-->

திங்கள், 23 அக்டோபர், 2017

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 3.0 | வாடகை எவ்வளவு?

பரீட்சை நேரத்தின் முடிவில் நமக்கு தெரிந்த கேள்வியை கவனித்து, அரக்க பறக்க பதில் எழுதுவது போல, சென்ற வாரம் சட்டென்று கட்டுரையை முடிக்க வேண்டியதாகிவிட்டது. இலையுதிர் காலமென்பதால் இலைகளின் நிறமாற்றத்தை கண்டு ரசிக்க என் மனைவியுடன் வெளியூர் செல்ல வேண்டியிருந்தமையால் சட்டென்று முடித்துவிட்டு பட்டென்று கிளம்பிவிட்டேன்!

சென்ற வார தொடர்ச்சி...

நம்மூரில் கொடுப்பதுபோல நூறு யூனிட்டுக்கு கரண்ட் இலவசமெல்லாம் கிடையாது. இது இவ்வளவு பெரிய தலைப்பாக போகும் என்று நினைக்கவில்லை, வீட்டிற்கு சம்பந்தமான மற்ற பல விஷயங்களை தொடர்கிறேன்...


எண்ணெய் மற்றும் மின்சார தீப ஒளியில் எங்கள் வீடு பால்கனி. படம்: Dummy's Photography

அத்தியாயம் 3.0

ஒவ்வொரு வீட்டிலும் heater, AC இருக்கும் என்று உங்களுக்கு இப்போது தெரியும் தானே, இதை கேளுங்கள்... ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் குழாயில்; சமயலறை மற்றும் குளியலறையில் இருக்கும் குழாய்களில் குளிர் தண்ணீர் மற்றும் சுடு தண்ணீர் இரண்டுமே வரும்! நம்மூர் போல தனி குழாய்கள் அன்றி ஒரே குழாயில், குழாயின் தலையை வலது பக்கம் சாய்த்தால் குளிர் நீரும், இடது பக்கம் சாய்த்தால் வெந்நீரும் வரும்! இதற்கு நாம் ஏதும் switch எல்லாம் போடவேண்டியது இல்லை, 24/7, ஆண்டு முழுக்க  எப்போதுமே இப்படி தண்ணீர் வரும்.

வீடுகளில் தண்ணீருக்கு மோட்டார் போடுவது, மோட்டார் ஓடும் சத்தம் இது எல்லாம் மூன்று ஆண்டுகளாக கேட்டதே இல்லை இங்கே. மொட்டை மாடியில் கருப்பு மற்றும் நீல நிற Synthetic தண்ணீர் தொட்டி, sump எல்லாம் கிடையாது. "என்னது அந்த வீட்டுல 300 அடியில தண்ணி வந்துடுச்சா போடு 350 அடிக்கு borewell என்று போட்டி போட்டுக் கொண்டு வீட்டுக்கு தனியாக borewell எல்லாம் போடமுடியாது. borewell லாரியெல்லாம் நம்ம ஊரு மாதிரி இங்கே கிடையவும் கிடையாது, ஒவ்வொரு வீடு கட்டும்போதே போடப்பட்ட குழாய்களுக்கு ஒரு மைய்யப் பகுதியிலிருந்து தண்ணீர் வரும். அதற்கு மாதாந்திரம் current bill கட்டுவதுபோல நம் உபயோகத்துக்கு ஏற்றார் போல கட்டணம் செலுத்தவேண்டும்.  இத்தனை  Gallonக்கு இவ்வளவு டாலர் என்ற கணக்கு. நான் apartment வீட்டில் குடியிருப்பதால் அது எவ்வளவு வரும் என்று எனக்கு தெரியாது. குறைந்த பட்சம் எவ்வளவு தான் தண்ணீர் கட்டணம் வரும் என்பதை Atlantaவில் வசிக்கும் என் நண்பன் இஜாஸ் அகமதிடம் தான் கேட்கவேண்டும்.

