-->

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

மூன்று பேர், மூன்று எதிர்பார்ப்புகள்...

சில மாதங்களுக்கு முன், பெங்களூர் விமான நிலையத்தில், நள்ளிரவு இரண்டு மணி வாக்கில் என் பைகளை Check-in செய்துவிட்டு, தானியங்கி படிகளில் ஏறி நடந்துக் கொண்டிருந்தேன். எனது Boarding pass இல் இருந்த வாயில் எண்ணைத் தேடி நடந்துக் கொண்டிருக்கும்போது எனக்கு முன் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் நடந்துக்கொண்டிருந்தார். அவர் அருகில் நான் சென்றபோது ஒரு விமான நிலைய ஊழியரிடம் பேசிவிட்டு நடக்க தொடங்கியிருந்தார். அவரைப் பார்த்து ஒரு புன்முறுவல் புரிந்தேன், நீங்களும் தமிழா? என்று கேட்டு அவரிடம் பேசத் தொடங்கினேன், ஆம் என்று கூறிய அவர், அந்த ஊழியர் அவரிடம், battery car உதவிக்கு வேண்டுமா என்று விசாரித்ததாக சொனார்.

அவரும் அமெரிக்காதான் செல்லவிருப்பதாக சொன்னார்,  நான் நியூயார்க் செல்லவேண்டும் என்று சொல்ல, தான் சான் பிரான்சிஸ்கோ செல்லவிருப்பதாக சொன்னார். இருவருக்கும் ஒரே விமானம் தான். ஒரே வாயிலுக்கு செல்லவேண்டும் என்பதால், அவருடன் பேசிக்கொண்டே நடந்து சென்றேன். பெரிய விமான நிலையம் என்பதால், ஒரு ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து நடக்க வேண்டியிருந்தது. விமானம் புறப்பட மேலும் இரண்டரை மணிநேரம் இருந்ததால் மெதுவாக நடந்துசென்றோம்.

சில நிமிடங்கள் கழித்து நாங்கள் செல்லவேண்டிய வாயில் வந்தவுடன் 
அங்கிருந்த பயணிகள் காத்திருப்பு இடத்தில் அமர்ந்தோம். துபாய் வழியாக செல்லவேண்டியிருந்ததால், பலதரப்பட்ட மக்களும் இருந்தனர். மேலும் நள்ளிரவு நேரம் என்பதால், பெருமளவு சத்தம் இல்லாமல் குழந்தைகளின் விளையாட்டு சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. உட்கார்ந்தவுடன் கைபேசியில் என் அப்பாவுக்கு call செய்து தானும், தங்கையும் ஓசூர் சென்றடைந்து விட்டனரா என்று விசாரித்துவிட்டு, அவரிடம் மீண்டும் பேசத் தொடங்கினேன்.

"நீ வெளிநாட்டுலதான பா இருக்க, இங்க வரச்சே எந்த போன் use பண்ணற? call charge எல்லாம் அதிகமா ஆகுமே?" என கேட்டார்.

"Lifetime recharge போட்டிருக்கேன் மாமி, அங்க போனவுடனே இந்த number உபயோகிக்கமாட்டேன். இதுபாட்டுக்கும் சும்மா தான் கிடக்கும், இங்கே வரும்போதும், வந்தவுடனே airportடிலிருந்து அப்பாவுக்கு call செய்ய, அப்புறம் இங்க இருக்கும்போது use பண்ணறதுக்கு இந்த போன தான் உபயோகிப்பேன்" - என்றேன்.

