-->

பக்கங்கள்

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம்

--> சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...

--> எச்சரிக்கை: வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியிட்டுள்ளேன், முக்கிய பிழைகள் இருப்பின், கருத்தில் தெரிவிக்கவும், திருத்திக்கொள்கிறேன். நன்றி.


திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை, காலை பத்து மணிமுதல், இரவு பதினொரு மணிவரை, எந்த சேனலுக்கு மாறினாலும் அதில் ஒரு நாடகம் ஓடிக்கொண்டிருக்கும். அந்த நாடகத்தை ஒரே ஒரு நாள்; விளம்பரம் வரும் நேரம் கழித்து அந்த பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் பார்த்துவிட்டால் போதும், வாரத்தில் வேறு எந்த நாளில் அந்த நாடகத்தைப் பார்த்தாலும் அதில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்பது உடனே தெரிந்துவிடும்.

நூற்றில் தொண்ணூற்றெட்டு நாடகம் ஒன்றாக இருக்கும் தம்பதியை எப்படி பிரிப்பது என்று மாமியார் கணக்கு போடுவதும், புதிதாக திருமணமான ஒருவனை எப்படி பிரித்து தான் திருமணம் செய்துக்கொள்வது என்று ஒருத்தியும், ஒன்றாக இருக்கும் குடும்பத்தை எப்படி பிரிப்பது என்று ஒருத்தியும் என்று அனைத்து நாடகத்தின் கதையுமே இதுதான்.

மேலும் அமைதியான ஒரு இசை வந்தாலும், மகிழ்ச்சியான காட்சி வந்தாலும், யாரேனும் ஒரு இடத்தில் சிரித்துவிட்டாலுமே  "ஆஹா... என்னமோ நடக்கபோகுதுடா இப்போ" என்று உடனே நமக்கும் தெரிந்துவிடும். அந்த ஏதோ ஒன்னு மட்டும் சும்மா நடந்துவிடுமா? உட்கார்ந்திருக்கும்  சேரிலிருந்து நாமே கீழே விழுந்துவிடும் வகையில் "தீம் தன னன னன னன னன னன னன தின னன னாஆஆஆ" என்று ஒரு பத்து பேர் கொண்ட பின்னணி chorus, யார் அந்த வில்லியோ (வில்லன் பெண்பால்!) எங்கிருந்தோ நடந்து யாரை அடிக்கவோ திட்டவோ வருகிறாளோ அதுவரையிலும்,  இருக்கும் எல்லா தபலா, மிருதங்கம் என்று அனைத்தையும் ஒரு அடி அடித்து... slowmotionனில் நடந்து வருவதற்குள் ஒரு விளம்பரமே வந்துவிடும்.  சரியாக செவ்வாய், வெள்ளிக்கிழமை அன்று பார்த்து ஒரு இறப்பு காட்சி வந்து "பே எ எ எ ஏஏஏ" என்று சோகமான நாதஸ்வரத்தயும், ஷெனாயையும் வாசித்து நம்மையே முகம் வாட வைத்து வீட்டையே சோகத்தில் ஆழ்த்திவிடுவார்கள், அந்த நேரத்தில் மட்டும் குழம்பு சாதம் சாப்பிட்டு முடித்துவிட்டு ரசம் எடுத்து வர சொன்னால் அந்த "பே எ எ எ ஏஏஏ" உங்களுக்கு தான்!!!

கேமராவில் இந்த slowmotionனை கண்டுபிடித்தாலும் பிடித்தார்கள், கருணாநிதியை பிடித்துக்கொண்ட கருப்புக்கண்ணாடி போல, இந்திய மொழிகளில் நாடகங்கள் எடுப்பவர்கள் இந்த slowmotionனை பிடித்துக்கொண்டுவிட்டனர். திரும்பினா slowmotion, நடந்தா slowmotion சப்பா!!! இந்த லட்சணத்தில் episode-453, episode-890 என்று இரண்டு ஆட்சிகள் மாறினாலும் இவர்கள் எடுக்கும் காட்சிகள் மட்டும் மாறாமல் அப்படியே இருந்துக்கொண்டிருக்கிறது. 