அதே போல, குளியலறையில் நம்மூரில் இருப்பது போல வாளி, Mug எல்லாம் கிடையாது, சோப்பு விளம்பரத்தில் வரும் bathtub தான். அந்த bathtubஇல் நின்றுகொண்டே குளிக்கவேண்டும். இதற்கு தடுப்பாக ஒரு மெல்லிய screen துணி மற்றும் அடர்த்தியான coverஇல் வரும், இது மலிவு விலையிலிருந்து விலையுயர்ந்த ராகம் வரை கிடைக்கும். தனி வீடுகள் மற்றும் சில விலையுர்ந்த அபார்ட்மென்ட்டுகளில் கண்ணாடியாலான தடுப்பு கதவு இருக்கும். இது இந்த bathtubபுக்கு மட்டும். குளியலறையில் தரையை நம்மூரில் அலம்புவதுபோல தண்ணீர் ஊற்றி கழுவிவிட முடியாது, தண்ணீர் வெளியே செல்ல துவாரமெல்லாம் கிடையாது. மாப்பு வைத்து துடைத்துக்கொள்ள வேண்டியதுதான். (இதை முயாதலில் சொல்லமறந்து, அதை நினைவு கூர்ந்த நண்பர் கலிபோர்னியை விசுAwesome அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்!)

அதே போல அதுக்கு paper தான். tissue paper இங்கே மிக தரமாக கிடைக்கும். பெரிய பெரிய bundleஆக Costco, Walmart போன்ற கடைகளில் கிடைக்கும். நம் மக்கள் வீட்டில் கண்டிப்பாக Mug இருக்கும்! தண்ணீர் வராத நாட்கள் இருந்ததில்லை. ஒரே ஒரு நாள் தெருவில் ஏதோ pipe உடைந்ததன் காரணமாக ஒரு இரண்டு மணிநேரம் தண்ணீர் வரவில்லை, அவ்வளவுதான். 


வீட்டில் எக்கச்சக்க Plug point இருக்கும். தரையை ஒட்டி, சுவரின் நடுவே என்று நமக்கு எப்படி எல்லாம் தேவை படுமோ, அங்கெல்லாம் plug point வைத்திருப்பார்கள். இது என்ன பெரிய ஆச்சர்யம் என்று நீங்கள் கேட்கலாம், இல்லையா பின்ன? நாம் சொந்த வீடு நம் கைக்காசு போட்டுக் கட்டும்போதே இங்கெங்கெலாம் plug point வேண்டும் என்று சொன்னால், electrician என்னமோ அவர் கைக்காசில் கட்ட சொன்னதுபோல ஆயிரம் சாக்கு போக்கு சொல்வார். அப்படியெல்லாம் இல்லாமல் குடியிருப்பு வீட்டுக்கு எத்தனையோ ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட வீட்டிலேயே பின்னாட்களை கணக்கிட்டு கட்டியிருக்கும் போக்கு நிச்சயம் பிரமிக்க வைக்கும். அட, பால்கனியில் கூட plug point வெச்சிருக்காங்கன்னா பாத்துகோங்களேன்!



அதேபோல இங்கு நம்மூர் plug வேலை செய்யாது, வேலை செய்யாது என்பதை விட, நம் நாட்டு plug உருண்டையாக இருக்கும், இங்கு சப்பையாக இருக்கும்! ஒவ்வொரு plugகுக்கும் switch எல்லாம் கிடையாது, அப்படியே உபயோகப் படுத்த வேண்டியதுதான். குழந்தை இருக்கும் வீடு என்றாலும் பிஞ்சு விறல் நுழைந்துவிடுமோ என்ற அச்சம் தேவை இருக்காது, நகம் இருக்கும் மெல்லிய அளவிலேயே plug point இருக்கும். அட... இது நம் நாட்டில் இருந்திருந்தால் இதில் விரலை விட்டால் என்ன ஆகும் என்று நான் மூணாவது படிக்கும்போது plug pointஇல் விரலை விட்டு கிறுகிறுத்து போன அனுபவம் இல்லாமல் போயிருக்கும்! நம் நாட்டிலிருந்து இங்கே கொண்டு வரும் மொபைல் charger உபயோகிக்கவேண்டும் என்றால் அதற்கு international adapter தேவைப்படும். சரி, இவ்வளவு சொல்லியாச்சு இன்னும் வாடகை எவ்வளவுன்னு சொல்லலையேப்பா என்றுதானே நினைக்கிறீர்கள், அடுத்து அது தான்...