"ஒ! அப்படியா பா! எனக்கு அதெல்லாம் என் பையன் சொல்லிக் குடுக்கல, ஒவ்வொரு தடவ நான் அமேரிக்கா போறச்சே, இங்க BSNL போன்ஐ surrender செஞ்சிட்டு, ஆறு மாசம் கழிச்சு திரும்ப வந்து surrender பண்ண போன்ஐ திரும்ப வாங்கறதுக்கு நான் ஒண்டியா ரொம்ப கஷ்ட படவேண்டியிருக்கு. 
இங்க வந்தா airportலேர்ந்து கூட்டிண்டு போகறதுக்கு, அங்கேர்ந்து கிளம்பறதுக்கு முன்னாடியே போன் செஞ்சு சொல்லிடுவேன், ரொம்ப un-time இல்லை அப்படினா என் அண்ணாவே வந்து கூட்டிண்டு போவார், இல்லன்னா அந்த நேரத்துக்கு ஏற்றார் மாதிரி என் அண்ணா ஒரு taxiஐ அனுப்புவார், பாவம் அவருக்கும் வயசு ஆச்சு தானே?" - என்றார்.

"என்னப்பா வேண்டிகிடக்கு இந்த வயசுல எனக்கு வெளிநாடு எல்லாம்? என் கணவர் இறந்து சில வருடங்கள் ஆகிறது, தனியாக இந்த அர்த ராத்திரில, flight விட்டு flight மாறி, என்ன வேண்டிகிடக்கு இதெல்லாம்"

"இதோ... படிப்பு முடிஞ்ச கையோட வந்துடுவேம்மான்னு சொல்லிட்டு போனான் என் பையன், ஒன்பது வருஷம் ஆச்சு, என் ரெண்டாவது பேத்திய பாத்துக்க போறேன் இப்போ."

"இங்க வீடா..... வாங்கின்றுக்கான், யார் பாத்துக்கறது?? அங்கேயே இருக்க போறவனுக்கு இங்க வீடு எதுக்கு? இங்கயாவது வாடான்னா, அதுவும் மாட்டேன்கிறான். இந்த வயசுல நான் அலையவா முடியும்? இந்த வயசான காலத்துல ஒரு இடத்துல உட்கார்ந்திருந்து, கோவில் குலத்துக்கு சுத்தாம இப்படி தனியா அலைக்கழிக்க வெச்சுட்டான் என் பையன். ஒரு பெண் இருக்கா, அவளுக்கு கல்யாணம் ஆனபோது மாப்பிள்ளை இங்கே தான் இருந்தார், ஆனா அவளும் இப்போ அமெரிக்காலேதான் இருக்கா" - என்றார்.


அவர் என்னிடம் இதை சொல்லிக் கொண்டிருந்தபோது, அவர் கண்களில் 
ஒரு தனிமை தெரிந்தது. மகன் மீது இருக்கும் பாசத்தில் யாரோ ஒருவனான என்னிடம் அவர் தன மகன் மீது உள்ள அத்ருப்தியை தெரிவித்தபோது அதில் கோபம் தெரியவில்லை, ஒரு ஆதங்கம் இருந்தது.

இங்கு வந்து ஓர் ஆண்டு இன்னும் எனக்கு முழுமை ஆகாத இந்த நிலையில், ஒருவேளை நான் மேலும் இங்கே இருக்க நேரிட்டால், என் பெற்றோரின் நிலையும் நாளை இப்படித்தான் இருக்கும் என்ற எதார்த்தம் எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது, என் அம்மா என்னிடம் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது என் நினைவுக்கு வந்தது.

இரண்டு மற்றும் ஐந்து வயது உடைய பெண் குழந்தைகள் இருவரையும்  முப்பது வயது மதிக்கத்தக்க அந்த குழந்தைகளின் தாய், கையில் ஒரு பையையும் சுமந்துக் கொண்டு எங்களை கடந்து சென்றுக் கொண்டிருக்க, நாங்கள் செல்ல வேண்டிய விமானம் தயாராக இருப்பதாக அறிவிப்பு வந்தது. பையை கொஞ்சம் பாத்துக்கோப்பா என்று அவர் சொல்லிவிட்டு செல்ல, அவர் வந்த பின், "என்னோட பை இங்க இருக்கட்டும், இதோ வந்துடறேன்" என்று கூறிவிட்டு சிறுநீர் கழிக்க சென்றேன்.