இது இப்படி இருக்க, சினிமா. ஹ்ம்ம்.. அதை பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம். சினிமா பார்ப்பவரை தவறாக சொல்லவில்லை, அதை கிறுக்குத்தனமாக பார்ப்பவரை தான் சாடுகிறேன். அந்த காலத்தில் ஒரு புது சினிமா வெளியாகிறது என்றால், நாளிதழிலும், வார இதழ்களில் அதுபற்றி சில செய்திகள் வந்தாலும், வெளியான அன்று தான் அதைப் பற்றி பேச்சுவரும். நான் சினிமா பார்க்க ஆரமித்த வயதில் விகடனிலும், குமுதத்தில் விமர்சனம் வரும்.
விகடனில் 35, 36 என்றால் தேறாது, 42க்கு மேல் இருந்தால் தான் அது தேறின படம், 45 என்றால் நல்ல படம். 48, 55 அதற்கு மேல் என்றால் அருமையான படம் (கொசுறு: எனக்கு தெரிந்து பாரதி, ஹே ராம், பொற்காலம் மட்டும் தான் விகடனில் ஐம்பதுக்கு மேல் மதிப்பெண் பெற்ற படம்!).

என்ன அம்மா இது என்று புத்தகத்தில் வரும் படத்தைப் பார்த்து, என்னென்ன படம் என்று  அம்மாவை கேட்பேன், ஒரு விமர்சனம் படித்து விட்டு உருப்படியான படம் என்றால் அதற்கு அப்பா அம்மா தங்கை நான் என்று ஒன்றாக செல்வோம். நான் கல்லூரி படிக்கும்போதுதான் எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டி வாங்கினோம் என்பதால், அப்போது ஞாயிற்று கிழமைகளில் சினிமா பார்ப்பது மட்டும் தான் ஒரே பொழுதுபோக்கு. இதுதவிர மாதத்தில் ஒரு முறை முடிவெட்ட நானே தனியாக செல்ல ஆரமித்த வயதில், சலூனில் எனது திருப்பதுக்கு காத்திருக்கும் நேரத்தில் அந்த தினத்தந்தியின் கடைசி பக்கங்கள் தான் அப்போதைய சினிமா ட்ரைலர் பக்கங்கள். சதுரம், சதுரமாக ஒரு பத்து பதினைந்து திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகியிருக்கும். ஏதேனும் பெரிய ஹீரோ படம் என்றால் முதல் பக்கத்தின் கீழ் வலது பக்கத்தில் அந்த போட்டோ வந்திருக்கும். (அப்போது டிவியில் ட்ரைலர் வந்ததா என்று எனக்கு தெரியாது! கேள்விப்பட்டதில்லை. ) 

ஆனால் இப்போதோ...!!! அப்படியே தலைகீழ். Technology வளர்ந்தது யாருக்கு எப்படி உதவுகிறதோ இல்லையோ, இந்த சினிமாகாரர்களுக்கு 'அப்படி' உதவுகிறது. ஒரு படம் எப்போது ஆரமிக்க போகிறது என்று தெரியாத சமயத்திலேயே அது பற்றி பேச்சை கிளப்பி விடுவிவார்கள் - ட்விட்டர், முகநூல் போன்ற வலைதளத்தில் - எப்போதோ ஒரு இரண்டரை மணிநேரம் பார்க்கப்போகும் படத்துக்கு மாதக்கணக்கில் Firstlook, Teaser, Trailer, Second Trailer, பொறி கடையில் சம்பிளிக்கு ரெண்டு பட்டாணி சாப்பிடறா மாதிரி படத்திலிருந்து ஐந்து அல்லது பத்து நிமிட காட்சிகளை  YouTubeஇல் Sneak Peek என்ற பெயரில் வெளியிடுவது என்று, மாதக்கணக்கில் ஒரு படத்தை பற்றி பேசுவது, அதற்காக அடிடுத்க்கொள்வது, பேசிக்கொண்டே இருப்பது, பார்த்த பின்னரும் பிடித்தவன் ஆஹா ஓஹோ என்று நாள் கணக்கில் பேசிக்கொண்டே போவது, பிடிக்காதவன் அதுபற்றி பேசுவது என்று இப்படியே ஒரு சுழற்சியில் போய்க்கொண்டே இருக்கும்.