வீட்டு வாடகை பல விதமாக மாறுபடும், தனி வீடு என்றால் மாநிலங்களை பொறுத்து விலை அள்ளும்!!! அமெரிக்காவின்மையத்தில் இருக்கும் texas, atlanta, richmond, ohio போன்ற இடங்களில் தனி வீடே எழுநூறு முதல் ஆயிரம் டாலருக்குள் கிடைத்துவிடும். இதை townhouse என்பார்கள். மேலும் இந்த ஊர்களில் அபார்ட்மெண்ட் வீடுகளும் எழுநூற்று ஐம்பது டாலர்களிலெல்லாம் கிடைத்துவிடும். ஆனால் நியூ ஜெர்சி, கலிபோர்னியா போன்ற கிழக்கு மற்றும் மேற்கு துருவங்களில் ஆரம்ப வாடகையே  ஆயிரத்துநூறு டாலர். இதெல்லாம் ஒரு படுக்கையறை  கொண்ட மற்றும் குறைந்த பட்ச வீட்டு வாடகை. இதுவே 2BHK வீடு என்றால் ஆயிரத்து ஐநூறு டாலர் முதல் ஆரம்பமாகும்.வீட்டு வாடகை Online மூலமாக, அல்லது bank check மூலமாக தான் செலுத்த வேண்டியிருக்கும். நம்ம ஊர் போல house owner வீட்டுக்கு மாத ஆரம்பத்தில் சென்று குடுக்க எல்லாம் தேவை இல்லை. 

apartment வீடு என்றால் மட்டும் தான் அருகருகே வீடு இருக்கும், தனி வீடு சில மாநிலங்களில் பக்கம் பக்கமாக இருக்கும், இதுவே சொந்த வீடு என்றால் "சில மாநிலங்களில், பெரும்பாலான இடங்களில்" நாம் கத்தினாலும், கூப்பாடு போட்டாலும் கேட்க ஆளில்லாத தூரத்தில் தான் அடுத்த வீடு இருக்கும். அப்படியே ஆங்கில சினிமாவில் நாம் பார்ப்பதுபோல தான் மரங்கள், காடுகளுக்கு நடுவே பெரிய பெரிய வீடுகள் இருக்கும். எப்படித்தான் இங்கே இவ்வளவு தனியாக இருக்கிறார்கள் என்று தான் ஒவ்வொரு முறையும் நமக்கு தோணும் அந்த வீடுகளை பார்க்கும்போது.

சரி வணக்கம் சொல்லும் முன் இந்த வாடகை நம்ம ஊர் விலையில் எவ்வளவு என்று பார்ப்போமா... நம் மக்கள் தங்கியிருக்கும் வீட்டு வாடகை குறைந்த பட்சம் மாதம் நம்மூர் விலைமதிப்பில் 48,750 ரூபாய் ($750) முதல் 1,23,500 ரூபாய் ($1900) வரை. அம்மாடியோவ்!!!


அடுத்த அத்தியாயம் இந்தவாரம் வெள்ளிக்கிழமை வெளிவரும்... (கண்டிப்பா வருங்க!)
Blogger Widget

8 கருத்துகள்:

  1. குளிக்கும் இடத்தில இருந்து தண்ணீர் சிதறாமல் இருக்க வெறும் கண்ணாடியினால் ஆனா தடுப்பே. இந்நாட்டு மக்களுக்கே கவலையே இல்லை. இந்திய இல்லங்களில் நம் ஆட்கள் அதற்கு ஏதவது ஒரு துணியையோ அல்ல IKEA வில் இருந்து அவசரம் அவசரமாய் வாங்கி வந்த ஸ்க்ரீன் ஏதாவது போட்டு இருப்பார்கள்.

    இதை சொல்லாமல் விட்டுடீங்களே

    மற்றும் கலிபோர்னியாவில் வாடகை அதிகம் என்று எங்கள் சோகத்தை வெளிஉலகிற்கு எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி விசு அவர்களே. நான் மறந்து தாங்கள் நினைவுகூர்ந்த விஷயத்தை இணைத்துள்ளேன் :)
    இங்கேயும் அந்த சோக கதை உண்டு என்பதால் உங்கள் ஊரை சேர்த்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை :)

    பதிலளிநீக்கு
  3. Rent is not that much costly as the minimum rent mentioned is far less than the one in Doha

    But the aprtments in Doha are serviced and with water ( for that )

    பதிலளிநீக்கு
  4. தோஹாவில் குறைந்தபட்ச வாடகை மிகவும் அதிகம் என்னும் செய்தி நான் புதிதாக தெரிந்துகொண்ட விஷயம் :)
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி :)

    பதிலளிநீக்கு
  5. தங்கள் அடுத்த பதிவு எதை பற்றியது?

    பதிலளிநீக்கு
  6. @வேதாத்திரி - எழுதத் தொடங்கும் வரை எனக்கே தெரியாது!

    பதிலளிநீக்கு