திரும்ப வந்தவுடன் வினமானத்தில் நிழைய ஒரு வரிசை அமைந்திருந்தது, நாமும் சென்று நிற்கலாமா என்று கேட்டேன் அவரிடம், "உன் seat number என்ன?" என்று கேட்டு, அதைப் பார்த்த அவர் "நம்ம seatலாம் முன்னாடியே இருக்கு, முதலில் பின் இருக்கையிலிருந்து நிரப்பிவிட்டு பின்னர் தான் நம்மை அனுப்புவார்கள், இது emirates flight ஆச்சே, பெரிய்ய flight.., கொஞ்ச நேரம் ஆகும்" என்று சொல்லிவிட்டு மற்ற flightகள் பற்றிய விஷயங்களை புட்டுபுட்டு வைத்தார். பலதடவை விமானத்தில் சென்றிருந்த அனுபவம் மற்றும் அவருக்கு இருந்த தைரியம் அதிலிருந்து நன்றாகவே தெரிந்தது.

எங்கள் இருக்கை இருந்த பகுதிப் பயணிகளை வரிசையில் வரும்படி சொல்ல, "பரவாயில்லை" என்று அவர் சொன்ன போதும், "குடுங்க உங்க பையை, உள்ளே நுழையும் வரை நான் எடுத்துண்டு வரேன்" என்று சொல்லி, அவர் பையையும் நானே தூக்கிக்கொண்டு வரிசையில் நடக்க, என்னுடனே என் அம்மா போல நடந்து வந்தார்.

flightடினுள் நுழைந்தவுடன் அவர் இருக்கை வலப்புறமும், என்னிருக்கை வேறுபக்கமும் இருந்ததனால் அவரிடம் பையை கொடுத்துவிட்டு, "அப்புறம் பார்க்கலாம் மாமி" என்று சொல்லி விடை பெற்றேன்.

இரண்டு மணிநேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்த அந்த நேரம் எல்லாம், தன் மகனுடன் இருக்கபோகும் அந்த மகிழ்ச்சியும், எப்போது தன் மகனின் வீடு சென்றடைவோம் என்ற அந்த எதிர்பார்ப்பும் தான் அவரிடம் இருந்தது.

நன்றி (படம்): newneervely.com
ஒரு மூன்றே முக்கால் மணி நேரம் கழித்து விமானம் துபாய் சென்றடைந்தது. இறங்கும்போது மீண்டும் அவரை பார்க்க முடியவில்லை. துபையில் பாதுகாப்புச் சோதனை முடிந்த பின், பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டு, அங்கு நியூயார்க் செல்லவேண்டிய வாயில் எண்ணைத் தேடிக்கொண்டு தனியாக நடந்துக் கொண்டிருந்தேன்.

ஒரு ஏழு மணி நேரம் முன்னர் அதே போல, பெங்களூர் விமான நிலையத்தில், மக்கள் மிகக் குறைவாக இருந்த சமயத்தில் நடந்து சென்ற பொது இருந்த முழுமை இங்கு பல நாடுகளை சேர்ந்த மக்கள் மத்தியில் நடந்து சென்றபோது என் மனதில் இல்லை. இது அந்நிய மண். ஹ்ம்ம்... மீண்டும் தாய்நாடு செல்லும் வரை அந்த முழுமை மனதில் இருக்காது என்ற உண்மையை என் உள் மனது என்னிடம் சொல்லிகொண்டிருக்க, அங்கிருந்த பணியாளரிடம் என் பயணசீட்டை கண்பித்து, அங்கு மீண்டும் ஒரு முக்கால் மணிநேரம் பயணிகள் காத்திருப்பில் உட்கார்ந்திருந்தேன்.

அங்கு அப்போது சுமார் காலை பத்து மணி இருக்கும், அபு தாபியில் இருந்த என் பெரியம்மா மற்றும் மண்ணியோடு போன் பேசிவிட்டு, பின்னர் முகம் அலம்பிவிட்டு, காத்திருப்பு இருக்கையில் அமர்ந்தேன்.