ஆனால் இங்கோ, இவர்கள் தயாரிக்கும் தொலைக்காட்சி நாடகமே நம் இந்திய சினிமாவில் ஆஹா ஓஹோ என்று சொல்லக்கூடிய திரைப்படத்தை விட அனைத்து விதத்திலும் பிரமாதமாக இருக்கும். இந்த தொலைக்காட்சி தொடர்கள் நம் நாட்டு தொடர்களைப்போல வாரத்தில் "அனைத்து நாட்களும்" என்று ஆண்டு முழுக்க தொடர்ந்து ஐந்து, பத்து ஆண்டுகள் என  செல்லாது. நம் நாட்டில் வெளிவரும் தொடர்களை Serial என்போம், இங்கே Series என்பார்கள், காரணம் ஒரு தொடர் பெரும்பாலும் 12-22 episode வரை கொண்டிருக்கும், ஒரு ஆண்டுக்கு ஒரு Season வெளிவரும், ஒரு சீசனுக்கு 12-22 episode வெளிவரும், அவ்வளவு தான். மீண்டும் அந்த தொடர் அடுத்த ஆண்டு தான் வெளிவரும். இது HBO, CBS, AMC, ABC  என்று பல டிவி சேனல்கள் உள்ளன. ஒவ்வொரு சேனலிலும் மிக அருமை என்று பாராட்டும் விதமான தொடர்கள் எண்ணில் அடங்காது. குறிப்பாக சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால் Dr. House MD, Game of Thrones, Ballers, Breaking Bad, Better Call Saul, Big Bang Theory, Prison Break, F.R.I.E.N.D.S என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவைகளுக்கு நிகராக ஒரே ஒரு தொலைக்காட்சி தொடர் கூட இந்தியாவில் உண்டு என்று சொல்லமுடியாது. (நிச்சயமாக!)

இது தவிர Netflix, HULU, Amazon Prime என்று தொலைக்காட்சி நிறுவனத்துக்கு போட்டியாக பல இணைய நிறுவனங்கள் உள்ளன. இவைகள் தாமே நாடகங்கள், சினிமா, documentary என்று அனைத்தையும் தயாரிப்பவர்கள். ஒவ்வொரு தொடர்களும் பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களுடைய படைப்புகளையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு பிரமாதமாக தயாரிக்கப்பட்டிருக்கும், எடுத்துக்காட்டாக House of Cards, Stranger Things, Ozark என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு தரமாக, இசையிலும் ஒளிப்பதிவில் சினிமாவை ஒதுக்கும் அளவுக்கு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தொடர், சிறந்த நடிகர் நடிகை என்று அனைத்துக்கும் Emmy Awards வழங்கப்படும். சினிமாவுக்கு Oscar விருது போல தொலைக்காட்சி தொடர்களுக்கு Emmy Awards மிகப்பெரிய பெருமைக்குரிய விருது. 


இது இப்படி இருக்க, சினிமா. ஹ்ம்ம்... நம் ஊரில் தான் ஒரு படம் வெளியாகிறது என்றால் முட்டாள் தனமாக விடியற்காலையே திரையரங்குக்கு (முட்டாள்கள் வருவார்கள் என்று தெரிந்து ஐந்து மணி காட்சியெல்லாம் இருக்கும்!) சென்று நூறு ரூபாய் சீட்டை ஐநூறு, ஆயிரம் என்று வாங்கி, பால் பாக்கெட்டு, ஊதுபத்தி என்று அனைத்து கிறுக்கு தனத்தையும் செய்துவிட்டு அதை பெருமையாக வேறு நினைப்பார்கள். ஒன்னும் இல்லாத ஒண்ணரை அனா படத்துக்கே இந்த ஆட்டம்.

