-->

பக்கங்கள்

சனி, 25 ஜூன், 2016

சொர்கமே என்றாலும்...

 அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று நியூ ஜெர்சி. அதிலும் குறிப்பாக 'எடிசன்' என்ற ஊர் கிட்டத்தட்ட நம் தஞ்சாவூர் போலத்தான் இருக்கும். ஊருக்குள் நுழையும் முன் சாலையின் இருமருங்கிலும் வயல்வெளிகள், எங்கும் பச்சை மரங்கள், செடிகள், குறுக்கே ரயில் தண்டவாளம்  இதைக் கடந்துவந்தபின் வீடுகள்.

இங்கு இந்தியர்கள் அதிக அளவில் வசிப்பதனால், எங்கு சென்றாலும் நம் நாட்டில், நம்மூரில் இருப்பது போன்ற உணர்வு, நம் மக்களை பார்க்கும்போது ஏற்படும். குறிப்பாக, காலையில் எடிசன் ரயில் நிலையத்திலிருந்து நியூ யார்கிற்கு வேலைக்கு செல்லும் ரயிலில், பாதிக்கும் மேல் நம் மக்கள் தான் இருப்பார்கள். இந்த ரயிலை 'Desi Express' என்பார்கள். சென்னை Beach ஸ்டேஷனிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில் போல மக்கள் கூட்டம் இருக்கும்.

என்ன ஒரு வித்யாசம், ரயில் இருக்கை குஷனுடனும் மற்றும் திறக்கமுடியாத கண்ணாடி ஜன்னல், ஏசி, கழிப்பறை வசதி, மிதிவண்டி எடுத்துச்செல்ல ஒவ்வொரு பெட்டியிலும் இடம், ஜன்னலோரம் உட்காருபவர்களுக்கு hand rest, என வசதிகள் கூடியிருக்கும். வேறு சில இடங்களிலிருந்து (Stamford) நியூ யார்க் வந்து செல்லும் தினசரி ரயிலில் ஒவ்வொரு இருக்கைக்கு charger வசதி இருக்கும்,

பயணசீட்டு பல வழிகளில் வாங்கலாம்,  Ticket counter, Ticket vending machine, Mobile application இவை எதுவுமே முடியவில்லை என்று அவசரமாக ரயில் ஏறிவிட்டால், டிக்கெட் பரிசோதகரிடம் வாங்கிக் கொள்ளலாம், என்ன... வழக்கமான விலையை விட கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். 98% தினமும் ஒவ்வொரு ரயிலிலும் டிக்கெட் பரிசோதகர் இருப்பார்கள். டிக்கெட் பரிசோதகர் வரவில்லை என்றால், அன்று வாங்கிய டிக்கெட் ஒரு வருடம் வரை செல்லுபடியாகும்.

பொதுவாகவே ரயிலின் முதல் பெட்டி மற்றும் கடைசிப்  பெட்டி அமைதிப்பெட்டிகள் (Silent Car) எனப்படும். இந்த பெட்டிகளில் பெரும்பாலும் புத்தகம் படிப்பவர்கள், அமைதியை விரும்புபவர்கள், உறங்க நினைப்பவர்கள் தான் பயணிப்பார்கள். தெரியாத்தனமாக இந்த பெட்டியில் நாம் ஏறிவிட்டால்..., ஏறிவிட்டால் ஒரு பிரச்சனையும் கிடையாது, அனைத்துப் பெட்டிகளிலும் பயணசீட்டின் விலை ஒன்று தான், ஆனால், இந்த அமைதிப் பெட்டியில் ஏறிவிட்டால், நம்மால் பேசாமல், வாய் திறக்காமல் சிறையில் அடைத்தாற்போல் ஆகிவிடும். ஏனென்றால், இந்தப் பெட்டியில், கைபேசியில் சத்தமாக பேசக்கூடாது, சத்தமாகப் பாட்டு கேட்கக் கூடாது!

நியூ ஜெர்சியில் எந்தப் பகுதியில் தங்கியிருந்தாலும் காரில் சென்றால் ஒரு மணி நேர தூரத்தில் சென்றடையும்படி மூன்று கோவில்கள் உள்ளன. வெங்கடாசலபதி, ரங்கநாதர், குருவாயூரப்பன் கோவில்கள் மிக பிரபலம். பல நேரங்களில் மக்கள் மத்தியில் இருக்கும்போது பெங்களூரில் இருப்பது போல இருக்கும், ஏனென்றால் எல்லா இடங்களிலும் அனைத்து மொழி பேசும் மக்களும் கலந்திருப்பார்கள். தமிழ், தெலுங்கு, குஜராத்தி, ஹிந்தி, மலையாளம், மராட்டி, கன்னடம் பெரும்பாலும் மக்கள் பேச நான் கேட்ட மொழிகள்.

நான் வசிக்கும் பார்சிப்பணியிலிருந்து நியூ யார்க் செல்ல பேருந்தில் தான் செல்ல வேண்டும். அதே விதமான மக்கள் கூட்டம் பேருந்திலும் அதற்கேற்ப இருக்கும். பல நாட்கள், என்னுடன் பயணிக்கும் வயதில் மூத்தவர்கள் பெங்காலி செய்தித்தாள் அல்லது புத்தகம் வாசித்துப் பார்த்திருக்கிறேன். தமிழ் புத்தகம் நான் படித்த போது அதைப்பார்த்து நம்மவர்கள் பேசியதும் உண்டு.

பெரும்பாலான இடங்களில் இந்திய உணவகங்கள் உண்டு. ஒரு சில பகுதிகளில் மிக அதிகமாகவே உண்டு. journal square வீதியின் இரு புறமும் இந்திய உணவகங்கள் தான், குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாட்டு உணவகங்கள் தான்!அடுத்தபடியாக அதிகமாக இந்திய உணவகங்கள் இருக்கும் இடம் எடிசன். இங்கு "அம்மா உணவகமே" இருக்கு என்றால் பாருங்களேன்! ஆம், Amma's Kitchen என்ற பெயரில், முதல்வர் ஜெயலலிதாவின் படம் போட்டுதான் கடை வைத்தொருக்கிறார்கள். மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு விலை கணிசம் தான், சுவையும் மற்ற இடங்களைக்காட்டிலும் நன்றாக இருப்பதாக இங்கு சென்றவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதே எடிசனில்  மல்லிகைப் பூ, பூஜை சாமான்களான சமித், வறட்டி, கோமியம் என்று நம்மூரில் கிடைக்கும் அனைத்துமே இங்கு கிடைக்கும். இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்!

என்ன தான் அனைத்து திரைப்படங்களும் வெளியானாலும், எத்தனை தான் கடைகளும், உணவகங்களும், கோவில்களும், நம் மக்களும் இருந்தாலும் இது நம் நாடு கிடையாது என்ற உணர்வு எப்பொழுதும் இருந்துக்கொண்டே இருக்கும்! ஹ்ம்ம் அமெரிக்க என்ன.., அந்த சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா?!