ஒரு இரண்டு வயது பெண் குழந்தை என் பக்கத்து இருக்கைக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து பையை தள்ளிக் கொண்டும், தன அக்காவுடன் விளையாடிக்கொண்டும் இருக்க அக்குழந்தைகளின் தாய் கைபேசியில் தன் கணவரிடம் தாம் துபாய் வந்துவிட்டதையும் நியூயார்க் செல்லவேண்டிய விமானத்திற்கு காத்திருப்பதையும் சொல்லிக்கொண்டே, பையை தள்ளிக் கொண்டிருந்த தன் குழந்தைகளை கண்காணித்துக் கொண்டிருந்தார். என்னை நோக்கி பையை தள்ளிக் கொண்டிருந்த குழந்தையை பார்த்து புன்முறுவல் செய்துக் கொண்டிருந்தேன்.

அவரை பெங்களூர் விமான நிலையத்தில் பார்த்ததை சொல்லி, நியூயார்க் இல் தம் கணவர் எங்கு வேலை செய்கிறார் என்று கேட்டேன், அவர் நியூ யார்க்கிலிருந்து மேலும் ஒரு விமானம் பிடித்து சார்லட் (Charlotte) செல்லவேண்டும் என்று சொனார். பொதுவாகவே நியூயார்க் இல் இருந்து வேறு விமானம் பிடிப்பது சற்று கடினம், சிலநேரம் விமானத்தை தவற விட நேரிடும், ஆனால், அதை சொல்லி மேலும் அவரை அச்சப் பட வைக்க விரும்பவில்லை. அங்கு இறங்கிய ஒரு மணிநேரத்திற்குள் அடுத்த விமானம் இருப்பதால் ஏற்கனவே சற்று பதற்றத்துடன் காணப்பட்டார்.

விமானம் புறப்பட தயாராக இருந்ததால் வரிசையில் வரசொல்லி அறிவிப்பு வரவும், "நியூயார்க்கில் இறங்கியதும் சற்று வேகமாக செல்லுங்கள்" என்று கூறி அவரிடமிருந்து விடை பெற்று, என் முன்னே நின்று கொண்டிருந்த ஒரு புதுமண தம்பதியை கடந்து சென்றேன்.

நியூயார்க் நேரப்படி மதியம் மூன்று மணிக்கு இறங்கி, அங்கு மறுபடியும் ஒரு பெரிய வரிசையில் நின்று immigration check /port of entryயை முடித்துக்கொண்டு பைகளைப் பெற்றுக்கொள்ள நின்றுக்கொண்டிகும் போது அந்த பெண்மணியை, அவர் சற்று தொலைவில் இருக்கும்போது மீண்டும் பார்த்தேன். மிகவும் பதற்றத்துடன், விமானத்தில் செல்ல ஒருவருக்கு இரண்டு பைகள் அனுமதி என்பதால் தம் குழந்தைகளின் பைகள் கணக்குகளையும் சேர்த்து மொத்தம் ஆறு trolly பைகள், ஒரு பெரிய தள்ளுவண்டியில் வைக்க, ஒரு விமான நிலைய ஊழியரிடம் விவரித்துக்கொண்டு, தம் குழந்தைகளையும் அடக்கிக்கொண்டு சென்றுக் கொண்டிருந்தார்.