ஆனால் இங்கோ, மிக பிரமாண்டமாக உலகமே வியந்து பார்த்த Jurrasic Park போன்ற படமாக இருந்தாலும் சரி, அதிவேக காட்சிகள் நிறைந்த action திரைப்படங்களாக இருந்தாலும் சரி, உச்ச நடிகர்கள் நடித்த படமாக இருந்தாலும் சேரி, படம் திரைக்கு வந்த முதல் நாள் சென்றாலே பாதி திரையரங்கு தான் நிறைந்திருக்கும். சீட்டு வாங்க மிஞ்சிப்போனால் ஒரு பத்து பேர் தான் வரிசையில் இருப்பார்கள். Internet booking எல்லாம் எங்கே பெருசாக கிடையாது, ஏனென்றால் எங்கள் ஓசூர் போல தான் அமெரிக்கா, பெரும்பாலான தியேட்டரில் சீட் நம்பர் எல்லாம் கிடையாது. அப்படியே வந்து சீட்டு வாங்கிக்கொண்டு எங்கே வேண்டுமானாலும் உட்கார்ந்து பார்க்கலாம். திரையரங்கிலேயே தனி ஒருவனாக இரண்டு மூன்று படம் பார்த்திருக்கிறேன். (நானா ஒன்னும் தனியா போகல, யாரும் வரலீங்க!!! இத்தனைக்கும் ஒரு பிரபலமான படம், வெளிவந்து ஒரு வாரத்தில் சென்றேன்!) அப்படியாக உலகையே பிரமித்து பார்க்க வைக்கும் படங்களை தயாரிக்கும் இந்நாட்டில் சினிமாவை எல்லாம் மக்கள் பெரும் பொருட்டாக மதிப்பதே கிடையாது!

நம் நாட்டில் "ச்சூ போ" என்று துரத்தினாலும்.. அட இதோ நினைவுக்கு வருகிறதே!!! நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் வெளிவந்த "வேட்டையாடு விளையாடு" படத்தை பார்க்க கல்லூரி விடுதியிலிருந்து சென்ற என் நண்பர்கள் சென்னை சத்யம் சினிமாஸ் தியேட்டரில் காலை ஐந்து மணிக்கெல்லாம் சென்று சீட்டு வாங்க வரிசையில் நின்றிருக்க, தியேட்டர் கேட்டை திறந்தவுடன் உள்ளே தப தபவென ஓடியபோது, ஒழுங்காக செல்ல சொல்லி காவலர்கள் (திரையரங்குக்கு பாதுகாப்பு குடுக்கறதுதான் போலீசுக்கு முக்கிய வேலையாச்சே!) என் நண்பர்கள் உட்பட பலருக்கு தடியடி கொடுத்துள்ளனர். அப்படி அடி வாங்கிவிட்டு படம் பார்த்துவிட்டு வந்தான் என் விடுதி நண்பன். அப்படியாக "ச்சூ போ" என்று துரத்தினாலும் நம் நாட்டில் கூட்டம் கூட்டமாக சென்று படம் பார்ப்பார்கள்.

ஆனால் இங்கே எப்படி எல்லாம் மக்களை திரையரங்குக்கு வர வைக்கலாம் என்று முழி பிதுங்கிக் கொண்டிருக்கின்றனர்! எனக்கு இருக்கும் கோபமெல்லாம் இப்படி விரும்பி படம் பார்க்க வரும் மக்களுக்கு குறைந்தபட்ச நல்ல படமாவது இவர்கள் தயாரிக்க வேண்டும் என்பது தான். முக்கியமாக தொலைக்காட்சி, எது, என்ன எடுத்தாலும் பார்ப்பார்கள் என்று மக்களை குறைவாக நினைத்துக்கொண்டு சகட்டு மேனிக்கு கேவலமாக நாடகம் எடுக்கும் வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் இந்திய தொலைக்காட்சி தொடர்களை தயாரிப்பவர்கள். ஆனால் இது கூடிய விரைவில் (குறைந்தது ஐந்து ஆண்டுகள்) மாறும் என்று நம்புகிறேன், ஏனென்றால் இங்கே உள்ள Netflix, Amazon Prime போன்றவை நம் நாட்டில் காலூன்ற ஆரமித்துவிட்டனர். ஏற்கனவே ஹிந்தியில் சில Netflix seriesசும், Amazon Primeஇல் தமிழ், ஹிந்தி என்று வர ஆரமித்துவிட்டது. இது தொடர்ந்து வளரும் பட்சத்தில், வழக்கமான தொலைக்காட்சி தொடர்கள் அழிந்து போகும். (போக வேண்டும்!) 

