கும் இடம் போலவே இங்கு அனைத்து பேருந்துகளிலும் இருக்கும். பெரும்பாலான பேருந்தினுள் போன் பேசக்கூடாது. நம்மூரில் இப்படி இருந்தால், சம்மந்தமே இல்லாத ஒருவர் தன் ஊர் கதையை சொல்லிக்கொண்டு செல்வதை எல்லாம் கேட்காமலிருக்கலாம்!!! என்ன நடத்துனர் இல்லாமல் இருக்கும் இந்த பேருந்துகளில் தினமும் பயணம் செய்யும் பொது கேட்காமலிருக்கும் ஒரே சத்தம் நமூரில் கேட்கும் போலாம் ரைட்...

அடுத்த அத்தியாயம் விரைவில்...

"நீரும் நானும்" என்ற பிபிசி தமிழ் நடத்திய புகைப்படப் போட்டியில் நான் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று தேர்வாகியுள்ளது"நியூ யார்க்கிலுள்ள வாட்கின்ஸ் க்லென்- ஓசூர் பார்கவ் கேசவன்" என்ற தலைப்பில் இந்த இணைப்பில் http://www.bbc.com/tamil/arts-and-culture-42276359 படத்தை காணவும். நான் எடுத்த மற்ற புகைப்படங்களை காண முகநூலில் என் Dummys Photography என்ற எனது புகைப்பட பக்கத்தை பின்தொடரவும். https://www.facebook.com/dummysphotography/

இந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி!
Blogger Widget