அந்த விமானத்தை தரவிட்டிருக்க மாட்டார் என்று தான் நினைக்கிறன்.
தனி ஒரு பெண்ணாக, குழந்தைகளைப் பார்த்துக்கொண்டும், பைகளை சுமந்துக்கொண்டும் தன் கணவரைக் காணச் செல்லும் ஆவலுடனும், அண்புடனும், எதிர்ப்பார்ப்புடனும் பல மணிநேரங்கள், பல விமானங்கள் மாறி இன்னும் பல பலர், பல இடங்களில் சென்று கொண்டுதான் இருக்கின்றனர்.
நன்றி (படம்):brahminsnet.com
பைகளை எடுத்துக்கொண்டு, நண்பர் பாலாஜி சொல்லியிருந்த taxi ஓட்டுனர் தயாராக வெளியில் காத்திருக்க, சிறு வயதில் தீபாவளி பண்டிகைக்கு பாட்டி வீடுக்கு சென்றுவிட்டு, ஓசூருக்கு திரும்பியதும் "அம்மா... பொங்கல் பண்டிகை எப்போ மா வரும்? திரும்ப எப்போம்மா மெட்ராசுக்கு போவோம்?" என்று அம்மாவிடம் கேட்டது போல, மீண்டும் ஊருக்கு எப்போது செல்வோம் என்ற எதிர்பாப்புடன் வெளியே வந்த என்னை, அடையாளம் கண்டு கை அசைத்த taxi driverஐ நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
  
ஒவ்வொரு பயணத்திலும், தத்தம் உறவுகள் எவ்வளவோ உளைச்சல்களையும், பரபரப்புகளையும், இன்னல்களையும் கடந்து தான் தம் சொந்தங்களைத் தேடி பயணிக்கின்றனர். நாம் கேட்கும் 'பயணம் சவுகர்யமா இருந்ததா' என்றதற்கு 'ஆம்' இருந்தது, என்ற ஒவ்வொரு பதிலுக்குப் பின்னாலும் பல மணிநேர அனுபவங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. 

அந்த அனைத்து பயணங்களுக்குப் பின்னாலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்துக் கொண்டு தான் இருக்கிறது.
Blogger Widget

வெள்ளி, 29 மே, 2015

நேரம்

பறந்து விரிந்த இவ்வுலகில் எத்தனை எத்தனை நிலப்பரப்புகள்,எத்தனை எத்தனை இனங்கள்,  எத்தனை எத்தனை மொழிகள், எத்தனை எத்தனை கடவுள்கள், எத்தனை எத்தனை ஆச்சர்யங்கள்!

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு உயிரினமும்; பிற உயிரினமிடிருந்து தப்பித்து தான் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது, மனிதர்கள் உட்பட. தான் தான் வாழ்க்கையில் துயரப்பட்டுக் கொண்டிக்கிறோம் என்று நினைக்கும் ஒருவர் உலகின் பிற நிகழ்வுகளை ஒரு கணம் யோசித்துப் பார்த்தால், தாம் எவ்வளவு சுதந்திரமாகவும், இன்பமாகவும் வாழ்கிறோம் என்பது தெரியும்.

படித்தவர்கள் அதிகம் இல்லாத தம் கிராமத்தில், எப்படியாவது மிகவும் காத்திருந்து பெற்ற தம் குழந்தையை பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும் என்று, தம் குழந்தை பிறந்த நாள் முதல், வழக்கமாக செய்யும் பத்து மணிநேர வேலையையும் தாண்டி, பன்னிரண்டு மணிநேரம் வேலை செய்து; மீண்டும் இரவில் பகுதி நேர வேலைக்கு சென்று காசு சேர்த்து வைத்துவந்தனர் அந்த பெற்றோர். இப்படியாக மூன்று ஆண்டுகள் தமக்காக ஒரு பொருளும் வாங்கிக் கொள்ளாமல், கிழிந்த ஆடையை மீண்டும் மீண்டும் தைத்து உடுத்துதிக் கொண்டிருந்த அந்த மனைவி, அவ்வபோது மிதிவண்டியில் break சரியாக பிடிப்பதில்லை என்று கூறிய கணவனை, அதை சரி செய்து கொள்ளும்படி கூறினாள். அதெல்லாம் தேவை இல்லை, கவலை பட வேண்டாம் என்று தன மனைவியிடம் புன்முறுவலோடு கூறினான் அவள் கணவன்.