நம் நாட்டில் சினிமா டிக்கெட் போக இடைவேளையில் பாப்கார்ன், கூல் ட்ரிங்க்ஸ் என்று அதுக்கு ஒரு இருநூறு ரூபாயாவது குறைந்த பட்சம் கறந்து விடுவார்கள், அதே தியேட்டருக்கு எதிர் கடையில் விற்கும் 20 ரூபாய் cool drinksஸை எழுபது ரூபாய் என்று விற்பார்கள், "திருடர்கள்"! ஆனால் இந்நாட்டில் படத்துக்கு நடுவில் இடைவேளையெல்லாம் கிடையாது. படம் ஆரமிப்பதற்கு முன்பே பாப்கார்ன், கூல் ட்ரிங்க்ஸ் என்று வாங்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். வாகன நிறுத்தத்துக்கு காசெல்லாம் குடுக்க தேவை இல்லை. ஆமாம், மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்த்தால் தான் படமே ஓடும், இதில் அந்த தியேட்டருக்கு மக்கள் வரவேண்டியதற்கு தேவையானதை தியேட்டர்காரன் தான் செய்து கொடுக்க வேண்டும். அப்படி இருக்க பணம் கொடுத்து படம் பார்க்க வருவர் எதற்கு வண்டியை நிறுத்துவதற்கு பணம் கொடுக்க வேண்டும்? ஹ்ம்ம்.. இது பற்றி அரசு அலுவலர்கள் பற்றிய தலைப்பில் விரிவாக எழுதுகிறேன்.

புலியைப் பார்த்து பூனை கோடுபோட்டுக் கொள்வதைப்போல Hollywoodஐ (இதில் நகைச்சுவை என்ன வென்றால், ஹாலிவுட் என்பது ஒரு ஊரின் பெயர்!) பார்த்து கோலிவுட் (தமிழ்), பாலிவுட் (ஹிந்தி), டோலிவுட் (தெலுகு), mollywood (malayalam), sandalwood (கன்னடம்) என்று பெயரை வைத்துக்கொண்டால் மட்டும் போதாது, அதற்கேட்டாற்போல தரத்தை மக்களுக்கு கொடுக்கவேண்டும்!
என்ன "God Father" இப்படி பண்றானுங்க இவனுங்க!
அடுத்த அத்தியாயம் விரைவில்...
---
சில அத்தியாயங்களில் பகிர்ந்துக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும் படிப்பவர்கள் சலித்துவிடக் விடக்கூடாது என்று எழுத ஆர்வமிருந்தால் குறைத்துக்கொள்வேன், அப்படி விடப்பட்ட விஷயங்களை ஒளியும் ஒலியுமாக நானே பேசலாம் என்று முடிவு செய்து அதற்கான வெள்ளோட்டமாக இரண்டு காணொளிகளை நமது கருத்துக்களம் YouTube சேனலில் வெளியிட்டுள்ளேன். எனது எழுத்துக்களை காணொளியாக பார்க்க விரும்பினால், எனது சேனலுக்கு Subscribe செய்யவும். இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், தங்கள் கருத்தை இங்கே தெரிவிக்கவும். நன்றி. 

கருத்துக்களம் Youtube சேனல் - https://bit.ly/karutthukkalam


புதன், 8 ஆகஸ்ட், 2018

எனக்குப் பிடித்த சினிமா நடிகராகவே இருந்திருக்கலாம் தலைவா நீ!


எவ்வளவு வருத்தமாக இருக்கு உன்னை இப்படிப் பார்க்க!