ஒரு வழியாக காலம் சுழன்று ஓட, தம் குழந்தையை பள்ளியில் சேர்க்கும் நாள் வந்தது, மிகவும் மகிழ்ச்சியாகவும், சற்று பயத்துடனும் முதல் நாள் தம் குழந்தையை பள்ளியில் சேர்க்க சென்றனர்... சேர்த்தும் விட்டனர். பள்ளி தொடங்கும் மணி சத்தம் கேட்ட பின்னும் அந்த சிறிய கட்டிடத்தையே புன்னகையுடனும், தம் குழந்தையின் எதிர் கால கனவுடனும் கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டே இருந்தனர், தம் குழந்தையை பள்ளியில் சேர்க்கும் அந்த நாளுக்காக தன் கணவன் பட்ட கஷ்டத்தை அவள் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில் தன் மனைவி குழந்தையை கணம் தவறாது பார்துக் கொண்டதை அவன் நினைத்துப்பார்த்தான்.

தம் குழந்தை நல்லபடியாக படித்து முடிக்கும் வரை கடினமாக உழைக்க வேண்டும் என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டும், தானும் முடிந்த வரை தன் கணவனுக்கு உதவ வேண்டும் என்று அவளும் மனதில் நினைத்துக்கொண்டே வீடு திரும்பினர். வீடு சென்றடைந்து ஒரு மணி நேரம் ஆனது. முதல் நாள் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதால் அரை நாள் விடுப்பில் இருந்த அவன், குழந்தையை பள்ளியில் சேர்த்த நிம்மதியில் சற்று நேரம் படுத்தான், அப்போதுதான் பல நாட்கள் கழித்து தன் வீட்டில் மாட்டியிருந்த குரான் படத்தை கவனித்தான், ஒரு புன்முறுவலுடன் இறைவனை வணங்கி, சற்று கண் மூடினான்.

ஒரு பத்து நிமிடம் தான் இருக்கும், பயங்கர கோஷங்களை எழுப்பிக்கொண்டு சர், சர் என ஏதோ வண்டி சத்தம் கேட்க, வீதியில் மக்கள் கூச்சலிட, என்ன நடக்கிறது என்று புரியாமல் கண் திறந்தான். அப்போதுதான்  நிம்மதியாக தூங்க கண் மூடிய கணவனை எழுப்புவதா வேண்டாமா என்று தவித்துக் கொண்டிருந்த மனைவியை பதற்றத்துடன் எழுந்துப் பார்த்து, வீதிக்கு விரைந்தனர் இருவரும், தெருவெங்கும் மண் புழுதி, பள்ளியை நோக்கி அனைவரும் ஓடிக்கொண்டிருந்தனர், break பிடிக்காத மிதிவண்டியை வேகமாக மிதித்துக் கொண்டு இவனும் சென்றான். பள்ளிக்கு சென்றவர்களுக்கு பேரிடி விழுந்தது போலிருந்தது.

Mom... I want a new cycle... என் friends எல்லாம் first dayவே புது cycleல வந்திருக்காங்க என்று இரவு உணவு உண்ட பின் மகன் சொல்ல, சரி இந்த Sunday அப்பா கிட்ட சொல்லி வாங்கித் தரேன் என்றாள் அம்மா. மகிழ்ச்சியில் மகன் உறங்க சென்றவுடன், Pogo channelஇல் இருந்து செய்தி channelலுக்கு மாற்றினாள் அவள். நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் பள்ளிக் குழந்தைகளை கடத்தி சென்றனர் என்ற செய்தி ஓடிக்கொண்டிருந்தது. துப்பாக்கி முனையில் அவர்கள் குழந்தைகளை மிரட்டும் காட்சிகளை தீவிரவாதிகள் வெளியிட்ட காட்சியையும், குழந்தைகளை இழந்த பெற்றோர்களையும் மீண்டும் மீண்டும் காண்பித்துக் கொண்டிருந்தனர். தாய்க்கே உரிய பாசத்தில் அந்த மழலையர்களையும், குழந்தைகளையும் கண்டு  கண்ணீர் வடித்துக்கொண்டே சட்டென சானலை அனைத்துவிட்டு தன் மகனை வழக்கத்தை விட இறுகக் கட்டிக் கொண்டு தூங்கினாள்,


Blogger Widget

திங்கள், 19 ஜனவரி, 2015

மக்கள் சேவை - என்ன கத உடுறியா?!

மக்கள் சேவையே மாகேசன் சேவை. அந்த மக்களுக்கு சேவை செய்யத் தான் நம் நாட்டில் எத்தனை பேர் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐயகோ... எம் மக்கள் வறுமையிலும், துயரத்திலும், பசியிலும் துடிக்கிறார்களே, அவர்களை காப்பாற்ற வேண்டியதும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தவேண்டியதும் நம் கடமை அல்லவா என்று மக்களின் பாரத்தை தம் தோளில் சுமந்து நிற்கின்றனர் பலர்.

யார் இவர்கள்? வேறு யார், நம் அரசியல்வாதிகள் தான். தேசிய விடுதலைக்காக ஆரமிக்கப் பட்ட ஒரு கட்சி, விடுதலை பெறும் முன்னரே அதிலிருந்து பிரிந்த கிளைக் கட்சி என்று தேசிய அளவிலும், மாநில அளவிலும், ஒரு கட்சியிலிருந்து பல கிளைக் கட்சிகள் பிரிந்து நம் தேசிய நதிகளின் கிளைகளை விட இந்த கட்சிகளின் கிளைகள் அதிகமாக பறந்து விரிந்திருக்கிறது.

மக்களுக்கு சேவை செய்யத்தான் என்னென்ன செய்யவேண்டியிருக்கிறது, மைக்கை பிடித்து தொண்டை தண்ணீர் வற்ற பேசவேண்டியிருக்கிறது, 'இல்லை... இல்லை... நான் தான் மக்களுக்கு சேவை செய்வேன், எனக்கு தான் அவர்களின் துயரம் தெரியும், அவர்களின் நிலையை நான் தான் உயர்த்துவேன்' என்று பல போட்டி கட்சிகள் மக்களுக்கு சேவை செய்ய வீடு வீடாக சென்று, உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று அந்த மக்களிடமே கேட்டு துடிக்கிறது.

கட்சியின் தலைவராக தந்தை இருந்தால், 'அப்பாவை விட நாம் அதிகம் நல்லது செய்ய வேண்டும்' என்று துடிக்கும் மகனும், இல்லை... இல்லை... நம் தம்பி மக்கள் சேவை செய்தால் நமக்கென்ன மரியாதை என்று கோபப்படும் அண்ணன்னும், நான் தேசிய அளவில் சேவை செய்கிறேன் என்று தங்கையும், அக்காள் மகனும், தம் பேரனும் என மக்கள் மீது அன்பு மழை பொழிய எவ்வளவு பேர் துடிக்கின்றனர். அம்மக்களுக்கு ஏவை செய்ய கடவுளை வேறு அவ்வபோது வசை பாடுகின்றனர்! அட அட!!!

இது மட்டுமா? நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகை இருக்கும் எம் நாட்டில் இத்தாலியிலிருந்து வந்த ஒருவரை கட்சியின் தலைவராக எற்றுக்கொண்ட பெருமை வாய்ந்த கட்சியும், எம் கட்சி தேசிய அளவில் எத்தனையோ சேவை செய்கிறது, நாங்களும் சேவை செய்வோம் என்று கட்சியின் அலுவலகத்தில் வேஷ்டியை அடிக்கடி மக்களுக்காக கிழித்துக் கொண்டும், அவ்வபோது தனியாக கிளை தொடங்கி வேஷ்டியை கிழித்துக்கொள்ளும் கட்சியும், தம் நாட்டு மக்களுக்கு குரல் கொடுக்க பல கட்சிகள் இருக்கின்றன; நாம் பிற நாட்டு மக்களுக்கு குரல் கொடுப்போம் என்று பிறநாட்டில் வாழும் மக்களுக்கு இந்த நாட்டிலிருந்து குரல் கொடுத்து, அவர்களுக்காக இந்த நாட்டில் ஓட்டு கேட்க ஒரு கட்சியும், தெரு முனையில் உறங்கிக்கொண்டிருப்பவனை எழுப்பி என்ன ஜாதி என்று கேட்டு, அந்த ஜாதிக்காக ஒரு கட்சியும், முடிந்தால் புதிதாக ஒரு ஜாதியை ஆரமித்து அதற்கு ஒரு கட்சியும் என தமிழகத்தில் மட்டும் ஒரு எழுபத்தி மூன்று கட்சிகள் (73) இருக்கின்றன.