பள்ளிக்கூடத்தில் என் சக நண்பர்கள் விஜய், அஜித் என்று பிடித்த ஹீரோக்கள் பெயரை சொன்னபோதெல்லாம் நான் மட்டும் டேய் என் தலைவர் விஜயகாந்த் டா என்று சொல்லும்போது அவ்வளவு கெத்தாக இருக்கும்!

சில நடிகர்கள் "பேசக்கூட தெரியாத, துப்பில்லாத" வெறும் காசுக்காகவும், அரசியல் பேராசைக்காகவும் மட்டுமே ரசிகர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் இன்றைய நிலையை பார்த்தால், இப்படியொரு ரசிகர் கூட்டம் உனக்கு சேர்வதற்கு முன்னாலேயே எந்த அரசியல் பேராசையும் இல்லாத காலத்தில் உன் சொந்த செலவில் மக்களுக்கு நீ செய்த உதவிகள் பற்றிய நினைவுகள் தான் வந்துபோகிறது.

இன்று சமூக வலைதளத்தில் பிற கட்சிகளால் நடத்தப்பட்டும், ஒரு கேலிக்கு (மீம்) இவ்வளவு ரூபாய் என்று பணம் வாங்கிக்கொண்டு கிண்டல் செய்பவர்களுக்கு மக்களுக்கு நீ வாரி கொடுத்த நன்கொடைகளும், உதவிகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! பாய்ஸ் படத்தில் சுஜாதா வரிகளில் உன் அன்னதானத்தை பற்றி சொல்லும்போது ஒரு புன்னகை வந்ததே, அதுதான் என் தலைவன்!

எத்தனையோ நடிகர்கள் அரசியல் ஆசையோடு தனிக் கட்சி தொடங்கி, சிலர் பிற கட்சிகளில் சேர்ந்தும், இன்னும் சிலர் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று இருபது வருடங்களுக்கு மேல் பூப்போட்டு பார்த்துக்கொண்டும், கேவலமான டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டு தானும் ஒரு கட்சித் தலைவர் என்று சொல்லிக்கொண்டும், இன்னும் சிலர் சின்னப்பிள்ளைகளை கூட்டி வைத்துக்கொண்டு முதல்வர் கனவில் சுற்றித்திரியும் நேரத்தில், எந்த ஒரு பயமுமில்லாமல் தனியாக, தைரியமாக, துணிவாக அரசியல்களம் கண்ட நீ தான் உண்மையில் ஆளப்பிறந்தவன்!




உனது திருமணத்தை தலைமை தாங்கி நடத்திவைத்த உன் தலைவன் கருணாநிதியே உனது திருமண மண்டபத்தை இடித்துத்தள்ளியும், உனது கட்சியை பிளவுபடுத்திய ஜெயலலிதாவும் இன்று இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் இருந்த காலத்திலேயே அவர்களை நேரடியாக எதிர்த்து துணிவுடன் அரசியல் செய்தாயே, அதுதான் என் தலைவன்!



என்னைப்போன்ற உனது பல லட்ச ரசிகர்கள், நீ மரியாதை கொண்ட நபர் இன்று இறந்துவிட்டார் என்று நீ அழுத உன் அழுகையைக் கண்டு உனக்காக கண்ணீர் விட்டனரே, அந்த அன்பை வென்ற உண்மையான தலைவன் தான் நீ!

அந்த தெளிவான பேச்சு, புன்முறுவல் முன்போல இனி இல்லை எனும்போது மிகுந்த வருத்தம் தான் மிஞ்சிகிறது! மயிலை மாங்கொல்லையில் தூரத்திலிருந்து உன்னைக் கண்டிருந்தாலும், ஒருமுறை உன்னை நேரில் பார்த்துப் பேச ஆசையாக உள்ளது!

உன் உடல்நலக்குறைவு எதுவாகினும் அதை தாங்கும் தைரியம் கடவுள் உனக்கு கொடுக்க வேண்டுகிறேன்!

என்றும் எனக்குப் பிடித்த சினிமா நடிகராகவே இருந்திருக்கலாம் தலைவா நீ