கட்சியை தொடங்கிவிட்டால் முடிந்து விட்டதா? போட்டிக்காக இருக்கும் அடுத்த கட்சி 'மக்களை' அவ்வபோது சந்தை 'சந்துகளிலும்', சாராயக் கடைகளிலும், விளையாட்டு மைதானங்களிலும், சாலை ஓரங்களிலும், புதர் பகுதிகளிலும் வெட்டி அல்லவா சாய்க்க வேண்டியிருக்கிறது? கட்சி தலைவரின் வாரிசையே தலைவனாகவும், தொண்டனின் வாரிசை தொண்டனாகவுமே வைத்திருக்கவும் வேண்டும்! எதற்காக இவ்வளவும்?!
அட.. மக்களுக்கு சேவை செய்தாக வேண்டுமல்லவா!

தேசிய அளவில் சேவை செய்ய இங்கிருந்து டெல்லி சென்றும், மாநில அளவில் சேவை செய்ய தேசிய தலைவர்கள் மாநிலங்களுக்கு வந்தும், மக்களுக்கு சேவை செய்ய அந்த மக்களிடமே கடை கடையாக சென்று பணம் வசூலித்தும்,, அப்படியாக வந்த வசூலை உதிரி கட்சிகளுக்கு இனாமாக கொடுத்து நாம் கூட்டாக சேவை செய்யலாம் என்று தோள் கோர்த்துக் கொள்ளவேண்டும், தோள் சேரா சமயத்தில் கிடைத்தது சமயம் என்று கேவலமாக வசைபாட வேண்டும், குறுகிய காலத்திலேயே அதை கை குட்டையால் துடைத்துக் கொண்டு மீண்டும் ஒன்று சேர வேண்டும்.  கூட்டணிக்கு பலம் சேர்க்க அரிதாரம் பூசிய நவீன கூத்தாடிகளை கட்சியில் சேர்க்கவேண்டும். யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று மண்டையை குடைந்துக் கொள்ளவேண்டும். இவை எல்லாம் எதற்காக? மக்களுக்கு சேவை செய்ய அல்லவா?!

உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், பாராளு மன்ற தேர்தல் என்று ஒவ்வொரு தேர்தலுக்கும் மக்கள் பிரதிநிதிகளை, அவர்களிடம் இருக்கும் 'நிதி'யை வைத்து தேர்ந்தெடுப்பதும், மக்களுக்காக எத்தனை கொலைகள் செய்திருக்கிறார்கள், எவ்வளவு முறை சிறை சென்றிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது கட்சியின் தலைவர்களுக்கு!

தங்கள் உயிரை வைத்து, தங்கள் மானம், மரியாதையை பத்திரமாக வீட்டிலேயே பூட்டி வைத்து மக்களுக்காக சேவை செய்ய இவர்கள் படும் பாடு நம்மை வியக்க அல்லவா வைக்கிறது!

மக்களுக்காக...! மக்களுக்காக...! என்று ஒவ்வொரு மேடையில் இவர்கள் பேசும்போதும் அந்த மக்கள் மனதில் எழும் ஒரே ஒரு எண்ணம் - 'என்ன கத உடுறியா!!! எங்களுக்கு தெரியாம அப்படி எந்த மக்களுக்குய்யா சேவை  செய்யறீங்க' என்பது மட்டுமே!
Blogger Widget